சப்தங்களை வெறும் ஒலிகளாய் உணர்வைதைக்காட்டிலும் அதனோடுடனான உருவங்களோடு உருவகப்படுத்திக்கொள்வது பால்யத்திலிருந்து நாம் கற்றுக்கொண்டவைதானே. தோத்தோ சொல்லு, காக்கா சொல்லு, ம்ம்மே.. எது கத்தும், ம்ம்ம்மாஆஆ எது கத்தும் இப்படி ஆரம்பித்தது தானே நம் ஒலிவாங்கியின் பயன்பாடுகள்.
மதியம் பள்ளி இடைவேளையை உணர்த்தும் மணிச்சத்தமும், அதனிடையே ஒலிக்கும் ஐஸ் வண்டிக்காரனின் சத்தமும் உணர்த்தியது பெரும் விடுதலையை அல்லவா.
மாலை வேளைகளை உணர்த்தும் சோன்பப்டிக்காரனின் வண்டிச்சத்தமும் கூடவே ஒலிக்கும் கோவில் மணிச்சத்தமும் உணர்த்துவது அன்றைய வீட்டுப்பாடங்களையோ அல்லது அம்மாவின் கட்டளைக்கு பயந்து நாம் கூட்டில் அடையவேண்டிய நேரத்தை உணர்த்தும் கட்டுப்பாட்டின் சரடுகளை அல்லவா.
அதுவே பதின்மங்களில் நமக்கு மிகவும் நெருக்கமாய் உணர்ந்தவர்களின் சைக்கிள் மணிச்சத்தமோ இல்லை பெரும் அதிர்வோடு கடந்து செல்லும் இரு சக்கர வாகனங்களின் இரைச்சலோ நம்முள் விதைத்து சென்றது அவரவர் முகங்களைத்தானே.
பேருந்தில் பள்ளி செல்லும் நாடகளில் பள்ளியின் ஏதோ ஓர் மூலையில் இருந்தாலும் பெவின் வண்டி பட்ணம் முக்கு தாண்டிட்டான் சீக்கிரம் ஓடு என்று பேருந்தை ஓடிப்பிடித்த நாட்களுண்டு. பெவின் வரான் என்று சொன்ன பின்னும் தயங்கித்தயங்கி நடக்கும் தோழியின் நடை கண்டு நமட்டு சிரிப்போடு சரி இன்னக்கு ரெண்டாம் நம்பர்ல போலாம் என்று சொன்னதும் கூடவே வரும் தோழிகள் ஏண்டி என்று வினவ, ஆமா இவளோட ஆளைப்பார்த்து ரெண்டு மூணு நாளாயிடுச்சு இல்லை அதான் அம்மா அன்ன நடை பாடறாங்க பாவம் இன்னக்கி ரெண்டாம் நம்பர்தான் என்று சிரிக்க அவளோ, ஆமா உனக்கென்ன உன் ஆளு நீ வரயான்னு பார்த்து பார்த்து வண்டியோட முன்வாசலுக்கும் பின்வாசலுக்கும் நடக்கறது எனக்குத்தானே தெரியும், எங்களை மாதிரி எங்கருந்தோவா வரனும் இங்கயே இருக்கப்பல என்று கிண்டலும் கேலியுமாக கழிந்த நாட்களில் கூட ஒலி என்பதை உணர்வுகளாகவும் மனிதர்களாகவும் தான் புரிந்து கொண்டதுண்டு.
உள்ளே உருவாகும் சிறு அசைவின் ஒலி கூட சுமந்து கொண்டிருக்கும் குழவியின் முகத்தையும் ஸ்பரிசத்தையுமல்லவா நினைவிறுத்தும். வழக்கமான எண்ணிக்கையில் ஒலிக்கும் பிரஷர் குக்கரின் ஒலி தீர்மானிக்கும் அன்றைய உணவின் தரத்தை. வெளியே ஒலிக்கும் குப்பை வண்டிக்காரனின் மணிச்சத்தம் நிர்ணயிக்கும் காலை நேர வேலையின் கடைசி இழையை, எல்லாவற்றையுன் தாண்டி கூடவே பின்காதில் இறைந்து கொண்டே வரும் சக பயணியின் வண்டிச்சத்தம் உருவகிக்கும் தலைமேல் அமர்ந்து கொள்ள காத்திருக்கும் மேலதிகாரியின் முகத்தையோ அல்லது கோபமான வாடிக்கையாளரின் முகத்தையோ.
ஒலிகளை அதன் உருக்களோடே உணர்ந்து கொண்டு கழிந்து கொண்டிருக்கும் வாழ்க்கை சக்கரத்தின் பல் எங்கே இடறிற்று என்று புரியவில்லை. இசையை உருவகங்களாய் உள்வாங்கிய நாட்கள் மெல்லத்தொலைந்து போகத்துவங்கியது சில காலங்களுக்கு முன்புதான். அன்பும் காதலும் பக்தியும் தெறிக்க தாளக்கட்டுக்களோடு இணைந்த ஓ.எஸ் அருணின் பாடல்கள் என்னை உருவகங்கள் இல்லாமலே ஈர்க்கத்துவங்கியது.
