Tuesday, July 21, 2015

மாறும் பார்வைகள்


இப்ப எதுக்கு இந்த ட்ரிப் அதுவும் எந்த தகவலும் இல்லாம, மாப்ள ஒன்னும் சொல்லலைங்கறதுக்காக  நீ  இப்படி  நினைச்சப்பல்லாம்  வண்டிய தனியே எடுத்துட்டு 5 மணி நேரம் ட்ரைவ்  பண்ணி  வரது  நல்லாவே இல்ல.. பசங்க பெரியவங்களா ஆயிட்டாங்க அவங்களும்  நாளைக்கு கேள்வி கேப்பாங்க - என்று  திண்ணையில் இருந்த சாக்கு படுதாவை இன்னமும் இன்னமும் என்று சுருட்டி அதற்குண்டான கயிறுகளில் முடிச்சிட்டபடி பேசிக்கொண்டிருந்தவனின் செய்கையில் இருந்த நேர்த்தியை  ரசித்த படி பார்த்துக் கொண்டிருந்தேன்  ஐம்பதின் ஆரம்பம் தானென்றாலும் கொஞ்சம் அதிகம் தளர்ந்தது போலிருந்தான்.

வெளிச்சமும் இருளும் கலந்து பரவியிருந்த அந்த திண்ணையின் முகப்பில் பாவியிருந்த கருங்கல் தளம் அந்த இடத்திற்கு இன்னமும் குளிர்ச்சியைத் தந்து கொண்டிருந்தது. ஒட்டடை அடிக்கப் படாமலிருந்த கம்பி அழிகளின் ஊடே தெரிந்த,  கோவில் மதிலில் அடித்திருந்த வெள்ளையும் காவியும் கொஞ்சம் நிறம் மாறியிருந்தது. மதிலின் மேல் பாகம் மட்டுமே இப்போது தெரிந்தது.  முன்பெல்லாம் பாதிக்கும் மேல் தெரியும்,  கோவில் கொடி ஏறும் பொழுது அம்மா பெரும்பாலும் இந்த திண்ணையில் இருந்து தான் பார்ப்பதுண்டு.  பாட்டியும் அப்பாவும் தான் கோவில் வாசலுச் சென்று கொடி ஏறியதும் கோவிலுக்குள் மட்டும் சுற்றி வரும் சீவிலிக்கு இரண்டு கதலிப் பழமும், நாலு  வெத்திலை ரெண்டு  பாக்கு வைத்த அர்ச்சனை தட்டை நெய்வைத்தியம் செய்துவிட்டு வருவார்கள்.  இப்போது எதிராத்து  அம்பி அண்ணா மாடி கட்டிவிட்டார் போல அதனால் தான் மதிலின் மேல்புறம் மட்டும் தெரிகிறது.  ஆனாலும் கொடி ஏறினால் தெரியும் என்றே தோன்றியது.

என்ன  நா பாட்டுக்கு பேசிக்கிட்டேயிருக்கேன் நீ என்ன யோசனைல இருக்க? என்றவனிடம் கிழக்க இருக்கற தோப்புக்கு தொழுவத்துலேர்ந்து உரம் வாங்கிப் போட்றேன்னியே போட்டீயா  என்றேன்? என்  கேள்வி போகும் திசையை அறிந்தவன் போல் ஆமா போட்டாச்சு என்றவன் அவசமாக “அப்புறம் நாளைக்கு எனக்கு கொஞ்சம் ஆபிஸ் விஷயமா மதுர வரைக்கும் போக வேண்டியிருக்கு, அதுக்காக  ஒரு ஆளப்பாக்கத்தான் கிளம்பிகிட்டிருந்தேன் பிச்சம்மா  நீ   வந்திருக்கன்னு சொன்னா  என்னடா சொல்லாம கொள்ளமா  வந்திருக்கியேன்னு ஓடி வந்தேன். இப்பம் என்ன விசயமா  வந்திருக்க??  மீண்டும் தொடங்கிய இடத்தில் வந்து நின்றான்.

எனக்குத் தெரியும் நான் எதற்காக வந்திருக்கிறேன் என்று அவனுக்கும்  தெரியும் என்று. என்னை விட ஒரு சில வயது மூத்தவனாய் இருக்கலாம் எத்தனை வயது என்று இது வரை கேட்டதில்லை. பள்ளியில் எனக்கு ஒரு செட் முந்தி அது மட்டும் தெரியும்.

