Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Tuesday, October 24, 2017

ஆதி யுகத்திலிருந்து

ஆதியுகத்தின் மரப் பொந்துகளிலிருந்து சிறகடித்துப் பறந்த பறவைகள் இன்று கான்கிரீட் கட்டிடங்களின் குளிர்சாதன மின்கருவியின் இடுக்குகளிலிருந்து பறந்து செல்கிறது.

இரண்டுக்குமான வித்யாசத்தை அவை அறிந்து கொள்ளுமா என்ற கேள்விக்கு முன் அதனால் உனக்கென்ன பயனென்றும் ஒரு பதில் வர மவுனமாய் காட்சியை வார்த்தையாக்கிக் கொண்டிருக்கிறேன். ஓஷோவை புறக்கணித்தபடி.

Tuesday, May 19, 2015

வாசிப்பு - ஜென் புரிதல்கள்

இந்த விசித்ரமான மனதிற்கு எப்போதும் உரைகல் தேவைப்படுகிறது. பரீட்சைகளின் முடிவுகளில் திருப்தியுறும் இந்த எளிய மனதை கண்டு நகைக்கிறது உள்ளுறங்கும் முதிய மனம். ஆனாலும் கற்றுக் கொள்வதை உரசிப்பார்ப்பத்தில் களிப்புறுகிறது புத்தி.

நான் நிகழ்வுகளில் என் கேள்வியை ஏற்றிக் கொள்கிறேனா இல்லை கேள்விக்குப் பின் நிகழ்வுகளை கோர்த்துக் கொள்கிறேனா என இப்போதெல்லாம் என்னை நானே விசாரித்துக் கொள்கிறேன்.
சிறிது நாட்களுக்கு முன் ஜென் பற்றிய ஒரு விட்டேத்தி மனநிலை கைக் கொண்டது. ஆனாலும் மனம் அதை ஒரு மூலை...யில் ஒதுக்கி விட்டு தன் பாடலை இசைத்துக்கொண்டு தானிருந்தது.

கையிலிருந்த மொழிபெயர்ப்பு புத்தகம் முடிந்ததும் அலுவலுக்கு கிளம்பும் அவசரத்தில் படிக்க வேண்டிய புத்தகங்களின் தொகுப்பில் இருந்து ஒரு புத்தகத்தை உருவிச் சென்றது கை. பொதுவில் அவ்வப்போதைய மனநிலைக்கு தக்கவாறு தெரிந்தெடுப்பதே வழக்கம். இன்றைய நிகழ்ச்சி எனக்கே ஒரு வழமை மீறிய செயலாகப்பட்டாலும் காலமின்மை உந்தித்தள்ள மனதின் வியப்புக்குறியை புறந்தள்ளினேன்.
வாசிக்க ஆரம்பித்த பொழுது என் மனம் நின்று மீண்டும் ஓடத் துவங்கியது.

அது சத்குரு ஜக்கி அவர்களின். ஜென் கதைகளின் தொகுப்பு. ஒரு கதை பின் அதற்கான விளக்கம்/புரிதல் என்றபடி செல்லும் புத்தகம். இது வரையில் இது போன்ற ஒன்றை வாசித்ததில்லை.

ஒரு சில கதைகளுக்குப்பின் மனம் நான் முதலில் எழுதிய வரிகளுக்குள் சிக்கிக் கொண்டது. ஒவ்வொரு கதைகளுக்குப் பின்னும் அதனுடனான என் புரிதலை தேர்வு எழுதும் மாணவியின் மனநிலையோடு ஆராய்ந்து விட்டு அவரது விளக்கத்தை வாசிக்க ஆரம்பித்தேன்....
கதைகளின் முடிவில்.. முதல் இரண்டு பத்திகளை மீண்டும் வாசித்துக்கொள்ளலாம் பொறுமையிருந்தால்.

நம் கேள்விக்கான ஒவ்வொரு பதிலையும் பிரபஞ்சத்திலிருந்து உணர்ந்து கொள்வதொன்றே நாம் செய்ய வேண்டியது என மீண்டும் மனதிலிருத்திக்கொள்ளும் தருணம் இது.

