Sunday, August 23, 2009

நாதப்பிரம்மம் - பிரம்மம் நாதம்....

குட்டிகளா யாரு இது வெங்கட்ராமன் பொண்களா? பாட்டுச்சொல்லிக்கறளோ? ரொம்ப நன்னாப்பாடறேளே?
இல்லே பாட்டி சும்மா கேட்டுதான் படிச்சுண்ட்டோம்..
ஷேமமாயிருக்கனும்...ஆசீர்வாதம் கோந்தேளா...

அப்பா இன்னக்கி பாகிபெரிம்மாவாத்து கொலுல, முத்துப்பொண் பாட்டி நாங்க பாட்டு கத்துக்கறோமான்னு கேட்டா, எங்களை பாட்டு சேத்துவிடறேளா?
இப்ப என்னத்துக்கு பாட்டும் கூத்தும், சும்மா அம்மாட்ட ஸ்லோகம் கத்துக்கோங்கோ போறும். அதுக்கு பதிலா ஹிந்தி கிளாஸ் சேர்ந்தாலாவது பிரயோசனம்.

அப்ப என்ன ஹிந்தி சேக்கறேளா? இப்ப உனக்கென்ன அவசரம்? முதல்ல அக்கா சேரட்டும் உனக்கு கொஞ்சம் பெரிய கிளாஸ் ஆகட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்.

இப்படித்தான் ஆனது என்னுடைய இசைக்கான முதல் ஆரம்பம்.

"லம்போதர லகுமிகரா... அம்பா சுத அமர.....
லம்போதர லகுமிகரா..."

ஏன்க்கா இந்த ரமணி சும்மாவே இருக்க மாட்டாளா இல்லை யாராவது இவ கிட்ட சொல்ல மாட்டாளா இவ கர்ணகடுரமா பாடறான்னு...

"ஸ்ரீ விக்ன ராஜம் பஜே...ஸ்ரீ விக்ன ராஜம் பஜே ஏஏஏ"
ஆனா இந்த லதா சுதா நன்னா பாடறா இல்லே.. எப்படி இவா ரெண்டு பேர் குரலும் ஒரே மாதிரி இருக்கு.

"வேங்கடேசர் கொலுவிருக்கும் திருமலை திருப்பதி வேண்டும் வரம் தந்திடுவார் வெங்கடாஜலபதி".... தேரெழுந்தூர் சகோதரிகள் மாதிரி பாடவே முடியாதில்லையாக்கா...

"மருதமலை ஆண்டவனே..... மனம் குளிர பாடிட வந்தோமே"... சூலமங்கலம் சகோதரிகள் பாட்டு கேக்க தனி களைதான் இல்லேக்கா...

இப்படித்தான் என்னோடு என் இசைக்கான தேடலும் வளர்ந்தது.

"ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்... உன் கையில் என்னைக்கொடுத்தேன்".....அக்கா இந்த சகாயராணி எப்டி பாடறா தெரியுமா.
ஏட்டி நீங்கதான் நல்லா பாட்டு படிப்பீக இல்ல.. பின்ன ஏங்கி நீ பாடமாட்டேங்கே?
அப்போது சொல்லத்தெரியவில்லை எனக்கான இசையை நான் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேனென்று.

மெல்ல என்னோடு இழையாய் வந்த இசையை அவ்வப்போது இனம் கண்டு கொண்டிருந்தாலும், இதுதானென்று முடிவுசெய்யும் உத்தேசம் ஏதுமின்றி இருந்திருந்தோனோ என இப்போது எண்ணத்தோன்றுகிறது.

"பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே.... இன்று......ஜென்ம ஜென்மங்களானுலும் என்ன ஜீவன் உன்னோடுதான்..... " மற்றொரு வர்ணம் கலந்து இழைகள் தடிக்கத்துவங்கியது.அக்கா இன்னக்கி ஆபிஸ்ல ஒருத்தன் ரொம்ப நன்னா பாடினான். எப்பபாரு பாடிண்டே இருக்காங்கா... ரொம்ப நன்னா பாடறான்... இப்படித்தான் வாழ்க்கை துணையை கூட என்னால் இனம் கண்டுகொள்ள முடிந்தது... தேடலின் அடுத்த கட்டம்.

