Sunday, December 27, 2009

பெண்பால் கவிதைகள் - 4


மிகப்பிரியமான இசையைப்போலவோ
ஆழ்ந்த வாசிப்பானுபவத்தைப்போலவோ
நிரம்பித்ததும்பும் கோப்பையின்
பொன்னிறத்திரவத்தைப்போலவோ
முகத்தில் மோதி விலகும் எதிர்காற்றின்
குளிர்வாடையை போலவோ
எப்போதோ தொலைபேசும்
உற்ற தோழமையை போலவோ
வசீகரத்துடனும் வாதையுடனும்
என்னுள் உன் ஞாபகங்கள்

எப்போதும் சுமக்க வழியோ மனமோ
இல்லையென்றபோதும்
ஏதோ ஓர் மூலையில்
சுகந்தமாய் மணம் வீசும்
குடும்பமாய குதூகலிக்கையிலும்...

Sunday, December 13, 2009

கொற்றவை - ஒரு பகிர்தல் - பகுதி 2

இயற்கையை கடவுளாக்கியது ஒரு காலம்,
இறையை இயற்கையாக்கியது மற்றொரு காலம்
ஆனால் இறையை மூதாதையாக்கினால் சிவனையோ, சக்தியையோ, திருமாலையோ, தன் குடி மூத்தோராய்க் கொண்டால். அதையும் தீந்தமிழில் தோய்த்துத்தந்தால் அதை எங்கணம் அனுபவிப்பது. எவ்வாறு வார்த்தையால் வருணிப்பது. குருடன் யானையைக்கண்டது போலாகுமா அல்லது தேனென்று எழுத்தில் சொன்னால் தேனின் சுவை அறியக்கிட்டுமோ எனவே அந்த வரிகளையே உங்கள் அனுபவித்திற்காக இங்கு பதிவிட்டிருக்கிறேன்..

படைப்பாளியின் உலகை விட வாசக மனம் சென்றடையும் இலக்குகள் அதிகமல்லவா...

கொற்றவையிலிருந்து சில வரிகள்....


"அறியமுடியாமையின் நிறம் நீலம் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். நிலத்தின் எல்லையின்மை வானம். நீலத்தின் அலைகளே கடல். நீலம் ஒரு புன்னகை கருருமைக்குள் ஒளி பரவுவதன் வண்ணம் அது. கருமையோ வெளியை முழுக்கத் தன்னுள் அடக்கிக் கொண்ட பெருவெளி. கருமையில் இருந்தே ஒவ்வொன்றும் பரு திரட்டி வருகின்றன. கருமையை அஞ்சினார்கள் அதன் முடிவற்ற வல்லமையை வணங்கவும் செய்தார்கள் ஆகவே அவர்களுக்கு நீலமே உகந்த நிறமாயிற்று. புன்னைகைக்கும் கருமையே நீலம்."

அ, இ, உ என்ற மூன்று அடிப்படை ஒலிகளை மட்டுமே மொழியாக கொண்டிருந்த அம்மக்களுக்கு தலைமுறைகள் தோறும் கைமாறிச்செல்லவேண்டிய பெரும் செல்வமென ஒரு சொல் மட்டும் இருந்தது. அம்மா என்ற அச்சொல்லை அவர்கள் குடி பாலூட்டும் விலங்கொன்றிலிருந்து கற்றுக்கொண்டது. மின்னலில் இருந்து தீயை அடைந்தது போல மூன்று ஒலிகள் கூடிய அடுப்பினுள் அச்சொல் அணையாது எரிந்துகொண்டிருந்தது. பின்பு அழகுக்கும் சிறப்புக்கும் அதுவே சொல்லாயிற்று அவர்களுக்கு உடை இருக்கவில்லை ஏனெனில் அவர்கள் ஒருவர் பிறரென உணரவில்லை. எனவே வேறு ஒரு சொல்லுக்கு அவர்கள் உல்ளம் தாவவும் இல்லை"

முழுநிலவு நாள்களில் ஒன்றில் ஏதோ ஆழத்து ஆணை ஒன்று தென்கடலில் இருந்து ஏறி வந்தது போல அவர்களில் ஒரு சிறுமி சன்னதம் கொண்டெழுந்து கைகளை விரித்து வெறிக்குரலெழுப்பி ஆடும்போது அவள் வாயிலிருந்து அதுவரை கேட்டிராத எண்ணற்ற சொற்களைக் கேட்டு அவர்கள் அஞ்சி மண்ணில் குப்புற விழுந்து பணிவார்கள்..... அலைகளுக்கும் அவளுக்கும் இடையே ஓர் உரையாடல் நடந்து கொண்டிருப்பது போல, தென்கடலாழத்தில் இருந்து எவரெவரோ அவளுடன் மொழியொன்றால் உரையாடுதல் போல"....

இடியொலித்து வல்லிரைச்சலுடன் வானாறுகள் மண்ணில் விழுந்தன. பேருருவ அன்னையும் தந்தையும் கூடி முயங்கும் உயிர்நாடகத்தை குமரிக்கோட்டின் பன்மலை அடுக்கத்துக் குகை ஒன்றில் அமர்ந்து பார்த்திருந்தான் ஒருவன் புலித்தோலாடை அணிந்து குளிருக்கு யானைத்தோல் உரியை போர்த்திருந்தான். ஒரு கையில் தன் ஆயுதமான கல்மழுவும் மறுகையில் குடி அடையாளமான மான்குறியும் வைத்திருந்தான் ஒளி கண்ட இடம் நோக்கி பருப்புகையென படையெடுக்கும் பூச்சிகளில் இருந்து தப்ப உடம்பெங்கும் சாம்பல் பூசியிருந்தான். அவனது கனத்த சடைமயிர் தோளில் விழுந்து கிடந்தது. கருநிற இமைகளும் வெண்ணிறப் படலத்தில் நீல மையவிழியுமாக வரையப்பட்ட ஒரு பொய்விழி நெற்றியில். அது அப்பழங்குடியின் தொன்மையான வேட்டை உத்தி பிறகு அது வழக்கமும் அடையாளமும் ஆயிற்று. அவனது எதிரிகள் மனிதர்களாயினும் விலங்குகளாயினும் அவன் தூங்குவதேயில்லை என்று எண்ணினார்கள். அவர்களின் உடல் தூங்கும்போதெல்லாம் அந்த வரைகண்கள் உலகை உறுத்துப்பார்த்துக் காவலிருந்தன. தூங்கிய பிறகு வேறு உலகம் விழித்துக்கொள்வதை அக்கண்மூலம் அவர்கள் கண்டார்கள்.."

"கொடுமுடியொன்றில் மேல் ஏறி அவன்வாழ்வில் முதன் முறையாக முழுத்தனிமையில் நின்றான். ஆனால் அந்த தனிமையை எல்லா உறவும் ஒக்க இருக்கையிலும் அறிந்ததுண்டு என்றும் ஓவ்வொரு இயல்பு நிலையிலும் அத்தனிமையிலேயே இருந்திருக்கிறான் என்றும் அப்போது அறிந்தான்....."

அவனுக்கு என்ன ஆயிற்று என்று குடி மூத்தோர் வினவினர் அக்கேள்வியில் ஒரு கணம் அதிர்ந்து பின்பு ஏதோ சொல்ல முயன்றான் சொல்லின்மையில் சில கணங்கள் ததும்பி பிறகு அவ்விருக்கையில் ஏறித்துள்ளி இடக்கால் வீசி வெளியை அளைய விரல்கள் காற்றில் வடிவங்களை சமைத்துச் சமைத்து அழிக்க சுழற்காற்று போலச்சுற்றி நடமிட்டு தான் கண்டதென்ன என்று அவர்களுக்கு சொல்லத்தொடங்கினான்"

யாரைக்குறித்து கூறப்படும் வார்த்தைகள், இந்த உருவகங்களுக்கு சொந்தமானவர் யார் உன்னிலா, என்னிலா, ந்ம்மிலா இல்லை யாவருள்ளும் உறைந்து நிறைந்திருக்கும் உள்ளுணர்வா... கேள்விகளுக்கான பதிலை நோக்கிய தேடலை துவக்கி வைப்பது தான் உன்னதமான படைப்பிலக்கியமோ....


தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் ஆர்வமுண்டு வருகிறேன்....

Tuesday, November 17, 2009

பெண்பால் கவிதைகள் - 3

உள்ளே கனன்று வரும்
பெரு நெருப்பை
அவ்வப்போது விசிறிவிடும்
ஏதோ ஒரு நிகழ்வின்
அடையாளம் தெரியாத
அல்லது
அறிந்து கொள்ள விரும்பாத
அறியாமையின் கணத்தில்
வாழ்கிறது
"பெண்ணென்னும் மாயப்பிசாசு"


**********************


நீவி உடுத்தி
அதரச்சாயமிட்டு
அடர்ந்து
மையெழுதியோ எழுதாமலோ
கண்ணாடி முன்நின்று
அழகிதானடி நீயென
ஒரு முறை பலமுறை
தனக்குள் சொல்லி
பின்
படர்கையில் யாரேனும்
பகர்கையில்
விழியால் செவியுறும்
"பெண்மையின் அழகு"


Saturday, November 14, 2009

கொற்றவை - ஒரு பகிர்தல் - பகுதி 1

"பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே எங்கள் பாவங்களை மன்னித்தருள்வீராக"
சொற்களில் உறைந்திருக்கும் இறைஞ்சுதல்கள் வெளிப்படுத்தும் பாவனைகள் கண்கூடாக இப்பிரயோகத்தில் காணக்கிடைப்பது போல்
உள்ளே உணர்ந்து உறைந்து கிடைக்கும் எண்ணங்களை முழுவதும் காட்சிப்படுத்தும் ஆவலோடுதான் இந்தப்பதிவை
எழுதத்துவங்கியுள்ளேன்.

கடந்த வருட ஆரம்பத்தின் புத்தகத்திருவிழாவில் வாங்கிய கொற்றவையை உடனே படிக்க வேண்டும் என்ற ஆவலற்று அடுத்து இதைப்படிக்கலாமா அதைப்படிக்கலாமா என்ற எந்த அலம்பலகளும் இல்லது ஆர அமர இருந்த வெற்று மனநிலையின் ஒரு பொழுதில் வாசிக்கத்துவங்கினேன்

பொதுவாக எந்த முன்மதிப்பீடுகளுமற்று படைப்புகளை அணுகுவதே மிகச்சிறந்த வழியென்று அறிந்திருந்தும், பல சமயம் உணர்ந்திருந்தும், ஏனோ "கொற்றவை" யைக்குறித்த நன்பர்களின் விமர்சனங்களும், பொதுவில் எனக்கு அறியக்கிடைத்திருந்த அந்த புத்தகத்தின் மொழி வழக்கு பற்றிய எச்சரிக்கையும் என்னுள் சிறிய இனந்தெரியாத எதிர்பார்ப்புக் கொப்புளங்களை உருவாக்கித்தான் விட்டிருந்தது। கூடவே அப்படி என்ன சொல்லிவிட முடியும் சிலம்பைப்பற்றி? எத்தனை புத்தகங்களைப்படித்திருப்போம், மிகப்பிரியமான என் தமிழாசிரியர்கள் பாடத்திட்டத்தையும் தாண்டி எங்கள் தனிப்பட்ட விருப்பத்திற்கென விதம்விதாமய் எத்தனை சொல்லியிருக்கிறார்கள் இதைத்தாண்டி என்ன இருக்கப்போகிறது? என்ற எண்ணத்தோடும், ஏற்கனவே பார்த்திருந்த ஒரு திரைப்படத்தை மீண்டும் பார்க்கும் ஒரு மனோநிலையோடும் தான் வாசிக்க ஆரம்பித்தேன்

ஆனால் நடந்தது முற்றிலும் வேறுபட்ட அனுபவம். எதைப்பற்றியும் சிந்திக்கவொட்டாது படிக்கும் புத்தகத்தைப்பற்றி மட்டுமே காதலோடு யோசித்த நாட்களுண்டு, இதை இந்தக்கணம் சொல்லியே ஆகவேண்டும் என்ற தவிப்போடு பகிர்ந்து கொண்ட புத்தகங்களுண்டு, மனிதத்தின் மேன்மைகளை மென்மையாய் வருடி விட்டு கவித்துவமான சிந்தனைகளை கிளர்ந்தெழுத்திய புத்தகங்களுண்டு, இப்படிக்கூட சில சாதராண நடைமுறைகளை வெகு சுவாரசியமாக வடிக்கமுடியுமென்று கற்றுக்கொடுத்த புத்தகங்களுண்டு, சில புத்தகங்களை படித்து முடித்ததும் செய்யவேண்டியது இதுவென சில பட்டியல்களை இட வைத்த எழுத்துக்களுண்டு, சில புத்தகங்கள் அடுத்து எந்த புத்தகத்தையும் உடனே படிக்கவொட்டாது அசைபோட வைத்ததுண்டு.. ஆனால் இந்தபுத்தகம் என்ன செய்தது...

சொல்வதற்காகாத்தான் இந்த ஆரம்பம்...

ஏதேனும் எழுதி நாட்களாகிறது
பிரசவத்திற்கென
சுமந்திருக்கும் கருவென
உள்ளே ஊறிக்கிடக்கிறது
வார்த்தைகள்
....

மீண்டும் வருகிறேன்...

Saturday, September 26, 2009

முகமூடிக்கவிதைகள் - 9

உடுப்பிட்ட வார்த்தைகளை
உப்பிட்டு நீர் வார்த்து வைத்தேன்
என்றேனும்
நிஜமுணர்த்தக்கூடுமென்று.