#‎ஜன்னல்‬ - தங்கத்தாமரை பதிப்பகம் - ஜக்கி வாசுதேவ் - எழுத்தாக்கம் சுபா.

Tuesday, September 23, 2014

தூய்மையான இந்தியா – ஜெய விஜயி பவ


கிளீன் இந்தியா ப்ராஜெக்ட் அக்டோபர் இரண்டிலிருந்து ஆரம்பிக்கப் போகிறோம் என்று பெங்களூரில் மோடி உணர்ச்சி போங்க பேசிக்கொண்டிருந்தார்.  உண்மைதான் மிகவும் தேவையான ஒரு முயற்சி. நாம் மற்ற நாடுகளில்  பயணிக்கும் போது அங்குள்ள தெருக்களையும் சாலை ஓரங்களையும் காணும் பொது நம்முள் ஏதோ ஒரு தன்னிரக்கம் சுரந்து கொள்ளும். அதுவே நம் ஊரில் சில வெளிநாட்டவர்களோடு தெருவில் பயணிக்கும் போது மிகப்பெரிய கையாலாகதத் தனமாக மாறி  மிகவும் அருசியான உணர்வுகளை தோற்றுவிக்கும்..


வெளிநாடுகளின் இண்டஸ்ட்ரியல் பார்க் உண்மையில் ஒரு பூங்கா போல இருக்கும் ஆனால் எனக்குத் தெரிந்து இங்கு எந்த ஒரு இண்டஸ்ட்ரியல் பார்க்கும் சாதாரண பகுதியாகக் கூட இருக்காது ஏதோ கைவிடப்பட்ட குப்பைத்தொட்டி போல இருக்கும். சிப்காட் அதிகாரிகள் நம் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதில் ஏதோ அவர்கள் தன்மானம் குறைந்து போவது போல் நடந்து கொள்வார்கள். சில முக்கியமான வெளிநாட்டு வாடிக்கையாளர்களை நம் ஏரியாவிற்கு அழைத்து வரும் போது தான் இதுவரை நாம் தினமும் கடந்து வந்துகொண்டிருக்கும் அவலத்தின் மொத்த விஸ்தீரமும் உரைக்கும்.

தாமதமான நடவடிக்கை என்றாலும் தேவையான ஒன்று. எல்லா நல்ல திட்டங்களைப்போல இதுவும் தொடங்கி மறைந்து  விடக்கூடாது என்று இந்த நவராத்திரி நன்னாளில் எல்லா சக்திகளையும் வேண்டிக்கொள்கிறேன். J

ஜெய விஜயி பவ

Thursday, April 3, 2014

இசை எனும் காற்றழுத்த தாழ்வுமண்டலம் - இப்போது பாம்பே ஜெயஸ்ரீ

 
 

இசை என்னை ஆக்கிரமிக்கும் விதம் மிகவும் வித்யாசமானது. கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தன் மகவை மட்டுமே நினைப்பது போலவும், மழைக்காலத்திய இரவுகளில் இடைவிடாது நினைவுறுத்தும் குளிரைப்போலவும், கோடை காலத்தின் குளீரூட்டப்பட்ட அறைக்குள்ளும் உணர்த்தும் வெப்பத்தைப்போலவும், காதல் வயப்பட்ட மனதைப்போலவும் இடைவிடாது தன்னை நிலைநிறுத்தி என்னை முழுதுமாய் ஆக்கிரகிக்கும்.

