இது என்ன மெட்டீரியல்?? என்று பரவசமும் ஆர்வமுமாக அந்த காமாட்சி விக்கிரகத்தை நோக்கியபடி கேட்டேன் ஏனெனில் அது மரம் போலுமிருந்தது, உலோகம் போலவும் இருந்தது. "அது மெழுகு மாடல்ங்க" என்று சொன்ன நேரம் அவர் கையில் ஆஞ்சநேயர் தன்னை அழகுபடுத்திக் கொண்டிருந்தார். என்னால் கண்களை அந்த சிலையை விட்டு நகர்த்தவே முடியவில்லை. மீண்டும் கண் அகட்டாமல் பார்த்தபடி "ஓ இது மோல்டா இதுக்குள்ள தான் உலோகத்தை உருக்கி விடுவீங்களா?? என்ற என் அபத்தமான கேள்வியை கேட்டு பிரபு, அந்த சிற்பக்கூடத்தின் சிற்பி ஒரு நிமிடம் கையில் இருந்த ஆஞ்சநேயரை வைத்து விட்டு ஒரு சிலை எப்படி உருவாகிறது என்று விளக்கமாகச் சொல்லலானார்.
அது ஒரு சிலை உருவாகும் செயல்முறை மட்டுமல்ல என்று தோன்றியது.
It is a process/travel every soul goes thru in their given birth... Let me share the process with you.
கோவில்களிலோ, பூம்புகார் போன்ற பெரும் வர்த்தக நிலையங்களிலோ பெரிதும் சிறிதுமான உலோகச் சிலைகளைக் காணும் போது நம்முள் எழும் மிகுந்த குளிர்ச்சியான உணர்விற்கு நேர் எதிர்மறையான தட்ப வெப்பத்தில் இருந்தது உலோகங்களில் கடவுளர் மூர்த்தங்களைச் சிலை வடிக்கும் அந்தச் சிற்பக்கூடம்.
சுமார் ஆயிரம் சதுரடி ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் நடராஜர், பிள்ளையார், பெருமாள், விதம்விதமான அம்மன், வீரசிவாஜி, அப்பர் பெருமான், என அத்தனை பேரும் ஒப்பனைகளேதுமற்று முழுமையாகவோ முழுமைக்கு முந்திய சில படி நிலைகளிலோ அங்காங்கு ஆசுவாசப்பட்டுக்கொண்டிருந்தார்கள். நம்முள் பலரும் கடந்துக்கொண்டிருக்கும் வாழ்வே என்னுள் ஒப்புமையாகத் தோன்றியது.
தேன்மெழுகும், குங்கிலியமும், ஒரு எண்ணையும் சில விகிதங்களில் ஒன்றாகக் கலந்து சூடு செய்ய ஒரே குழம்பாகி பின் குளிர்ந்து கெட்டியான களிமண் போன்ற பதத்தில் கிடைப்பது தான் அந்த மெழுகு.
நல்ல கெட்டியான பதத்தில் சிலைகளின் உருவங்களைச் செய்வதற்கும், கொஞ்சம் இளகிய பதத்தில் அந்த உருவங்களின் மேல் இருக்கும் அணிகலன்கள், ஆடை அலங்காரங்கள் செய்வதற்குமாக இரண்டு விதமான தரங்களில் இந்த மெழுகை உற்பத்தி செய்துகொள்ளுகிறார்கள்.
மிகவும் பொதுவான அளவு, மீண்டும் மீண்டும் செய்யும் சிலைகள் என்றால் அதற்கென சில மோல்டுகள் வைத்துள்ளார்கள் அதில் சூடாக ஊற்றி கட்டி வைத்து பின் பிரிக்க மெழுகு மாதிரிகள் கிடைத்து விடுகிறது.
ஆனால் நான் கண்டது போல் காமாட்சியோ, அப்பர் பெருமானோ அத்தனை வழமையான தேவை இல்லை என்பதால் அதன் மாதிரி உருவப் படத்தை வைத்துக் கொண்டு கை, கால், முகம், கழுத்து அணிகலன்கள், திருவாச்சி, பீடம் என்று ஒவ்வொன்றாகச் செய்து ஒன்றிணைத்து தெய்வத்தை கண்முன் ஒருக்குகிறார்கள்.
இளகவும், உருகவும், கலக்கவும் தயாராய் இருக்கும் மனதுதானே தன் அடுத்த படிகளுக்கு நகர முடிகிறது.
இன்னும் வரும்.......
No comments:
Post a Comment