***********

யாரோடும் பேசவியலாத
வார்த்தைகளை
மௌனக்கரைசலில்
கரைக்கத்துவங்கினேன்
நீர்த்துப்போன கரைசலின்
நிறம் மட்டும்
மாறியபடியே உள்ளது.


***********

ஓடி ஒளிந்து
கண்ணாமூச்சியாடும்
வார்த்தைகளின்
களியாட்டத்தின்
முடிவில் நின்றிருக்கும்
உண்மை

Sunday, August 23, 2009

நாதப்பிரம்மம் - பிரம்மம் நாதம்....

குட்டிகளா யாரு இது வெங்கட்ராமன் பொண்களா? பாட்டுச்சொல்லிக்கறளோ? ரொம்ப நன்னாப்பாடறேளே?
இல்லே பாட்டி சும்மா கேட்டுதான் படிச்சுண்ட்டோம்..
ஷேமமாயிருக்கனும்...ஆசீர்வாதம் கோந்தேளா...

அப்பா இன்னக்கி பாகிபெரிம்மாவாத்து கொலுல, முத்துப்பொண் பாட்டி நாங்க பாட்டு கத்துக்கறோமான்னு கேட்டா, எங்களை பாட்டு சேத்துவிடறேளா?
இப்ப என்னத்துக்கு பாட்டும் கூத்தும், சும்மா அம்மாட்ட ஸ்லோகம் கத்துக்கோங்கோ போறும். அதுக்கு பதிலா ஹிந்தி கிளாஸ் சேர்ந்தாலாவது பிரயோசனம்.

அப்ப என்ன ஹிந்தி சேக்கறேளா? இப்ப உனக்கென்ன அவசரம்? முதல்ல அக்கா சேரட்டும் உனக்கு கொஞ்சம் பெரிய கிளாஸ் ஆகட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்.

இப்படித்தான் ஆனது என்னுடைய இசைக்கான முதல் ஆரம்பம்.

"லம்போதர லகுமிகரா... அம்பா சுத அமர.....
லம்போதர லகுமிகரா..."

ஏன்க்கா இந்த ரமணி சும்மாவே இருக்க மாட்டாளா இல்லை யாராவது இவ கிட்ட சொல்ல மாட்டாளா இவ கர்ணகடுரமா பாடறான்னு...

"ஸ்ரீ விக்ன ராஜம் பஜே...ஸ்ரீ விக்ன ராஜம் பஜே ஏஏஏ"
ஆனா இந்த லதா சுதா நன்னா பாடறா இல்லே.. எப்படி இவா ரெண்டு பேர் குரலும் ஒரே மாதிரி இருக்கு.

"வேங்கடேசர் கொலுவிருக்கும் திருமலை திருப்பதி வேண்டும் வரம் தந்திடுவார் வெங்கடாஜலபதி".... தேரெழுந்தூர் சகோதரிகள் மாதிரி பாடவே முடியாதில்லையாக்கா...

"மருதமலை ஆண்டவனே..... மனம் குளிர பாடிட வந்தோமே"... சூலமங்கலம் சகோதரிகள் பாட்டு கேக்க தனி களைதான் இல்லேக்கா...

இப்படித்தான் என்னோடு என் இசைக்கான தேடலும் வளர்ந்தது.

"ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்... உன் கையில் என்னைக்கொடுத்தேன்".....அக்கா இந்த சகாயராணி எப்டி பாடறா தெரியுமா.
ஏட்டி நீங்கதான் நல்லா பாட்டு படிப்பீக இல்ல.. பின்ன ஏங்கி நீ பாடமாட்டேங்கே?
அப்போது சொல்லத்தெரியவில்லை எனக்கான இசையை நான் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேனென்று.

மெல்ல என்னோடு இழையாய் வந்த இசையை அவ்வப்போது இனம் கண்டு கொண்டிருந்தாலும், இதுதானென்று முடிவுசெய்யும் உத்தேசம் ஏதுமின்றி இருந்திருந்தோனோ என இப்போது எண்ணத்தோன்றுகிறது.

"பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே.... இன்று......ஜென்ம ஜென்மங்களானுலும் என்ன ஜீவன் உன்னோடுதான்..... " மற்றொரு வர்ணம் கலந்து இழைகள் தடிக்கத்துவங்கியது.அக்கா இன்னக்கி ஆபிஸ்ல ஒருத்தன் ரொம்ப நன்னா பாடினான். எப்பபாரு பாடிண்டே இருக்காங்கா... ரொம்ப நன்னா பாடறான்... இப்படித்தான் வாழ்க்கை துணையை கூட என்னால் இனம் கண்டுகொள்ள முடிந்தது... தேடலின் அடுத்த கட்டம்.

வெள்ளி இழையோடு மஞ்சளும் கலந்தது.

"அம்மா அழகே.. உயிரின் ஒளியே..."
"ரவி வர்மன் எழுதாத கலையோ... ரதிதேவி வடிவான சிலையோ".... எப்படி இப்படி பாடறீங்க.. எப்பவும் பாடிண்டேதான் இருப்பேளா?.. சினிமா பாட்டு மட்டும் தான் பாடுவேளா இல்லை எல்லாப்பாட்டுமா?...
எல்லாமும்னா என்ன அர்த்தம்.. நான் பாட்டு படிச்சிக்கலை.. ஆனா எ.ஸ்.பி.பின்னா ரொம்ப பிடிக்கும்.. ஆரம்பகால எ.ஸ்.பி,பாட்டு பாடிண்டேயிருப்பேன்...
உங்க வீட்ல வேற யார் பாடுவா?.
எங்க அம்மா பாடுவா..."சித்திரத்தில் பெண்ணெழுதி சீர்படுத்தும் மானிடரே... ஜீவனுள்ள பெண்மனதை வாழ்விட மட்டீரா" ன்னு அம்மா பாடினா எனக்கு என்னோமோ செய்யும்..."சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி...." எனக்கொரு அக்கா இருந்தா ஆனா ரொம்ப சின்ன வயசில செத்துபோய்ட்டா எனக்கென்னமோ அம்மா அவளை நினைச்சுதான் இந்த பாட்டை அழுதுண்டே பாடுவான்னு தோணும்..

முகம் தெரியாத வயதான அந்த ஆறடிக்கும் அதிகமுள்ள பெண்மணி மனதுள் மிகவும் நெருக்கமானாள். அம்மா நீங்க பாடுங்கோளேன்... என் திருமணத்திற்கு பின் அவளிடம் பேசிய முதல் பேச்சு.. என்னை அவளோடு அதிகம் நெருங்க வைத்திருக்கும் என எண்ணுகிறேன்.

"மாமாங்கம் பல குறி கொண்டாடி நிலையுடே சீலங்கள் நாவாயி".....
"கிளிமகளே வாசாறிகே... கவி மகளே..."
"வலம்பிரி சங்கில் துளசி தீர்த்தம்...."....இது என்ன பாட்டு மாமா?

ஜேசுதாஸ்.. வசந்த கீதங்கள்.. என்னை பயித்தியம் பிடிக்க வைச்ச கேசட்... என்னையும்...

வர்ணங்களின் அடர்த்தியும் எண்ணிக்கையும் அதிகரித்து இழை தடித்துக்கொண்டே சென்றது. ஆனாலும்

ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாட்டு கேசட் வாங்கியிருக்கேன் பார்த்தியா...
அய்யோ நீ அது வாங்கியிருக்கயா நான் பாரதியார் பாடல்கள் வாங்கியிருக்கேன்...
மாமா நீ கேக்காட்டா பரவாயில்லை எனக்காக ஒ.எஸ் அருண் கசல் வாங்கிகுடேன்...
பங்கஜ் உதாஸோட நாஷா கேட்டப்புறமும் உனக்கு ஒ.எஸ் அருண் வேணுமா?
அது வேற இது வேற.. இதை நான் எடுத்தக்கறேன்..

மஞ்சளும் பச்சையும் நீலமுமாய் சகலமானதும் இசையாய் உள்ளே இழைகள் பின்னிக்கிடந்தாலும் நிறைவற்ற தேடலின் தொடர்ச்சியை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

மாமா..பாம்பே ஜெயஸ்ரீ குரல் கேட்டயா.. அப்படியே உள்ளுக்குள்ள ஆழமா இறங்கறது...
ஆனா எனக்கென்னமோ ஜேசுதாஸ் மாதிரி வரலை..
சும்மா அங்கயே நிக்காத மாமா..அருணாசாய்ராம் கேட்டுப்பாரு...கேட்டா ரொம்ப துக்கமா சந்தோஷமா என்னமோ பண்றது மாமா..

"புற்றில் வாழ் அரவம் கேட்டேன்" மாமா இந்த இளையராஜா குரல்ல இருக்கறது என்னது? "நற்றுணையாவதென்றும் நமச்சிவாயமே..." வெறும் தாபமும் ஏக்கமும் மட்டுமில்ல எதையோ தீர்க்கமா தெரிஞ்சிண்ட உறுதியும் இருக்கில்ல...

நன்னு நீ யாவது பாட்டு படிச்சுக்கோடா...
ஏண்டா இப்படி பாட்டு கிளாசுக்கு போக அழறே.. எங்களையெல்லாம் படிக்க வைக்க ஆளில்லை.. இப்ப உனக்கு கசக்கறதா...
நீ சும்மா சும்மா குழந்தையை படுத்தாதே.. உன்னோட ஆசையை அவன் மேல திணிக்காதே.. விடு அவனுக்கு ஆசையிருந்தா கத்துப்பான்.

அக்கா நீ பாடறயா இப்பல்லாம்?
இல்லடி டீச்சர் பொரபஷ்ன்ல இருந்துண்டு பாடெல்லாம் முடியாது...

நவீனுக்கு ஒரு கீ போர்ட் வாங்கி குடுக்கலாம்..
நன்னு சார் இன்னக்கி என்ன சொல்லி கொடுத்தார்?
கண்ணா இந்த இடம் ரொம்ப நன்னாருக்கு.. இன்னோர்தரம் வாசியேன்..
போம்மா எனக்கு கை வலிக்கறது....
ஏண்டா நன்னு கீ போர்ட் கிளாசுக்கும் போகமாட்டேங்கற.... இந்தப்பையன் ஏன் இப்படி சொதப்பறான்.?
நீ சும்மா நை நைன்னு அவனை படுத்தாதே.. விடு அவனுக்கு இண்டரஸ்ட் இருந்தா வரும்...
எப்படி மாமா இப்படி இருக்க.. பின்ன என்ன உன்ன மாதிரி பின்னாடி அலையசொல்றியா?

சின்னவனுக்கும் வயசாச்சு அவனை ஏதாவது இன்ஸ்டுருமெண்ட் சேர்க்கலாமா..?
ஆரம்பிச்சிட்டயா.. உன் வேலையை பாரு.. உன்னோட பாட்டு பைத்தியத்தை தயவுசெய்து குழந்தைகள் மேல திணிக்காதே..

அது பாட்டு பைத்தியமா... இசை என்பதும் பாட்டென்பதும் ஒன்றா????

இன்னக்கி ஜேசுதாஸ் கச்சேரி... மிஸ் பன்ணக்கூடாது மாமா... திருப்பணித்துறா ராதாகிருஷ்ணன் கடம், திருவாரூர் பக்தவச்சலம் மிருதங்கம்.. சரி காம்பினேஷன்...
நாகை முரளிதரன் வயலின் கூட அருமை இல்ல...
இன்னக்கி தனி ஆவர்த்தனம் அற்புதம்..
டிசம்பர் மாதங்கள் இப்படித்தான் கழிந்தது...

அம்மா நான் மிருதங்க கத்துகட்டுமா...
நீ இவ்ளோ எமோஷனல் ஆகாதே ... அவனுக்கு ஏதோ ஆசைல கேக்கறான் கடைசிவரைக்கும் கத்துபானான்னு தெரியாது.. நம்ம கடமை சேர்த்துவிடுவோம்..
அப்புறம் பார்க்கலாம்.
அவன் கொஞ்சம் புஷ்டியா இருக்கான் மாமா அதனால கொஞ்சம் பெரிய மிருதங்கமாவே வாங்கிகொடு...
பாப்பா இன்னக்கி மாஸ்டர் வந்தாரா.. என்ன கத்துகொடுத்தார்...

தும் கிடு தக தரிகிட தக
தும் கிடு தக தரிகிட தக
தக தரிகிடதக
தரிகிட தக தரிகிடதக
தக தரிகிடதக


அம்மா எங்க ஸ்கூல் கீ போர்ட் மாஸ்டர் அப்பா ஆபிஸை ஞாயிற்றுக்கிழமை மட்டும் கிளாசுக்கு யூஸ் பண்ணிக்கலாமான்னு கேட்டார்.
அப்ப நீ கிளாஸ் போவயா? அப்படின்னா சரி சொல்லு நான் அப்பாகிட்ட பேசிக்கறேன்.
அம்மா இங்க வா.. இது என்ன பீஸ் சொல்லு...
ஏய் இது அந்த பச்சைகிளி முத்துச்சரத்துல வருமே அந்த பீஸ்டா.. எப்படி நன்னு...
உனக்கு பிடிக்குமேன்னு படிச்சுண்டேம்மா...
வசீகரா வாசிக்கட்டா...இல்லை "ராஜ ராஜ சோழன் நான்".. வாசிக்கட்டா?
இரு இரு இன்னோன்னு கத்துண்டேன்..."ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்..." அம்மா அந்த லிரிக்ஸ் புரியலை கொஞ்சம் பாடிகாட்டேன்...