பொண்ணு மீரா டிக்கட் புக் பண்ணிட்டாளாமா பேசினாளா? மாப்பிளயாத்துலேர்ந்து  எப்ப வரா? நிச்சயம் தனியா பண்ணனும்னு சொன்னியாம்? என்றவளிடம், , பாத்தியா  பிச்சம்மா அதையும் தான் சொல்லச் சொன்னா பாத்துக்கிடு.. அந்தப் பையனும் அடுத்த மாசக் கடசீலதான்  வாரகளாம் , மவளும் அப்பத்தான் வாரா. வந்தப் பொறவு சும்மா வீட்டுக்கு வந்துட்டு ஒரேதடியா கல்யாணத்தை வைச்சுப்பிடலாம்னு அவிய வீட்டுலயும்  சொல்லுதாவளாம் .. பிச்சமாளுக்கு அத்தனை ஒப்பில்ல,  ஆனா மவ திருப்பித் திருப்பிச் சொல்லப்போக வேற வளியில்லாம அர மனசா சரின்னு சொல்லியிருக்கா. ஓங்கிட்டையும் ஒரு வார்த்தை பேசனுமுன்னு சொன்னா. சாயங்காலம் கோயிலுக்கு வரும்போது வருவாளாக்கும்.  ச்சரி மதியம் என்ன சாப்ட்ட, ராத்திரிக்கு  அம்மணி மெஸ்ல சொல்லிட்டு போகட்டா என்றபடி கிளம்பத்தயாரானான்.

ஆனால் போக மாட்டான், என் அடுத்த செயல் திட்டம் என்னவென்று தெரியாத வரை அவன் போக மாட்டான். நான் கால்களை தழைவாக தொங்க விட்டபடி பக்கத்தில் இருந்த கை பேசியை எடுத்து. டயல் செய்தேன்.  ராஜு நாந்தான்... ம்ம் ஒரு குட்டி தூக்கம் போட்டேன்.  கொஞ்சம் மெயில்ஸ் பாத்தேன்.   இல்ல ஒன்னும் பிரச்சனை இல்ல அதான் அப்பவே சொன்னேனே  ரோடு போட்டுட்டான் அந்த  பேட்ச் கூட சரி பண்ணிட்டான் நல்லா வந்துட்டேன். நாளைக்கு ரெண்டு மணிக்கு மேல கிளம்பறேன் மேக்சிமம் ஏழு எட்டு மணிக்குள்ள வந்திடறேன்.. இல்ல  இருட்டறதுக்குள்ள டபுள் ரோட் தொட்டுடுவேன். கவலைப் படாதே. அப்புறம் வேற என்ன விஷயம். இங்கயா இங்க ஒன்னும் இல்ல மகராஜன் வந்திருக்காப்பல பேசிண்டிருக்கேன். என்னது அவன் பொண்ணு கல்யாணமா  ஆமா இப்பத்தான் அதைப் பத்தித்தான் பேசிண்டிருந்தோம். சொன்னான் அடுத்த மாசக் கடைசீல  வந்தோன்ன கல்யாணம்  .. ஆமாமா டைம் இருக்கு.  வேற .. வேற ஒன்னும் இல்ல நா அப்பறமா  போன் பண்றேன்  யூ டேக் கேர். என்ற படி போனை வைத்தேன்,