வெள்ளி இழையோடு மஞ்சளும் கலந்தது.

"அம்மா அழகே.. உயிரின் ஒளியே..."
"ரவி வர்மன் எழுதாத கலையோ... ரதிதேவி வடிவான சிலையோ".... எப்படி இப்படி பாடறீங்க.. எப்பவும் பாடிண்டேதான் இருப்பேளா?.. சினிமா பாட்டு மட்டும் தான் பாடுவேளா இல்லை எல்லாப்பாட்டுமா?...
எல்லாமும்னா என்ன அர்த்தம்.. நான் பாட்டு படிச்சிக்கலை.. ஆனா எ.ஸ்.பி.பின்னா ரொம்ப பிடிக்கும்.. ஆரம்பகால எ.ஸ்.பி,பாட்டு பாடிண்டேயிருப்பேன்...
உங்க வீட்ல வேற யார் பாடுவா?.
எங்க அம்மா பாடுவா..."சித்திரத்தில் பெண்ணெழுதி சீர்படுத்தும் மானிடரே... ஜீவனுள்ள பெண்மனதை வாழ்விட மட்டீரா" ன்னு அம்மா பாடினா எனக்கு என்னோமோ செய்யும்..."சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி...." எனக்கொரு அக்கா இருந்தா ஆனா ரொம்ப சின்ன வயசில செத்துபோய்ட்டா எனக்கென்னமோ அம்மா அவளை நினைச்சுதான் இந்த பாட்டை அழுதுண்டே பாடுவான்னு தோணும்..

முகம் தெரியாத வயதான அந்த ஆறடிக்கும் அதிகமுள்ள பெண்மணி மனதுள் மிகவும் நெருக்கமானாள். அம்மா நீங்க பாடுங்கோளேன்... என் திருமணத்திற்கு பின் அவளிடம் பேசிய முதல் பேச்சு.. என்னை அவளோடு அதிகம் நெருங்க வைத்திருக்கும் என எண்ணுகிறேன்.

"மாமாங்கம் பல குறி கொண்டாடி நிலையுடே சீலங்கள் நாவாயி".....
"கிளிமகளே வாசாறிகே... கவி மகளே..."
"வலம்பிரி சங்கில் துளசி தீர்த்தம்...."....இது என்ன பாட்டு மாமா?

ஜேசுதாஸ்.. வசந்த கீதங்கள்.. என்னை பயித்தியம் பிடிக்க வைச்ச கேசட்... என்னையும்...

வர்ணங்களின் அடர்த்தியும் எண்ணிக்கையும் அதிகரித்து இழை தடித்துக்கொண்டே சென்றது. ஆனாலும்

ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாட்டு கேசட் வாங்கியிருக்கேன் பார்த்தியா...
அய்யோ நீ அது வாங்கியிருக்கயா நான் பாரதியார் பாடல்கள் வாங்கியிருக்கேன்...
மாமா நீ கேக்காட்டா பரவாயில்லை எனக்காக ஒ.எஸ் அருண் கசல் வாங்கிகுடேன்...
பங்கஜ் உதாஸோட நாஷா கேட்டப்புறமும் உனக்கு ஒ.எஸ் அருண் வேணுமா?
அது வேற இது வேற.. இதை நான் எடுத்தக்கறேன்..

மஞ்சளும் பச்சையும் நீலமுமாய் சகலமானதும் இசையாய் உள்ளே இழைகள் பின்னிக்கிடந்தாலும் நிறைவற்ற தேடலின் தொடர்ச்சியை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

மாமா..பாம்பே ஜெயஸ்ரீ குரல் கேட்டயா.. அப்படியே உள்ளுக்குள்ள ஆழமா இறங்கறது...
ஆனா எனக்கென்னமோ ஜேசுதாஸ் மாதிரி வரலை..
சும்மா அங்கயே நிக்காத மாமா..அருணாசாய்ராம் கேட்டுப்பாரு...கேட்டா ரொம்ப துக்கமா சந்தோஷமா என்னமோ பண்றது மாமா..