அம்மா சின்னது என்னமா வாசிக்கறது தெரியுமா...
ஸ்கூல்ல மிருதங்கம் மாஸ்டர் பயங்கர பெட்.. பிரீ டைம் கிடைச்சா மியூசிக் ரூமுக்கு போயிடறான் அங்க உக்கார்ந்து மிருதங்கம் வாசிக்கறான்...
தினமும் ராத்திரி வாசிக்கறச்ச கவனிக்கறயா அவனுக்கு ரொம்ப இண்டரஸ்ட் இருக்குமா...

பாப்பா உனக்கு கை நன்னா திருந்தி வந்திருக்கு...
நன்னு நீயும் குழந்தையோடே சேர்ந்து கீபோர்ட் வாசியேன்.. எப்படி இருக்குன்னு கேக்கறேன்....

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....... போலோ போலோ சத்குருநாதா.....
எப்படி நன்னு இப்படி ஸ்ருதியெல்லாம் எடுக்க கத்துண்டே... எப்போ?
இல்லமா கீபோர்ட்ல சில சமயம் நானா பாட்டு கத்துப்பேனா.. அப்ப கத்துண்டது....

என்னில் இசை பருத்த கொடியாய் விரிந்து பரந்தது...
மெல்ல மெல்ல அதனுள் மஞ்சள் பச்சை, நீலம், சிகப்பு என வர்ணம் கூடியது....

மிருதங்கத்தின் லயம் ஆரஞ்சும் சிவப்பும் கலர்ந்த வர்ணம்,
வயலினின் நாதம் அடர் ஆகாய வர்ணம்
புல்லாங்குழலின் இசை இளம் ஆகாய வர்ணம்
ஆழ் மனத்திலிருந்து வரும் வளமான குரலோசை அடர் பச்சை வர்ணம்..
ஜலீர் ஜலீர் என வழிந்தோடும் கடத்தின் லயம் அடர் ரோஜாவின் வர்ணம்..
ஆர்மோனியத்திலிருந்து வழியும் இசை இளம் ரோஜாவும், சூரியகாந்திப்பூவின் நிறமும் கொண்ட கலவை
மின்சாரத்திலியங்கும் கீபோர்டிலிருந்து எழும்பி அலையும் இசையின் நிறம் அடர் நீலமும் ரோஜாவர்ணமும் கலந்தது..

என்னுள் ரீங்கரிக்கும் இசையில் எனக்கான இசையை அடையாளம் கண்டுகொள்வது பேரவஸ்தையாயிற்று....
"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா...அத்தனை உலகமும் வர்ணக்களஞ்சியம்..." பாவி இதைத்தான் சொன்னாயா...
"ஆக பல பல நல் அழகுகள் படைத்தாய்" அய்யோ எனக்கின்னும் அந்த அழகு புரியவரலையே...

உள்ளுக்குள் தேம்பல் விளிம்பு தட்டியது..

எது எனக்கான இசை.. ரமணி, லதா சுதா, சகாயராணி, மீனாராணி, வீரலட்சுமி, ஸ்ரீதர், ஜெயலஷ்மி, எஸ்,பி,பி, ஜேசுதாஸ், சுசீலா, ஜானகி, சித்ரா, எல்.ஆர் ஈஸ்வரி, எம்.எஸ், வித்யா திருமலை, அனுராதா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, ஒ.எஸ் அருண், சௌம்யா...திருப்பணித்துறா...திருவாரூர், இளையராஜா மற்றும் பெயர் சொல்ல மறந்த எத்தனையோ கலைஞர்களில் எது எனக்கான இசை...

"எத்தனை கோடி இனபம் வைத்தாய் எங்கள் இறைவா".... - ஓரோர் இசையின் வடிவமும் உள்ளே அலை எழுப்பியது
"சித்தினை அச்சித்துடன் இணைத்தாய்
சேருமை பூதத்து வியனுலகம் அமைத்தாய்" - எங்கெங்கோ மனதைக்கொண்டு சொறுகியது விசும்பி அடங்கும் மனம் தன்னிடம் அறியாமல் தவித்தது
"அத்தனை உலகமும் வர்ணக்களஞ்சியம்" உள்ளே இசையின் பல வர்ணங்கள் நிகழ்த்தும் வர்ணஜாலம் மெல்ல சிறு சுருளாய் எழும்பி, விரிந்து கிளைபரப்பி எங்கும் வியாபித்து பரந்து விரிந்து வெடித்துச் சிதறியது...
"ஆகப்பல பல நல் அழகுகள் சமைத்தாய்...." இறுதியாய் வர்ணங்களின் கீழ் அடுக்கடுக்காய் நீலம்... நீலம்.. கடல் நீலம்... மெல்லப்படர அடி ஆழமான மவுனத்துள் நான்.

தேடல்களற்று.....விசும்பல்களற்று... "நான்" என்பதற்கற்ற இசை ஒற்றை வர்ணமாய். பிரம்மம் நாதம்


Sunday, July 26, 2009

வா வாவென அழைக்கும் காடு - பகுதி 3மொழி என்பது பெரும் போதையான விஷயமாயிற்று, அதை வாரி வாரி விழுங்கும்போதாகட்டும், இல்லை எழுத்தெழுதாய் கோர்க்கும் போதாகட்டும் கிடைக்கும் போதையை அத்தனை எளிதல் புறந்தள்ளி விடமுடிவதில்லை. எத்தனையோ மாறுதல்களுக்கிடையில் மிகவும் ஆறுதலான ஒரு நிகழ்வு, இப்போதெல்லாம் அதிகம் வாசிக்கமுடிகிறது. வாசித்ததை பெரும் காதலோடு அசைபோடமுடிகிறது. ஆனால் பதிவுகளில் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை, எழுதுவதற்கான சாத்தியக்கூறுகள் மட்டும் அரிதாகத்தானுள்ளது.


மேலும், வாசிக்க வேண்டிய பதிவுகளை வாசித்து முடித்த பின்னரே புதியதோர் பதிவெதுவும் இடவேண்டுமென்ற என்ற தீர்மானத்தையும் உடைத்தெறிவது நான் மேலே சொன்ன மொழி எனும் போதைதான். வார்த்தைகளை மனதுள் கட்டமைத்து அவ்வப்போது கவிதைகளாய் கையில் கிடைக்கும் காகிதங்களில் பொதிந்து கொண்டலும், சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள நினைத்து பின் சமயமில்லையெனும் காரணத்தால் எழுதிநிறைக்காத பதிவின் முடிவுப்பகுதி இது.
இடக்கல் - எடக்கல் (இடைக்கல்) எனும் கல்வெட்டுக்களின் தேசம்


நாங்கள் வயநாடு சென்று தங்கிய நாட்களில் எங்கள் தங்குமிட பாதுகாவலரால் மிகவும் பரிந்துரைக்கப்பட்ட ஒரு இடம். பழங்கால கல்வெட்டுக்கள் பல உள்ளதாகவும் அது ஒரு குகைப்பகுதி என்றும் சொன்னது எங்கள் ஆர்வத்தை தூண்டுவதற்கு போதுமானதாய் இருந்தது. நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் செல்லவேண்டியிருந்தது. எங்கள் வாகனத்தில் ஒரு குறிப்பிட்ட தூரம் மட்டுமே செல்ல முடிந்தது. அதற்குமேல் கேரள சுற்றுல்லாத்துறை ஏற்பாடு செய்து தரும் ஜீப்பில் மட்டுமே செல்லமுடியும். சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்குப்பின் அந்த வாகனமும் செல்லமுடியாது நடந்து மட்டுமே செல்லமுடியும். வாகனத்தை விட்டு இறங்கிய நிமிடம் கண்முன் மிகப்பெரியதாய் நின்றது அந்த சிறு குண்று. பெரும் பாறைக்குவியலாய் மட்டுமே உணரமுடிந்தது. சற்றே வளைந்து சென்ற படிகளில் மேலேறிச்சென்றால் அங்குள்ள அனுமதி சீட்டு தரும் சிறு கூண்டில் இருந்த சுற்றுல்லாத்துறை அலுவலர், "இன்னம் நூறு மீட்டர் செல்லனும் " என்ற படியே அனுமதி சீட்டளித்தார். ஆர்வத்துடன் ஏற ஆரம்பித்தோம்.


ஆரம்பத்தில் படிகளோடு இருந்த வழி பின் பாறை இடுக்குகளோடே பயணப்பட வேண்டும் என்பதாயிற்று. சில இடங்களில் காலதடங்கள் பழகிய பாறைகளை கண்ணால் அளவெடுத்து அதைக்கொண்டே முன்னேற முடிந்தது. அது கண்டிப்பாய் நூறு மீட்டர் இல்லை என்பது மட்டும் தெளிவாயிற்று.


ரெங்கமணி தான் பின் தங்கியதோடு மட்டுமல்லாமல், சின்னவனையும் தடுத்து விட்டார். நானும் பெரியவனும் மட்டும் தொடர்ந்து செல்லத்துவங்கினோம். அந்த செங்குத்தான பாறை இடுக்குகளில் சில இடங்களில் இரும்பால் ஏணி செய்து மாட்டியிருந்தார்கள் சில இடங்களில் கைவைத்து ஏறிச்செல்ல வேண்டியிருநது.


நல்ல உயரத்தில் சென்ற பாதை ஒரு இடத்தில் முடிவுற்று கீழே இறங்கவேண்டியதாயிற்று. அந்த நிமிடங்களில் அது வரை இருந்து வந்த வெயில், சூடு, மூச்சு வாங்கியதால் ஏற்பட்ட வியர்வை, அத்தனையும் அகன்று, குளிர்சாதனப்பெட்டியை திறந்துவுடன் முகத்திலைறையுமே அது போன்ற காற்றும் குளிச்சியும் நம்மை தழுவி வரவேற்றது.


மொத்தம் மூன்று மிகப்பெரும் பாறைகள் ஒவ்வொன்றும் குறைந்தது நூறடி உயரமிருக்கும் அதன் உச்சியில் பொருத்தி வைத்தது போல் ஒரு வட்டப்பாறை இதனாலேயே இந்தக்குகைக்கு இடைக்கல் எனும் பெயர் ஏற்பட்டதாம். அதன் இடைவெளியில் தெரியும் துல்லிய வானமும் அதனால் வரும் வெயிலின் கடுமையும் அந்த குகையை தொடவேயில்லை ஆனால் வெளிச்சம் மட்டும் திருட்டு கண்ணனாய் அத்தனையையும் ஊடறுத்து வந்து இடத்தை வர்ணமாயமாக்கிக்கொண்டிருந்தது.


மழையாலோ இல்லை, தொடர்ந்து அதிகம் வெயில் படாததாலோ சில பாறைகளில் களிம்பேறிப்போன பச்சை வர்ணம், வெளிச்சம் அதிகம் படும் இடங்களில் பாறைகளுக்கேயுண்டான இளம் சிவப்பு, தரையில் உள்ளங்கால்களில் ஊடுறுவிச்செல்லும் குளிர் பரவியிருக்கும் தவிட்டு நிற பூமி (ஜெமோவின் எழுத்துக்களில் அதிகம் கவர்ந்த வார்த்தை!!!!) . தரையில் இருந்து கிட்டத்தட்ட 3 அடி உயரத்தில் ஆரம்பிக்கின்றது ஆரம்பத்தில் கோடுகள் போல் தெறியும் ஜாலங்கள். மேலே குறைந்தது 15, 20 அடிவரை செல்கிறது, அத்தனை உயர மணிதர்கள் இருந்திருப்பார்களோ எனும் எண்ணமே அந்த இடத்தில் நம்மை நெக்குருகச்செய்கிறது.

விதம் விதமாய் கோடுகள், படங்கள், அபூர்வமாய் சில எழுத்து வடிவத்தடங்கள் இப்படி இரண்டுபக்க பாறைகளிலும் நிரம்பியிருந்த காட்சி பல நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்திருந்த மூதாதையர்களின் வாழ்வியலை, இறை நம்பிக்கையை, கூட்டு வாழ்வின் அம்சங்களை, காட்டு வாழ்வின் இயல்புகளை பெரும் கிசுகிசுப்போடு நம் காதுகளில் பேசக்கேட்கிறோம்.


பார்க்க வரும் அனைவரும் ஆக அதிக பட்சமாய் 10 நிமிடத்தில் திரும்பிவிட தாயும் மகனும் மட்டும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாய் திவங்கித்திவங்கி கால்கள் பின்ன,அந்தச்சித்திரங்கள் பேசும் பேச்சுக்களின் சக்தியை தாங்க முடியாமல் குமுறியவண்ணம் கண்கள் பொங்கி வழிய இறை தரிசனம் கண்ட நெகிழ்வில் ஒருவரோடுரொவர் பேச்சற்று இருந்த நிலை அங்கிருந்த சுற்றுல்லாத்துறை ஊழியருக்கு புதியதாய் இருந்திருக்க வேண்டும். தானகவே வந்து அந்தக்குகையின் செவி வழி வரலாற்றைக்கூறினார்.

கடல் மட்டத்திலிருந்து 4000 அடியில் இவ்விடம் உள்ளதென்றும், கிமு 4000 வருடக்கணக்கில் வாழ்ந்த கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடம், அவர்கள் கூட்டமாய் ஓரிடத்தில் வாழும் வாழ்வு முறை கொண்டிருந்ததாகவும். ஆண்களும் பெண்களும் உணவிற்காக அங்குள்ள காடுகளை நம்பியிருந்துதாகவும் கூறினார்.

