எதையும் பற்றிக்கொள்ளாததோர் அடர் வெளியில் மனம் எளிதில் புகுந்து கொள்கிறது. கூடவே கனம் சேர்க்கிறது சுட்டெரிக்கத்துவங்கியிருக்கும் வெயிலும் அதோனோடு சேர்ந்து துவங்கும் வழமையான பழக்க வழக்கங்களிலிருந்து மாறுபடும் பண்பும்.
உடையும், உணவும், கூடவே உறங்கும் பொழுதுகளும் தன்மைகளும் கூட இந்த வேனலின் பொருட்டு மாறிக்கொண்டிருக்கிறது. மிகவும் உற்றுநோக்கினால் ஒரு மெலிதான வன்முறையும் தனிமையும் எல்லோரிடமும் படர்வதைக்கூட உணர முடிகிறது. உள்ளும் புறமும் வியர்வையோடு ஒரு சிறு அலுப்பும் கூடவே ஒரு எதிர்ப்புணர்வும் ஒட்டிக்கொள்கிறது,
இத்தனையும் கொண்டு வரும் வேனல், எல்லோர்க்கும் ஒன்றேயான மனநிலையைத்தானா தருகிறது? குளிர்சாதன, காற்றாடி வசதிகளற்று நடைமேடைகளிலுறங்கும் அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வில் வேனல் எத்தகைய மாற்றங்களைக் கொணர்கிறது. அதைவிடவும் நாடோடிகளின் வெயில் எங்கணமிருக்கும். இந்தக்கேள்வி என்னுள் எழும் வேளையில் நானும் ஒரு குளிர்சாதனப்பெட்டிக்கு மிக அருகாமையிலிருந்தாலும் கூட நாடோடி வாழ்வுக்கான விழைதலை தவிர்க்க முடியவில்லை.
ஒரு மாற்று உடையும், சிறிதளவு பணமும் வாழ்வதற்குண்டான மனநிலையையும் மட்டும் கைக்கொண்டு ஊர்களைக்கடந்து செல்லும் நாடோடியின் வாழ்வில் வெயிலும் மழையும் குளிரும் செய்யும் மாற்றங்கள் என்னவாயிருக்கும். கையளவு சிலேட்டில் கல்குச்சி கொண்டு சிறு வீடு கட்டி கற்பனையில் பொங்கலிட்டு திருவிழா முதல் திருமணம் வரை செய்து முடிக்கும் குழந்தமையின் மனநிலையில் மட்டுமே யோசிக்க முடிகிறது இருப்பை விட்டு அதிக பட்சம் 50 மைல்கள் கூட தனித்து நடந்திராத கால்களுக்கு.
பறவைகளின் இடமாற்றம் போலும் ஒரு நாடோடியினால் குளிர் வெய்யில் பிரதேசங்களை இந்தந்த காலகட்டங்களில் தான் கடந்து செல்ல வேண்டுமெனும் கணக்குகளை உண்டாக்கிக்கொள்ள இயலுமா? அல்லது எதையும் எதிர்கொள்ளும் மனநிலைக்குச்சென்ற பின்பான பிரயாணங்களில் இத்தகைய முன்னேற்பாடுகளைச் செய்யும் எண்ணம் தோன்றாது போகுமா?
இதை இப்படித்தான் செய்யவேண்டும், இந்தந்த வார்த்தைகளைத்தான் பயன்படுத்த வேண்டும், இங்கு சென்றால் அந்த வழியை அடையலாம், இப்படிப்போட்டால் அப்படி எடுக்கலாம், இவரைப்பிடித்தால் அவரோடு நெருங்கலாம், அதை அடைய இதைப்பற்றிக்கொள்ளலாம என்ற எந்த ஒரு செயல்திட்டங்களும் அன்றி அன்றன்றைய நாட்களோடும், நிமிடங்களோடு வாழும் மனநிலையைக்கொள்வது கூட நாடோடியின் வெயிலாகத்தான் இருக்க முடியுமல்லவா?
நடந்து செல்வதென்பதும் கடந்து செல்வதென்பதும் வெறும் வழிகளையும் தூரங்களையும் மட்டுமல்லாது வாழ்க்கையையும் அதைச்சார்ந்த மனித மனங்களையும் தானே, நாடோடியின் வெயிலைப்போல...
