Friday, February 22, 2008

சுகம் – துக்கம் – ஒரு சுயசரிதை.

அவளும் நானும் பெரும்பாலும் ஒத்தே இருப்பது எங்கள் வழக்கம். ஒத்திருக்கும் வேளைகளில் ஒருவரை ஒருவர் முந்த முயற்சிப்பதும் தவிர்க்க முடியாததாகிறது. ஆனால் அவள் எப்போதுமே பெண்மைக்குரிய நளினங்களோடும், ஆளுமைகளோடும் வெகு வேகமாய் எந்த இடத்திலும் வியாபிக்கும் குணமுடையவள். நானோ ஆணுக்கே உரிய வலிமையோடு மிகவும் இருகப்பற்றி இளப்பாறுபவன்.

இங்கும் அப்படித்தான், நாங்கள் இருவரும் ஒரே சமயத்தில் தான் இந்த வீட்டிற் புகுந்தோம். ஆனால் அவளின் ஆளுமைகள் மட்டுமே அதிகம் வியாபித்துள்ளது. மேலும் தொடர்வதற்கு முன்னால் இந்த வீட்டைப்பற்றி சிறிய அறிமுகம்.

இந்த வீட்டின் தலைவன் சீராளன் (ஸ்ரீனிவாசனாயிருக்கும் என்று எண்ணுகிறேன்) மிகுந்த நிதானமும் அதற்கேற்ற அன்பும் உடையவன். (பலசமயம் அந்த நிதானத்தில் ஒரு அக்கறையற்ற தன்மை உள்ளது என்று அவன் பாரியை மனத்தாங்கக் கேட்டிருக்கிறேன்.) மெல்ல மெல்ல ஒரு விதை நீர் உறிஞ்சுவது போல் இந்த வீட்டின் அத்தனை வேர்களிலும் அவன் ஆளுமை பரவி நிற்பதை நான் பலசமயம் கண்கூடாகக் கண்டு பொருமியிருக்கிறேன். ஆனால் என்னவளோ இந்த நிதானம் மட்டுமே அவளுக்கான தளத்தை இங்கு ஸ்தாபிதம் செய்தது என்று இன்றும் என்னோடு வாதிப்பதுண்டு.

அவன் மனைவி சோமை (சோமசுந்தரியாயிருப்பாள் என்று எண்னுகிறேன்) இவனுக்கு நேர்மாறானவள். பரபரப்பும், மிக துரிதமாய் பரவிச்செல்லும் ஆளுமையும் கொண்டவள். ஆரம்பத்தில் எனக்கான அந்த வீட்டின் தளங்களை ஓரளவு நிர்ணயித்துத்தந்தவளும் அவள்தான். எதிலும் அதீதமானவள் அன்பு செலுத்தவதிலாகட்டும் இல்லை சீற்றம் கொள்வதிலாகட்டும் வெகு வேகமானவள். இலகுவானவள். அப்போதைய நிகழ்வுகளை மட்டுமே சுமந்து செல்பவள். கடந்த காலங்களின் காயங்களை கட்டி இழுக்கும் திறனற்றவள் அதனால் தானோ என்னவோ என்னவளும் அவளோடு அதிகம் இணக்கமாயிருப்பதுண்டு. என்னை கொஞ்சம் கொஞ்சமாய் புறந்தள்ளியதில் என்னவளுக்கு அத்தனை மகிழ்ச்சி அதில் ஒரு தனி சுகம் (கடைசியில் சொல்வதாய் இருந்த என்னவளின் பெயரை இப்போதே சொல்லிவிட்டேன் மன்னித்து விட்டு தொடர்ந்து செல்லுங்கள்)

