Showing posts with label புத்தகம்.. Show all posts
Showing posts with label புத்தகம்.. Show all posts

Wednesday, July 25, 2012

வெளியேற்றம் – யுவன் சந்திரசேகர் – ஒரு பகிர்வு

சில புத்தகங்கள் ஒரு சில பெயர்களைப்போலே நம் ஞாபக அடுக்குகளில் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கும், இப்போதில்லை, இப்போதில்லை என்று சில சந்திப்புக்களைத் தவிர்ப்பதைப்போல, சில புத்தகங்களை கையிலெடுத்து விட்டு இப்போதில்ல்லையென தள்ளிவைத்து விட்டு அடுத்த அடுக்குக்கு கை தாவும், ஆனாலும் சதா எண்ணத்தில் தங்கிய படியே இருக்கும். சிறு வயதில் உணவில் மிகவும் பிடித்த காய் கறியை கடைசியாக தட்டில் வைத்துக்கொண்டு சாப்பிடுவோமே அது போல் ஒரு நீண்ட காத்திருப்புக்கு நம்மை தயார் செய்துகொள்ள வைக்கும். அப்படி ஒரு புத்தகம் தான் யுவன் சந்திரசேகரின் “வெளியேற்றம்”.

இரண்டாயிரத்து பத்தின் முடிவில் ஒரு நன்பரால் பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் தான் வாங்கும் முனைப்பு வந்து இணையத்தின் மூலம் வாங்கினேன். ஆனால் மேலே சொன்னதுபோல் ஒவ்வொரு முறையும் இதை முடித்து விட்டு, அதற்குப்பின் என்று ஏதேதோ காரணங்களை உருவாக்கிக்கொண்டு நானே ஒரு நீண்ட காத்திருப்புக்குள் சிக்கிக்கொண்டேன்.

எல்லாவற்றையும் போல இதற்கும் ஒரு முடிவு வந்தாகத்தானே வேண்டும், கடந்த சில நாட்களுக்கு முன் வாசிக்கத்தொடங்கினேன், வழக்கம் போல் அந்தப்புத்தகத்தோடு வசிக்கத்தொடங்கினேன்.



விஷ்ணுபுரம் வாசித்த போது அந்நாவலின் கட்டமைப்பைக்கண்டு ஏற்பட்ட ஒரு மிகப்பெரும் வியப்பைப்போல, இந்தப்புத்தகத்தின் கட்டமைப்பும் மிக நேர்த்தியான ஓட்டத்துடன் ஒழுங்குடனும் மிகப்பெரும் வியப்பைத்தருகிறது. எந்த ஒரு இடத்திலும் சிறிதும் சுவாரஸ்யம் குறையாமல் அதே சமயம் அதற்கென எந்த ஒரு மெனக்கெடலும் தெளிந்து செல்லும் நீரோடையென கதையோட்டம் நகர்ந்து செல்கிறது.



இதை வெறும் கதையென்று சொல்ல முடியுமா என்றும் ஒரு தர்க்கம் மனதுக்குள் ஓடி மறைகிறது, சில புத்தகங்களை வாசித்து முடிக்கும் தருணங்களில் கதை மாந்தர்களில் ஒருசில பெயர்கள் மட்டுமே மனதில் தங்கும் அநேகமாய் அவர்களின் பாத்திரங்களின் மூலமாகவே என்னால் அடையாளப்படுத்த முடியும், ஆனால் வெளியேற்றத்தின் கதா பாத்திரங்கள் ஒவ்வொருவருவரும் மிகவும் நெருக்கமாய் இத்தனை நாட்களாய் நம்மோடு பழகிவரும் வெகுநாளைய நன்பர்களைப்போல் அவரவர்கள் பெயர்களோடே நினைவோட்டதில் கலந்து விடுகிறார்கள் ஆதியில் வரும் வேதமூர்த்தியின் குருவானவரைத்தவிர. குருவிற்கு பெயரென்ன அவ்வளவு முக்கியமா??

