பார்த்துப் பார்த்து வெகு நாட்களாக பதியமிட்டதைப் போன்று பேணிய கூடு விலகும் நாள் வந்துவிட்டது. உருக்கி விட்ட உலோகம் படிந்ததும் கூட்டை அகற்றி விட்டு முழு உருவச்சிலையாக உருவாகி வெளிவருகிறார்கள் தெய்வங்கள்.
பின் அரம், உளி போன்ற சிறு சிறு கருவிகள் கொண்டு தேய்த்து, செதுக்கி, தங்களை முழுமையை நோக்கி சிற்பிகளின் கைகளின் மூலம் நகர்த்திக்கொள்கிறார்கள் கடவுளர்கள்.
நுணுக்கமான வேலைப்பாடுகள் முழுமை பெற்றதும் மெருகேற்றி உள்ளும் புறமும் பள பளக்க தயாராகிவிடுகிறார்கள் உற்சவ மூர்த்திகள்.
தன்னைத் தானே சமைத்துக் கொள்ளும் சிலைகளின் முன்னிலையில் அத்தனை கைகளும் கருவிகள் மட்டுமே.
இந்தப் பிறவியின் கூட்டிற்குள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் சக்திக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதைப் போல ஆயிரம் கஷ்ட நஷ்டங்களோடு பரம்பரையாக இந்த கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ குடும்பங்களில் பிரபுவின் குடும்பமும் ஒன்று.
கும்பகோணத்துக்கு அருகிலிருக்கும் சுவாமிமலைக்கு பயணம் செய்பவர்கள் அங்கிருக்கும் ஏதாவது ஒரு சிற்பக்கூடத்துக்கு சென்று வாருங்கள் உள்ளும் புறமும் வெம்மை ஏறட்டும் பின்பொருநாள் குளிர்ந்து உறையலாம்.
No comments:
Post a Comment