Sunday, September 4, 2011
சாயாவனம் – எரிந்தடங்க முடியாத எதார்த்தங்கள்
மனமெங்கும் இன்னும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது சாயாவனத்தில் வைத்த தீ. கணையாழியின் தொகுப்பிற்குப் பிறகு தொடர்ந்து கையிலிருந்த சில ஆங்கிலப்புத்தகங்களில் கவனம் சென்றதால் தமிழ் வாசிப்புக்கள் உயிர்மை, உயிரெழுத்து, சில இணைய வாசிப்புக்கள் என்பதோடு நின்றிருத்தது.
பொதுவில் என் ஆங்கிலப்புத்தக வாசிப்புகளில் தீவிரம் அதிகமிருக்காது, மிக மெல்லிய தென்றலாய் எந்த அலைக்கழிப்புகளுக்கும் ஆளாகாத வண்ணம் வாசித்தே ஆகவேண்டும், இப்போதே முடிக்க வேண்டும் என்ற எந்த முனைப்பும் இன்றியே வாசிப்பதுண்டு. நான் தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள் கூட ஒரு காரணமாயிருக்க முடியும். “Be still, it is the Wind that Sings” (Arthur Osborne) முடித்தபின் “The Journey of an American Swamy” (Rathanath Swamy) முடித்து விட்டு, Wyne Dyer’s “ There is a spiritual solution to every problem” படிக்க நினைத்திருந்த சமயத்தில் ஏதோ ஒரு உந்துதலில் கடந்த மாதம் வாங்கியும் இன்னும் தொடாதிருந்த சாயாவனத்தை நேற்றிரவு கையிலெடுத்தேன். சிதம்பரம் வைத்த தீ இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது.
“சாயாவனம் ஸ்ரீகந்தசாமியின் முதல் நாவல்” இந்த வரிகள் தந்த இன்னும் தந்துகொண்டிருக்கும் ஆச்சர்யம் அளவிடமுடியாதது. மிக எதார்த்தமான எளிமையான பாத்திரங்களைக்கொண்டு எந்த ஒரு மிகப்பெரிய திருப்பங்களையும் உள்ளடக்காது, மிகைப்படுத்தப்படாத சம்பவங்களோடு, சிதம்பரம், சிவனாண்டித்தேவர், குஞ்சம்மா இவர்களைத்தவிர வேறு எவர்பெயரும் தேவைப்படாத அதே சமயம் அந்தந்த கதாபாத்திரங்களுக்கான முக்கியத்துவம் கெடாது ஒரு மிகநீண்ட கயிற்றின் மேல் கத்திமுனையில் நடப்பது போன்று மிகத்திறமையாக முதல் நாவலிலேயே நடந்து காட்டியுளது இன்று எழுத ஆசைப்படும் அத்தனை எழுத்தாளர்களுக்குமான மிகப்பெரிய படிப்பினை.
ஜெயமோகனின் காடு தந்தது மிகப்பெரிய மன அழுத்தம் என்றால், சாயாவனம் தந்துள்ளது ஒரு விதமான மன எழுச்சி, நடந்து முடிந்தது வரமா சாபமா என்று தீர்மானிக்க முடியாத அனுமானத்தோடே சட்டென்று முடிந்து போகிறது கதை, ஆச்சி பிழிந்து போடுவது பட்டுபுடவையை மட்டுமல்ல என்பது படித்து முடித்த அத்தனை வாசகர்களும் உணர்ந்து கொள்ளும் உண்மை.
கதைப்பரப்பில் வரும் அத்தனை செடிகொடிகளையும், மரங்களையும் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதென்பது கூடுதல் மகிழ்ச்சி, இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது இயற்கையின் வாசனைகள் இந்த தலைமுறைக்கு மட்டுமாவது என்று இளைப்பாறுதல் கொள்ள முடிகிறது. (காரை – கொடிவகை இது மட்டும் என்னெவென்று புரியவில்லை தெரிந்தவர்கள் சொன்னால் நன்றி)
அடிக்கடி கடந்து செல்லும் கும்பகோணம் சென்னை நெடுஞ்சாலைகளின் ஏதோ ஒரு திருப்பத்தில் வரிசையாய் இருளில் காத்திருக்கும் கரும்பு லாரிகளை கடந்து செல்கையில் கட்டுக்கட்டாய் கரும்போடு ஆற்றோடு அடித்துசெல்லப்பட்ட பழனியும் அவனின் பாரவண்டியும் தைரியமும் கண்களில் ஒரு நொடியேனும் இனி வந்து போகும், விழுப்புரத்தின் முன்பிலும், சேத்தியாத்தோப்பின் முடிவிலும் காண நேரும் சர்க்கரை ஆலையைப் பார்க்கையில் எத்தனை சாயாவனங்களென எண்ணத்தோன்றும், ஆனாலும் சிதம்பரத்தையும் சிவனாண்டியையும் நேசிக்கவும் தோன்றும். வாழ்வின் வளர்சிதை மாற்றங்களை சிதம்பரத்தைபோலவே நம்மையும் வேறொரு கண்ணோட்டோத்தோடு ஜீரணிக்க வைக்கிறது சா.கந்தசாமியின் சாயாவனம்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சுற்றுச்சூழல் பற்றிய அதிக விழிப்புணர்வு/விளை நிலங்கள் அழிக்கப்படுவது, இவற்றை பற்றிய அதிக கவனம் இல்லாத காலத்திலயே எழுதப்பட்டதல்லவா. இன்றைய சூழ்நிலைக்கும் மிக பொருத்தம்.
அஜய்
Post a Comment