மிக இளம் வயது முதற்கொண்டே மற்றவர்களின் தொடர்பை தொழிலாக/தன் வளர்ச்சியாக மாற்றும் தன்மைகொண்ட ஆயுள்காப்பீட்டு முகவர் சந்தானம் சில வாரங்களுக்கு எந்த ஒரு பயனும் எதிர்பாராது தொடர்ச்சியாக எதையோ யாரையோ தேடிக்கொண்டு செல்லும் போதும் தனக்குள்ளே கேள்விகளை எழுப்பிக்கொள்ளும் போதும் சில சமயம் சந்தானாமாகவும் சில சமயம் நாமாகவும் உணர்கிறோம்.

கோவர்த்தனம் சொல்வது போல், அவரவர் தொடர்பான வினைகளில் இருந்து வெளியேறி அதற்கு எதிர்மறையான பாதைகளில் செல்கிறார்கள் குற்றாலிங்கம், கோவர்த்தனம், சந்தானம் போல்,

மற்றும் சிலரோ புற உலகிற்கு அதிகம் வெளிப்படாத அதே சமயம் உள்ளுக்குள் பெரும் மாற்றத்தை உணர்ந்து தன் சுயங்களிலிருந்து வெளியேறுகிறார்கள், சிவராமன், இராமலிங்கம் போல.

ஆனால் மன்னாதியும் பாண்டியும் சந்தர்ப்பங்களிலிருந்து வெளியேறி ஒருவித இலக்கின்மைக்குள் புகுந்து கொள்கிறார்கள். ஜய்ராமோ அவருடைய அனுமானங்களிலிருந்து வெளியேறி ஒரு வித சமத்துவத்திற்குள் அமர்ந்து கொள்கிறார்.

இன்னும் அறிந்து கொள்ளும் ஆவலைத்தூண்டும் ஆசானின் பாத்திரமும், தீர்த்தபதியின் உரையாடலும்… இப்படி தேடித்தேடி பேச வைக்கிறது.


குரு, தேடல், சந்நியாசம், வாழ்க்கை இவற்றிற்கான விகிதாசாரங்களை நம்முள் மாற்றிவிடுகிறது இந்தப்புத்தகம். ஆனாலும், இந்த நாவலின் ஈர்ப்பு சகிதியின் மையம் என்று கொண்டால், ஒவ்வொருவருக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் வெளியேறுதலுக்கான இரகசிய வேட்கையும் அதிகம் பேசப்படாத அதற்கான முயற்சிகளும் தானோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஆனாலும் இன்னும் நம்மால் விடுபட முடியாத குடும்பம் என்ற கட்டமைப்பின் சக்தி சித்ராவைப்பற்றியும் அவளுடைய உளைச்சல்கள் பற்றியும் நம்மை அனுதாபப்படவைக்கிறது. வெளியேற்றத்திற்கான நம்முடைய தயார்தன்மையை சோதித்துக்கொள்ளும் ஒரு அளவுகோலாகிறது.

இதில் மிகவும் யோசிக்க வைத்த ஒரு சில வரிகள் இதோ…

… வஸ்துக்களாலெ ஆன உலகம் ஒண்ணு இருக்கு அதை என் புலன்களாலே நான் அறிஞ்சிக்கிறேன் ஒங்க உப்லன்களாலே நீங்க, அவங்கவங்க புலன்கள் இருக்கற ஸ்திதியைப்பொறுத்து அவங்கங்க அறிஞ்சிக்கிறோம்…” இப்படியாகத்தொடரும் பத்தி நாம் ஒருவருக்கொருவர் பறிமாறிக்கொள்ளும் செய்திப்பரிவர்த்தனைகளின் அடிப்படையைக்குறித்து யோசிக்க வைக்கிறது.

குள்ளச்சித்தன் சரித்திரம் போல, அதிகம் மாயவிநோதங்கள் ஏதுமின்றி இயல்பு வாழ்க்கையை ஒட்டியிருப்பதும், கடைசியில் ஆசிரியர் கூறியிருக்கும் புனைவின் சதவிகிதத்தையும் கணக்கில் கொள்ளும் போது அடுத்த முறை நம் திருவண்ணாமலை பிராயணத்தில் மன்னாதியை மனம் தேடினாலும் தேடும்.

