மூளையைவிட்டு அகலமறுக்கிறது அந்த இரண்டு வரிகள்।“அடுத்த முறை போவு்ம்போது முதல்லியே பணத்தை வாங்கிடுங்க” - நிகழ் உலகத்தின் நாயகன் கிருஷ்ணமூர்த்தியைப்போலவே நம்மையும் புரட்டிப்போட்டும் வரிகள்
மிகவும் எளிமையான மனிதர்கள், பிரச்சனைகள், நிகழ்வுகள் அதைச்சுற்றி ஓடும் எண்ண ஓட்டங்கள் படிக்க நேர்ந்த 90 கதைகளிலும் விரவிக்கிடந்த விதம் விதமான உணர்வுகள் படித்து முடிந்த இத்தனை நாட்களுக்குப்பிறகும் இதை எழுத முனையும் இந்த நேரத்தில் என்னுள் எழும்பி அலையடித்துக்கொண்டேயிருக்கிறது.
“மனுஷி “ அம்மா வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து அழுதாள், நிச்சயமாகச் செத்து போன தங்கைக்காக அல்ல அந்த அழுகை” என்று முடிக்கும் போது பெண்மனதின் பல பரிணமங்களை அதை வெளிப்படுத்த அவர்கள் தேர்ந்தெடுக்கும் உத்திகளை அதைச்சுற்றி நிகழும் மாற்றங்களை அது ஏற்படுத்தும் உணர்வுகளை படம் பிடித்துக்காட்டுகிறது.
அப்பாவு கணக்கில் 35 ருபாய் - இப்படித்தான் முடியும் என்று கதையோட்டத்தை ஆரம்பத்திலேயே யூகிக்க முடிந்தாலும் கடைசியில் கதையின் நாயகன் எழுந்து நடக்க ஆரம்பித்த நேரத்தில் நம் மனதிலும் வந்து அமர்ந்து கொள்ளும் அந்த உணர்ச்சிக்கு வார்த்தைகளில்லை.
சைக்கிள் - கதையில் நம்மை மிகச்சுலபமாக தனிமனித தன்மானதிற்கும் அவரது அபிலாஷைகளுக்குமான இடைவெளியை உணரச்செய்யும் வேளையில் வெகு நேர்த்தியாக நம்மை எந்த ஒரு விளிம்புகளுக்கும் ஒட்டாது வெளித்தள்ளிவிடுகிறார்.
பொதுவில சிறு்கதைத்தொகுப்புகளை படிக்க நேர்கையில் ஏற்படும் உணர்வுக்குழப்பங்கள் இந்த முறை என்னை பீடிக்கவில்லை. எல்லாக்கதைகளும் ஒன்றோடொன்று மிக மெல்லிய சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதை போன்றதோர் உணர்வுதான் எஞ்சியது. அதன் காரணம் பெரும்பாலும் நம்மைச்சுற்றி நிகழும் பதிவுகளை எந்த ஒரு தொடர்புமற்று கண்டுகொண்டிருக்கும் வெறும் வெளிப்பார்வைகளுக்குள் ஊடுருவியிருக்கும் காண்தன்மையின் வெளிபாடாகக்கூட இருக்கலாம்.
ஒவ்வொரு கதையாக விவரிக்க இன்னும் பாக்கியுள்ள 86 கதைகளை தனித்தனியாக எழுத முயலாததற்கான காரணம் கூட இதுவாக இருக்கலாம்.
படித்துப் பாருங்கள் தவறவிடக்கூடாத தொகுப்புகளில் இதுவும் ஒன்று என்பது என் எண்ணம்.
விடைபெறுதல் குறித்தான வார்த்தைகளை விதம்விதமாய் படைக்கத்துவங்கினேன் கூர்தீட்டியும் மழுக்கியும் வளைக்கவும் செய்தேன் குயவன் கை மண்பானை என வடிவம் கூடி வந்தன வார்த்தைகள் மிருதுவாய், தூறலாய், மிடுக்காய் அடுக்கடுக்காய் மலர்ந்து விழுந்தன தேன் தடவிய வார்த்த்தைகள் ஒவ்வொன்றாய் கையளிக்கையில் பொருத்தமாய் சென்று சேர்ந்த்தது
உன்முறை வந்தபோது உனக்கான ஓர் வார்த்தை என்னோடு இல்லாது போயிற்று தொலைந்த வார்த்தைகளை தேடும் திராணியற்று சிறிதே நிம்மதியோடு விடைபெறாமலே போகிறேன்.