புது வரவாய் வந்த அவர்களின் இளம் மகவை சுமந்த நாட்களில் என்னை மறந்தே போனார்கள். எடுத்தும், கொடுத்தும் கொண்டாட ஆளில்லாத நாட்களில் கூட என்னைப் புறக்கணித்து தங்கள் இருவருக்குள்ளேயே என்னவளை சிறைவைத்துக்கொண்டார்கள். நான் சமயம் பார்த்து காத்திருந்தேன். வராமலா போகும் எனக்கான நேரம். வந்தது பேரிடியாய் மகன் பிறந்தான் கூடவே பிணியும் நொய்மையும் சேர்ந்து வந்தது. மருத்துவமனையே கதி எனக்கிடந்தனர், அந்தோ பரிதாபம் என்னவள் முதல் முறையாய் புறக்கணிக்கப்பட்டாள் நான் மெல்ல மெல்ல என் இயல்பான வலிமையோடு வந்திறங்கினேன் வலி பழகிய அவர்கள் வாழ்க்கையில் வழியும் பிறந்தது, குழவியின் குறுஞ்சிரிப்பும், மழலையும், சேதனமும், சாகசமும் என்னை ஒதுக்கத்துவங்கியது மீண்டும் என்னவள் ஆட்கொள்ளத்துவங்கினாள், நானும் என் இருப்பை அவர்களின் கோபங்களின் கூடேயும், அழுகைகளின் இடையேயும் சுற்றத்தவரின் எதிர்பார்ப்புக்களிலேயும் மெய்யிருத்திக்கொண்டாலும் அந்த மூவரின் இணக்கத்தில் நான் ஒதுக்கப்பட்டேன் என்பதே உண்மை. மூவர் நால்வரானார், அந்த இளம் குழவி தாயை குணத்திலும், உருவத்தில் தந்தையையும் கொண்டான், பெரும் வேகமும், பேர் அதிர்வும் கொண்டவனான், பார்க்கும் கேட்கும் அனைவரையும் அனைத்தையும் தன்னுள்ளே சுருட்டி இழுக்கும் தன்மையனன்.

ஆஹா இந்த வீட்டின் மற்றொரு நபரை உங்களுக்குச்ச்சொல்லாமல் என்னால் இந்த கதையை முடிக்க முடியாது அவள் என்னையும், என்னவளையும் அநேக காலம் ஆதரித்து எங்களோடு வாழ்ந்து வந்தாலும் அதன் சுவடுகளை அவ்வப்போது தடவிப்பார்த்து சுகமோ துக்கமோ அடைபவள், பலசமயம் என்னோடு மிகப்பிரியமாய் கைகோர்ப்பவள் அப்போதெல்லாம் என்னவள் அழும் அழுகுரல் எனக்கு மிகவும் நாராசமாயிருக்கும். அந்தக்கிழவிக்கு அவள் மீண்டும் மீண்டும் சொல்வாள், இறந்த காலங்களை சுமந்து திரியாமல் என்னோடு வந்து விடு என்று என்ன செய்ய வயதிற்கென்ற மூப்புக்களையும் புறந்தள்ள முடியாதே.. என்னிருப்பிற்கான காரணங்களையும் தான்.

சில துக்கங்களோடும் அதிக சந்தோஷங்களோடும் இன்றும் அந்த வீடு பயணிக்கிறது அதோடு கூட நாங்களும் எங்களுக்கான ஆளுமை வலைவிரித்து காத்திருக்கிறோம்.

தேவையற்ற கோபங்களினாலும் அசூயைகளினாலும், பற்றுணர்வற்ற தன்மைகளினாலும் பளுவான கடந்த காலங்களினாலும் ஆன வலையோடு நானும்.

ஒத்திசைவாலும், உள்ளக்கனிவுகளாலும், ப்ரியங்களினாலும், மன்னிப்புக்களாலும், இறைஉணர்வாலும், தோழமைகளாலும், பெருத்த காதலாலும் இலகுவான மனோநிலைகளாலும் பின்னப்பட்ட வலைகயோடு என்னவளும் காத்திருத்தலோடு அவர்களோடே பயணிக்கிறோம்.