Saturday, January 15, 2011

பிரபஞ்சனின் சிறுகதைத்தொகுப்பு - ஒரு பகிர்வு

மூளையைவிட்டு அகலமறுக்கிறது அந்த இரண்டு வரிகள் அடுத்த முறை போவு்ம்போது முதல்லியே பணத்தை வாங்கிடுங்க - நிகழ் உலகத்தின் நாயகன் கிருஷ்ணமூர்த்தியைப்போலவே நம்மையும் புரட்டிப்போட்டும் வரிகள்

மிகவும் எளிமையான மனிதர்கள், பிரச்சனைகள், நிகழ்வுகள் அதைச்சுற்றி ஓடும் எண்ண ஓட்டங்கள் படிக்க நேர்ந்த 90 கதைகளிலும் விரவிக்கிடந்த விதம் விதமான உணர்வுகள் படித்து முடிந்த இத்தனை நாட்களுக்குப்பிறகும் இதை எழுத முனையும் இந்த நேரத்தில் என்னுள் எழும்பி அலையடித்துக்கொண்டேயிருக்கிறது.

மனுஷி அம்மா வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து அழுதாள், நிச்சயமாகச் செத்து போன தங்கைக்காக அல்ல அந்த அழுகை என்று முடிக்கும் போது பெண்மனதின் பல பரிணமங்களை அதை வெளிப்படுத்த அவர்கள் தேர்ந்தெடுக்கும் உத்திகளை அதைச்சுற்றி நிகழும் மாற்றங்களை அது ஏற்படுத்தும் உணர்வுகளை படம் பிடித்துக்காட்டுகிறது.

அப்பாவு கணக்கில் 35 ருபாய் - இப்படித்தான் முடியும் என்று கதையோட்டத்தை ஆரம்பத்திலேயே யூகிக்க முடிந்தாலும் கடைசியில் கதையின் நாயகன் எழுந்து நடக்க ஆரம்பித்த நேரத்தில் நம் மனதிலும் வந்து அமர்ந்து கொள்ளும் அந்த உணர்ச்சிக்கு வார்த்தைகளில்லை.

சைக்கிள் - கதையில் நம்மை மிகச்சுலபமாக தனிமனித தன்மானதிற்கும் அவரது அபிலாஷைகளுக்குமான இடைவெளியை உணரச்செய்யும் வேளையில் வெகு நேர்த்தியாக நம்மை எந்த ஒரு விளிம்புகளுக்கும் ஒட்டாது வெளித்தள்ளிவிடுகிறார்.

பொதுவில சிறு்கதைத்தொகுப்புகளை படிக்க நேர்கையில் ஏற்படும் உணர்வுக்குழப்பங்கள் இந்த முறை என்னை பீடிக்கவில்லை. எல்லாக்கதைகளும் ஒன்றோடொன்று மிக மெல்லிய சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதை போன்றதோர் உணர்வுதான் எஞ்சியது. அதன் காரணம் பெரும்பாலும் நம்மைச்சுற்றி நிகழும் பதிவுகளை எந்த ஒரு தொடர்புமற்று கண்டுகொண்டிருக்கும் வெறும் வெளிப்பார்வைகளுக்குள் ஊடுருவியிருக்கும் காண்தன்மையின் வெளிபாடாகக்கூட இருக்கலாம்.

ஒவ்வொரு கதையாக விவரிக்க இன்னும் பாக்கியுள்ள 86 கதைகளை தனித்தனியாக எழுத முயலாததற்கான காரணம் கூட இதுவாக இருக்கலாம்.

படித்துப் பாருங்கள் தவறவிடக்கூடாத தொகுப்புகளில் இதுவும் ஒன்று என்பது என் எண்ணம்.

Tuesday, May 11, 2010

வாசிப்பு - சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு - மொழியாக்கம்


மிகவும் குற்ற உணர்ச்சிகளோடேயே எழுதிய கவிதைகளை இடம் மாற்றி வைத்துக்கொண்டிருக்கிறேன். கவிதைகள் எழுதுவதென்பது எளிதென்பதைக்காட்டிலும் உணர்வுகளை உடனே சொல்ல முடிந்த சவுகரியங்கள் மட்டுமே காரணமாயிருக்க முடியும்.


