Showing posts with label கேள்விகள். Show all posts
Showing posts with label கேள்விகள். Show all posts

Wednesday, September 24, 2014

ஆன்மீக இறுமாப்பு


கேள்விகள் என்பது நம் வினைச்செயல்,கர்மா அதற்கும் கடவுளே காரணம் என்பதில் எனக்கு ஒப்புமை இல்லை. அவர் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர். நாம் செய்யும் நன்மை தீமைகளுக்கும்  நம் வினைப்பயனே காரணம்.

நல்லோர் நட்பும் கடவுள் நாமமும் நம் கர்ம வினைகளைக் குறைக்க உதவும். அதன் மூலம் நாம் செய்யும் நன்மைகள் அதிகரிக்கும் அப்போதும் அதற்கான கர்த்தா நாம் தான்

இதில் நன்மையை நாம் கடவுளின் பெயருக்கு விடுவதன் காரணம் “நாம் ஒரு நன்மை செய்து விட்டோம்” என்ற ஆணவத்தை அடைந்து விடாமல் இருப்பதற்காகத்தான்.ஏனெனில் இந்த உணர்வு இறுமாப்பையும் அதற்கான பதில் உபகாரத்தையும் (குறைந்த பட்சம் ஒரு சிறிய அங்கீகாரத்தையாவது ) எதிர்பார்க்க வைக்கும். இதன் பயனால் இம்மையில் நாம் மீண்டும் ஒரு செயல் சக்கரத்தில் சிக்கிக் கொள்கிறோம். மறுமையிலோ மற்றுமோர் வினைச்சக்கரத்தை உருவாக்கிக்கொள்கிறோம். .

இப்போது கேள்விக்கு வருவோம். - எல்லாமும் கடவுள் செயல்தான் என்று சொன்னால் ஒருவர்  செய்யும் தவறையும் கடவுள் செயல் என்று சொல்லமுடியுமா?  அது நாத்திகவாதமாகதா? அது போலத்தான் கேள்விகளும். கேள்விகள் அறியாமையின், இருளின்,  வெளிப்பாடு, இதில் அணுவுக்குள் அனுவானவர்க்கும் ஒளியானவர்க்கும் தொடர்பில்லை.

 

இப்போது பதிலுக்கும் வரலாம் – பதில் எங்கும் எப்போதும் ஓரு  காற்றைப்போல நிலைத்து நிறைந்திருப்பது.  ஆனால் காற்றாடி சுற்றும் போதோ மரங்கள் அசையும் போதோதான் நாம் அதை புரிந்து கொள்கிறோம். இதில் நம் கேள்விகளை சுயம் ஏற்றி அதற்குண்டான பதில்களையும் தொடர்பு படுத்தி நம்மை சுகத்திலோ துக்கத்திலோ ஆழ்த்திக்கொள்கிறோம். தற்குறிப்பேற்றல் அணி உண்டல்லாவா அது போல.  இங்கும் நம் அறியாமை மட்டுமே வியாபித்திருக்கிறது.

கடவுளின் வேலை நம்மில் கேள்விகளை உண்டாக்குவதோ அதற்குண்டான பதில்களை தருவதோ இல்லை. அவரது நாமத்தால் நம்மை கேள்விகளற்ற நிலைக்கு தள்ளுவது மட்டுமே அதை உணர்த்துவது மட்டுமே. இதையும் தாண்டிய ஒரு நிலையில் அவர் வேறு எவரோ இல்லையென்றும், வேறு எங்கோ ஓர் தனி உலகத்தில் பருப்பொருளாய் இருக்கவில்லை என்றும் நம் ஆத்மா அந்த பேருணர்வின் ஒரு துகள் என்றும் புரிந்து கொள்ளும் நொடியில் மற்றுமொரு கடவுள் நமக்குள் உருக்கொள்கிறார்.

இதில் காலம் காலாமாய் நாம் செய்து கொண்டிருக்கும் சாங்கியத்திற்கு எந்த ஒரு கர்வமும் கொள்ளத்தேவையில்லை என்பது என் கருத்து.