பெண்களை குறிக்கும் படங்களில் இரு முக்கோணங்களை ஒன்றோடொன்று ஒட்டி வைத்தது போலவும்


அரசனை குறிக்கும் படங்களில் அவன் தலையை சுற்றி ஒரு வட்ட அங்கி இருந்தது போலவும்


மதகுரு என அழைக்கப்படும் சித்திரத்தில் அவர் கைகளை உயர்த்தி ஆசி கூறுவது போலவும்


சிறிதும் பெரிதுமான வட்ட வட்ட சக்கரங்கள் அவர்களின் சக்தி பீடமாயிருக்கவேண்டுமெண்டும் என்றும்யானையும் அல்லாது புலியும் அல்லாது இருந்த ஒரு உருவமும் இன்னும் பலவும் அந்த ஆயிரமாண்டு கால வாழ்க்கையை நமக்குள் செதுக்கியபடி யிருந்தது

அங்கிருந்த தமிழ் போலவும், பாலி போலவும் தெரிந்த எழுத்துக்களைக்காட்டி அவர் சொன்னதாவது. ஆயிரம் புலிகளை வென்றவன் அவர்களுக்கு அரசனாக வாழ்ந்ததாக குறிப்பிடப்பட்டிருப்பதாகக்கூறினார்.
இவர்களின் வம்சம் தான் பின்னாட்களில் விஷ்னு வர்மா வம்சங்கள் என்றும் சொன்னார். பிற்காலங்களில் ஆள் நடமாற்றறுப்போன நிலையில் 1894ல் அவ்வழியே வேட்டைக்கு வந்த அந்நிய நாட்டவர் ஒருவரால் இவ்விடம் கண்டு பிடிக்கப்பட்டதென்றும் கூறினார்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்த இடமென்றாலும் அதன் அதிர்வுகள் சிறிதும் குறையாமல் நம்மோடு சாந்நித்தியம் கொள்கிறதென்றால் அவர்களின் தூய்மையான வாழ்வியல் எத்துனை வலியதாய் இருந்திருக்க வேண்டும். இத்தனை நாட்கள் கழித்து எழுத முற்படும் வேளையில் என்னுள் பொங்கும் அந்தக்கணங்களின் விகசிப்பை தாங்கத்தான் முடியவில்லை.


இந்த பயணம் எனக்குணர்த்திய மற்றுமொரு சந்தோஷம், என் இத்தனை உணர்வுகளையும் அப்படியே பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட அதே போன்று என் பெரியவனும் அனுபவித்த கணங்கள் உணர்த்தியது என்வீட்டில் நான் மட்டும் பைத்தியமில்லை.....எனக்கோர் வாரிசுமுண்டு...


Monday, June 15, 2009

முகமூடிக்கவிதைகள் - 8


ஆணுக்கான அடையாளமாய்
காமத்தையும்
பெண்மையின் குறியீடாய்
காதலையும்
சொல்லியாயிற்று

எதிரெதிர் துருவங்கள்
ஈர்க்குமென்பது மாறி
இணையெதிர் துருவங்களுக்கு
நிரூபிப்பதற்கும்
என்றாயிற்று


பொய்மையும் வாய்மையிடத்து
முகமூடிகளின் வாழ்க்கையில்
நன்மை பயக்குமெனில்....

Friday, June 5, 2009

தொலைந்து போவது பற்றி

தொலைந்து போவது பற்றி
அதிகம் தோன்றுவதுண்டு
அலுவலகம் வந்து
திரும்பாமல் பொகலாம்

நடந்து போகும் பாதையில்
திரும்பியும் போய்
தொலைந்து போகலாம்

பேச்சறவமற்று
அரையிருட்டில்
அமர்ந்தும் தொலையலாம்

அதிர்ந்து தொலைக்கும்
தொல்லைபேசியினை
ஒளிரமட்டும் வைத்துவிட்டும்
தொலைந்து போகலாம்


நாம்
தொலைந்து போனதை
குறைந்த பட்சம்
நாமாவது
அறிந்துகொண்டு
மீண்டும் வெளிக்கிடலாம்

தொலைந்து போவதை
மீண்டும் ஒரு நாள்
தள்ளிப்போடலாம்...

இப்போதிருக்கும் வணிகச்சூழலில் தொடர்ந்து நான் செய்துகொண்டிருந்த தொழிலைச்செய்து வருவது கொஞ்சம் மூச்சு முட்ட ஆரம்பித்தது. சிறிதே மூச்சு வாங்கிக்கொள்ளலாம் என்று ஒரு நன்னாளில் பணியாளர்களுக்கு நானே சில நல்ல நிறுவணங்களில் அமர்வதற்கான ஆயத்தங்களை செய்து தந்துவிட்டு தற்காலிகமாக மங்களம் போர்டு மாட்டிவிட்டேன்.

சும்மாயிருக்க முடியுமா??? நானும் ஒரு பன்னாட்டு நிறுவணத்தில் பணியெடுத்து அமர்ந்தும் விட்டேன். அதனால் வழக்கமான இணையநேரம் இருந்தாலும் தனிப்பட்ட வலை வாசிப்புகள் முடியவில்லை.. வார இறுதி நாட்களில் மட்டுமே முடியுமென்று எண்ணுகிறேன்...

மக்களே மறந்துடாதீங்க... மீண்டு வருவேன்... மீண்டும் வருவேன்...

Tuesday, May 12, 2009

வா வாவென அழைக்கும் காடு- பகுதி 2

மனதுக்கு மிகவும் நெருக்கமான எழுத்துக்கள், மெல்லிய தேர்ந்த இசை, புரிதல்களோடு உண்டான உறவுகள், ஆளுமையற்ற நட்பு இவைகளை மீறியும் மனதில் எப்போது நினைத்தாலும் நெகிழவைக்கும், நெருக்கமாய் உணரவைக்கும் தருணங்கள் நாம் இயற்கையோடு நம்மை இருத்திக்கொண்ட தருணங்களாய்தானிருக்க வேண்டும் என்பது என் தீராத நம்பிக்கை.

வாழ்வின் கணக்குகளுக்கான ஓட்டத்தில் திவங்கி திணறும் போதெல்லாம் நான் மூச்செடுத்து ஆசுவாசிக்க விரும்புவது இயற்கையோடு ஒன்றிப்போய்த்தான்.

தொல்லைபேசிகளற்ற, தொலைக்காட்சிபெட்டிகளற்ற, ஆடம்பர விடுதிகளற்ற, சில சமயம் மின்சார வசதி கூட இல்லாத காட்டினுள் சென்று பதுங்கிக்கொண்டு சில நாட்கள் கழித்து விட்டு வருவதே என்னை உயிர்ப்பித்துக்கொள்ளும்
வழியென்று எப்போதும் நினைப்பதுண்டு. ஓரளவிற்கு ஒத்துப்போகும் பிள்ளைகளும் ஏதும் சொல்லாது உடன் வரும் துணையும் தரும் ஆதுரத்தில் வருடத்திற்கு ஒரு முறையேனும் என்னை இங்கணம் தொலைத்துக்கொள்வதுண்டு.

வயநாட்டின் தாழ்ந்த பள்ளத்தாக்குகளுக்குளும் அதுதான் நடந்தேறியது மூன்று புரமும் மலையின் முகடுகள் சூழ்ந்ததொரு பள்ளத்தாக்கில் அடர்ந்த பெயர் தெரியாத எத்தனையோ மரங்களுக்கு நடுவில் தெரிந்த சில வீடுகளில் ஒன்றில் ஒன்றிக்கொள்ள இடம் கிடைத்தது. அங்கெல்லாம் ஹோம் ஸ்டேஸ் எனப்படும் இத்தகைய தனித்த வீடுகள் அதிகம் கிடைக்கிறது. நம் கையிருப்பிற்கு தக்க அளவில் அமைவதும் ஒரு சிறப்பு. அதோடு கூட நாளில் குறைந்த பட்சம் இரு வேளைகளாவது அவர்களே நமக்கான உணவை சமைத்துத்தருவது கூடுதல் சந்தோஷம்.


எப்போது வேண்டுமானாலும் படியிறங்கிச்சென்றால் வா வாவென உள்ளிழுக்கும் காடு மிகப்பெரும் வசீகரம் அதுவும் அதிகாலை வேளை கனத்த இருளோடு கூட அடர்ந்த பனியும் குளிரும் உடலை தடித்துப்போகச்செய்ய நானென்று ஏதுமின்றி சாலையில் யாரோவென நடந்து செல்லும் அனுபவம் உணர்ந்து பார்த்தே ஆகவேண்டியது.

சிறிதே மேடேறிச்சென்றால் வரும் சுத்தமான தார்ச்சாலையில் மழையின் மிச்சங்கள் உதிர்ந்திருக்கும் இலைகளாலும் குரங்குகளும் விலங்குகளும் பிய்த்துப்போட்டிருக்கும் பலா சக்கைகளாலும் இன்னபிற பழங்களோடும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருந்தது.அங்கங்கே அட்டைகளும் ஓரறிவு, ஈரறிவு ஜீவிகளும் தன்போக்கில் சுருண்டிருக்க நாம் அத்துமீறித்தான் அந்தப்பிரதேசத்தில் நுழையவேண்டியிருக்கும். ஆனாலும் அந்நியனாய் உணரமுடியாதபடி நான் தான் இங்கே தொலைந்து போயிருக்குமே...

ஈரத்தில் ஊறிப்போயிருக்கும் எந்த மரத்தின் கிளையைத்தொட்டாலும் கையோடு ஒட்டிக்கொண்டு வரும் இயற்கையின் மிச்சங்கள், இன்னும் சற்றே மேலேறி நடந்தால் திகைக்கவைக்கிறது கிட்டத்தட்ட 10 ஏக்கர் பரப்பில் அமைதியாய் விரிந்திருக்கும் நன்னீர் ஏரி பூக்கூடைலேக் என்று சொல்கிறார்கள் பெயரின் காரணத்தாலேயோ இல்லை மூன்று புரமும் மலைகள் சூழ்ந்திருக்க தணிந்த ஓர் பூத்தொட்டி போல் தான் இருக்கிறது அந்த ஏரி கூடவே வந்த குளிரோடு சேர்ந்து கொண்டது ஏரியின் காற்று. காற்றின் கிசுகிசுப்பும், மரங்களின் சலசலப்பும் எங்கிருந்தோ சப்தமிடும் பெயர் தெரியாத பறவைகளின் இசையும், நம்மை கண்ணுருட்டி விழிக்கும் மூதாதையர்களின் பார்வையும் அந்தப்பகுதியின் இரம்மியத்திற்கு இன்னும் சுருதி சேர்க்கிறது. எங்கோ மேட்டில் சூரியனின் கிரணங்கள் மெள்ளத்தெரிய மரங்களின் கூரைகளில் பொன்வேயப்படுகிறது.சூரியனின் கதிர்கள் காட்டிற்கோர் பொன்கூரை வேய்கிறது.

வரும் வழியில் திறந்திருக்கிறது ஒரு சாயாக்கடை..." பாலில்லா..வேணங்கில் கட்டஞ்சாய் தரா...வேணோ..".கேள்விக்கு தலையாட்டினாலும் கையில் காசேதும் இல்லாது இறங்கிவந்தது அப்போது தான் நினைவில் வந்தது. என்ன செய்வதென்று யோசித்திருக்கும் வேளையில் ரெங்கமணி ஆபத்பாந்தவனாய். வா நான் இப்பத்தான் குடிச்சேன். என்றபடி அங்கிருந்த கட்டையில் அமர்ந்திருந்தது மற்றுமொரு ஆஸ்வாசம். "ஏ குட்டி ஆ கசரெடுக்கு" என்றபடி ஒரு மர நாற்காலி வந்து சேர்ந்தது. சற்றே இனிப்பு கூடிய பாலில்லா தேநீர் இப்போது நினைத்தாலும் என்னால் என் நாகரீக அடுமனையில் உண்டாக்க முடியாதது.

"எவ்விடபோய். நமெக்கு காடடுக்கணும்னு பறஞ்ஞில்லே" என்றபடி அந்த வீட்டின் கேர்டேக்கர் நின்றிந்தார். ரெங்கணி விலகிக்கொள்ள நானும் பிள்ளைகளும் அவர் வழிகாட்ட முழு காட்டிற்குள்ளும் அந்த மூண்று முகடுகளிலும் ஏறி இறங்கினோம்.

அந்த அனுபவத்தை எப்படிச்சொல்ல ... நீரின் அடிஆழத்தில் மூச்சடக்கி மூழ்கியிருக்கும் போது நம்மைச்சுற்றி தோன்றுமே ஒரு அடர்த்தி, குளுமை கூடவே ஒரு பயம் அது போலத்தான் காடு வசீகரத்தையும், குளுமையையும் , இருமாப்பையும், நிசப்பத்தத்தையும், சப்தத்தையும், அச்சத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டிருந்தது....