ஆராய்ந்து பார்த்தால் அடுத்தடுத்த பதிவுகளாய் கவிதைகளை இடுவதை தவிர்த்து வந்ததின் பிண்ணணி எனக்கு நானே இட்டுக்கொண்ட வேலியென இப்போது தான் புரிகிறது. ஆனாலும் கவிதையெழுதுவதின் போதை எழுதுபவரை எப்போதும் ஒரு போதத்தில் ஆழ்த்துவதென்பதும் உண்மைதானே..


மிகச்சமீபமாய் இத்தகைய போதம் தரும் புத்தகமொன்றை படிக்க நேர்ந்தது. சிதம்பர நினைவுகள் என்று பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதி ஷைலாஜா அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட அந்தப்புத்தகம் என் கைகளில் மொத்தம் இரண்டு நாட்களுக்கும் குறைவாகவே இருந்தது. பொதுவில் மிகவும் ஆழமான விரும்பத்தக்க எழுத்துக்களை மீள் வாசிப்பிற்கென எடுத்து வைத்தும் சில சமயம் மீண்டும் உடனே வாசித்தும் பழகிய எனக்கு மறுமுறை வாசிக்க வேண்டும் என்ற தேவையற்று வாசித்த வரிகள் தொடர்ந்து கண்களிலும் மனதிலும் நீர்வீழ்ச்சியின் பாதத்தில் தேங்கியிருக்கும் நீர்நிலையென கலங்கலற்றுத் தங்கிவிட்டது.

மிக எளிமையான தினப்படி நிகழ்வுகள் தந்த அவதானிப்புக்களை மிகவும் சரளமாகவும் எந்த ஒரு தாழ்வுணர்ச்சியோ இல்லை அதி உன்னத மிகப்படுத்தல்களோ இல்லாது எவருக்கோ நிகழ்ந்ததென படைக்கும் ஆற்றல் பெற்ற அந்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரரை எந்த மொழிகொண்டும் விவரிக்க இயலாது.

என்றோ இளமைக்குறும்பில் வாங்கிய முத்தத்தை நடு வயதில் மிகவும் நிதானாமாய் திருப்பித்தந்த நெகிழ்வான நிகழ்விலாகட்டும், நடுவயதில் தவறிய நிதானத்தை குற்ற உணர்வுகளோடு மீட்டெடுத்து உடனே செயல்படுத்தியதை சொல்லும் பொழுதிலாகட்டும் தன் மேதாவித்தனங்களை எந்த விதத்திலும் வெளிப்படுத்திக்கொள்ளாத எளிமை நம் எல்லோராலும் கைக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

மிகவும் வயதான தம்பதியரின் அந்நியோன்யம் கண்டு அதிசயத்த அதே மனது மற்றொரு சம்பவத்தில் தனது துணைவியாரின் சகிப்புத்தன்மையைப்பற்றி சொல்லும் பொழுது எதையெல்லாமோ எனக்காக சகித்துக்கொண்ட விஜயலெஷ்மி எனக்காக இதையும் சகித்துக்கொண்டாள்என்ற வார்த்தைகள் தரும் அழுத்தம் அபாரமானது. (படைப்புகளுக்குள்ளே படைப்பாளியை பொறுத்திப்பார்க்கும் இந்த பொது புத்தியினை எத்தனை முயன்றும் தவிர்க்கமுடிவதில்லை)

எப்பொழுதும் ஊசாலாடிக்கொண்டிருக்கும் ஆண்மனதின் அடி நாதத்தை எடுத்துக்காட்டும் இடங்களில் தான் கண்டு இரசித்த பெண்மணியின் இறப்பும் அது குறித்த குற்ற உணர்வு தரும் வலியைக் குறிக்கும் இடங்களில் வானாளாவி நிற்பது படைப்பின் உன்னதம் மட்டுமே. இதில் எடுத்துச்சொல்லாமல் விட்ட எத்தனையோ இடங்கள் இனிமேல் வாசிப்பவர்களின் அனுபவத்திற்கு விட்டுச்சென்றதேயன்றி வேறெதும் இல்லை

முன்னுரையில் ஷைலாஜா கூறியிருப்பதைப்போல் மலையாள மொழியினைக் கற்றுத்தேர்ந்தேயாகவேண்டும் என்ற முனைப்பு எழுந்துதான் உள்ளது. இடயே சிலகாலம் மறந்து போயிருந்த அந்த முனைப்பு இப்போது மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளது. தேடத்துவங்கியுள்ளேன் அரிச்சுவடிப்புத்தகங்களை.