எந்த ஒரு கட்டுக்குள்ளும் அடங்காது, எழுதத்தூண்டும் நாட்களில் எழுத நினைப்பதை சமரசங்களற்று எழுதிக்கொள்வதற்கும் அசை போடவேண்டியவற்றிலிருந்து சிலவற்றை உரக்க அசைபோட்டுக்கொள்வதற்கும் மட்டுமே நான் பயன்படுத்திய என் வலைப்பக்கத்தில் தமிழ்மணத்திற்காக நான் எழுத நேர்ந்த இந்த ஒரு வார காலங்கள் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை வியப்போடு நானே வேடிக்கை பார்க்க கிடைத்த சந்தர்ப்பம் என்று தான் சொல்ல வேண்டும்.
உற்சாகத்தோடு கூட வந்த தோழமைக்கும் அங்கீகரித்த தமிழ்மணத்திற்கும் நன்றி
பள்ளி முடிந்து வரும் மாலை வேளைகளுக்காக மிகவும் காத்திருந்த நாட்களுண்டு. மிகவும் கண்டிப்பான அம்மா 6 மணி விளக்கு வைப்பதற்குள் வீட்டிற்கு வரவேண்டும், ஒருவரது வீட்டிற்குள்ளும் சென்று விளையாடக்கூடாது, யார் வீட்டு வாசலிலும் அவர்களைக்கூப்பிட என்று மற்றொரு தோழியோடு காத்திருக்க கூடாது இப்படி பல பல நிபந்தனைகள் உண்டு, பெரும்பாலும் என் தோழிகள் என்னை விளையாடக்கூப்பிட வரத்தயங்குவார்கள் "உங்க அம்மா திட்டுவாங்க" "நீ பாதில போயிடுவ" "யாரையும் கூப்பிட வரமாட்டே" இப்படி அவர்களுக்கென காரணங்களும் இருந்தது.
இவைகளிலிருந்து தப்பிக்கும் நோக்கமா இல்லை தந்தையுடனான நெருக்கமா என காரணம் புரியாமலே மாலை வேளைகளில் அவரோடு எங்களூரில் இருந்த நூலகத்திற்கு சென்று விடுவேன். அந்த நூலகம் மிக வித்யாசமாக இருக்கும். மிக உயர்ந்த மேட்டில் மிகப்பெரிய மண்டபம், திருவிழா காலங்களில் சாமி வந்து இறங்கும் ஏழாம் திருநாள் மண்டபம் ஆகிவிடும், பின் எட்டாம் திருநாள் பச்சைசாத்தி கூட அங்கிருந்து தான் கிளம்பும். ஏழாம் திருநாள் நள்ளிரவில் ஒரு பக்கம் கச்சேரி நடக்கும் பந்தலடியில் மணிகள் குலுங்க குலுங்க மாலையில் சூட்டியிருந்த பூக்கள் பாதி வாடியிருக்க தீப்பந்த வெளிச்சத்தில் சாமி சப்பரம் அந்த உயர்ந்த மண்டப முகப்பில் நிற்கும் காட்சி இப்போது நினைத்தாலும் மனதிலிருந்து அகல மறுக்கிறது. ஆனால் அதுவே மறுநாள் முன் மதிய வேளையில் பச்சை சாத்தி அலங்காரத்திற்கு முன் போய் பார்க்கும் வேளயில் மனிதர்களின் அடர்த்தியை விட பூக்களின் மணத்தை விட, கால்கள் நசநசக்கும் நீரின் ஈரத்தைவிட மண்டபத்தின் ஒரு மூலையறையில் பூட்டி வைத்திருக்கும் புத்தகங்களே மிகப்பிரியமானதாய்த்தோன்றும். திருவிழா முடியும் வரை நூலகத்திற்கு விடுமுறை மீண்டும் திறக்கும் நாளுக்காக ஆவலோடு காத்திருப்போம்.