கோவிலுக்கு போவதற்காக ஒன்றிரண்டு பேர் வாசல் தாண்டி போவது தெரிந்தது.  திறந்திருக்கும் கதவையும் ஏற்றியிருக்கும் அழி படுதாவையும் பார்த்தபின் "யாரு விசாலியா" வந்திருக்கயா, வண்டியப் பாத்தேன் நீயாத்தான் இருக்கும்னு நினைச்சிண்டேன். இருப்பியா, ஆத்துல எல்லாரும் சவுக்கியமா, வந்திருக்காளா என்றபடி வாசல்படி ஏறினாள் பாகிபெரீம்மாவின் மகள் . அவள் ஒன்றும் சொந்தப் பெரியாம்மா இல்லை ஆனால்  இந்த தெருவில் எல்லோர்க்கும் அவள் பாகிபெரீம்மா தான்.  “இல்ல ஜெயா நா மட்டுந்தான் வந்தேன் நாளைக்கு திர்நேலில ஒரு வேல இருக்கு முடிச்சுட்டு அப்படியே கிளம்ப வேண்டிதான்” என்றதும் “ஓ சரி நான் கோவிலுக்கு போய்ட்டு வந்துர்றேன் அப்படியே சந்தனமாரியம்மன் கோவிலுக்கும் போயிட்டுத்தான் வருவேன். ராத்திரி தோசை குடுத்து விடட்டா ஒன் ஒருத்திக்கு ஒன்னும் பண்ணின்டிருக்காதே என்று  சொன்னாள்”. “வேண்டாம் ஜெயா இப்பத்தான் மகராஜன் அம்மணிக்காட்ட சொல்லிட்டுப்போறேன்னு சொல்லின்டிருக்காப்ல உனக்கெதுக்கு சிரமம் நான் அங்க பாத்துக்கறேன்” என்றதும்  செயற்கையாக வந்த பதட்டத்துடன் ஓ அவர் வந்திருக்காரா என்றபடி தலையை திருப்பி பார்த்துவிட்டு சரி வேணும்னா சொல்லு என்று முகத்தில் ஒரு அசுயை படர கிளம்பிச்சென்றாள்

 இப்ப என்ன திர்நேலில வேல, நான் மதுர போகணும் நான் வரல என்றவனிடம் ஒரு அரமண்நேரந்தான்  எங்கூட வா மகா. நாளையோட பரோல் முடியுது அடுத்த பரோல்ல அவன் வரதுக்குள்ள அநேகமா நாங்க பெரியவனோட யூ.எஸ் போனாலும் போயிடுவோம். அப்பறம் எப்போ இந்தியான்னு  தெரியலை.  நானும் கீழத் தோப்புக்கு அவன் அப்பாம்மா வீட்டுக்கு வந்தா பாக்கலாம்னு நினைச்சேன் ஆனா தளவாய் சொன்னான் இந்த தடவை இங்க வரலையாம் அவன் அண்ண வீட்டோட இருந்துட்டானம். அதான் திர்நேலிக்குப் போலாம்னு நினைச்சேன். வாயேன். குரல் சிறிது இறஞ்சியது  

சாலம் நீ என்தாலிய அறுக்க கேட்டியா? மனுசன கோட்டிக்காரனாக்குத இப்பம் எதுக்கு அவனை பாக்கணும், அவன் அவன் பொண்ட்டாட்டிய போட்டுட்டு ஆயுள்ள வாங்கிட்டு பரோல்ல வந்திருக்கான் நீ இப்படி அவென் வரும்போதெல்லாம் பாக்குது எதுக்கு. என்று முனுமுனுக்கத்துவங்கிய நேரம் அவன் மனைவி பிச்சம்மா படியேறினாள்.

 யக்கா எப்படிருக்கிய, நல்லாருக்கியளா, என்னத்த சொல்ல இன்னமூம்  நமக்கு அக்ரஹாரத்துக்குள்ள நொளஞ்சா காலு மடங்குது, ஆனா  இந்தப் புள்ள எப்படித்தான் ஐயிரு வீட்டுப் பையன கட்டிகிட்டு குடுத்தனம் நடத்தப் போகுதே எனக்கொன்னும் புரியலக்கா.. இளம்பிள்ள பயோம் அறியாது ஆனா இந்தா நீங்களுமில்ல அவுகளுக்கு ஏத்துட்டு வாரிய, அடுத்த மாசக்கடைசில வாராகளாம், வந்து பேசிட்டு நேர பதிநேஞ்ச்சாம் நேத்து கல்யாணத்துக்கு மண்டபத்துக்கு வந்திருதாகளாம். அன்னைக்கு என்னாடான்னா மீரா போனப்போட்டு அம்மா சாப்பாடு உட்லேன்சுல சொல்லியாச்சு நீங்க ஒன்னும் ஏற்பாடு பண்ண வேணாம்னு சொல்லுது, இவியளும் ச்சரி ச்சரின்னுதாவ உட்லேன்ச்சுலன்னா கறிச் சாப்பாடு கிடையாதுல்லா நம்ம சாதி சன்னத்துக்கு என்ன சொல்லுதுடின்னு கேட்டா பின்ன ஒரு நாளு நம்ம வீட்டுல விருந்து வச்சிகிடுன்னு சொல்லுதா. இவரும் மண்டைய ஆட்டுதாரு.  மனுசங்க என்ன சாப்பாட்டுக்கா படியேருதாவ எனக்கு மிடியல சாலக்கா என்று திண்ணையின் ஓரத்தில் காலை மடக்கி உட்கார்ந்தாள். கையில் இருந்த என்னைக் கிண்ணத்தை பக்கத்தில் வைத்தபடி பிள்ளைய நல்லாருக்காவளா வரல்லியாக்கும் ஆனா மீரா சொல்லுதா ஒங்க மவனும் கலியாணத்துக்கு வருவாகளாமில்ல.  ஏதோ ஒரு ஊரு புள்ளக ஒண்ணா தூர  தேசத்துல இருக்குங்க ஒன்ன ஒன்னு பாத்திகிடுதுங்கன்னு சந்தோசமாத்தான் இருக்கு ஆனா இப்படி உங்க மவனோட கூட்டுக்காரனை கட்டிக்கிடுவேன்னு சொன்னப்ப எனக்கு ஆடிப் போச்சு கேட்டியளா? இவுக என்னமோ ரெடியாத் தான் இருந்தாக போல ஒரு வேள உங்கள சம்பந்த்தகார ஆக்கிப் புடலாம்னு நினைச்சாவளோ என்னமோ என்று சிரித்தாள்.

