Showing posts with label மாற்றுப்பார்வை. Show all posts
Showing posts with label மாற்றுப்பார்வை. Show all posts

Friday, December 25, 2020

திருப்பாவையும் - திருமந்திரமும் - தூமணி மாடத்து

 

நீங்க ஐயங்காரா? இப்படி என்னிடம் கேள்வி எழும்பொழுதெல்லாம் என் பதில்   நான் ஐயர், ஆனா எங்காத்துக்காரர் ஐயங்கார். அதனால  முறைன்னு பார்த்தா ஐய்யங்கார் முறைதான் ஆனா பழக்க வழக்கத்துக்கு ரெண்டும் உண்டு என்பதே.  

இதில் நான் அடைந்த நன்மை என்னவென்றால் அத்வைதம் பேசுவதை ஆழ்ந்து புரிந்து கொண்டபின் விசிஷ்டாத்வைதம் சொல்வதின் ஆழத்திலிருக்கும் அத்வைதக் கூறுகளை மனம் தேடி  கிரஹிதுக் கொள்வது சுலபமானதாயிற்று. .

ஆதி காலத்தில் நம் பெரியவர்கள்  அத்வைதமென  சைவத்தையும், விசிஷ்டாத்வைதம்மென வைணவத்தையும் பகுத்து வைத்திருந்தாலும், இரண்டும் பேசும் தளம் ஒன்றுதான் இன்னும் சொல்லப் போனால் இரண்டுமே ஒன்றுக்குள் ஒன்றுதான்.

இந்த முன்னுரையோடு இன்றைய திருப்பாவை சொல்லும் பொருளை ஆதி வேதமான திருமந்திரத்தைக் கொண்டு புரிந்து கொள்ள முயலாலம்.  நான் தினமும் அடையும் இந்த ஆனந்தத்தை இன்று உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

#திருமந்திரம் பாடல் எண் 2272

அஞ்சொடு நான்கும் கடந்து அகமே புக்கு
பஞ்சணி காலத்து பள்ளி துயில் நின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லியலாளோடு
நஞ்சுற நாதி நயம் செய்யுமாறே

ஐந்து எதுவென்றால், பஞ்சேந்திரியம் என்று சொல்லப்படும், மெய், வாய், கண் மூக்கு, செவி. நான்கு என்பதோ அந்தக்காரணங்களான மனம், புத்தி, சித்தம் அகங்காரம்

இந்த இரண்டும் அவரவர் செயல்கள் ஏதுமின்றி அடங்கி இருக்குமாம், எப்போது என்றால் விஞ்சையர் வேந்தன், விஞ்சை என்றால் அறிவு, அதாவது அறிவின் வேந்தனான ஆன்மா நீல ஒளியில்  (நஞ்சு என்பதற்கு நீலம் என்ற பொருளுண்டு - இதையே “நீலாங்க மேனியள் நேரிழையாள்” என்று மற்றொரு பாடலில் திருமூல தேவ நாயனார் கூறுகிறார்) ஆழ்ந்து இருக்கையில் ஆன்மாவின் சிற்சக்தியும் தொழில் படாது நின்று சீவனும் சிவமும் ஒன்றாகி நிற்கும் இன்பத்தை அடையும் என்பதாம் பொருள். 

 

சுருக்கமாகச் சொன்னால் சத் சித் ஆனந்தத்தில் மனம் சமாதி நிலை எய்தும் தருணம் பற்றிக் கூறுகிறார்.   

 

இப்போது இன்றைய திருப்பாவை சொல்லும் அத்வைதத்தை மேலே சொன்ன திருமந்திர பொருளின் அடிப்படையில் பொருத்திப் பாருங்கள்.

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரியத்
      
தூமம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக் கதவம் தாள் திறவாய்
      
மாமீர் அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
      
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று
      
நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்      

 

#தூமணி – என்பதற்கு பிடரிக்கண் என்றொரு பொருள் உண்டு, அக்கண்ணிருந்தும் ஒளிரும் ஒளியே ஆன்மாவின் தூய ஒளி, அந்த ஒளியில் ஆழ்ந்து, தானிருக்கும் இடத்திலிருந்து முகிழ்ந்து வரும் நறுமணத்தைக் கூட அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு, தனது, மெய், வாய், கண், செவி மூக்கு எதுவும் தொழிற்படாது  அவள் ஊமையாகவும், செவிடாகவும், #அனந்தலாகவும், அதாவது தனது மனம், சித்தம், புத்தி, அகங்காரமான அந்தகரணங்கள் ஏதும் இயங்காத மயக்க நிலையில், #மந்திரமான பிரணவத்தில் (மந்திரப் பட்டாளோ) ஆழ்ந்து ஏமப் பெருந்துயிலில் அதாவது யோக நித்திரையில் ஆழ்ந்து இருக்கிறாளாம்.

அப்படியாக யோக நித்திரையில் ஆழ்ந்திருக்கும் வேளையில்  ஆன்மாவானத்து மாமாயன், மாதவன், வைகுந்தன் என பல நாமங்களில் உறையும் அந்த சிவத்தோடு ஒன்றி, சீவமும் சிவமும் பிரிவின்றி ஐக்கியமாகும் என்றும் அத்வைதத்தின் அடிப்படையை சொல்லும் பாடலாகவும் பொருள் கொள்ளலாம்.