Wednesday, February 20, 2008

பதிவர் தினேஷ் - பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இந்த ஒரு கூடை பூக்களைப்போலவே நண்பர் தினேஷ் நல்ல பல அரிதான கருத்துக்களுக்கும் மேன்மையானதும் மென்மையானதுமான குணங்களுக்கும் சொந்தக்காரர்।இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்।எல்லோரும் என்னுடன் சேர்ந்து வாழ்த்தலாமே...

அவரின் பதிவுகளின் சுட்டு உங்களுக்காக

http://ddinesh-thoughts.blogspot.com/

Sunday, February 10, 2008

எஸ். ராமகிருஷ்ணனின் - யாமம்.- உயிர்மை வெளியீடு - ஒரு பார்வைஒரு வரலாற்று நாவலுக்குரிய பெரும் முனைப்போடு எழுதப்பட்ட சமூக நாவல். கதைக்களம் நம்மைச்சுற்றியுள்ள பகுதிகளாயும், கதை மாந்தர்கள் பெரும்பாலும் நமக்கு மிகவும் பரிச்சியப்பட்ட தளங்களிலிருந்து பேசுபவர்களாய் இருப்பதாலேயும் நம்மால் கதையின் ஓட்டத்தில் மிக எளிதாக கலந்து கொள்ள முடிகிறது. எதார்த்தங்களை அதிகம் மீறாத புனைவுகள் பெறும் அங்கீகாரங்களை இப்புத்தகமும் பெற்றுச்செல்கிறது.

மதரா பட்டணம் உருவாகும் விதமும், படிப்படியாய் அது ஆங்கிலேயர் வசம் தனை இழக்கும் பாங்கும் மிகவும் எளிமையாக அதே சமயம் அதிக வார்த்தை விரயமின்றி எஸ்ராவால் சொல்ல முடிந்தது மிகவும் ஆசுவாசமாய் உள்ளது.

முக்கிய கதை மாந்தர்களான பத்ரகிரி, கிருஷ்ணப்ப கரையாளர், அப்துல் கரீம், சதாசிவப் பண்டாரம், ஆகியோர் ஒருவருக்கொருவர் நேரடியாய் தொடர்பற்றிருந்தாலும் இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு மாயக்கயிராக “யாமம்” எனும் ஒரு வாசனைத்திரவியமும் கதை மாந்தருள் ஒருவராக திகழ்கிறது. வாசனைகளின் பின்னே செல்லும் மனித மனமும் அம்மாந்தர்களின் வாழ்க்கை முடிவுகளும், வாசனைகளைத் துறந்து ஓடும் சதாசிவப்பண்டாரத்தின் வாழ்வும் அந்திமத்தில் அவர் வாழ்வின் சுகந்தமும் நேரடியாய் பேசப்படாத கருப்பொருளாகிறது.

இருளும், இரவும் எப்போதும் போலவே எஸ் ராவால் தவிர்க்கப்படாத ஒன்றாக இங்கேயும் பேசப்பட்டுள்ளது.