"ஷாந்தி நஹி பினா க்ருஷ்ண தருஷனுகோ ஷாந்தி நஹி என்றாலும்"
"ஆசை முகம் மறந்து போச்சே அதை யாரிடம் சொல்வேனடி தோழி"என்று கேட்டாலும் உள்ளே கனகுதூகலமாய் பொங்கிய உவகை வடிக்க உருவகங்களே இல்லாது போயிற்று.
பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் தொட்டு தொட்டு பேஷ வரான்... கண்ணண் தொட்டு தொட்டு பேஷ வரான்.. என்று பாடும்போதும் சரி,
எங்கு நான் செல்வனோ நீ தள்ளினால் என்று கேட்கும் போதோ ஒலிநாடாக்களின் இழைகளில் கால்களை நுழைத்துக்கொண்டு எடுக்க மனதின்று சிரித்திருக்கும் குழந்தையின் ம்ன் நிலையே மேலோங்கியது.
"எப்படி மனம் துணிந்தாரோ சுவாமி, வனம் போய் வருகிறேன் என்றார்"....என்ற அருணாச்சல கவிராயரின் வார்த்தைகளுக்கும் வடிவங்களற்று போயிற்று அந்த ஆழமான குரலின் மாயத்தால்.
வார்த்தைகளும், தாளக்கட்டுக்களும், இசையின் கோர்வைகளும் தளும்பி நிற்கும் நிலைக்கு வடிவங்கள் தேவையற்றதானது. அங்கு மொழியும் வார்த்தைகளும் தன் நிலைமறந்து நமையும் மறக்கச்செய்யிகின்ற இந்த மந்திர வித்தைகளில் கட்டுண்டு கிடப்பதிலும் ஓர் உன்னத சுகம் உள்ளது தானே.
ஏதோ ஓர் போதை நம்முள் எப்போதும் ஊறிக்கொண்டிருக்கும் நாமெனும் அகந்தையை தொலைந்து போகச்செய்ய.....அவை புத்த்கங்கள்... இசை... இன்னும் என்னவெல்லாம்..???
9 comments:
அந்த நினைவுகள்...
brilliant. simply brilliant.
ஆஹா...ரொம்ப அழகா மனதைத் தொடுகிறது! பூங்கொத்து!
என்ன அருமையான பின்னல்!
ஒலியை ஒளியுடன் இணைக்கும் சாமர்த்தியம்.
ரொம்ப பிடிச்சிருக்கு கிருத்திகா.
/-- "ஆசை முகம் மறந்து போச்சே அதை யாரிடம் சொல்வேனடி தோழி" --/
நான் தினமும் காலையில் கேட்கும் பாடல்களில் ஒதுவும் ஒன்று. எவ்வளவு அழகான பாடல்.
உங்களோட கட்டுரையும் நன்றாக இருந்தது. இன்னும் கொஞ்சம் தெளிவா எழுதி இருந்தால் இன்னும் அருமையான வந்திருக்கும்.
நன்றி...
அருமையா பின்னியிருக்கீங்க வார்த்தைகளை.
//ஏதோ ஓர் போதை நம்முள் எப்போதும் ஊறிக்கொண்டிருக்கும் நாமெனும் அகந்தையை தொலைந்து போகச்செய்ய.....அவை புத்த்கங்கள்... இசை... இன்னும் என்னவெல்லாம்..???//
நிஜம்தான்.
உண்மை. அருமையான இடுகை.
அழகான ஓசைகள் தரும் அழகான அனுபவங்கள்..சுகம்தான் கிருத்திகா..
//வழக்கமான எண்ணிக்கையில் ஒலிக்கும் பிரஷர் குக்கரின் ஒலி தீர்மானிக்கும் அன்றைய உணவின் தரத்தை. வெளியே ஒலிக்கும் குப்பை வண்டிக்காரனின் மணிச்சத்தம் நிர்ணயிக்கும் காலை நேர வேலையின் கடைசி இழையை, எல்லாவற்றையுன் தாண்டி கூடவே பின்காதில் இறைந்து கொண்டே வரும் சக பயணியின் வண்டிச்சத்தம் உருவகிக்கும் தலைமேல் அமர்ந்து கொள்ள காத்திருக்கும் மேலதிகாரியின் முகத்தையோ அல்லது கோபமான வாடிக்கையாளரின் முகத்தையோ.//
கவிதையாய் சொல்ல வேண்டிய விஷயங்கள். ஒலி என்பது வெறும் சப்தம் மட்டுமல்ல என்று தெரிகிறது.
அதைத் தெரிந்து கொள்வதே அது பற்றியதான அடுத்த நிலைக்கான தாவல் போலும். இந்தத் தாவல் ஒவ்வொரு விஷயத்திலும் யோசித்துப் பார்க்கையில் முடிவற்று நீண்டு கொண்டே போகிறது. எதை எடுத்துக் கொள்ளுங்கள் அது முடிவது இறை தத்துவத்தில் தான். இதையெல்லாம் உணர வைக்கும் பேறு கொடுத்தது தான் அவனது அருட்கொடையாகத் தெரிகிறது. வாழ்க்கையே தவமாகத் தோன்றுகிறது.
இந்தப் பதிவு என்னுள் கிளர்த்திய எண்ண அலைகள் ஏராளம். மிக்க நன்றி, கிருத்திகா!
Post a Comment