Showing posts with label நெருப்பு - வாழ்வியல். Show all posts
Showing posts with label நெருப்பு - வாழ்வியல். Show all posts

Wednesday, July 16, 2008

கற்றுக்கொள்ளவும் சிலவுண்டு – நெருப்பிடமிருந்தும்















நெருப்பின் வசீகரம் என்றும் தவிர்க்கவும் தாங்கவும் முடியாததாய், அத்தனையும் கபளீகரிக்கும் அதன் நாவின் பெரும்பசி. திரைச்சீலை, புத்தகங்கள், நிழல்படங்கள், சன்னல் கம்பிகள், கண்ணாடி சட்டங்கள், சில சமயம் எதிராளியின் சந்தோஷங்கள் இவையனைத்தையும் உண்டு விட்டு களைப்பின்றி இன்னும் இன்னும் எனப்பரவும் தீயின் ஆக்கிரமிப்பை ஆச்சர்யத்தோடும் ஆதங்கத்தோடும் நம்மால் பார்க்க மட்டுமே முடியும்.

நாமதை அடித்து துரத்தியபின்னும் விட்டுச்செல்கின்ற அதன் சுவடுகளை காணமுடியாததாய் நம்கண்களை எப்போதும் மறைத்துக்கொண்டேயிருக்கும் நம் துக்கத்தின் கதவுகள். ஏனைனில் அதன் பெரும்பசியின் உணவு நம் சில வருட சேமிப்புக்களாயிருக்கும்.

பிடிவாதமாய் நாமறியமால் பற்றியிழுக்கும் மூர்க்கனின் இறுகிய கரமாய் கனமான ஆக்ரிதியோடு ஆளுயரத்திற்கு எழுந்து நிற்கும் தீயின் கனபரிமானம் கார்த்திகை பண்டிகையன்று கனன்று எரியும் கோயில் பனையடியின் சொக்கபானையையோ, எத்தனையோ ஒளிப்பேழைகளில் கண்டிருக்கும் தீயின் தாண்டவத்தையோ இல்லை இதுவரை நாம் கண்டிருக்கும் எந்த ஒரு முன்நினைவோடும் ஒப்புமை படுத்த முடியாததான தனித்துவமானது.


பலசமயம் பெரும்பாலான நிகழ்வுகளை வெறும் வாசித்தோ, கேட்டோ பழக்கப்பட்ட நம் உள்ளத்திற்கு நிதர்சனமாய் நம்முன் பரவும் உண்மையின் நிகழ்வு பல சமயம் நம் உள்முகத்தை காட்டிச்செல்ல மட்டுமின்றி நாம் கற்றுக்கொள்ளவும் சில தடயங்களை விட்டுச்செல்கிறது.

நெருப்பின் நாவிற்கு ருசி அருசி என்றேதுமில்லை அனைத்தும் ஒன்றுதான் மானுடம் கற்றுக்கொள்ளுமா இந்த பேதமற்ற தன்மையை…….