Wednesday, August 13, 2014

உரத்த சிந்தனை – உறவுகள் – ஒரு சுய பரிசோதனையின் தேவை


காலம் காலமாய் நம்முள் கனன்று கொண்டிருக்கும் பெரு நெருப்பொன்றை கையாள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். அன்றைய கூட்டுக் குடும்ப காலகட்டமாகட்டும், இன்றைய தனிக்குடித்தன காலமாகட்டும் இரத்த சொந்தக்களுக்கிடையேயான பூசல்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

முகலோபனம் இல்லாத உறவுகளை இன்றும் எத்தனயோ வீடுகளில் நாம் மிகவும் வேதனையோடு எதிர் கொள்ளத்தான் செய்கிறோம். இதில் நம் தவறென்ன அவர் தவறென்ன என்பதை தாண்டி ஒரு சூல் உறவு என்பதை நாம் யோசிக்கின்றோமா? என்பது மட்டுமே நம் கேள்வி, இதையே நீர் அடித்து நீர் விலகுமா என்றும் கேட்பதுண்டு. 

ஒருகுடும்பம் ஒரு குழந்தை என்ற இன்றைய குடும்ப அமைப்பில் நம்மைத் தாண்டி அந்த குழந்தைகளுக்கு உருத்தானவர் யார்? பெரியப்பா, சித்தப்பா, அத்தை பெரியம்மா, சித்தி, மாமா, இவர்தம்  குழந்தைகளை உறவகாவும் உயிராகவும் நினைக்கும் அளவிற்கு நாம் நம் குழந்தைகளை வளர்த்திருக்கிறோமா? என்பது நாம் பதிலுறுக்க வேண்டிய ஒரு கேள்வி.

எழுபது என்பது வருடங்களுக்கு முன் ஒரே வீட்டில் பிறந்து நகமும் சதையுமாய் வளர்ந்து காலச்சூழலில் ஒருவருக்கு ஒருவர் அந்நியமாய் ஆனா சகோதர சகோதரியின் உறவு அவர்கள் இறப்பிலும் இணையவில்லை. இந்த விலகலின் காரணங்கள் மட்டும் கதை கதையாய் இருவர் குடும்பங்களிலும் பேசுவது தாண்டி உண்மையான காரணம் புரியாமலே இரு குடும்பமும் இன்று வரை தனித்திருக்கும் எத்தனையோ கதை நாம் அறிந்ததே. ஆனால் இருவரில் கடைசியாய் எஞ்சியவர் இறக்கும் தருவாயில் சொன்ன சில நெகிழ்வான வார்த்தைகளில் இன்றைய தலைமுறை உறவுகளை புதுப்பிக்க விழையும் சாத்தியக்கூறுகளும் நாம் அறிந்ததே. மிக்க சந்தோஷம், ஆனால் காலம் கடந்த இந்த ஞானத்தின் இடையில் நாமும் நம் தலைமுறைகளும் எத்தனை உணர்வு பூர்வமான  நிகழ்வுகளை,  சந்திப்புகளை இழந்திருப்போம்?  குறைந்த பட்சம் நாமாவது அந்த தவறை செய்யாதிருக்க என்ன செய்கிறோம்? நாம் சிந்திக்க வேண்டிய முக்கியமான கேள்வி இது.

உறவுகளை சுயலாபம் தாண்டிப் பார்க்கும் மனோபாவம் நம்மில் உள்ளதா? அதையும் தாண்டி கருத்து வேறுபாடுகள் எழும் சமயங்களில் அந்த கசப்புக்களை வரும் தலைமுறைக்குள்ளும்  செலுத்தாதிருக்கிறோமா? ஒருவருக்கொருவர் விலகாதிருக்கிறோமா? இவைகளுக்கான பதிலை நாம் யாரோடும் பகிர்ந்து கொள்ளத்தேவையில்லை ஆனால் நம்முள் ஒரு சுய பரிசோதனை மிகவும் அவசியம்.