சில சமயம் எதுவும் வேண்டாமென ஓடிவிடத்தான் தோன்றுகிறது பிறகெங்கே என்ற கேள்விகளுக்கான பதிலொன்றும் தெரியாததால் மட்டுமே இருப்பு என்பது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
கேள்விகள் தொலைந்துபோவதின் நிகழ்வுக்களுக்கான நாளை எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம் மீளமுடியாது தொலைந்து போகாலமென நாட்களை தள்ளிக்கொண்டும் இருக்கிறோம் தெரிந்தும் தெரியாமலும்...
சப்தங்களை வெறும் ஒலிகளாய் உணர்வைதைக்காட்டிலும் அதனோடுடனான உருவங்களோடு உருவகப்படுத்திக்கொள்வது பால்யத்திலிருந்து நாம் கற்றுக்கொண்டவைதானே. தோத்தோ சொல்லு, காக்கா சொல்லு, ம்ம்மே.. எது கத்தும், ம்ம்ம்மாஆஆ எது கத்தும் இப்படி ஆரம்பித்தது தானே நம் ஒலிவாங்கியின் பயன்பாடுகள்.
மதியம் பள்ளி இடைவேளையை உணர்த்தும் மணிச்சத்தமும், அதனிடையே ஒலிக்கும் ஐஸ் வண்டிக்காரனின் சத்தமும் உணர்த்தியது பெரும் விடுதலையை அல்லவா.
மாலை வேளைகளை உணர்த்தும் சோன்பப்டிக்காரனின் வண்டிச்சத்தமும் கூடவே ஒலிக்கும் கோவில் மணிச்சத்தமும் உணர்த்துவது அன்றைய வீட்டுப்பாடங்களையோ அல்லது அம்மாவின் கட்டளைக்கு பயந்து நாம் கூட்டில் அடையவேண்டிய நேரத்தை உணர்த்தும் கட்டுப்பாட்டின் சரடுகளை அல்லவா.
அதுவே பதின்மங்களில் நமக்கு மிகவும் நெருக்கமாய் உணர்ந்தவர்களின் சைக்கிள் மணிச்சத்தமோ இல்லை பெரும் அதிர்வோடு கடந்து செல்லும் இரு சக்கர வாகனங்களின் இரைச்சலோ நம்முள் விதைத்து சென்றது அவரவர் முகங்களைத்தானே.
பேருந்தில் பள்ளி செல்லும் நாடகளில் பள்ளியின் ஏதோ ஓர் மூலையில் இருந்தாலும் பெவின் வண்டி பட்ணம் முக்கு தாண்டிட்டான் சீக்கிரம் ஓடு என்று பேருந்தை ஓடிப்பிடித்த நாட்களுண்டு. பெவின் வரான் என்று சொன்ன பின்னும் தயங்கித்தயங்கி நடக்கும் தோழியின் நடை கண்டு நமட்டு சிரிப்போடு சரி இன்னக்கு ரெண்டாம் நம்பர்ல போலாம் என்று சொன்னதும் கூடவே வரும் தோழிகள் ஏண்டி என்று வினவ, ஆமா இவளோட ஆளைப்பார்த்து ரெண்டு மூணு நாளாயிடுச்சு இல்லை அதான் அம்மா அன்ன நடை பாடறாங்க பாவம் இன்னக்கி ரெண்டாம் நம்பர்தான் என்று சிரிக்க அவளோ, ஆமா உனக்கென்ன உன் ஆளு நீ வரயான்னு பார்த்து பார்த்து வண்டியோட முன்வாசலுக்கும் பின்வாசலுக்கும் நடக்கறது எனக்குத்தானே தெரியும், எங்களை மாதிரி எங்கருந்தோவா வரனும் இங்கயே இருக்கப்பல என்று கிண்டலும் கேலியுமாக கழிந்த நாட்களில் கூட ஒலி என்பதை உணர்வுகளாகவும் மனிதர்களாகவும் தான் புரிந்து கொண்டதுண்டு.