ஒரு முகட்டின் மேல் தட்டில் இன்னும் அங்கங்கே மிச்சமிருக்கும் காடுகுடிகளின் வீட்டையையும் காண நேர்ந்தது. அவர்கள் பணியர் என்று அழைக்கப்படுகிறார்களாம். ஓரளவு நாகரீகம் கலந்த குடியிருப்பு தான். துளுவும் மலையாளமும் கலந்த மொழி பேசுகிறார்கள். ஆண்களை விட பெண்கள் சற்றே உயரமாகவும் வளர்ந்தும் உள்ளார்கள். (போட்டோ எடுக்க முடியவில்லை... பெரியவன் கையில் கேமரா இருந்தது அவனுக்கு ஏதோ ஒரு தயக்கம். சும்மா அவங்களை நாம ஏதோ காட்சி பொருள் போல போட்டோ எடுத்தா அவங்களுக்கு கஷ்டமாயிருக்கும் அதனால வேண்டாம் என்பது அவன் எண்ணம். நான் அவனை தொந்தரவு செய்ய விரும்பவில்லை.. அவரவர் மனோலயம்....)

ஜெயமோகனின் காடு நாவல் அங்கே ஒரு காட்சியாய் படிமமாய் ஊறிக்கிடந்தது. ஒவ்வொரு அயனிமரமும், பலாமரமும் கிரியையும், நீலியையும், அய்யரையும் குட்டப்பனையும் நினைவு படுத்தியபடியே வந்தது. கீரைக்காதனைக்கூட மனம் தேடித்தவித்தது என்றுதான் சொல்ல வேண்டும். பிள்ளைகள் இருவரும் சலசலத்தபடியே வர வழிகாட்டியும் ஏதோ பேசிக்கொண்டே வந்தாலும் தனித்திருப்பது போல் நம்மை சுற்றி அடர்ந்த காடு. அங்கங்கே தென் படும் சிறு குட்டைகளில் தேங்கியிருக்கும் நீரில் கால்வைத்தல் வந்து அப்பிக்கொள்ளும் அட்டைகள் (லீச் எனப்படும் சிறு பூச்சிகள்). இன்னும் மழை ஆரம்பித்தபின் சென்றால் காடு முழுக்கவே இந்தப்பூச்சிகள் மிகுந்திருக்குமாம். கையில் உப்பை கழியாக கட்டிவைத்துக்கொண்டு உடனே அதை நீரில் தோய்த்து அந்தப்பூச்சிகளின் மேல் விட்டால் நம்மை விட்டு விடுகிறது.. (இயற்கையை வெல்லும் /கொல்லும் வழி...) கிட்டத்தட்ட 3 மணிநேரம் காட்டில் சுற்றியலைந்து விட்டு வீடேறினால் மனமுழுக்க காட்டைப்பற்றிய உணர்வுகள் இறைந்து கிடந்தது

வீடு திரும்பி அவர்கள் செய்து தந்த புட்டு கடலைக்கறி வாழைப்பழம் கலந்த காலை உணவை முடித்த பிறகு தான் கால் கெஞ்சத்துவங்கியது அப்படியே ஒரு தூக்கம். விழித்தெழுந்தால் இரம்மியமான மாலை வேளை போல் இளவெயில். மீண்டும் ஒரு பெரிய நடை முடித்து வரும் வழியில் சிறு தூறலாய் ஆரம்பித்த மழை வீடு சேர்வதற்குள் நம்மை இரும்புக்கரத்தோடு அரவணைத்துக்கொண்டது. அந்த மழையின் வாசனை காடுகளுக்கேயுண்டான பெருமணத்தையும் சப்தத்தையும் கொண்டுவந்தது.


ஆச்சர்யங்கள் அடுத்தநாளும் காத்திருந்தது....

சில போட்டோக்கள்....


பயணிப்போர்களின் உதவிக்கு

ஊரின் பெயர் - வைத்ரி (கல்பேட்டா என்பது முக்கியமான ஒரு சிறிய நகரம். அதிலிருந்து துவங்குகிறது இந்த எழில் கொஞ்சும் இடங்கள் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில், வைத்ரி மற்றும் லக்கிடி போன்ற ஊர்கள் அங்குதான் இது போன்ற 100க்கும் மேற்பட்ட ஹோம்ஸேடேக்கள் கிடைக்கிறது)

நாங்கள் தங்கிய இடத்தின் பெயர் - லேக் வியூ ஹோம்ஸ். தொலைபேசி - 04936256016/ மொபைல் 9447447549/9961621479.
ஒருநாள் வாடகை - 1500ல் இருந்து 2500 வரை கிடைக்கிறது. ஒரு படுக்கைஅறை மட்டுமே நமக்கானது மற்றபடி வரவேற்பரையும், சமையல் கூடமும், ஹாலும் பொதுவில். ஆனால் மொத்தம் குடும்பமாக கிட்டத்தட்ட 3 குடும்பங்களும், டார்மிட்டிரி வகையில் ஒரு 10 பேர்களும் தங்குவதற்குண்டான அளவில் வசதி செய்யப்பட்டுள்ளது.
(சில ரிசார்ட்கள் இன்னும் அதிக பள்ளத்தாக்குகளில் மர உச்சிகளில் வீடு கட்டி தங்கும் வண்ணம் உள்ளது ஆனால் செலவு டாலரில் செய்யவேண்டியுள்ளது.)Monday, May 11, 2009

வா வாவென அழைக்கும் காடு

பிள்ளைகளுக்கு லீவு விட்டாச்சு, பெரியவன் 12 வது செல்கிறானென்றாலும் இடையில் ஒரு 20 நாட்களுக்கும் மேல் விடுமுறை கொடுத்துள்ளார்கள் பள்ளியில். பள்ளி வகுப்புகள் தவிர வேறு வகுப்புகளுக்குச்செல்லாததாலும். உள்ளங்கையும் காலும் அரிக்கத்துவங்கிவிட்டது எங்காவது சென்று வரலாமென்று மனதும் சதா புலம்பத்துவங்கியது.

திடீரென்று மே 1 வெள்ளி காலை சரி கிளம்பலாம் என்று முடிவானது. எங்கு செல்லலாம். கிட்டத்தட்ட 2 வருஷமா போகனும்னு சொல்லிகிட்டிருந்த ஒரு இடம் இன்னம் போனபாடில்லை அதனால

கொல்லி மலை – எல்லா ஹோட்டல்களுக்கும் தொலைபேசினால் ஒன்றில் கூட தங்குவதற்கு இடமில்லையாம் (எல்லாரும் எங்களைப்போலவா இருப்பாங்க முன்கூட்டியே 3 நாட்களுக்கு பதிவு செய்து விட்டார்களாம்)

சரி வால்பாறைக்குச்செல்லலாம் வழியில் எங்கா
வது தங்கிவிட்டு ஞாயிறன்று அங்கு செல்வது போல் அமைத்துக்கொள்ளலாம் என்று முடிவானது. மதியத்திலிருந்து அறைகிட்டும் என்று சொன்னதால் வால்பாறைதான் என்று கிளம்பியாச்சு.

திண்டிவனம் தாண்டியதும்தான் ரெங்கமணி மசினகுடி போனா என்ன என்று கேள்வியெழுப்பினார். ட்ரக்கிங், மரவீடு, இரவுநேர
சபாரி என்று அங்குள்ள வசதிகளைச்சொன்னதும் பிள்ளைகள் ஓட்டு மசினகுடிக்கே விழுந்தது. சரி மசினகுடி என்று முடிவாகி வண்டி சேலத்தை நோக்கி திரும்பியது. உளுந்தூர்ப்பேட்டை, ஆத்தூர் சாலை ஒரு 80 கிலோமீட்டர் தூரைத்தை கடப்பதற்குள் நொந்து நூடுல்ஸ் ஆனோம். ஒருவழியாக இரவு 11 மணிக்கு சேலத்தை அடைந்து அங்கு ஒரு வழியோர விடுதியில் தங்கிவிட்டு விடியற்காலையில் கிளம்பி ஊட்டி ஒரு நாள் பிறகு மசினகுடி என்று முடிவு செய்து கிளம்பினோம்.

ஊட்டியில் வழக்கமான ஹோட்டலில் இடம் கிடைத்தபாடில்லை ஆனால் தெரிந்தவர்கள் என்பதால் அவர்கள் சிபாரிசின்
பேரில் கொஞ்சம் சுமாரான ஒரு விடுதியில் அறைகிடைத்தது சரி ஒரு நாள் தானே சமாளித்துக்கொள்வோம் என்று தங்கிவிட்டோம்.

நாங்கள் தங்கிய அறையிலிருந்து ஊட்டி...கூட்டம் கூட்டம் கூட்டம் வேறென்ன। அப்படி ஒரு கூட்டம் கூடவே அங்குள்ள போக்குவரத்து நெறியாளர்கள் செய்யும் கெடுபிடியில் பக்கத்தில் இருக்கும் தெருவிற்குப்போய் வரக்கூட 3 கிலோ மீட்டர் சுற்றவேண்டிய நிலமை.

போக்குவரத்து நெரிசல் ஒரு காட்சி

சரி வந்ததுக்கு போட்டிங்காவது போகலாம்னு போனோம். அப்புறம் அங்குள்ள வேக்ஸ் ஹவுஸ் சென்று பார்த்தோம் உண்மையில் மிகவும் நன்றாகவே உள்ளது. அதுவும் ஒருசிலரின் சிலை மிகவும் தத்ரூபமாக அமைந்துள்ளது.

ஆனாலும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஞாயிறு காலையே மசினகுடியை நோக்கி வண்டிகட்டிவிட்டோம்


அங்கே போனால் மிகப்பெறும் ஏமாற்றம் சென்னையை விட வெயில் சற்று கூடுதலோ என்று எண்ணும்படி அத்தனை வெயில். ரிசார்ட்டுகளில் மதியமானதால் இடமிருந்தது ஆனால் இந்த வெயிலில் அங்கு தங்கி என்னசெய்யப்போகிறோம் இரவு ஒரு வேளை குளிரடித்தாலும் அடிக்கலாம் என்று எதிர்பார்த்து ரிசார்ட்டுகள் கேட்கும் பைசாவை செலவிட மனமில்லை..

சரி அடுத்து எங்கே என்று கேள்வி எழும்பொதுதான் சட்டென்று தோன்றியது வயநாடு எண்ட அம்மே எந்து பறயாம் ஆ அனுபவத்தினே. பட்சே தீர்ச்சயாட்டு பறையனும்.. அதுகொண்டு பின்ன பறயாம்……

Wednesday, April 15, 2009

ஒரு பாடினியின் பரவசம் - ஜெயமோகனின் விஷ்ணுபுரம் ஒரு பார்வை

ஒரு பாடினியாய் இருந்திருக்கலாம்.
இசையும், கலையும், கவிதையும், கதையுமாய் காலம் கடத்தியிருக்கலாம்
வியாபாரம், வணிகம், அயல்நாடு, உள்நாடு தொழில்விருத்தி இது ஏதுமற்று வாழ்வின் உன்னதங்களை சுகித்திருந்திருக்கலாம்,
ஊர் ஊராய், குழுக்களாய் பயணித்திருந்திருக்கலாம்,

இப்படி எத்தனையோ "லாம்"களை என்னுள் எப்போதும் விழித்திருக்கச்செய்திருக்கும் உணர்வுகள், ஒரு சமயம் கவிஞர் விக்ரமாதித்யனை எஸ்.ரா. தன் எழுத்துக்களில் பெருநகரப் பாணன் என்று விளித்திருந்த போது அந்த வார்த்தையின் வசீகரம் என்னுள் அவ்வுணர்வுகளை மீண்டுமொருமுறை கிளர்ந்தெழுந்து ஒர் பேயாட்டம் போடச்செய்தது.

இத்தகைய பாணர்களின் வாயிலாக கதை சொல்லல் தொடங்கப்படுகிறது பின் என்றும் எத்தனையோ கதைசொல்லிகளின் வாயிலாக இன்றும் விஷ்ணுபுரத்துக்கதைகள் சொல்லப்பட்டுகொண்டேயிருக்கிறது என்று
அந்தப்புத்தகத்தின் முடிவில் நம்மால் தீர்க்கமாய் நம்பமுடிகிறது . இந்த கதைசொல்லிகளின் வரிசையில் நானும் ஒரு பாடினியாய் இங்கு ஜெயமோகனின் விஷ்ணுபுரம் பற்றி .....

பொதுவாய் புத்தகங்களை படித்து முடித்ததுமே அதைப்பற்றிய பகிர்தலை கொடுக்கத்துடிக்கும் மனதிற்கு விஷ்ணுபுரம் தந்த உணர்வு வித்யாசமானது. புத்தகத்திலுள்ள பக்கங்கள் தீர்ந்து போன பின்னரும் முழுதாய் இரண்டு வாரங்களுக்குப்பின்னரும் இன்னமும் அதன் கதைக்களத்திலிருந்து விலக முடியாத பெருமயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் இந்த அனுபவத்தை சுகமென்று சொல்வதா இல்லை இம்சையென்று சொல்வதா.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கும் கதைக்களம் நம்முள் இன்று போல் விரிகிறது, ஒவ்வோர் காட்சியின் நுணக்கமான விவரிப்பு ஒவ்வோரு நிகழ்விலும் நம் இருப்பை உணர்த்துகிறது. ஒரு திரைக்கதையை விட நேர்த்தியான காட்சி விவரிப்பின் காரணமாகவே வாசகர்களை தன்னுள் ஈர்த்து பொதிந்துகொள்கிறது கதைக்களம்.

கதை மாந்தர்களின் பாத்திரப்படைப்புகள் பெயர்கள், பெயர்கள் மற்றும் பெயர்கள், ஆரம்பத்தில் எப்படி இத்தனை பெயர்களையும் நாம் நினைவிலிருத்தி மீதப்பக்கங்களை முடிக்கப்போகிறோம் என்ற பயம் வரமாலில்லை, ஆனால் நான் மேலே சொன்னபடி நம் இருப்பை அங்கு ஆசிரியர் ஸ்தாபித்து விடுவதனால் பின்னால வரும் பாகங்களில் நாம் குழப்பமற்று பயணிக்கமுடிகிறது.