சக்கரமணிந்த கால்களைப்போன்ற ஓட்டத்தினிடையேயும், உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் இசை ஒரு தனி ஸ்துலமாய் அரூபமாய் உடன்வரும்.  யாரும் அறியாமலும் சில சமயம் அறிந்தும் மனதுள் ஓடும் இசை கண்களின் வழியேயும்,  வார்த்தைகளினோடும் வழிந்தோடும். போதை கொண்ட மனதை நெருங்கிய சிலருக்கு அநேக நேரங்களில் கண்கள் காட்டிக்கொடுத்துவிடும்  மேலும் அந்த நேரங்களில் என் காதுகளில் நிரம்பியிருக்கும் இசை மற்றவர்களையும் கூட தொடக்கூடும். இது ஒரு காற்றழுத்த தாழ்வுமண்டலத்தைபோல தொடங்கி புயலாய் மாறும். பின் நிலைமை மாறும் மீண்டும் தாழ்வு மண்டலம் உருவாகும் இதுவரை இதன் பின்னிருக்கும் வேதியலை நான் அறிந்து கொள்ள முயற்சித்ததே இல்லை.
அதுபோன்ற தொரு இயற்கை சீற்றத்தில் தான் கடந்த சில நாட்களாக நான் பாம்பே ஜெயஸ்ரீ யுடன் வலம்வந்து கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கையின் அதிகமான பாடங்களை கற்றுக்கொண்டிருந்ததொரு காலமது. அதை முழுதாய் அனுபவங்களாய் மாற்றிக்கொள்ளவும் அன்றைய நிதர்சனங்களை பழகிக்கொள்ளவும் முயன்று கொண்டிருந்த காலகட்டத்தில் தான் நான் முதல் முதல் பாம்பே ஜெயஸ்ரீ யை கேட்க நேர்ந்தது.  அன்று முதல் இன்று வரை தியானத்திற்கு ஒப்பான நிமிடங்களை வாரி வாரி வழங்கும் ஒரு அட்சய பாத்திரம் அவரது குரல். பாடல் கேட்டுக்கொன்டிருக்கும் போதே மனம் மிக மிக ஆழத்தில் திம்மென்று அமர்ந்து விடும். பின்பு இது போலஏதாவது வெளியேற்றினாலன்றி நான் நானல்ல.

என்னை முதல் முதலாக வசீகரித்த பாடல்...

Sunday, December 28, 2008

எப்படி இருக்கும்? எப்படி இருக்கும்?


ஊருக்கே ஏசி போட்டா எப்படி இருக்கும்?
தமிழ் நாட்டுல கலப்படமில்லாத நல்ல சாட் ஐட்டம் கிடைச்சா எப்படி இருக்கும்?
3 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 30 ரூபால வாடகை டாக்ஸில கடக்க முடிஞ்சா எப்படி இருக்கும்?
அப்பப்ப சூடா ரசகுல்லா சாப்பிட்டா எப்படி இருக்கும்?
இஷ்டத்துக்கு மீட்டா தை என்று சொல்லப்படும் இனிப்பு தயிர் சாப்பிட்டா எப்படி இருக்கும்?
இதோடு கூட இலக்கிய + தெய்வீகமான அனுபவமும் கிடைச்சா எப்படி இருக்கும்?
இத்தனைக்கும் மேல உக்கார வைச்சு மூணு வேளையும் விதம் விதமா சாப்பாடு போட்டா எப்படி இருக்கும்?

சரி ரொம்ப நான ரொம்ப மொக்கல..(அதாவது மொக்கை போடல)

நான் இப்ப
கொல்கத்தால இருக்கேன்.....

சென்னைல கடும் வெயில் இல்லாட்டா மழைன்னு இருக்கற நம்ம மாதிரி பாவப்பட்ட ஜனங்களுக்கு எப்பவும் கம்பளி சட்டை போட்டு கால்ல சாக்ஸ்னு சொல்லப்படும் காலுறை போட்டுகிட்டு மிதம்/அதிகமான குளிர்ல ரோட்டுல நடக்கனும்னா எவ்ளோ சந்தோஷமா இருக்கும்னு சொல்லித்தான் தெரியனுமா???