"புற்றில் வாழ் அரவம் கேட்டேன்" மாமா இந்த இளையராஜா குரல்ல இருக்கறது என்னது? "நற்றுணையாவதென்றும் நமச்சிவாயமே..." வெறும் தாபமும் ஏக்கமும் மட்டுமில்ல எதையோ தீர்க்கமா தெரிஞ்சிண்ட உறுதியும் இருக்கில்ல...

நன்னு நீ யாவது பாட்டு படிச்சுக்கோடா...
ஏண்டா இப்படி பாட்டு கிளாசுக்கு போக அழறே.. எங்களையெல்லாம் படிக்க வைக்க ஆளில்லை.. இப்ப உனக்கு கசக்கறதா...
நீ சும்மா சும்மா குழந்தையை படுத்தாதே.. உன்னோட ஆசையை அவன் மேல திணிக்காதே.. விடு அவனுக்கு ஆசையிருந்தா கத்துப்பான்.

அக்கா நீ பாடறயா இப்பல்லாம்?
இல்லடி டீச்சர் பொரபஷ்ன்ல இருந்துண்டு பாடெல்லாம் முடியாது...

நவீனுக்கு ஒரு கீ போர்ட் வாங்கி குடுக்கலாம்..
நன்னு சார் இன்னக்கி என்ன சொல்லி கொடுத்தார்?
கண்ணா இந்த இடம் ரொம்ப நன்னாருக்கு.. இன்னோர்தரம் வாசியேன்..
போம்மா எனக்கு கை வலிக்கறது....
ஏண்டா நன்னு கீ போர்ட் கிளாசுக்கும் போகமாட்டேங்கற.... இந்தப்பையன் ஏன் இப்படி சொதப்பறான்.?
நீ சும்மா நை நைன்னு அவனை படுத்தாதே.. விடு அவனுக்கு இண்டரஸ்ட் இருந்தா வரும்...
எப்படி மாமா இப்படி இருக்க.. பின்ன என்ன உன்ன மாதிரி பின்னாடி அலையசொல்றியா?

சின்னவனுக்கும் வயசாச்சு அவனை ஏதாவது இன்ஸ்டுருமெண்ட் சேர்க்கலாமா..?
ஆரம்பிச்சிட்டயா.. உன் வேலையை பாரு.. உன்னோட பாட்டு பைத்தியத்தை தயவுசெய்து குழந்தைகள் மேல திணிக்காதே..

அது பாட்டு பைத்தியமா... இசை என்பதும் பாட்டென்பதும் ஒன்றா????

இன்னக்கி ஜேசுதாஸ் கச்சேரி... மிஸ் பன்ணக்கூடாது மாமா... திருப்பணித்துறா ராதாகிருஷ்ணன் கடம், திருவாரூர் பக்தவச்சலம் மிருதங்கம்.. சரி காம்பினேஷன்...
நாகை முரளிதரன் வயலின் கூட அருமை இல்ல...
இன்னக்கி தனி ஆவர்த்தனம் அற்புதம்..
டிசம்பர் மாதங்கள் இப்படித்தான் கழிந்தது...

அம்மா நான் மிருதங்க கத்துகட்டுமா...
நீ இவ்ளோ எமோஷனல் ஆகாதே ... அவனுக்கு ஏதோ ஆசைல கேக்கறான் கடைசிவரைக்கும் கத்துபானான்னு தெரியாது.. நம்ம கடமை சேர்த்துவிடுவோம்..
அப்புறம் பார்க்கலாம்.
அவன் கொஞ்சம் புஷ்டியா இருக்கான் மாமா அதனால கொஞ்சம் பெரிய மிருதங்கமாவே வாங்கிகொடு...
பாப்பா இன்னக்கி மாஸ்டர் வந்தாரா.. என்ன கத்துகொடுத்தார்...