 நானும் கூடச் சேர்ந்து சிரித்தபடி எனக்கு இதுக்கும் மேல விஷயம் இருக்கு பிச்சம்மா.. நீயாவது வேற ஜாதி மாப்பிளைய பொண்ணு பிடிச்சிட்டான்னு பேசற யாரு கண்டா எம் பையன் வேற நாட்டுப் பொண்ணயே கூட்டிண்டு வருவானோ என்னமோ தெரியலை நான் எதுக்கும் ரெடியாத்தான் இருக்கேன் என்று சிரித்தேன்.  யக்கா நீங்கதான் அந்தக் காலத்துலயே உங்க வீட்டுக் காரவுகள லவ் பண்ணித்தான் கட்டிகிட்டிய என்ன.... சாதி சனம் ஒண்ணா போச்சு அம்புட்டுதான். இப்ப இவுக லெவலுக்கு இவுக பண்ணுதாக நீங்களும்  நாயம்னு தான் சொல்லுதீக இந்த மனுசனுமில்லா சரின்னுதாக என்று சிரித்தாள்.

 ஆனா பாத்திகிடுங்க நேத்துகூட மாப்ள வீட்டுல இவுக பேசுனாக நாளைக்கு ஒரு சோலியா கூட்டுக்காரனப் பாக்க திர்நேலி வருவேன் அப்பம் விட்டுக்கு வரேன்னு சொன்னவக. குரலைத் தணித்தபடி அதான் அந்த கிழக்குத் தோப்பு செகதீசன் அண்ணாச்சி.. பொஞ்சாதிய வெட்டிபுட்டு ஜெயில்ல இருக்காவல்லா அவிய வந்திருக்காவளாம் அவியள பாக்கப் போவாக.. இப்ப என்னடான்னா மதுரைக்கு போரேங்காவ மாப்ள வூட்ல என்ன நினைச்சுக்கிடுவாக சொல்லுங்க . என்று அவளரியாமல் ஒரு உண்மையை,  நான் உணர்ந்திருந்த ஒரு விஷயத்தை போட்டு உடைத்தாள்.