Monday, August 11, 2014

உரத்த சிந்தனை – மொழி – எப்படி சரி செய்யப் போகிறோம்??


மதிய உணவு இடைவேளை என்பது சில சமயம் இயந்திரத்தனமாயும், சில சமயம் ஆசுவாசமாகவும் அமைவதுண்டு. நேற்றைய நாள் இரண்டாவது வகையைச் சார்ந்தது.

மதிய உணவை சில நண்பர்களோடு உண்ண நேர்ந்தது. பேச்சு அவர்கள் குழந்தைகளின் புத்திசாலித் தனங்களைப் பற்றியும், விளையாட்டைப்பற்றியும் போய்க்கொண்டிருந்தது. மெதுவாக பாடத்திட்டதைப்பற்றியும் திரும்பியது. எல்லோருமே அவரவர் குழந்தைகளை ICSE/CBSE பாடத்திட்டத்தில்  தான் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் இரண்டாவது மொழியாக பொதுவில் ஹிந்தியை எடுத்துள்ளார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அப்பா, அம்மா இருவருமே ஹிந்தி படித்திருக்கவில்லை ஒரு சிலர் பிள்ளைகளுக்காக தாங்கள் படிப்பதாகவும் சிலர் தனி வகுப்பில் சேர்த்திருப்பதாகவும் சொன்னார்கள்.

இதில் தெலுங்கர், தமிழர், மலையாளி என கலவையாக எல்லா மாநிலத்தவரும் இருந்தனர். வீட்டில் அவரவர் தாய் மொழியில் தான் பேசுகிறார்களாம். ஆனால் இரண்டாம் மொழிப்பாடமாக தாய்மொழியை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது .  இதில் நாம் ஒத்துக்கொள்ள வேண்டிய ஒரு அம்சமும் இருக்கிறது. நம் மாநிலங்களில் உள்ள இது போன்ற பள்ளிகளில் அந்தந்த மாநில மொழியே பெரும்பாலும் இரண்டாவது மொழியாக இருக்கும். அந்த வகையில் மற்ற மாநிலத்தாருக்கு அதில் ஆட்சேபமும் அசௌகரியமும் இருக்க  வாய்ப்புண்டு.

ஆனாலும் இப்படியே போனால் நம் சந்ததியினர் அவரவர் தாய் மொழியில்  எழுதவோ படிக்கவோ தெரியாமல் பேச மட்டுமே தெரிந்தவராவர். இதுவே ஒரு மொழியின் அழிவின் ஆரம்பம் ஆகாதா? என் குழந்தைகளை எடுத்துகொண்டாலும் அவர்களின் வாசிப்பு முற்றிலும் ஆங்கிலத்திலேயே உள்ளது. பல தரப்பட்ட புத்தகங்களை வாசித்தாலும் அவை நம் தாய் மொழியில் இல்லை. இதில் மேலும் வருத்தம் என்னவென்றால் இருவருமே தமிழையே இரண்டாம் மொழிப்பாடமாக எடுத்தவர்கள்.

இன்றைய வணிக சூழலில் அவரவர் மாநிலங்களிலேயே வேலை செய்யும் வாய்ப்புக்கள் மிகவும் அரிது என்பதாலும், யாதும் ஊரே யாவரும் கேளீர் வாழ்வே மிகவும் சிறந்தது என்றாலும் எழுத்துக்களை தொலைக்கும் மொழியை நாம் எவ்வாறு காப்பது? அரிதாக அரிதாகி மறைந்து போன நம் எத்தனையோ குல/குடும்ப வழக்கங்களைப்போல நாம் நம் மொழியையும் தொலைத்து விடப்போகிறோமா? அந்நிய தேசங்களுக்குச் செல்லாமலேயே நாம் நம் மொழிக்கு அந்நியமாகிப்போகும் நிலைமையை எப்படி சரிசெய்யப் போகிறோம்??

இது போல இன்னும் சில கேள்விகள் உண்டு?......