தும் கிடு தக தரிகிட தக
தும் கிடு தக தரிகிட தக
தக தரிகிடதக
தரிகிட தக தரிகிடதக
தக தரிகிடதக


அம்மா எங்க ஸ்கூல் கீ போர்ட் மாஸ்டர் அப்பா ஆபிஸை ஞாயிற்றுக்கிழமை மட்டும் கிளாசுக்கு யூஸ் பண்ணிக்கலாமான்னு கேட்டார்.
அப்ப நீ கிளாஸ் போவயா? அப்படின்னா சரி சொல்லு நான் அப்பாகிட்ட பேசிக்கறேன்.
அம்மா இங்க வா.. இது என்ன பீஸ் சொல்லு...
ஏய் இது அந்த பச்சைகிளி முத்துச்சரத்துல வருமே அந்த பீஸ்டா.. எப்படி நன்னு...
உனக்கு பிடிக்குமேன்னு படிச்சுண்டேம்மா...
வசீகரா வாசிக்கட்டா...இல்லை "ராஜ ராஜ சோழன் நான்".. வாசிக்கட்டா?
இரு இரு இன்னோன்னு கத்துண்டேன்..."ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்..." அம்மா அந்த லிரிக்ஸ் புரியலை கொஞ்சம் பாடிகாட்டேன்...

அம்மா சின்னது என்னமா வாசிக்கறது தெரியுமா...
ஸ்கூல்ல மிருதங்கம் மாஸ்டர் பயங்கர பெட்.. பிரீ டைம் கிடைச்சா மியூசிக் ரூமுக்கு போயிடறான் அங்க உக்கார்ந்து மிருதங்கம் வாசிக்கறான்...
தினமும் ராத்திரி வாசிக்கறச்ச கவனிக்கறயா அவனுக்கு ரொம்ப இண்டரஸ்ட் இருக்குமா...

பாப்பா உனக்கு கை நன்னா திருந்தி வந்திருக்கு...
நன்னு நீயும் குழந்தையோடே சேர்ந்து கீபோர்ட் வாசியேன்.. எப்படி இருக்குன்னு கேக்கறேன்....

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....... போலோ போலோ சத்குருநாதா.....
எப்படி நன்னு இப்படி ஸ்ருதியெல்லாம் எடுக்க கத்துண்டே... எப்போ?
இல்லமா கீபோர்ட்ல சில சமயம் நானா பாட்டு கத்துப்பேனா.. அப்ப கத்துண்டது....

என்னில் இசை பருத்த கொடியாய் விரிந்து பரந்தது...
மெல்ல மெல்ல அதனுள் மஞ்சள் பச்சை, நீலம், சிகப்பு என வர்ணம் கூடியது....

மிருதங்கத்தின் லயம் ஆரஞ்சும் சிவப்பும் கலர்ந்த வர்ணம்,
வயலினின் நாதம் அடர் ஆகாய வர்ணம்
புல்லாங்குழலின் இசை இளம் ஆகாய வர்ணம்
ஆழ் மனத்திலிருந்து வரும் வளமான குரலோசை அடர் பச்சை வர்ணம்..
ஜலீர் ஜலீர் என வழிந்தோடும் கடத்தின் லயம் அடர் ரோஜாவின் வர்ணம்..
ஆர்மோனியத்திலிருந்து வழியும் இசை இளம் ரோஜாவும், சூரியகாந்திப்பூவின் நிறமும் கொண்ட கலவை
மின்சாரத்திலியங்கும் கீபோர்டிலிருந்து எழும்பி அலையும் இசையின் நிறம் அடர் நீலமும் ரோஜாவர்ணமும் கலந்தது..