 ஆமா உனக்கு இவியளக் கண்டா எங்கம்மைய  கண்டயது போல என்னப்பத்தி வளக்கு வைக்காட்டி முடியாதே சோலியப் பாப்பியா என்று மகராஜன் அவளை அடக்கியபடி என்னைப் பார்த்த பார்வையில் ஒரு சின்ன குற்ற போதம்  தெரிந்தது.   விடு பிச்சம்மா எனக்கும் நாளைக்கு திர்நேலில ஒரு வேலையிருக்கு ஆதித்யாவும் சொன்னான் அம்மா நீயும் எதுக்கும் சூர்யாவாத்துக்குப் போய் மீரா அப்பா அம்மா சைட்ல கல்யாணத்துல நீயும் அப்பாவும்   நிப்பிங்கன்னு பேசிட்டு வந்திடுன்னு சொன்னான். மீராக்கும் சூர்யாக்கும் பெரிய சப்போர்ட்டா இருக்கும்னு சொன்னான். அதனால விடு நாளைக்கு நானும் அவங்களை பாத்து பேசிட்டு வரேன் இவனும் வருவான்.  நம்ம வீட்டுக்கு வந்து போறவங்க தான் ஆனா கல்யாணம்னு வந்துட்டா நாம போய் பாக்கறதுல அவங்களுக்கு ஒரு மரியாதை. என்று சொன்னதும் சரிக்கா போயிட்டு வருவியாள இல்ல,, என்று இழுத்தவளிடம் இல்ல அப்படியே போறேன். அடுத்தாப்ல கல்யாணத்துல பாக்கலாம் என்றதும் ச்சரி நான் வாரேன் கோயில்ல மணி அடிச்சிட்டாவ என்று கிளம்பினாள்.

 உனக்கு நான் வருவேன் என்று தெரியும், அவனைப் பார்க்க கூப்பிடுவேன் என்று தெரியும், அவனிடமும் அதற்கான ஆயத்தம் செய்திருப்பாய் என்றும் தெரியும் ஆனாலும் என் முன் நாடகம் ஆடுவாய் அதுவும் எனக்குத் தெரியும்.

  28 ஆண்டு கால மண வாழ்க்கையில் கிடைத்திருக்கும் அத்தனை சந்தோஷங்களும் பிரியங்களும் சுதந்திரங்களும் மட்டும் காதலில்லை. மனைவியை ஆத்திரத்தில் கொன்று விட்டு ஆயுள் அனுபவிக்கும் அவனோடும், என்னைப் போலவே  பெண்ணை  வளர்த்து இன்று அவள் மனம் போல் திருமணத்திற்கு சம்மதித்து நிற்கும் உன்னோடும் உள்ளதும் காதல் தான்.  அன்று சொல்ல முடியாத கட்டுக்களில் கட்டுண்டு கிடந்த நாம் இன்று இளைய தலைமுறைக்கு  ஆதரவு தருவதன் முலம் நம்  பதின்மத்தை  மீட்டெடுத்துக் கொள்கிறோம்.

 காதல் என்பது வெறும் கல்யாணமோ காமமோ இல்லை.  இது புரியாமலோ  இல்லை புரிந்தும் காண்பித்துக் கொள்ளாமல் நம்மை அங்கீகரித்தபடி நம்மோடு வாழும் இணை நமக்கு கிடைத்த பெரும் வரம் என்று இலக்கியமாய் தோன்றிய வரிகளை மனதோடு முழுங்கி விட்டு

 சரி காலைல ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிடலாம் அப்பத்தான் அங்கேர்ந்து சீக்கிரம் கிளம்ப முடியும். நேரத்தோட ஊருக்குப் போகணும்  இல்லேன்னா ராஜு கவலைப் படுவார் என்றவளிடம். சரி ரெடியாயிடறேன் என்றபடி கலைந்து நடந்தான்.


இதுவும் காதல்தான்.

 

 

 

 

 

 

 


 

 

Sunday, July 5, 2015

இறுதியில் தலைப்பு வரும் ஒரு கதை - சிறு கதை


அவளை எங்கேயோ பார்த்தது போல் இருந்தது. ஒரு சிலருக்கே அப்படி கூந்தல் அமையும் நெளி நெளியாக கொஞ்சம் முரட்டுத்தனம் கலந்த கூந்தல். அதில் சிறிதே சால்ட் அண்ட் பெப்பர் லுக் வந்திருந்தது. அந்த பெரிய இரப்பைகள் கொண்ட அகண்ட விழிகள் இந்த வயதிலும் அவளை துறு துறுவென காட்டிக்கொண்டிருந்தது. அகண்ட இடுப்பும் சற்றே விகிதாசாரம் குறைந்த தோள்களும் கொஞ்சம் அந்நியமாகத் தெரிந்து தயக்கத்தை தந்தது.
 
ஈரக்கையை புடவைத் தலைப்பில் ஒற்றியபடி என்னைத் தாண்டி இரு மேசைகளுக்கு அப்பால் இருந்த குடும்பத்தோடு ஒன்றிக் கொண்டாள்.