மொழிபெயர்ப்பு என்ற எந்த நெருடல்களும் இல்லாது இந்த புத்தகத்தை படைத்துள்ள ஷைலாஜாவும் ஒரு படைப்பாளியின் அந்தஸ்த்திற்கு இணையானவர் என்று சொன்னால் அது மிகையாகது.


வாழ்வில் ஒரு முறையாவது வாசித்தேயாகவேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று என்று சொல்வதோடு ஒரு சிலருக்கு தன்னை செதுக்கிக்கொள்ளும் உளியாகவும் கூட ஆகிவிடலாம்.

Saturday, November 14, 2009

கொற்றவை - ஒரு பகிர்தல் - பகுதி 1

"பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே எங்கள் பாவங்களை மன்னித்தருள்வீராக"
சொற்களில் உறைந்திருக்கும் இறைஞ்சுதல்கள் வெளிப்படுத்தும் பாவனைகள் கண்கூடாக இப்பிரயோகத்தில் காணக்கிடைப்பது போல்
உள்ளே உணர்ந்து உறைந்து கிடைக்கும் எண்ணங்களை முழுவதும் காட்சிப்படுத்தும் ஆவலோடுதான் இந்தப்பதிவை
எழுதத்துவங்கியுள்ளேன்.

கடந்த வருட ஆரம்பத்தின் புத்தகத்திருவிழாவில் வாங்கிய கொற்றவையை உடனே படிக்க வேண்டும் என்ற ஆவலற்று அடுத்து இதைப்படிக்கலாமா அதைப்படிக்கலாமா என்ற எந்த அலம்பலகளும் இல்லது ஆர அமர இருந்த வெற்று மனநிலையின் ஒரு பொழுதில் வாசிக்கத்துவங்கினேன்

பொதுவாக எந்த முன்மதிப்பீடுகளுமற்று படைப்புகளை அணுகுவதே மிகச்சிறந்த வழியென்று அறிந்திருந்தும், பல சமயம் உணர்ந்திருந்தும், ஏனோ "கொற்றவை" யைக்குறித்த நன்பர்களின் விமர்சனங்களும், பொதுவில் எனக்கு அறியக்கிடைத்திருந்த அந்த புத்தகத்தின் மொழி வழக்கு பற்றிய எச்சரிக்கையும் என்னுள் சிறிய இனந்தெரியாத எதிர்பார்ப்புக் கொப்புளங்களை உருவாக்கித்தான் விட்டிருந்தது। கூடவே அப்படி என்ன சொல்லிவிட முடியும் சிலம்பைப்பற்றி? எத்தனை புத்தகங்களைப்படித்திருப்போம், மிகப்பிரியமான என் தமிழாசிரியர்கள் பாடத்திட்டத்தையும் தாண்டி எங்கள் தனிப்பட்ட விருப்பத்திற்கென விதம்விதாமய் எத்தனை சொல்லியிருக்கிறார்கள் இதைத்தாண்டி என்ன இருக்கப்போகிறது? என்ற எண்ணத்தோடும், ஏற்கனவே பார்த்திருந்த ஒரு திரைப்படத்தை மீண்டும் பார்க்கும் ஒரு மனோநிலையோடும் தான் வாசிக்க ஆரம்பித்தேன்