என்னுள் ரீங்கரிக்கும் இசையில் எனக்கான இசையை அடையாளம் கண்டுகொள்வது பேரவஸ்தையாயிற்று....
"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா...அத்தனை உலகமும் வர்ணக்களஞ்சியம்..." பாவி இதைத்தான் சொன்னாயா...
"ஆக பல பல நல் அழகுகள் படைத்தாய்" அய்யோ எனக்கின்னும் அந்த அழகு புரியவரலையே...

உள்ளுக்குள் தேம்பல் விளிம்பு தட்டியது..

எது எனக்கான இசை.. ரமணி, லதா சுதா, சகாயராணி, மீனாராணி, வீரலட்சுமி, ஸ்ரீதர், ஜெயலஷ்மி, எஸ்,பி,பி, ஜேசுதாஸ், சுசீலா, ஜானகி, சித்ரா, எல்.ஆர் ஈஸ்வரி, எம்.எஸ், வித்யா திருமலை, அனுராதா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, ஒ.எஸ் அருண், சௌம்யா...திருப்பணித்துறா...திருவாரூர், இளையராஜா மற்றும் பெயர் சொல்ல மறந்த எத்தனையோ கலைஞர்களில் எது எனக்கான இசை...

"எத்தனை கோடி இனபம் வைத்தாய் எங்கள் இறைவா".... - ஓரோர் இசையின் வடிவமும் உள்ளே அலை எழுப்பியது
"சித்தினை அச்சித்துடன் இணைத்தாய்
சேருமை பூதத்து வியனுலகம் அமைத்தாய்" - எங்கெங்கோ மனதைக்கொண்டு சொறுகியது விசும்பி அடங்கும் மனம் தன்னிடம் அறியாமல் தவித்தது
"அத்தனை உலகமும் வர்ணக்களஞ்சியம்" உள்ளே இசையின் பல வர்ணங்கள் நிகழ்த்தும் வர்ணஜாலம் மெல்ல சிறு சுருளாய் எழும்பி, விரிந்து கிளைபரப்பி எங்கும் வியாபித்து பரந்து விரிந்து வெடித்துச் சிதறியது...
"ஆகப்பல பல நல் அழகுகள் சமைத்தாய்...." இறுதியாய் வர்ணங்களின் கீழ் அடுக்கடுக்காய் நீலம்... நீலம்.. கடல் நீலம்... மெல்லப்படர அடி ஆழமான மவுனத்துள் நான்.

தேடல்களற்று.....விசும்பல்களற்று... "நான்" என்பதற்கற்ற இசை ஒற்றை வர்ணமாய். பிரம்மம் நாதம்


7 comments:

சென்ஷி said...

தனிமடல்: பிரசுரத்திற்கல்ல..

என்ன சொல்லவதென்று தெரியவில்லை. சினிமாக்களில் கேட்டிருப்பதை அல்லது கேட்டுக்கொண்டிருப்பதைத் தவிர இசையைப் பற்றி சுத்தமாக அறியாதிருப்பதால் படித்த இரண்டு முறையிலும் எனக்குள் ஏற்படும் அந்நியத்தன்மையிலிருந்து விடுபட முடியவில்லை.

நாதப்பிரம்மம் - பிரம்மம் நாதம்

பிரம்மம் - முடி கொண்டவன் அல்லது முதன்மையானவன். இசையில் நாதம் முதன்மையானது. இசைக்கான பொழுதுகளில் ஈர்ப்பது இசையுடன் குரலினிமையும் கொள்வதுதான். இன்னார்தான் பாடினார் என்று தெரியாமலே பாடலை விரும்பிக் கேட்டு புலம்பித் திரிந்த பொழுதுகள் நினைவில் வருகிறது. வெற்றுக்கூச்சல்கள் என்றுத் தெரிந்தும் பின்னணியில் காற்று வீசுகின்ற ஒலியுடன் கூட சேர்ந்து பாடிக்கொண்டு திரிந்த காலங்கள் நிச்சயம் மறக்கவியலாத ஒன்று.