அப்துல் கரீமின் மனைவி சுரையா, வாஹிதா, ஏழைக்குடும்பத்தில் பிறந்து சிறு ஆசைகளோடும், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்களோடும் அப்துல் கரீமின் குடும்பத்தின் சந்தோஷத்திலும், துக்கத்திலும் பங்கு கொள்ளும் சந்தீபா, வேசையாக படைக்கப்பட்டிருக்கும் எலிசபத், சொத்துக்களையெல்லாம் தொலைத்து விட்டு அதற்காக கால நிர்ணயங்களில்லாமல் போராடிக்கொண்டிருக்கும் கிருஷ்ணப்ப கரையாளார், ஓராயிரம் வளங்களை தன்னுள்ளே கொண்டிருந்தாலும் தன் இரகசிய நன்பனுக்கு மட்டுமே தனை வெளிக்காட்டிக்கொண்டிருக்கும் மேல்மலை (மாஞ்சோலையாயிருக்கும் என்று எண்ணுகிறேன்), தனயனுக்கு தந்தையின் இடத்தில் இருந்து வழிகாட்டும் பத்ரகிரி, ஏதோ ஒரு உணர்வுகளால் உந்தப்பட்டு மைத்துனரோடு தனைப்பிணத்துக்கொள்ளும் தையல், உல்லாசமான உணர்வுக்குவியலோடு சற்குணம், திருநீலகண்டம் என்று தானே பெயரிட்ட ஒரு விலங்கினத்தோடு தன்னை பிணைத்துக்கொண்டு எதையோ தேடி அதனுடன் பயணிக்கும் சதாசிவப்பண்டாரம், இப்படி அனைவருமே தன்னியல்புகளை மீறி சூழ்நிலைகளின் கரங்களில் கைதிகளாகி பின் எதிர்மறை உணர்வுகளோடு மீள்வதையும் அதை கண்கூடாகக் கண்டு தன்னுள்ளே பொதிந்துகொள்ளும் ஒரு மவுன சாட்சியாக இரவும் நம்மோடே பயணிக்கிறது.

யாமம் எனும் நறுமணத்தை உருவாக்கக்கூடிய இரககசியத்தை கரீமின் மூதாதையர்களுக்கு எடுத்துச்சொல்லும் “சூபி ஞானி அல் அசர் முஸாபா” கேட்கும் கேள்விகளும் அதற்குண்டான பதில்களும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் பக்கங்கள், வாழ்க்கை பற்றிய பல கேள்விகளோடு தேடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு கயிற்றின் நுனியை காட்டிச்செல்லும் வல்லமை கொண்ட பக்கங்கள் என்று சொன்னால் அது மிகயாகது.


எஸ்ரா தன் அடுத்த பரிணாமங்களை நோக்கி நகரத்தொடங்கிவிட்டாரோ என்ற கேள்வியும் தவிர்க்க முடியாததாகிறது.


Friday, February 8, 2008

தனிமை - தன்னியல்பு - குரு - கடவுள் - காலம்


உன் தூர்ந்துபோன சிந்தனைகளோடான
வாழ்வியல் பார்வைகளை
மாற்றிக்காட்டுகிறேன் வா..

எந்த ..யிஸங்களின்
வர்ணப்பூச்சுக்களும் இன்றி
தன்னியல்போடு மட்டுமே
என்னோடு வா

முன்னெப்போதும் உண்டான
சாயல்களின் துணையின்றி
சார்புகளற்ற சிந்தனையோடு மட்டுமே
என்னோடு வா

உலர்ந்து போன உணர்வுகளை
இன்னும் சுமந்து திரியாது
இப்போதைக்கிப்போதே
வாழ்வோம் என்ற
எண்ணக்கிடைக்கையோடே
என்னோடு வா

கடந்தும் நடந்தும் போன
காயங்களின் சுவடின்றி
உன் கரம் பிடித்தழைத்துச் செல்ல
நானுண்டு இங்கே

ஆயிரமாயிரம் கரங்கள் பற்றி
நானெப்போதும் நடந்து செல்லும்
என் பாதைகளில்
உன் கால்கள்
பூக்களையும் முட்களையும்
சமமென பாவிக்கும்
அவதானிப்புக்களின் இரகசியங்களை
நானுக்கு கற்பித்து தருகிறேன் வா

எனக்கு குரு, கடவுள், காலம்
எனப்பெயர்கள் பலவுண்டு
என்னோடு சுமைகளின்றி
தனியனாய், தன்னியல்போடு வா

உன் தூர்ந்துபோன சிந்தனைகளோடான
வாழ்வியல் பார்வைகளை
மாற்றிக்காட்டுகிறேன்.