கொஞ்ச நேரம் தலையில் மறைப்பின்றி வாசலில் நின்றால் போதும் உள்ள வந்து தும்மி கிட்டே இருக்கலாம்(என் பெரிய பையன் அனுபவம் அவனுக்கு சைனஸ் தொந்தரவு) உடம்பெல்லாம் சில்லுனு, நடந்து கிட்டே இருந்தா தப்பிச்சோம்। (அதாவது தொடர்ந்து ஆக்டிவா இருந்து கிட்டே இருக்கனும்) கொஞ்சம் சோம்பேறி, தூக்கம் வருதேன்னு தூங்கிப்போயிட்டோமின்னா எழுந்திருக்கும் போது கூடவே காய்ச்சல் வந்த மாதிரி ஒரு உணர்வு॥ அப்பப்பா வார்த்தைல சொல்ல முடியல அந்த உணர்வை। ரொம்ப சுகமா நல்ல அனுபவமா இருக்கு. இதுல கொடுமை என்னான்னா என் சின்னப்பையனுக்கு இங்கயும் ராத்திரி தூங்கறதுக்கு ஃபேன் வேண்டியிருக்கு (???)

அக்கா ரொம்ப அருமையா உக்கார வைச்சி சாப்பாடு போடறாங்க கூடவே சின்ன சின்ன ஷாப்பிங், அங்க நடக்கற ஆன்மீக, இலக்கிய கூட்டங்களுக்கு போற வாய்ப்பு இப்படியாகத்தானே என் 2008 வருஷக்கடைசி போயிட்டு இருக்கு.

போட்டா இல்லாத பதிவு போட முடியுமா அதனால அங்க நடந்த ஐய்யப்பா சமூகத்திலேர்ந்து நடத்திய சாஸ்தா பிரதி முடிவு அன்னிக்கு நடந்த கோலகலத்திலேர்ந்து சில போட்டோ. நாம இருக்கறது தமிழ்நாடா, கேரளாவா இல்லை மேற்கு வங்கமான தெரியாத அளவுக்கு நம்மை மறக்கடிச்சிட்டாங்க ரொம்ப இனிமையான அனுபவம். தன் வயது மறந்து, வேலை மறந்து, சொந்த இன்ப துன்பங்களை மறந்து எல்லோரும் ஒன்று கூடி இருந்த அந்த இனிமையான உணர்வுகளோட சங்கமத்தை பார்க்கும் போது நாமெல்லாம் சொந்த ஊரு மாநிலத்தை விட்டு போனத்தான் இத்தனை ஒற்றுமையா இருப்போமோன்னு தோன்றியது.

வாழ்க மானுடம்.

அப்ப வருஷக்கடைசிக்கு ஒரு பதிவு போட்டாச்சு.... அடுத்த வருஷம் சந்திக்கலாம் நன்பர்களே..... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

Friday, July 4, 2008

மின் தொடர் வண்டி - ஆச்சர்யம் மற்றும் ஆதங்கம்.


நகர்ந்து செல்லும் மேகங்களைக்காட்டிலும் வேகமாக நாட்கள் ஒடிக்கொண்டிருக்கின்றன பெரிதும் சிறிதுமான மாற்றங்களோடு.

நான் புதியதாக பயணிக்கத்துவங்கியிருக்கும் மின் தொடர் வண்டிகள் தரும் அனுபங்கள், ஆச்சரியமும் ஆதங்கமும் நிறைந்ததாக உள்ளது.

ஆச்சர்யம்

01. மின் தொடர் வண்டிகள் வந்து நின்றதும் பசித்திருக்கும் பெரு வயிறோனென பெரும் கூட்டத்தை தன்னுள்ளே வாங்கிக்கொள்ளும் இரயில் நிலையங்கள், அவர்களை நொடியில் தொலைத்துவிட்டு நிற்கும் நடைமேடைகள்.

02. கடந்து செல்லும் தொலைதூர விரைவு வண்டிகளில் எப்போதும் எங்கேயோ பயணப்பட்டுக்கொண்டே இருக்கும் மனிதர் கூட்டத்தின் ஒரு பகுதி.

03. எப்போதும் கை பேசியில் பேசிக்கொண்டேயிருக்கும் இளம் பெண்கள்

04. பக்கத்து இருருக்கை கார/காரியின் இருப்பைப்பற்றி கவலைப்படாமல் எதிர்முனையின் இருப்பவரோடு போடும் சண்டைகள்/கொஞ்சல்கள்

05. இதற்கு நேரெதிர் மறையாக அடுத்து இருப்பவர் கூட கேட்க முடியாத அளவிற்கு மிகவும் மெதுவாகப்பேசும் கை பேசி பேச்சுக்கள்.