இன்றைய புற உலகில் நிகழும் காமம், கோபம், க்ரோதம், இகழ்ச்சி, துரோகம், கூடவே தேடல் இந்தக்கலைவைகளை வெவ்வேறு விகிதத்தில் இருத்தி அதில் கதை மாந்தர்களை உலவவிட்டிருப்பது மிக நேர்த்தி। ஆனால் எல்லா காலங்களில் எளிமையும், நேர்த்தியும் உள்ளவர்கள் ஒன்று மிகச்சீக்கிரம் இறந்துபடவோ இல்லை தன்னிருப்பை தொலைத்துவிடவோ விடும்படி செய்திருப்பதன் பிண்ணணி உணர்த்தும் உண்மைகள் நம் பல கேள்விகளுக்கு விடையாகலாம் (அநிருத்தன், திருவடி, திருவடி விரும்பும் அந்த தேவரடியார் சிறு பெண, கடைசிப்பகுதியில் ப்ரியையின் பாட்டி இப்படி பலர்...)। ஆனாலும் பிரளயகாலத்திற்குபின்னும் பிழைத்திருக்கும் அந்த எளிமையான மலைவாழ் மக்களின் இருப்பு நம்மை சிந்திக்கவைக்கிறது।மீண்டுமொறுமுறை மூப்பன் புரண்டு படுக்கும் பொழுது நாமெந்தப்பக்கம் என கேள்வியெழுப்ப வைக்கிறது.

தருக்க நியாயங்களின் பிண்ணணியும் அதன் நிழலில் அரங்கேறும் துரோகங்களும் மனதை சில்லிடவைக்கின்றன என்றாலும் நடப்புலக்த்தின் நீட்சிதானே என்பதும் மனதில் எழாமலில்லை.

இரண்டாம் பகுதியில் பெரும்பாலும் பல்வேறு மதங்களின் தருக்கங்களும், விவாதங்களும் நிரம்பியிருந்தாலும் அதைதாண்டி மேலே மேலே அறிந்துகொள்ளும் ஆவலைத்தருவதாகவும் அமைந்துள்ளது. பிற்பாடு அஜிதனின் விவாதங்களின் போது ஏற்படும் நிகழ்வுகளில் அவரது தருக்கங்களை மீறிய சூழ்நிலைகளே அவரது வெற்றியை தீர்மானிக்கிறது என்பது போன்ற யதார்த்த நிலைப்பாடுகள் பலவற்றை நாவலில் காணமுடிகிறது. குறிப்பாக எந்த ஒரு கதாமாந்தருக்கும் நாயகி/நாயகன் அந்தஸ்து தராது இயல்புகளோடு சித்திரிப்பது நாவலில் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. நாவலில் கடைசிவரை வரும் அந்த கருப்பு நாய் நம்முள் இனம்புரியாத விசித்திரங்களை விட்டுச்செல்கிறது.

மிக முக்கியமாக நாவலின் கட்டமைப்பின் நேர்த்தி வியக்கவைக்கிறது. இரண்டு, ஒன்று, மூன்று என்று பகுதிகளை வரிசைப்படுத்தியிருப்பின் நாவலின் வீச்சம் வெகு நிச்சயம் குலைந்திருக்கும். தற்போதையை கட்டமைப்பே நம்மை நாவலின் மூன்றாம் பகுதியில் ஒரு சாட்சியாக நிறுத்தி வைக்கிறது. ஒவ்வொரு நிகழ்வும் பிற்பகுதிகளில் வரலாறாக பல்வேறு கட்டங்களில் திருந்தி சொல்வழக்காக, வரலாறாக பேசப்படும் பொழுது வாசக மனம் அதன் பிழைகளை திருத்த தவறுவதில்லை.

கோபிலரும் ஸ்ரீதரரும், பிங்கலரும் ஒன்றல்ல வேறு வேறு மனிதர்கள் என்றும்
பத்மாட்சி என்பது ஸ்ரீதரருக்கு காட்சி தந்த யட்சியல்ல அவரோடு சில காலம் வாழ்ந்திருந்த தேவரடியார் பெண்ணென்றும்....

இது போல பல நிகழ்வுகளையும் நாம் அன்றைய காலகட்ட மனிதர்களின் அறிதல், புரிதல்களை திருத்த வேண்டியது நம் கடமை என்பது போல் மனம் துணுக்குறுவதே இந்த நாவலின் மிகப்பெரிய வெற்றி என்று தோன்றுகிறது.

ஆகச்சிறந்த நாவலின் அடையாளம் என்று மிக எளிதில் சொல்லிவிட மனம் ஆசைப்பட்டாலும் அது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சொல்வதாயிருக்கும் என்பதாலும், இன்னும் வாசிப்பில் கடக்க வேண்டிய தூரம் அதிகமுள்ளது என்ற உண்மை உள்ளிருந்து உணர்த்துவதலேயும் மிகசிறந்த வாசிப்பு அனுபவத்தை தந்த நாவல் என்று முடிக்க வேண்டியுள்ளது. ஆனால் வரலாறுகளையும், ஆலயங்களையும் குறித்த கண்ணோட்டம் விஷ்ணுபுரத்திற்கு முன் விஷ்ணுபுரத்திற்கு பின் என்று மாறிப்போனதை மாற்றும் வல்லமையை இந்நாவல் கொண்டிருக்கிறது என்பது சொல்வது மிகயாகாது.

மீள்வாசிப்பிற்கென எப்போது வேண்டுமானாலும் எடுத்துகொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகளை கொண்டிருக்கும் அடர்ந்த செறிவுள்ள நாவல்.


Wednesday, April 8, 2009

முகமூடிக்கவிதைகள் - 7

அழு
ஆவேசப்படு
அடங்கு
அடுத்த வேளை
சோற்றுக்காக
அனுசரித்துப்போ

நின்று சிரித்து
வெளுக்கும்
மானுடத்தின் சாயம்

********************

மீண்டும் மீண்டும்
நுகரத்துடிக்கும்
பூவின் மணம் போல
எப்போதும்
பேசத்துடித்திருக்கும் மனது

எட்டிப்பார்த்து பின்
தட்டிக்கேட்டதும்
உள்ளடங்கிப்போகும்
உணர்வுகளின் வடிகால்
இசையாகவோ
கவிதையாகவோ
ஒரு சில நேரம்
சிடுசிடுப்பாகவோ
ஆகலாம்.

Tuesday, April 7, 2009

கண்ணாடி

வெகு ஆழத்தில்
உறைந்து கிடக்கும்
இன்றைய நாட்களின்
மவுனத்தை உடைத்தெறியவே
விரும்புகிறேன்...

ஆனாலும்

உள்நோக்கி பார்க்கவும்
உணர்ந்தறியவும்
ஏதோ உள்ளதென்ற
உந்துதலுக்கு செவிசாய்த்து
என்னுள் ஆழ்கிறேன்
மிக நீண்ட தனிமையில்.

Wednesday, February 25, 2009

புனைவு அனுபவம் மற்றும் ஒன்றுமில்லாதது....


நானொரு எழுத்தாளினி என அறிமுகப்படுத்தியும் அவரிடம் எந்த ஒரு பெரிய எதிர்வினையும் இல்லாத்தது கண்டு எனக்கு வருத்தம் தான். ஆனாலும் என் தன்முனைப்பு எடுத்த காரியத்தை முடித்தே விடுவது என்ற புள்ளியில் குவிந்திருந்ததால் அந்த வருத்தத்தை தள்ளி நகர்த்திவிட்டு நானொரு புனைவு எழுதவேண்டுமென்றும், அதற்கு அடிப்படையான அனுபவ அறிவின்றி என்னால் புனைவெழுத முடியாதென்றும் அவருக்கு விளக்க வேண்டியிருக்குமோ என்று எனக்குத்தோன்றியது. ஆனால் அவர் அதற்கான வழியொன்றையும் தேடவைக்காமால், சொல்லுங்க என்று மட்டுமே சொன்னார்.

ஒரு நாளில் எத்தனை முறை நீங்கள் பின்னோக்கி போகவேண்டியிருக்கும்? அந்த அனுபவம் எப்படியிருக்கும் அப்போது தாங்கள் என்ன நினைத்துக்கொள்வீர்கள் இதையெல்லாம் நான் புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன், முடிந்தால், தாங்கள் அனுமதித்தால் தங்களோடு ஒரு நாள் கூடவே வந்துபோகவும் ஆசையாயுள்ளது என்று சொன்னதும், அவர் என்னை ஏதோ வேற்றுகிரகத்து ஜந்து போல பார்த்தார்.


இங்க பாரும்மா இதொன்னும் நீ நினைக்கறாமாதிரி
ஆராய்ச்சி பண்ணவேண்டிய விஷயமெல்லாமில்லை.

இன்ஞ்சின் கேபின்ல ஏறி உக்காந்தா வண்டி முன்னயோ பின்னயோ போகும், முன்னாடி போனா ஸ்டேஷனெல்லாம், சீக்கிரம் கண்ணைவிட்டு போயிடும். வண்டி திரும்பி போகும் போது பின்னாடி இருந்தா ஸ்டேஷனெல்லாம் ரொம்ப நேரத்துக்கு கண்ணுல தெரியும் அவ்ளோதான். ஆங் அப்புறம் முன்னாடி போகும்போது மனுசங்களை ரொம்ப பக்கத்துல டிராக்குல பார்த்துட்டா அந்த டிரிப் கொஞ்ச நேரத்துக்கு பேஜாராயிடும், பின்னாடி உக்கார்ந்து இருந்தா அந்தக்கவலையில்லை அவ்ளோதான். வேற ஒன்னும் இல்லை. வர்ட்டா.. என்ற படி நகர்ந்து போனார்.


எனக்கு மிகவும் ஏமாற்றமாய் ஆனது இவ்ளோதானா இதுக்கு மேல ஒன்னும் இல்லையா.


நான் பேசியது ஒரு மின்சார தொடர் வண்டியின் ஓட்டுநரிடம் என்று உங்களுக்கு புரிந்துவிட்டது தானே.


Friday, February 20, 2009

காதலின் மீள்கடிதம்

பிப்ரவரி 14 எந்த ஒரு கவனிப்பும் இன்றி கழிந்து சென்றது என்னுள் கேள்வியை எழுப்பியது என்ன ஆச்சு எனக்கு? எனக்குள் காதல் செத்து விட்டதா.... தேடிப்பார்த்தேன் நல்லவேளை இல்லை.... ஆழப்புதைந்திருக்கும் உணர்வுகளில் ஒளிந்திருக்கும் உண்மை. மிக மெல்லிய காதல் கவிதை.


எப்போதும் கனவுகளில்

பார்த்தேயிராத தெருக்களில்
பயணித்திருக்கிறேன்

ஓட்டியே இராத கார்களின்
வட்டுவம் பிடித்து
மைல்கணக்காய்
காரோட்டியிருக்கிறேன்

பறந்து செல்லும்
பறவைக்கூட்டத்தினரோடு
நானும் பறவையாய்
பறந்திருக்கிறேன்

மிதந்து செல்லும்
ஆற்றின் சுழிகளில்
சுழன்று வீழ்ந்திருக்கிறேன்

தொலைந்து போன
பால்யத்தின் கதவுகளை
திறந்து பார்த்திருக்கிறேன்

அதோடு கூட


உன்னோடும் இருந்திருக்கிறேன்

Sunday, February 15, 2009

கேள்விகள் - 4 - முதிர்ச்சியை எதிர்பார்ப்பது சரியா தவறா?

ரொம்ப பெரிய மனுஷத்தனமா பேசறான், இது வயசுக்கு மீறிய பேச்சு. அவன் லெவலுக்குப்பேசவே மாட்டான், இப்படி எத்தனையோ முறை நாம் நம் வீட்டு குழந்தையைப்பற்றியோ அல்லது தன் வயதுக்கு ஒவ்வாத பேச்சுக்களை பேசும் மற்ற சிறு குழந்த்தைகளையோ பார்க்கும் பொழ்து சொல்லக்கூடிய சூழலில் இருந்தால் சொல்லியும் சொல்ல முடியாத நிலையியாயின் மனதுள் நினைத்தும் இருந்திருப்போம்.