அந்த பால்ய காலங்களில் நான் கண்ட பத்திரிகைகளில் சிலவற்றைக்கூட இன்று என்னால் காண முடிவதில்லை. இரஷ்ய எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியது அந்த நூலகம் தான். "சோவியத் யூனியன்" என்றொரு பத்திரிகை அதில் மாதம் ஒரு கதைதான் வரும் மற்றபடி பெரும் பாலும் பத்தி எழுத்துக்களும் செய்திகளுமே இருக்கும் ஆனாலும் அந்தப்புத்தகத்தின் வசீகரம் அதீதமாயிருக்கும். கூடவே மஞ்சரி, கல்கண்டு, அந்தக்கால கலைமகள், இன்னும் தனிச்சுற்றுக்கென வந்த பல பத்திரிகைகளின் பெயர் மறந்து போயிற்று. ஆனாலும் அந்த பத்திரிகைகள் தந்த நெருக்கத்தை இடைப்பட்ட சில காலங்கள் இழந்திருந்தேன். வேலை, திருமணம், குழந்தைகள் என்று நகர் நோக்கி வந்த போது பொது இதழ்கள் மட்டுமே பத்திரிகைகள் என்றாயிற்று.
ஆனால் கடந்த 6 வருடங்களாக சிற்றிதழ்களின் அறிமுகம் என்னை என் பால்யத்திற்கு கொண்டு செல்கிறது என்று சொல்வதில் பிழையொன்றும் இல்லை. அதிலும் கடந்த 6 மாதங்களாக எனை மிகவும் கவர்ந்த "அகநாழிகை" குறித்த என் எண்ணங்ளை ஒரு தோழமையுடன் பகிர்ந்து கொள்வதைப்போலவே இங்கு பேச முற்படுகிறேன்.
மிகச்சிறந்த படைப்புக்களின் மிகச்சரியான கலவை. அதிகம் பொது இதழ்பரப்பில் அறியப்படாத ஆனால் காத்திரமான படைப்புக்களைத்தரும் கலைஞர்களின் படைப்புக்கள். தொடராய் வரும் ஒரு பகுதி, சமாதனத்தின் இசை - சுபின் மேத்தா ஒரு இசைக்கலைஞனின் பரிணாமத்தின் அகமும் புறமுமாய் கண்முன் நிறுத்தும் பகுதி உள்ளும் புறமுமாய் மனதைப் புரட்டிப்போடவைக்கும் பாத்திரங்களையும் மொழிக்கட்டமைப்புக்களையும் கொண்ட கதைகள் (இருளில் தொலைந்தவர்களின் துர்க்கனவுகள் - கே பாலமுருகன்) தேர்ந்தெடுத்த நேர்காணல்கள், அதிகம் அடைத்துக்கொள்ளாத விளம்பரங்கள், எல்வற்றிலும் மேலாக மிகவும் எளிமையான தலையங்கங்கள்.
சாதரணணின் நியாயங்களை எழுதிப்பார்க்கும் உத்திகளைக்கொண்ட அகநாழிகை வாசுதேவனின் எழுத்து இது வரை வந்த அத்தனை இதழ்களிலும் இடம் பிடித்திருக்கும் நேர்த்தியான அட்டைப்படச்சித்திரங்கள் என எல்லாவிதத்திலும் ஒரு சாமானியனின் முயற்சியை அசாதாரணமாக்கிகாட்டுகிறது.
ஆசிரியர் கவனத்துக்கு கொண்டு வரவேண்டிய விஷயம் ஒன்றும் உண்டு அது மிகச்சிறிய எழுத்துக்கள் பயணத்தின் போது படிக்க முடிவதில்லை (வயதாகிவிட்டதோ) அது போக என் குற்ற உணர்ச்சியும் ஒன்றுண்டு இந்த இதழுக்காக எனக்கும் சேர்த்து சந்தா செலுத்திய ஜ்யோவ்ராம் சுந்தருக்கு இன்னும் நான் திருப்பித்தராத பாக்கி.