93-ல் உடுப்பி வந்திருக்கிறோம். நன்னு ஒரு வயது குழந்தை அதுவும் ஒரு தீபாவளி சமயம் தான். நீண்ட வரிசையில் நின்று ஜன்னல் வழியே கிருஷ்ணனை பார்த்து விட்டு வந்ததில் ஒன்றும் புரியவில்லை. விளையாடுவதற்கு முன்னரே சட்டென்று உடைந்த குழந்தை கை பலூன் போலானது. சற்றே புலம்பிய படி வந்து சேர்ந்தோம். 21 வருடங்களுக்கு பிறகே மீண்டும் செல்ல வாய்ப்பு கிடைத்தது.
மனிப்பாலின் உபயமாய என்று தோன்றுகிறது, பிஸா ஹட்டில் இருந்து ஜோஸ் அலுக்காஸ் வரை இருக்கும் ஒரு ஜோரான குட்டி மெட்ராஸ். போன்ற உடுப்பி கொஞ்சம் வியப்பை தந்தது.
கோவிலுக்கு நடந்து செல்லும் தொலைவில் ஒரு அறை எடுத்து தங்கினோம். சிறிது ஓய்விற்குப் பிறகு கோவிலுக்கு கிளம்பினோம். கோவில் இருக்கும் வழியெங்கும் உள்ள நகைக் கடை உரிமையாளர்கள் அவரவர் கடைகளில் பூஜைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தபடி கோவிலை அடைந்தோம்.
மணி 6.20 கூட்டமே இல்லை நாலைந்து முறை வரிசையில் வந்து கிருஷ்ணனை தரிசித்தோம். விளக்குகளில் திரி இட்டு ஏற்றுவதற்கு தயாராய் இருந்தது எனவே அங்கிருக்கும் ஒருவரிடம் எப்போது ஏற்றுவார்கள் என்று கேட்டதும் இன்னும் 10 நிமிடத்தில் என்று கூறியதோடு நில்லாமல் வெயிட் பண்ணு என்றும் சைகையால் கூறினார்.
குழந்தைகளும் ஶ்ரீ யும் மண்டபத்தில் அமர்ந்து கொள்ள நான் பிரதட்சணம் செய்ய ஆரம்பித்தேன். அதுமுதல் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு என்னை எல்லா பூஜைக்கும் எங்கு அமர்ந்தால் எல்லாமும் நன்றாக பார்க்க முடியுமே அங்கு அமரச்செய்து கூடவே இருந்தபடி அவரது பணிகளையும் செய்து கொண்டிருந்தார்.
பின்னர் நேற்று அங்கு தீபாவளியை முன்னிட்டு ஒரு விசேஷ பூஜை யாக பலிந்த்ர பூஜை நடை பெற்றது ( நரகாசுரனை பலியிடும் பூஜை) அதையும் கூட்டிச்சென்று காமித்து விட்டு கடைசியில் போஜன சாலையை காட்டி விட்டு ஒரு நன்றி கூட எதிர் பாராமல் சென்று விட்டார். இத்தனைக்கும் அவர் கோவில் ஊழியர்களுக்கான உடையில் இருந்தார். நம் ஊரில் என்றால் என்ன நடந்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா?
இந்த வழி காட்டுதல் இல்லாதிருந்தால் அனேகமாக ஏதாவது ஒரு ஆரத்தியை பார்த்து விட்டு கிளம்பியிருப்போம்.
இதன் இடையில் அனேகமாக மொத்த மடத்தையும் சுற்றி வந்திருந்தோம். இருபது வருடங்களுக்கு முன்னால் பார்க்கத்தெரியாமல் பார்த்து விட்டு புலம்பியதற்கு இப்போது பதில் சொன்னது போல் இருந்தது. மனது நெகிழ்ந்து கிடந்தது.
அவனருளாலே அவன் தாழ் பணிந்தேன்....
No comments:
Post a Comment