இப்போது என் கேள்வி, இது போன்று வயதானவர்களைக்குறித்தும் நமக்குத் தோன்றுவதுண்டா?
எது போன்ற தருணங்களில் ? உதாரணத்துக்கு

 1. பத்து வயதில் ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிடலாம், அதையே 20 வயதிலும் செய்யும்போதாக இருக்கலாம்
 2. 15 வயதில் சாக்லேட்டிற்காக சண்டை போடலாம், உயிரே அதுதான் என்று சாப்பாடு கூடத்தேவையில்லாமல் சாக்லேட்டோடு உயிர் வாழலாம் 40 வயதிலும் அதைத்தொடர்ந்தால்
 3. 18/20 வயதுகளில் இருக்கும் விடலைத்தனங்களில் இருந்து மீளாமல் மத்யம வயதிலும் அதே போன்ற செயல்பாடுகளோடு இருப்பதை கவனிக்கும் போதாக இருக்கலாம் (எ.டு - நடை உடை பாவனை, கவன ஈர்ப்பு விவகாரங்கள், அதிக நாணல், கோணல், போலியான பணிவு, அடக்கம், போக்கிரித்தனம், குறும்புகள்)
 4. அறுபது அறுபதைந்து வயதைத்தாண்டிய ஒரு முதியவரோ, மூதாட்டியோ
  1. மிக ஆர்வமாக சினிமா கிசு கிசுக்களுக்கு விடை கண்டுபிடிக்கும் போதாக இருக்கலாம்,
  2. சில புலனாய்வுப்பத்திரிகைகளின் வசீகரச்செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதைக்குறித்து விவாதிக்கும் போதாக இருக்கலாம்
  3. அண்டை வீட்டுக்காரரைப்பற்றியோ அல்லது சில உறவுகாரர்களைப்பற்றிய சிறிய செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வம்பு பேசும் போதாக இருக்கலாம்
  4. சில சமயம், தன் உடை அலங்காரத்தைப்பற்றிய அதீத கவனம் கொண்டு போட்டிருக்கும் சட்டையோ, கால்சராயோ/புடவை , ரவிக்கையோ சற்று ஒத்துபோகவில்லை என்பதால் அது குறித்து அதீத கவனம் கொள்ளும் போதாக இருக்கலாம்.
  5. நன்னா பூரி பண்ணி தொட்டுக்க கிழங்கோட சேர்த்து அன்னிக்கு சப்பாத்திக்கு பண்ணினேயே தக்காளி கூட்டு புளிப்பா அதுவும் சேர்த்து சாப்பிடனும் என்று சொல்லும் போதாக இருக்கலாம்
  6. தொலைக்காட்சியில் மானாடி மயிலாடி வரும் நிகழ்ச்சிகளை ஒன்று விடாமல் பார்த்து விட்டு அதன் அங்கத்தனர்களை விமர்சிக்கும் பொழுதாக இருக்கலாம்

இப்படி எத்தனையோ இருக்கலாம்கள் இருக்கும்.

 1. எனவே இரசனை, நடவடிக்கை என்பதும் அதைத்தொடர்ந்த மனோநிலையும் 20, 40, 60 , 80 களிலும் ஒன்று போல் இருப்பது தவறாகுமா?
 2. ஒருவருக்கு வயதாகிவிட்டதாலேயே அவர் நமீதாவைக்குறித்தோ, வெங்காய பஜ்ஜி குறித்தோ பேசக்கூடாது அது அவர்கள் வயதுக்கு ஏற்ற செயலல்ல என்று நம்மால் புறங்கூறமுடியுமா?
 3. இல்லை அவர்கள் சரிதான் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா.?
 4. அனுபவங்களே நம்மை கூறுபோட்டு பக்குவப்படுத்தும் அந்த அனுபவங்களை வாழ்நாள் பொழுதெங்கும் சேகரித்து, வயதாக வயதாக சில வருடங்களுக்குப்பிறகு நாம் ஒரு மனோநிலைக்கு செல்லமுடியும் என்பது சரிதானா?
 5. அந்த நிலையின் வெளிப்பாடாக நாம் மிகவும் முதிர்ச்சி அடைந்த மனநிலையை எட்டமுடியும் என்பதும் உண்மைதானா?
 6. அந்த முதிர்ச்சியான மனநிலையில் நம்மைக்குறித்தான அதீக கவலைகளையோ, புற உலகைக்குறித்தான தேவையற்ற விவாதங்களையோ தவிர்த்துவிடுவோம் என்பது நடைமுறையாகுமா?

யோசிக்க யோசிக்க நம்முள் தான் எத்தனை கேள்விகள்????? இந்தக்கேள்விகள் எனக்கானவை மட்டுமல்ல.

கேள்விகள் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் சுவாசக்குழாய்கள்.


கேள்விகள் 1
கேள்விகள் 2
கேள்விகள் 3

Tuesday, February 10, 2009

வாசிப்பின் லயம் - நா.பிச்சமூர்த்தி கதைகள்.

தொடர்ச்சியாய் ஒரு செயலைச்செய்யும் பொழுது அது ஒரே லயத்தில் இருந்தாலும் பிரச்சனை இல்லாவிட்டாலும் பிரச்சனை.

இது என்ன முதல் வரியிலேயே ஒரு குழப்பம் என்ற பயம் வேண்டாம் விளக்கமாகவே சொல்ல முயற்சிக்கிறேன்.

பூ தொடுத்துக்கொண்டிருக்கிறோம், எதையாவது பார்த்து நகலெடுத்துக்கொண்டிருக்கிறோம், இப்படி ஏதாவது ஒரு வேலையை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கும் வேளையில் பத்து இருபது நிமிடங்களுக்கு மேல் அந்த வேலையை நம்மால் தொடர முடிவதில்லை சலிப்படைந்து விடுகிறோம். ஏனென்ன்றால் அதில் இருக்கும் ஒற்றைத்தன்மை. எனவே நாம் செய்யும் வேலையை சுவாரசியமாக்க சின்னச்சின்ன மாற்றங்கள் அந்த வேலையில் தேவைப்படுகிறது.

ஆனால் அதே சமயம், ஒரு பாடல் தொகுப்பை கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம் பல்வேறு தாள லயங்களும், காட்சி அமைப்புக்களும் உடையதாக இருக்கலாம், அதாவது ஒரு குத்துப்பாட்டு, ஒரு மென்மையான இசை, ஒரு சாஸ்திரிய சங்கீதப்பாடல், ஒரு செமிகிளாசிக்கல் பாடல் என்று தொடர்ந்து கேட்க/பார்க்க முடிவதில்லை அதற்கு ஒரு லயம் தேவைப்படுகிறது. நம் மனம் அந்தந்த நிமிட இடைவெளிகளுக்குள் முந்தய அனுபவத்தை மாற்றிக்கொள்ளும் பொழுது சோர்வடைந்து விடுகிறது.


அது போல் ஒரு தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பை வாசித்துக்கொண்டிருக்கிறோம் எனும் சூழ்நிலையில் ஒரு நாவலை வாசிப்பது போல் சிறுகதை தொகுப்பை வாசிக்க முடிவதில்லை. ஒரோர் சிறுகதைக்கும் உண்டான அமைப்பு, கதை மாந்தர்கள் அவர்களது குணாதிசயப்படைப்புகள், கதை ஓட்டம் இவைகளையெல்லாம் நம்மால் ஒரு பக்கத் திருப்பலில் மறந்து விட்டு அடுத்த கதைக்கு செல்ல முடிவதில்லை. அதனாலேயே சில சமயம் ஒரு 80 பக்க சிறுகதை தொகுப்பை படித்து முடிக்க கூட சில நாட்கள் ஆகிவிடுகிறது. அதேசமயம் சில நாவல்களின் 300 பக்கங்களைக்கூட தொடர்ந்து வாசித்து முடித்து விட முடிகிறது.

இது தான் நடந்து கொண்டிருக்கிறது இப்போது நான் வாசித்துக்கொண்டிருக்கும் ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பில். ஒரு கதைக்கும் மறுகதைக்குமுண்டான இடைவெளி சில சமயம் நாட்கணக்காக, மணிக்கணக்காக ஊர்ந்து கொண்டிருக்கிறது. உணர்வுகளால் ஆக்கப்பட்டு அந்த உணர்வுகளின் மூலமாக தன்னையும் எதிர்புலனாக உணரவைக்கின்ற அவரின் எழுத்து தரும் வர்ண ஜாலத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. கை விரல்களினூடே வழியும் மணியென ஓரோர்புறம் சிதறி வழிகிறது நம் உணர்வுகள். தேடல் நிறந்த வாழ்வை வாழ்ந்தெவரென்றும், ஆற்றின் கரைகளில் சாட்சியாய் நிற்கின்ற படித்துறைகள் போல அவரது கதைகள் அவரது தேடலின் சாட்சிகளென்றும் படிக்க, சொல்ல கேட்டு மிகுந்த எதிர்பார்ப்புகளோடேயே இந்த புத்தகத்தை வாசிக்கத்தொடங்கினேன்.

நாம் எதிர்ப்பார்ப்புகள் மிகுதியாய் ஒரு செயலை செய்ய நேரும் வேளையில் நாம் எதிர்கொள்வது பெரும்பாலும் ஏமாற்றமாய் முடிந்துவிடும். அந்த பயமும் என்னுள் இருந்ததென்றாலும் துணிந்து வாசிக்க எடுத்தேன் ஆனால் ஒரு கவளம் சோற்றில் உண்டி நிறையும் சிறு குழந்தையென அவரது ஒவ்வோரும் கதைக்குப்பின்னும் மனம் நிறைந்து விடுகிறது.

வாழ்வைக்குறித்தான் தேடலும் கேள்விகளும், தன்னுணர்வைக்குறித்தான சுய அலசலும் உள்ள இன்றைய தலைமுறை வாசகர்கள் அவசியம் தேடி வாசிக்க வேண்டிய எழுத்துக்கள் ந.பிச்சமூர்த்தியின் கதைகள் என்பது என் எண்ணம்.

Sunday, February 8, 2009

நான் கடவுள் - அகம் பிரம்மாஸ்மி........

நான் கடவுள் படம் நேற்று பார்த்தேன்.....


அதைப்பற்றி எழுத முயன்றால் நான்

உணர்ந்தவற்றில் பத்து சதவிகிதம் கூட எழுத்தில்

கொணரமுடியாது என்று தோன்றுகிறது ஹாட்ஸ்

ஆஃப் டு
திரு.இளையராஜா மற்றும் திரு.பாலா

கூடவே
திரு.ஜெயமோகனையும்

சேர்த்துக்கொள்ளலாம்.

Tuesday, February 3, 2009

முகமூடிக்கவிதைகள் - 6

ஆற்றொழுக்கின் இரு கரைகளுக்குண்டான
விகிதாசாரங்களில்
இறைந்து கிடக்
கிறது வாழ்க்கை

ம் என்றோ
இல்லை என்றோ
மறுமொழிகளில்
கழிந்துபோகிறது
அன்றன்றைய நாட்கள்

வாழ்வை தேடவைக்கும்
சில சொற்கள்
ஆனால்
சொற்களை தேடவைக்கிறது
சிலர் வாழ்க்கை

முகமூடிகளின்
வாழ்வியலில்
வார்த்தைகளே
மூலதனம்

வார்த்தைகள்
வாழ்வை நிர்ணயிப்பதில்லைதான்
ஆனால்
நிர்ணயமாகும் வாழ்வில்
வார்த்தைகளுக்கே முதலிடம்

Tuesday, January 27, 2009

ஆ..மாதவன் கதைகள் - ஒரு பகிர்தல்

ஒரு வாசகனாய்/வாசகியாய் மட்டுமே இருப்பதென்பது மிகப்பெரும் ஆசுவாசமாய் இருந்திருக்குமோ என்று இப்பொழுதெல்லாம் தோன்ற ஆரம்பித்து விட்டது. ஒரு பத்தியோ, சிறுகதையோ, புத்தகமோ வாசிக்க ஆரம்பிக்கும் பொழுதே அதைக்குறித்தான எழுத்துக்கள் என் மனதில் பதிய ஆரம்பித்தது என் எழுத்துப்படலம் தொடங்கிய பிறகு தான். அதுவரை புத்தகமும், எழுத்தும், சிலசமயம் எழுத்தாளரும் மனதுக்கு மிக அருகில் நெருங்கி நிற்பது மட்டுமே நடந்து வந்தது.

ஆனாலும் பகிர்ந்து கொள்ளும் இப்பகிர்வுகள் ஒரு சிலருக்கு சில சமயம் நல்ல அறிமுகமாகும் விசித்திரங்களும் நடந்து போவதுண்டு. நானும் எத்தனையோ புத்தகங்களை, எழுத்துக்களை, எழுத்தாளர்களை மற்றவர்களின் வாசிப்பானுபவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து அது குறித்த சந்தோஷமோ, துக்கமோ அடைவதுண்டு. அதுபோன்றதொரு பகிர்தலுக்ககாவே ஆ..மாதவனின் எழுத்துலகைக்குறித்து இங்கு நான் பகிர்ந்து கொள்ள விரும்புவதும்.

மிகப்பெரும் உள்ளுணர்வுச்சிக்கலையோ, இல்லது சமூகப்பிரச்சனைகளையோ கருவாகக்கொண்டதில்லைதான் ஆ.மாதவனின் கதைகள். ஆனால் நம் போன்ற சாதரணர்களின் வாழ்வை, சக மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை எந்த முகப்பூச்சுக்களுமின்றி தோலுரித்துக்காட்டுகிறது. இலக்கியம் என்று இசைந்து எழுத முற்படாத எதார்த்தங்களே இவரது கதா பாத்திரங்கள். படைப்புலகுக்கும் வாழ்விற்கும் உண்டான இட்டு நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கிச்செல்வதல்ல இவரது எழுத்துக்கள். யதார்த்தத்தில், மனித மனத்தின் அடி ஆழத்தில் இருண்டுகிடக்கும், வக்கிரத்தை, துரோகத்தை, ஏமாற்றத்தை இயலாமயை எழுதிச்செல்கிறது இவரது எழுத்துக்கள்.

அவரது படைப்புலகில் ஆறாம் அறிவுகொண்ட இரண்டு கால் இரண்டு கை மனிதர்கள் மட்டுமல்ல ஒரு கதைக்கான கருவை, களத்தை நிர்ணயிப்பது, வெறும் சம்பாஷனைகளோ அல்லது நிகழ்சிகளோ மட்டுமல்லாது, அதை மீறிய கதைக்களமும் அதைக்குறித்தான வர்ணணைகளும் பாதி கதைக்கான கருவை நம்முள் இட்டு நிரப்பிவிடுகிறது.