06. தட்டச்சு இயந்திரத்தை விட மிக வேகமாக கைபேசியில் குறுந்தகவல் அடிக்கும் கைவிரல்கள்.

07. ஓடும் வண்டியில் அனாயசமாக ஏறி இறங்கும் பழம், கைகுட்டை, பாசிமணி ஊசி, கறிகாய், சமோசா, விற்கும் பெண்மணிகள்.

08. காலை 11 மணிக்கெல்லாம் மொத்த இருக்கைகளையும் ஆக்கிரமித்துக்கொண்டு சட்டமாய் படுத்துறங்கும் பயணிகள்.

09. ஓடும் இரயிலில் காய்கறியோ, கீரையோ, ஒரு கையால் பிடித்துக்கொண்டு மறு கையால் கத்தியால் நறுக்கியபடி பயணிக்கும் பெண்மணிகள்.

10. இந்த பரபரப்பு எதிலும் ஆட்படாமல் நின்றபடியோ (!!!!) உட்கார்ந்தபடியோ தூங்கும் சில பயணிகள்.

ஆதங்கம்

01. வெளியில் வெறித்துப்பார்த்தபடி எப்போதும் ஆயாசத்தையும் அடுத்த வேளைக்கான வேலைகளையும் சுமந்தபடி பயணிக்கும் நடுத்தர வயதுப்பெண்கள்.

02. யாரோடும் பேச மனமற்று புத்தகங்களில் மூழ்கும் பயணிகள்

03. வயது முதிர்ந்த காலத்திலும் சேமியாவும், அப்பளமும் விற்கும் மூதாட்டி.

04. நிற்க கூட இடமில்லாத வேளைகளில் கொஞ்சமும் பிரஞ்ஞையற்று மாற்றுப்பாதையில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருக்கும் பயணிகள்.

05. இதை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி கூடவே வரும் இரயில்வே போலீஸ் (ஆர்.பி.எப்)

06. ஏற்றிவிடவோ இறக்கிவிடவோ கூட ஆட்களின்றி தனித்து வரும் வயதானவர்களின் முகங்களில் கவிந்து கிடக்கும் தனிமையும் விரக்தியும்.

07. செல்லும் இடத்தை அரைகுறையாய் கேட்டு ஏற்றிச்சென்று பின் அதிகம் கேட்டு சண்டையிடும் ஆட்டோ ஓட்டுநர்கள்

08. சாயங்கால வேளைகளில் பசிமிகுந்த முகத்தோடு சிப்ஸோ, சமோசாவோ, பேல்பூரியோ கையில் இருக்கும் பேப்பரில் சுருட்டியபடி உண்டுவிட்டு குடிப்பதற்கு தண்ணீர் இன்றி சமாளித்தபடி செல்லும் இளம்பெண்கள் (பெரும்பாலும் தனித்து தங்கியிருக்கும் படிக்கும்/பணிக்குச்செல்லும் பெண்களாயிருக்கும் என்பது என் அனுமானம்)

09. எதிர் இருக்கை காலியாய் இருக்கும் பட்சத்தில் தவறாமல் தன் கால்களை வைத்து அழுக்காக்கும் படித்த/படிக்காத பயணிகள்.

10. முதல் வகுப்பில் தவறிப்போய் புயணித்துவிட்டு பரிசோதகர்களிடம் மாட்டிக்கொண்டு கையில் உண்மையிலேயே அபராதம் கட்ட காசின்றி தவித்த அப்பாவி பயணிகள் கடைசியில் என்ன ஆனார்கள் என்று தெரியாமலே அடுத்த வேலைக்காக நகரவேண்டிய நம் கட்டாயம்.

இந்த ஆச்சர்ய ஆதங்க ஓடையில் என் படகு எந்தப்பக்கம் செல்கிறதென்ற கவனிப்பும் ஒரு சுவாரசியமான அவதானிப்புத்தான்.