இப்போ அந்த மேசையில் இருந்த ஆணின் முறை போலும் நல்ல டெர்லின் பேண்ட் பார்த்தவுடன் டெய்லர் கடை பிராண்ட் ஸ்லிப் மட்டும் தான் தெரியவில்லை மத்தபடி ரெடிமேட் இல்லை எனத்
தெளிவாகத் தெரிந்தது. மேட்சாக பெரிய பெரிய கட்டம் போட்டு முழங்கை வர நீண்டிருந்த அரைக்கை சட்டை, கால்களில் தோல் செருப்பு பாணியில் வார் வைத்த செருப்பு, கொஞ்சம் தடிமனான பிரேம் போட்ட கருப்புக் கண்ணாடியும் முன் வழுக்கையும் சொன்னது இன்னும் ஒன்றிரெண்டு வருடங்களில் பணி ஓய்வு பெற காத்திருக்கும் அரசு ஊழியர் என. சற்றே கால் அகட்டி நின்று கொஞ்சம் அசைந்து சரி செய்தபடி என்னைக் கடந்து போய் கை கழுவி வந்தார். மகனும் மகளுமாய் இருக்கும் போல அவரவர் கை பேசியில் ஆழ்ந்து நோக்கிய படி இருந்தார்கள். மாமியார் போலும் ஒரு வயதானாவர் "எனக்கு ரெண்டு இட்லி சொல்லு போரும், காப்பியெல்லாம் வேண்டாம், ஆத்துல போய் மோரக் குடிச்சிக்கறேன்" என்று பிறந்த குடியை பறைசாற்றிக் கொண்டிருந்தாள்.

இன்னும் நான் இவளை எங்கே பார்த்திருக்கிறேன் என்று யோசித்தபடி தட்டில் இருக்கும் விருதுநகர் பரோட்டோவோடு சண்டையிட்டுக்கொண்டிருந்தேன்.

எல்லோருக்கும் அவரவர் சொன்னவை வந்ததும் அவள் ஏதோ வீட்டில் விளம்பித் தருவது போல் ஒவ்வொருவருக்கும் செர்வ் பண்ண ஆரம்பித்தாள்.

அப்போது தான் அவள் கணவர் அகிலா அந்த தேங்கா சட்னியை போடு என்று சற்று உரத்த குரலில் சொன்னதும் எனக்கு அடிச்சது ப்ளாஷ்....

 ஆஹா இது பாரு சித்தி பொண்ணு அகிலா.... அந்தக்காலத்துல நாங்களெல்லாம் படிய வாரி, ரிப்பன் கட்டின ரெட்டைப் பின்னலும் அரை / முழுப் பாவாடையோடு இருக்கையில் முதன் முதலில் சுடிதார் போட்டு முரட்டுக் குழல் பறக்க, காதில் பெரிய வளையங்களோடு நெய்வேலியில் இருந்து வரும் அகிலா.

பாரு - சித்திதான் ஆனால் அம்மாவின் சொந்த தங்கையோ உறவோ இல்லை சமவயதுத்தோழி, அடுத்தடுத்த வீட்டில் ஆறுமங்கலத்து அக்ரஹாரத்தில் வளர்ந்தவர்கள்.

 பாரு சித்தி வந்ததை எனக்கு சுப்பு தான் வந்து ரகசியமாய் சொல்லுவான். நானும் அம்மாவிடம் ஓடிப்போய் சொன்னதும் அடுத்த வார்த்தை அந்தக் கடங்காரனும் வந்திருக்கானா?? என்பதாகத்தான் இருக்கும். அது சித்தப்பாவைத்தான் என்று சொல்லாமலே தெரிந்திருக்கும் தானே. அவர் பெயர் ஈஸ்வர மூர்த்தி ஆனாலும் ஒரு முறை கூட நான் சித்தப்பா என்று அழைப்பதற்கு அனுமதிக்கப் பட்டதில்லை.

 நான்கு தெரு தள்ளி, பிள்ளைமார் தெருவிலிருக்கும் சித்தப்பாவின் அண்ணா வீட்டிற்குத்தான் அவர்கள் வருவார்கள். வந்து இரண்டு மூன்று நாள் கழித்து பாரு சித்தி மட்டும் ஒரு நடு மதிய வேளையில் சாஸ்தாங்கோவிலைச் சுத்திக்கொண்டு கொல்லைப் புறமாக பதட்டத்தோடு அம்மாவைப் பார்க்க வருவாள்.