திருவனந்தபுரம் கடைத்தெருவும், பத்மனாபபுரம் கோட்டையையும் காண்பவர்கள் ஆ.மாதவனின் கதைகளை படித்தவர்களானால் அவரை நினைவுகூறாது அவ்விடத்தை விட்டு அகலுவது கடினமாயிருக்கும்.

அவரது கதை மாந்தர்கள் கற்பிதப்படுத்தப்பட்ட ஒழுக்கத்தை திணிப்பதை அடியோடு களைந்தவராகவே காணப்படுகிறார்கள். பாம்பு உறங்கும் பாற்கடலில் வரும் வாசுப்போற்றியாகட்டும், அமுத கலசத்துடன் வந்து நிற்கும் மோகினி என வர்ணிக்கப்படும் கார்த்தியாயினியாகட்டும் அவர்களின் சுய சிந்தனை தெளிவுகளோடே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

திருட்டு கதையில் வரும் திருடனின் சமர்த்காரமும், நாயனம் கதா மாந்தர்கள் சாவு வீட்டிலும் சகித்துக்கொள்ள முடியாத இசைக்கொலையை எதிர்ப்பதிலாகட்டும் வாய்விட்டு சிரிக்க வைக்கும் இலகு மனநிலையை தரத்தவறுவதில்லை.

காமினிமூலம் கதையில் வரும் முஸ்தபாவை கண்முன் கொண்டு நிறுத்தும் ஆசிரியர் அவர் வாழ்வை முடிப்பதிலும் கூட அதிக சோடனைகளற்று முடித்துப்போவது ஒவ்வொரு ஆழ்மன உறக்கங்களில் ஒளிந்திருக்கும் காழ்ப்புணர்ச்சியின் திட்டமிடப்படாத வடிகால்களை நமக்கு உணர்த்திச்செல்கிறது.

கோமதியிலும், இறைச்சியிலும், ஐந்தறிவான விலங்கினத்திற்கும், ஆறாம் அறிவான மனத இனத்திற்கும் மிகப்பெரும் வேற்றுமைகள் ஏதுமில்லை என்பதை சிறிதே பூடகமாகச்சொல்லியிருப்பதும் நம்மை மீண்டும் யோசிக்கவைக்கிறது. அதுவும் கசாப்புக்காரரான நாயர் அன்னிய துக்கம் அறியாத எல்லாவனும் பாவிகதான்.. வெட்டுவேன்.. எல்லாத்தையும் வெட்டுவேன்…” என்று புலம்பும்போது நம்முள்ளும் மண்டிக்கிடக்கும் துக்கத்தை வஞ்சத்தை இனங்காட்டுகிறது.

பிரித்தறியப்பட்டுள்ள இவ்வுணர்வுகள் ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் போலில்லை, இன்னும் பகிர்ந்துக்கொள்ளப்படாத ஓருலகத்தை கோடிட்டு காட்டத்தலைப்படும் ஒரு சிறு வெளிப்பாடுதான். ஆர்வமுள்ளவர்களுக்கான ஒரு சிறு துரும்பு. மேலும் அனுபவத்தை அவரவர்கள் வாசிப்பு மட்டுமே முழுமை செய்யமுடியும் என்பது தானே உண்மை.

Monday, January 26, 2009

பட்டாம்பூச்சி விருது


ஆஹ எனக்கும் பட்டாம்பூச்சி விருது கொடுத்துட்டாங்க நம்ம பாசமலர்இதை விருதென்று சொல்லுவதை விட நட்புக்கான அங்கீகாரம் என்று கருதுவதே எனக்கு மிகவும் உவப்பானதாக இருக்கிறது.

என் பங்களிப்பாக இவர்களோடு இதை பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

திவா -எந்த திரட்டியிலும் தன்னை இணைத்துக்கொள்ளாமல், பின்னூட்டங்களுக்கான உழைப்பின்றி கடமையைச்செய் பலனை எதிர்பாரேதே எனும் கீதா வாக்கியத்திற்கிணங்க பல சத்தியங்களை தெளிவுபடுத்தும் பதிவுகள்.

மங்கை - குறைவாகவே எழுதினாலும், நிறைவாக எழுதும் இவரது பக்கங்கள் அதிமுக்கியமானவை. தன் மேதாவிலாசங்களுக்கான சுய தேடலின்றி, சமூக அக்கறையுள்ள எழுத்துக்களே இவரது பதிவின் பக்கங்கள்.

பூ வனம் -ஆத்மார்த்தான எழுத்துக்கள், நம்முள்ளே நம்மை பரீட்சை செய்து பார்க்க உதவும் சிந்தனைகள் என இவரது வலைப்பதிவுகள் அனைத்துமே நான் ஒரு போதும் தவற விட விரும்பாத வகை.

இதற்கென சில விதிகளும் உளதாம்.
இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:


1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. 3 அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)Thursday, January 22, 2009

கேள்விகள் - 3 எது கோபம், ஏன் கோபம்.


மனதில் ஊறும் கேள்விகளை தொடராய் எழுதும் எண்ணம் தோன்றியது சில காலங்களுக்கு முன்.

இரண்டாவது பதிவிலேயே அது நின்று போய் விட்டாலும் மனதின் ஒரு மூலையில் அந்த முயற்சி இருந்து கொண்டே தான் இருந்தது.

அதற்கான தொடர்முயற்சியாய் இது.


நவீன் காப்பி குடிச்சாச்சா? நித்தா எழுந்தாச்சான்னு பார்த்துச்சொல்லு, எழுந்தாச்சுன்னா உடனே அவனை பல் தேய்ச்சுட்டு கீழ வரச்சொல்லு கொஞ்சம் வேலை இருக்கு். நீ உன் காமர்ஸை சீக்கிரம் முடிச்சுட்டு ஸ்கூலுக்கு கிளம்பற வழியப்பாறு என்றபடியே துர்கா சமயலறையில் இயங்கிக்கொண்டிருந்தாள். ஒரு பக்கம் கிரைண்டரும் மறு பக்கம் மிக்ஸியும், அடுத்த பக்கம் எலக்டிரிக் சிம்னியும், சமயலறை சங்கீதத்திற்கு ஸ்ருதி கூட்டிக்கொண்டிருந்தது.

இந்தா நறுக்கினது போறுமா இல்ல இதையும் நறுக்கட்டுமா என்று கேட்ட சீனுவிற்கு, போறும் போறும் கோஸ் காயா பண்ணினா அதுங்க தொடாது, கூட்டுன்னாலாவது கொஞ்சம் போகும் நேத்திக்குத்தான் புடலங்காய் கூட்டு இன்னக்கும் கூட்டுனா நமக்கு போரடிக்கும் அதனால நமக்கு் மட்டும் தான் கோஸ் பசங்களுக்கு பீட்ரூட் முடிச்சுட்டு நீங்க கிளம்ப ஆரம்பியுங்கோ அப்பத்தான் அம்மாவோட ஆஸ்பத்திரி வேலையை முடிச்சுட்டு நீங்க ஆபிஸ் போக முடியும் என்று துரிதப்படுத்தினாள்.

நன்னூஊஊஊ நித்தா எழுந்தாச்சா கேட்டேனில்லை என்றதும் நித்தா எனப்படும் நிதுன், துர்காவின் இளையவன் சமயலறையை அடுத்திருக்கும் ஹாலில் இருந்து குரல் கொடுத்தான். "நான் அப்பவே எழுந்தாச்சு", அப்ப இங்க வா இந்தப்பாலைக்குடி, உதயம் ஸ்டோர்ஸ்க்குப்போய் ஒரு தேங்கா வாங்கிட்டு வா. என்றபடி கிரைண்டர் மாவை எடுக்கத்தொடங்கினாள். எப்படியும் அவன் எழுந்து வர குறைந்த பட்சம் 5 நிமிடமாவது ஆகும் என்பது அவளுக்குத்தெரியும். ஆனால் இவை எதற்குமே எந்த ஒரு எதிர்வினையும் இன்றி அவன் அமைதியாய் சோபாவில் படுத்திருக்கவும் சிறிதே கோபம் தலைக்கேறியது துர்காவிற்கு.

நித்தா உன்னைத்தான் சொல்றேன் பாப்பா, சீக்கிரம் வா கண்ணா, தேங்கா வாங்கி வைச்சுக்க மறந்து போச்சு, அண்ணா படிச்சிண்டிருக்கான், எனக்கு வேலையாகனும் பிளீஸ் ... பதிலில்லை.... நித்தா என்ன பண்ற .... பதிலில்லை முதல்ல நீ இங்க வா சொல்றேன் குரலில் கடுமையேறியது.

என்னஆஆஆ..... குரலில் எரிச்சல் மிக வந்தான்। பத்து வயசுப்பையனுக்கு காலங்கார்த்தால என்ன எரிச்சல் எழுந்தோமா தெம்பா ஏதாவது பண்ணினோமா, ஸ்கூலுக்குபோனாமான்னு இல்லமா இப்ப என்ன எரிச்சல் உன்னை என்ன மலையையா பொரட்டச்சொல்றேன் கடைக்குப்போய் தேங்க வாங்கிண்டுன்னு வாந்தானே சொல்றேன். இதோ தெருமுனைல இருக்கற கடைக்குப் போறதுக்கு உனக்கென்ன அலுப்பு அதுவும் இந்த சின்ன வயசுல என்று ரவுண்டு கட்டத்துவங்கினாள்.

அம்மாஆஆஆஅ.. எனக்கு நேரமாயிடும்மா என்று தரையை உதைத்தபடி மாடியேறிச்சென்றவனைப்பார்க்கவும் கோபம் இன்னும் அதிகமானது. நீ மாடிக்குப்போனே கொன்னுடுவேன்... ஒழுங்கா மரியாதையை கடைக்குப்போயிட்டு வா என்று தன் அதிகாரத்தை காட்ட ஆரம்பித்தாள்.

துர்க்கா இப்ப எதுக்கு உனக்குத்தேங்கா கோஸுக்கா இன்னக்கி தேங்கா போடமா பண்ணிடேன் இதுக்கு எதுக்கு அவங்கூட காலைல என்று சாவதானமாகச்சொல்லியபடி குளியலறையிலிருந்து வந்தான் சீனு. அன்றைய கோஸ் காய் தேங்காய் இல்லாமல் முடிந்தது.

அன்று முழுதும் துர்காவிற்கு கோபம் தாங்கவில்லை

அது எதனால்

தேங்காய் இல்லாத சமையல் செய்ததாலா?
மகன் கடைக்கு போக மாட்டேன் என்று சொன்னதாலா
தான் சொல்லி ஒரு வேலையை செய்ய மறுத்துவிட்டதாலா?
கணவர் தனக்கு ஆதரவாக பேசாமல் சமாதனமாகப் போகச்சொன்னதாலா?
தனக்கு சிறு வயதில் இருந்து போதிக்கப்பட்டு தன்னுள் ஊரிப்போன "பெரியவங்க ஒரு வேலையைச்சொன்னா தட்டாம செய்யனும்" என்ற மனோநிலையை கேள்விக்குறியாக்கியதாலா?

எது துர்காவை அன்று முழுவதும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கும்.

இதில் எந்தக்கேள்விக்கான பதிலை நாம் தேட முற்பட்டாலும் அதில் துர்காவின் தன்முனைப்பு சம்பந்தப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமுண்டா.

குழந்தைகளுக்கென்று உரிமைகள், நியாயங்கள் உண்டு, நீ சொன்னதாலேயே அவன் ஒரு வேலையை, நிகழ்வை செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை, வயதானவர்களைப்போலவே குழந்தைகளையும் கணக்கில் கொள் உன் அம்மா எனும் ஆளுமையை அவர்களிடம் செலுத்த நினைக்காதே என்றும் சொல்லும் சீனு சரியா.

இல்லை இதெல்லாம் உதவிதானே ஒருத்தருக்கு உதவி செய்யனுங்கற எண்ணத்தை சின்ன வயசிலேர்ந்து அதுவும் வீட்டுலேர்ந்துதானே கத்துக்கொடுக்க முடியும், அதுவுமில்லாமா தன்னால முடியாதுங்கறதைக்கூட தன்மையா சொல்ல வேண்டிய முறையையும், கலையையும் நாமதானே கத்துக்கொடுக்கனும். எல்லா விஷயத்தையும் தடவித்தடவி சொல்லிக்கொடுக்க முடியாது கொஞ்சம் வேகமாவும் சொல்லனும் அப்பத்தான் புரியும்னு சொல்ற துர்கா சரியா

எனக்கு விருப்பமில்லாததை செய்யச்சொல்பவர் யாராயிருந்தாலும் எதாயிருந்தாலும் அதை செய்யமாட்டேன் என்ற துணிவிருக்கும் நிதுன், இன்றய இளைய சமுதாயப்பிரதிநிதி் சரியா.

இத்தனை நிகழ்வுகளுக்கு இடையிலும் பிரச்சனை நம்மிடம் வராமல் இருந்தால் சரி என்று ஒதுங்கியிருக்கும் நவீன், மற்றொரு இளைய சமுதாயப்பிரதிநிதி சரியா.

இந்த கேள்விகளுக்கான பதில்கள், துர்கா, சீனு, நவீன், நிதுன் இவர்களைத்தாண்டி நம்மனைவருக்கும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம் சுய அலசலுக்கு உதவும் தானே....