ஆனால் நடந்தது முற்றிலும் வேறுபட்ட அனுபவம். எதைப்பற்றியும் சிந்திக்கவொட்டாது படிக்கும் புத்தகத்தைப்பற்றி மட்டுமே காதலோடு யோசித்த நாட்களுண்டு, இதை இந்தக்கணம் சொல்லியே ஆகவேண்டும் என்ற தவிப்போடு பகிர்ந்து கொண்ட புத்தகங்களுண்டு, மனிதத்தின் மேன்மைகளை மென்மையாய் வருடி விட்டு கவித்துவமான சிந்தனைகளை கிளர்ந்தெழுத்திய புத்தகங்களுண்டு, இப்படிக்கூட சில சாதராண நடைமுறைகளை வெகு சுவாரசியமாக வடிக்கமுடியுமென்று கற்றுக்கொடுத்த புத்தகங்களுண்டு, சில புத்தகங்களை படித்து முடித்ததும் செய்யவேண்டியது இதுவென சில பட்டியல்களை இட வைத்த எழுத்துக்களுண்டு, சில புத்தகங்கள் அடுத்து எந்த புத்தகத்தையும் உடனே படிக்கவொட்டாது அசைபோட வைத்ததுண்டு.. ஆனால் இந்தபுத்தகம் என்ன செய்தது...

சொல்வதற்காகாத்தான் இந்த ஆரம்பம்...

ஏதேனும் எழுதி நாட்களாகிறது
பிரசவத்திற்கென
சுமந்திருக்கும் கருவென
உள்ளே ஊறிக்கிடக்கிறது
வார்த்தைகள்
....

மீண்டும் வருகிறேன்...

Friday, October 3, 2008

சாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான் - வாசிப்பானுபவம்

சில புத்தகங்கள் நம்மை அதனோடே கட்டிப்போடும், சில ஏங்கவைக்கும், சில மறுகவைக்கும், சில உருகவைக்கும், சில நாம் தொலைத்த சந்தோஷங்களை, துக்கங்களை அசைபோடவைக்கும்.

ஆனால் ஒரு புத்தகம் வாசக அனுபவத்தை மீறி கதாசிரியன் காட்டிச்சென்ற உலகத்தில் நம்மை வாழ்ந்திடச்செய்தல் சாத்தியமென்று இதுவரை யாரேனும் கூறியிருந்தால் நான் நம்பியிருக்கமாட்டேன். ஆனால் தோப்பில் முஹம்மது மீரானின் "சாய்வு நாற்காலி" (கசேர்) என்னை அவ்வாறு வாழ்ச்செய்தது.

சுற்றம் மறந்து, தன் இருப்பு மறந்து, நான் என்பதும் மறந்து தென்பத்தன் கிராமத்தில் ஒருத்தியாய், சவ்தா மன்ஸிலின் ஒரு குடியிருப்பாய் நான்கு நாட்கள் என்னால் வாழ முடிந்தது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

கசேர், மய்யத், பவுரீன் பிள்ளக்கா வம்சம், எக்க வாப்பா, வாப்பும்மா, பரக்கத், அவுலியாக்கள், ஜின்னு, தங்களுமார், சாயா, வலிய அங்கத்தை, செந்தரையம்மா, ராத்திபு, .....

சவ்தா அவருக்கெ உம்மா, மன்ஸில் ஆருக்கெ உம்மா???........ மன்ஸில் எண்ணு சொன்னா அரபியெலெ ஊடு எண்ணாக்கும் அர்த்தம்"... இப்படியாக புன்னகைக்க வைக்கும் வரிகள்

இப்படி எத்தனையோ வார்த்தைகள் என்னுள் இன்னும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது. பால்யவயதில் கண்டிருந்த ஐஸ்வர்யம் அழிந்த எத்தனையோ மாளிகைகளின் கதைகளை நமக்கு மீட்டுத்தருகிறது சவ்தாமன்ஸில்.

தென்பத்தன் கிராமத்தின் அரபிக்காற்றும், திருவிதாங்கூர் இராஜியத்தின் அரசியல் ஆளுமைகளும் நம்மை கிறுகிறுக்க வைக்கிறது. கடந்த காலமும் நிகழ்காலமும் எந்த முன்னறிவிப்பும் இன்றி சுற்றிச்சுற்றி வந்தாலும் வாசிப்பிற்கு அது எந்த குந்தகத்தையும் விளைவிக்கவில்லை. முஸ்தாபகண்ணின் மன ஓட்டத்தோடு நாமும் அந்த கேரளக்கரைகளில் மிக எளிதாக பயணம் செய்து மீளமுடிகிறது.