 அம்மா அவளைக் கூட்டிக் கொண்டு கிணத்தடிக்கு போய் விடுவாள் இருவரும் ரகசியமாக வெகு நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். கடைசியில் சித்தி கிளம்பும் போது கண்ணும் முகமும் சிவந்து அத்தனை நேரம் அவள் அழுதிருப்பது நன்றாகத் தெரியும்.

நாங்கள் அம்மாவுக்கு தெரிந்து பாதி தெரியாது மீதி அகிலாவையும் அவள் அக்காவையும் பார்க்கப் போவோம். சுப்புவும், பரமனும் தான் எங்களுக்கு அந்தக் கடங்காரன் அதாவது அவர்கள் சித்தப்பா வீட்டில் இல்லாத சமயம் எதுவென சொல்லிக் கூட்டிச் செல்வார்கள்.

 நாங்கள் தாயமோ இல்லை பல்லாங்குழியோ விளையாடி விட்டு நெய்வேலி டவுன் ஷிப் கதைகளை ஆவென வாய் பிளந்து கேட்டு விட்டு வெளியேறும் போது சில சமயம் வீட்டு வாசலில் அவர் ஈசிச்சேரில் சாய்ந்த படி படுத்திருப்பார். என்னைக் கண்டதும் அடர்த்தியான இணைந்த புருவம் ஏறி இறங்க இங்க வா எனக் கூப்பிடுவார். நானும் குறுகுறுப்போடு போய் நிற்கையில் எனக்குப் பின்னால் பாரு சித்தியின் பதட்டமான கண்கள் முதுகை துளைக்கும்.

 ஆனால் அவர் என்னமோ மிகவும் வாஞ்சையோடு ஒரு தகப்பனுக்கிருக்கும் ப்ரியத்தோடு ஏதாவது கேட்பார் நானும் பதட்டத்தோடு பதில் சொல்லிவிட்டு விட்டால் போதும் என்று ஓடி விடுவேன்.

இதெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான் பிறகு அண்ணனுக்கும் தம்பிக்கும் நடந்த சொத்து பிரச்சனையில் அவர்கள் எங்கள் ஊருக்கு வருவது அறவே நின்று போனது. அகிலா வெறும் பெயராகிப் போனாள்.

 வளர்ந்து சில காலங்களில் வர்க்கப் பிரிவினைகள் புரிய ஆரம்பித்த காலத்தில் புரிந்து கொண்டேன் பாரு சித்தி வேற்று ஜாதிக்காரரான பரமனின் சித்தப்பாவை காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டாள் என்றும் சித்தப்பா கொஞ்சம் அளவுக்கு அதிகமான முன் கோபி என்றும்.

 கிட்டத்தட்ட 36 வருடங்களுக்குப் பிறகு இன்று தான் அகிலாவைப் பார்க்கிறேன்.

 அதற்குள் அவர்கள் சாப்பிட்டு ஒவ்வொருவராக கை கழுவ கடைசியாகச் சென்ற அகிலாவை கிட்டத்தட்ட துரத்திய படி சென்று வாஷ்பேசினில் பிடித்து விட்டேன்.

பரஸ்பர பரிமாற்றத்தில் அவள் ஒன்றும் என்னைக் கண்டு என்னைப் போல் எக்ஸைட் ஆகவில்லை என்பது நன்றாகப் புரிந்த போதும் என் ஆர்வம் விடாது கேள்வி கேட்டது.

 அக்கா என்ன பண்ரா?? அக்காவை அம்மாவோட தம்பி சேச்சா மாமா மன்னியோட ஒன்னு விட்ட தங்க பையனுக்கு குடுத்திருக்கு. அம்மா மாமா கால்ல கைல விழுந்து எப்படியோ சம்மதம் வாங்கி பண்ணிக் குடுத்திட்டா. இவாளும் நம்மவாதான் அக்காவோட புக்காத்துக்கு தூரத்து ஒறவு, கொஞ்சம் வயசு வித்யாசம் ஜாஸ்தி ஆனாலும் அம்மா நம்மவாளா இருக்கணும்னு பிடிவாதமா இந்த இடத்தையே முடிச்சுட்டா. அப்பா காலம் ஆயிடுத்து அம்மா போய் இப்பத்தான் ரெண்டு வருஷம் ஆச்சு.