உள்ளே உருவாகும் சிறு அசைவின் ஒலி கூட சுமந்து கொண்டிருக்கும் குழவியின் முகத்தையும் ஸ்பரிசத்தையுமல்லவா நினைவிறுத்தும். வழக்கமான எண்ணிக்கையில் ஒலிக்கும் பிரஷர் குக்கரின் ஒலி தீர்மானிக்கும் அன்றைய உணவின் தரத்தை. வெளியே ஒலிக்கும் குப்பை வண்டிக்காரனின் மணிச்சத்தம் நிர்ணயிக்கும் காலை நேர வேலையின் கடைசி இழையை, எல்லாவற்றையுன் தாண்டி கூடவே பின்காதில் இறைந்து கொண்டே வரும் சக பயணியின் வண்டிச்சத்தம் உருவகிக்கும் தலைமேல் அமர்ந்து கொள்ள காத்திருக்கும் மேலதிகாரியின் முகத்தையோ அல்லது கோபமான வாடிக்கையாளரின் முகத்தையோ.
ஒலிகளை அதன் உருக்களோடே உணர்ந்து கொண்டு கழிந்து கொண்டிருக்கும் வாழ்க்கை சக்கரத்தின் பல் எங்கே இடறிற்று என்று புரியவில்லை. இசையை உருவகங்களாய் உள்வாங்கிய நாட்கள் மெல்லத்தொலைந்து போகத்துவங்கியது சில காலங்களுக்கு முன்புதான். அன்பும் காதலும் பக்தியும் தெறிக்க தாளக்கட்டுக்களோடு இணைந்த ஓ.எஸ் அருணின் பாடல்கள் என்னை உருவகங்கள் இல்லாமலே ஈர்க்கத்துவங்கியது.
"ஆசை முகம் மறந்து போச்சே அதை யாரிடம் சொல்வேனடி தோழி"என்று கேட்டாலும் உள்ளே கனகுதூகலமாய் பொங்கிய உவகை வடிக்க உருவகங்களே இல்லாது போயிற்று.
பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் தொட்டு தொட்டு பேஷ வரான்... கண்ணண் தொட்டு தொட்டு பேஷ வரான்.. என்று பாடும்போதும் சரி, எங்கு நான் செல்வனோ நீ தள்ளினால் என்று கேட்கும் போதோ ஒலிநாடாக்களின் இழைகளில் கால்களை நுழைத்துக்கொண்டு எடுக்க மனதின்று சிரித்திருக்கும் குழந்தையின் ம்ன் நிலையே மேலோங்கியது.
"எப்படி மனம் துணிந்தாரோ சுவாமி, வனம் போய் வருகிறேன் என்றார்"....என்ற அருணாச்சல கவிராயரின் வார்த்தைகளுக்கும் வடிவங்களற்று போயிற்று அந்த ஆழமான குரலின் மாயத்தால்.
வார்த்தைகளும், தாளக்கட்டுக்களும், இசையின் கோர்வைகளும் தளும்பி நிற்கும் நிலைக்கு வடிவங்கள் தேவையற்றதானது. அங்கு மொழியும் வார்த்தைகளும் தன் நிலைமறந்து நமையும் மறக்கச்செய்யிகின்ற இந்த மந்திர வித்தைகளில் கட்டுண்டு கிடப்பதிலும் ஓர் உன்னத சுகம் உள்ளது தானே.
ஏதோ ஓர் போதை நம்முள் எப்போதும் ஊறிக்கொண்டிருக்கும் நாமெனும் அகந்தையை தொலைந்து போகச்செய்ய.....அவை புத்த்கங்கள்... இசை... இன்னும் என்னவெல்லாம்..???