உண்மையின் முகத்தை கண்டுணரமுடியாத ஒரு பழம்பெருமை பேசி அதன் இன்பத்திலேயே இன்றும் வாழ்ந்திருக்கும் முஸ்தபாகண்ணு இன்றைய நிலை தெரிந்தும் அதிலிருந்து மீளுவதற்குண்டான மனத்தைரியம் அற்ற ஆசியா, இவை எல்லாம் கண்டுணர்ந்தும் ஏதும் செய்ய வழியற்று அன்பை மட்டுமே சுமந்து கொண்டு வாழும் மரியம்தாத்தா,
இந்த இறந்த காலத்திலிருந்து தப்பித்துச்சென்று விடும் சாகுல் ஹமீது, எரிந்த வீட்டில் பிடிங்கியது ஆதாரம் என்று இந்த சூழலை தனக்கு சாதகமாக்கிக்கொள்ளும் இஸ்ராயில் ஆனாலும் கடைசி சில பத்திகளில் தன்முக அடையாளத்தை மாற்றிக்காட்டக்கூடிய ஒரு படைப்பு, இதனிடையே கண்ணுக்குத்தெரியாமல் பொங்கிவழியும் காமம், தறவாட்டுப்பெருமை காக்கும் சந்தன அலமாரி, பட்டு உறுமால், பப்புவர்மனின் வாள், வெள்ளித்தட்டு, வீட்டின் ஒவ்வொரு சன்னலின் விஜாவரிகள், இப்படி ஒவ்வொரு சேதன அசேதனப்பொருட்களும் இந்த நாவலில் பாத்திரமாக நம்மோடு வாழ்கிறது.

காமமும் காமம் சார்ந்த விழைவுகளும் ஒரு பழம்பெரும் தறவாட்டின் பெருமையை எங்கணம் புரட்டிப்போடுகிறதென்பதையும், "கிணற்று நீரில் மிதந்து கழியும் எத்தனை கன்னிமாரின்" சாபங்களின் வடிகாலாக சவ்தாமன்ஸில் உருக்குலைகிறதென்பதையும், இத்தனைக்கும் சாட்சியான அந்த கசேரின் கதையும், கதியும் உணர்த்தும் உன்னதமும் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதவை.

இஸ்ராயிலின் நாவிலிருந்து வரும் கடைசி நேர சொற்றொடர்கள் இன்றைய வகுப்பும் வர்க்கமும் சாரா வாழ்வியல் நடைமுறையை சுட்டுக்காட்டுவதில் மட்டுமே படைப்பாளியின் வெளிப்பாடு தெறிகிறது அதுவரை கதைசொல்லி மட்டுமே கதைசொல்லாடல் மட்டுமே நிகழ்கிறது.

எதனால இந்தப்புத்தகம் நம்மை அதோடு வாழ்வைக்கிறது என்று சற்றே தெளிந்த மனதோடு ஆராயமுற்பட்டோமானல் அங்கு ஒங்கியர்ந்து நிற்கிறது வட்டாரவழக்கு। எந்த சமரசங்களுமற்ற நெடுந்தீர்க்கமான வட்டார வழக்கில் தொடர்ந்து ஒலிக்கும் மொழி நடை, பாசாங்குகளற்ற கதைப்பாங்கு இவைகள் மட்டுமா காரணம் அதையும் மீறிய ஏதோ ஒன்று.

எல்லா உள்ளுணர்வுகளுக்கும் காரணமறிய முடியுமானால் நாம் ஏன் இன்னும் எழுத்தோடும் புத்தகங்களோடும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க வேண்டும்। நம் தேடுதல்களுக்கு ஒரு காரணியாய் நம்மை உந்திச்செல்லும் சக்தியாய் நல்ல வாசிப்புகள் மட்டுமே துணையாக முடியுமென்பது உண்மையானால் இப்புத்தகமும் ஒரு காரணிதான்.

எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் வெளிவந்துள்ள புத்தகமானாலும் எனக்கு படிக்ககிடைத்ததென்னவோ இப்போதுதான்.. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.