ஏதோ போயிண்டிருக்கு நான் இப்போ கடலூர்ல பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா இருக்கேன், அவர் 2016 ல ரிடையர்ட் ஆகிடுவார். பொண்ணுக்கு இங்க டி.சி.எஸ் ல கேம்பஸ்ல கிடைச்சிருக்கு அதனால சென்னைல வீடு பாத்து வைச்சிருக்கோம். அவரும் ரிடையர்ட் ஆனோன்ன இங்கயே வந்துட வேண்டியது தான்.

உங்கிட்ட சொல்றதுக்கென்ன எங்க அம்மா மாத்து ஜாதில கல்யாணம் பண்ணிண்டு இங்கயும் இல்லாம அங்கயும் இல்லாம எவ்ளோ அல்லாடினா, எத்தனை கஷ்டப்பட்டு எங்களுக்கு நம்மதுல கல்யாணம் பண்ணினா...

இதெல்லாம் இந்தப் பொண்ணுக்குப் புரியலை..கூட வேல பாக்கறானாம், ஏதோ இந்திக்காரனை பண்ணிப்பேன்னு தல கீழ நிக்கறது எனக்கு என்ன பண்றதுன்னே புரியல என்று நீட்டமாகப் பேசிக் கொண்டே போனாள்.

எனக்கு கண்முன் அடர்த்தியான இணைந்த புருவங்களைக் கொண்ட கொஞ்சம் முன்கோபியான சித்தப்பா முகமும், அழுது சிவந்த அம்மாவின் தோழி பாருவின் முகமும் அவர்களது செத்துப் போன காதலும் கண்ணில் இன்னமும் வந்து கொண்டேயிருக்கிறது.

ஒரு இறந்தகால காதல் கதை இத்தோடு முடிந்தது.

 

Thursday, May 21, 2015

முரண் உணர்வுகள் - முகமூடிக்கவிதைகள்

தர்க்கங்களற்று சிறு குழந்தையாய்
இருந்திருக்கலாம் - அல்லாது
குழந்தமையை தொலைக்காது
உண்டு உறங்கி களித்து அன்பு செய்து
வாழ்ந்திருந்திருக்கலாம் - நாமோ

அத்தனையும் தொலைத்து விட்டு
நிணமும் இரணமும் மனதில் ஏந்திய மாக்களாய் வாழ தலைப் பட்டுவிட்டோம்...இங்கனமே வாழ்ந்து வீழ்வோமா இல்லை
தெளிந்து விலகுவோமா..

தர்க்கங்களின் கரம் பற்றி நாளும் நடக்கிறேன் வாழ்வின் முரண்களை உணர்ந்த்படி !!!

Tuesday, May 19, 2015

அல்சைமர்

வெகு ஆழத்தில் சிக்கியிருக்கும் சிக்கலான ஒரு நூல் கண்டின் ஒரு முனை மட்டும் அவ்வப்போது வெளிவருகிறது.
கூடவே சிடுக்கான நினைவுகளையும் அள்ளி எடுத்தபடி இத்தனை வருடம் உள்ளூரிய உணர்வுக்குவியலுடன் ரணமாய் நிணமாய் வெளிக்கிடும் நிமிடங்களில் நம் காதுகளை விட மனமே அதி வேகமாய் செயல் படுகிறது.
சொற்களை தாண்டி உள்ளிருக்கும் முதிய மனத்தின் குகை இருட்டு வாழ்வில் நமக்கு எதையெதையோ சொல்லித் தருகிறது.

இன்று பௌர்ணமி, கூடவே சந்திர கிரஹணம். உடலில் மனதில் ஏற்பட்ட மாற்றங்களை உற்று கவனிக்க முடிந்தது. சுற்றிலும் இருக்கும் மனிதர்களை காணும் பொழுது ஒரு சிறிய இயல்பின்மை நூலிலும் மெல்லிய கோடாய் பரவியிருப்பது போல் தோன்றியது. அதிக வெய்யில், வெக்கை ஜாஸ்தி என்று ஆயிரம் காரணம் சொல்லிகொள்ள இருந்ததுதான்.
மேலும் இது வெறும் என் தோன்றலாய்க்கூட இருக்கலாம்தான்