வார்த்தையெனும் வடிவங்களுக்குள் அடைக்கமுடியாத உணர்வுகளை எந்தப்பெயரிட்டு அழைப்பது அழைத்தும் தான் என்ன பயன்? வார்த்தைகளை நேசிப்பதைக்காட்டிலும் சுவாசிப்பது அதீத சுவாரஸ்யமானது. அதிக கவனமெடுத்து அச்சுக்கோர்த்து பல வித வர்ணங்களுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் அச்சிட்ட புத்தகங்களைக்காண நேரும் போது கூட வார்த்தைகளின் தோரணமென்று எண்ணும் போது எண்ணங்களில் வர்ணம் கூடுகிறது. திறந்து கிடக்கும் புத்தகத்தை காண நேர்கையில் சிறு குழந்தையின் கைவழியே இறைந்து கிடக்கும் அரிசிப்பொறியென மடியெங்கும் சிதறிக்கிடக்கின்றன வார்த்தைகள்
உறவுகளின் தொடர்ச்சியாய் எவரேனும் உரையாடலைத்தொடரும் வேளையில் அவர்களின் நாவினின்று வரும் மொழியில் வார்த்தைகளே எஞ்சி நிற்கின்றன. வாக்கியங்களின் பின்னிருக்கும் செய்திகளைக்காட்டிலும் அதினுள்ளிருக்கும் வார்த்தைகளே கையிலிருந்து உருண்டு செல்லும் கண்ணாடிக்குண்டுகளென உள்ளெங்கும் வழிந்து உருண்டு செல்கிறது. முதல் கேள்விக்கான பதில்களை அவர்களின் மூன்றாவது கேள்வியின் போது மட்டுமே கூட்டுச்சேர்க்க முடிகிறது. அப்போதும் அந்த வார்த்தைகளின் வசீகரங்களில் அமிழ்ந்து தொலைந்து மீண்டு வரும் வேளையில் உரையாடலின் சங்கிலி அறுந்து போயிருக்கும். எதிராளியின் பார்வையில் நானொரு ஊமையாகவோ இல்லை கவனமற்றவளாகவோ இல்லை செவியற்றவளாக உருக்கொண்டிருக்கும் வேளையில் நான் வெளித்தள்ள வேண்டிய வார்த்தைகளை பூக்களைத்தொடுப்பது போல தொடுத்து மெதுவாக உச்சரிக்கத்துவங்குவேன். சில சமயம் வார்த்தைகளின் கனம் தாங்க முடியாமல் மிக மெதுவாகவோ அல்லது வேகமாகவோ உதிர்க்கத்துவங்குகையில் பொங்கும் பிரிவாற்றாமையின் துக்கம் தாங்க முடியாததாயுள்ளது.
ஒரு வாக்கியத்தில் தனித்தனியே நின்று உறவாடும் வார்த்தைகளுக்குண்டான வாசனை எந்த ஒரு முழுமையான வாக்கியத்திற்கும் இல்லாமல் போகிறது. ஒரே வாக்கியதின் சில வார்த்தைகள் அணுக்கமாகவும் சில வார்த்தைகள் விலகியும் செல்ல நேர்கையில் விலகும் வார்த்தைகளை துரத்திப்பிடிப்பதிலுண்டான ஆனந்தத்தில் எதிராளியின் மனதில் நான் என்னவாவேன் என்று கூட எண்ணத்தோன்றுவதில்லை.
எதையேனும் எழுதி முடித்து பின் மீண்டும் வாசித்துப்பார்க்கையில், அதிகாலையில் உதிர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருக்கும் பவழமல்லியின் வாசனையோடு வார்த்தைகள் கண்முன்னே பரந்து விரிந்திருக்கும். பின்னெப்படி நானந்த வனத்தை விட்டு மீள்வதாம் அந்த மணத்தை விட்டு விலகுவதாம்.
வார்த்தைகளுக்கும் எனக்குமுண்டான நேசம் எங்கு தொடங்கியதென்ற கெள்வியைக்காட்டிலும் தொடங்கிய காலமுதலான அதன் ஆக்ரமிப்பின் வசீகரம் மீண்டுவரமுடியாததாயுள்ளது.
பொங்கிப்பிரவகிக்கும் ஆற்றின் கரையில் நான் அமர்ந்திருக்கிறேன்... வர்ண பேதமற்று இறைந்திருக்கும் வார்த்தைகளை வாரி வாரி விழுங்குவதற்காக.
நீர்மைதானே நீர்மை தானே பனிக்கத்துவங்கியது படர்ந்து இருகியது பெரும் பனித்திரையாய் உடைக்க மனதின்றி பார்த்திருந்த வேளையில் இருமை புகுந்து உள்ளே உழலத்துவங்கியது
ஒரு நாள் பலநாள் பகலவன் செய்ய ஏதுமில்லாத போதும் அசையாது நின்ற திரையை அகத்திரை விலக்கி உறுத்துபார்த்தில் அறுந்து, சிதைந்து போனது
சுற்றிலும் நீர்க்கோலம் நீர்க்கோளம் சுகமாய் கால் தழுவ நின்று சிரித்தது சிலிர்த்தது உள்ளும் புறமும்.