கர்னாடக இசை ஒருசாராருக்கானது என்பதாகவே புனைவின் அடிப்படை இருப்பதும் என்னால் ஒன்ற முடியாமல் போனதற்கான காரணமாயிருந்திருக்கக்கூடும். :-(

பதிவை வெளியோட்டங்கள் திரித்தலை பிரித்துவிட்டு மையக்கருத்தோட்டத்தை பார்க்கும்போது இசையை புரிந்து கொள்வது அத்தனை எளிதாக கைவரப்படாத ஒரு உள்மனக்கூச்சல் பீறிடும் எழுத்துக்கள். (தவறாயிருப்பின் மன்னிக்கவும்.)

நான் என்பதகற்ற (உங்கள் இடுகையில் இந்த இடத்தில் எழுத்துப்பிழை உள்ளது) இசை உதவும் என்பது மெய்தான். ஆனால் இசை முடிந்த பின்னால் கிடைக்கின்ற வெற்றிடத்தில் தான் பூரணம் கிடைத்திருக்கின்றது. இசையை முழுக்க கேட்டுவிட்டு அது முடிந்த பின்னால் நம்மைச்சுற்றும் அதன் ரீங்காரங்கள் நிச்சயம் எதற்கும் குறைவில்லாத ஆனந்தம் தரும்.

உங்கள் பதிவையும் வாசித்து முடித்தப் பின்னரும் காற்றில் அலங்காரப்படுத்தப்பட்ட ஓசை கேட்பது போன்ற பிரம்மை கொடுக்கின்றது. வெகு நாட்களுக்கு பின்பான அழகான புனைவு!

மிக்க நன்றி.

நட்புடன் ஜமால் said...

நிச்சியம் இது வடிகால் தாங்க

எத்தனை சம்பாஷனைகள்

அப்படியே உணர்ச்சிகள் எழுத்து வடிவில்

அருமை அருமை ...

கிருத்திகா ஸ்ரீதர் said...

சென்ஷி, தனிமடல் பிரசுரத்திற்கு அல்ல என்று சொல்லியும் பிரசுரித்தமைக்கு மன்னிக்கவும். ஆனாலும் அதில் பல கருத்துக்களோடு எனக்கு ஒப்புமை இருந்ததாலும், பொதுவில் நான் கருத்து சுதந்திரத்தில் அதிக பற்றுதலும் நம்பிக்கையும் கொண்டிருப்பதாலும் தங்களை கேட்காமலே செய்துவிட்டேன்...
தொடர்ந்து இதைப்பற்றி பேச ஆசை.. சமயம் கிடைக்கும் பொழுது மீண்டு வருகிறேன்... நன்றி

அமிர்தவர்ஷினி அம்மா said...

பிரமிக்க வைக்கிறது

ஜீவி said...

ஓ.. இதுக்குத்தான் இந்த காத்திருப்பா?.. இந்த இன்னொரு பரிமாணத்தையும் காட்டி விடத்தான் இந்த வாசிப்பா?..

எந்த முகமூடியையும் தரித்துக் கொள்ளாத வெள்ளை மனசின் அடி ஆழத்தில் தான் எத்தனை ஆசைகள்?..
எந்த பூ எங்கே மலரும் என்று சொல்ல முடியாது.. செடி வளர்த்து நீரூற்றி, பாதுகாத்து... அவ்வளவே;
வேண்டுமானால், கொம்பு நட்டு, இறுக்கிக் கட்டி திருப்பி விடலாம்..
அந்த இறுக்கிக்கட்டல் கூட சிறையோ என்று நெஞ்சைச் சுடுகிறது.. குரோட்டன்ஸூக்கு கத்தரித்து விடுதல், மல்லிகைக்கு பந்தல் என்று ஒவ்வொன்றுக்கு ஒன்று தேவையாகவும் படுகிறது.. ஆனால், பூ மலர்தல் மட்டும் நம் கையில் இல்லை..
கல்லைத் துளைத்துக் கொண்டு கூட புஷ்பம மலர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.. இதையே கதையாய்ச் சொன்னால் எப்படியிருக்கும் என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

எண்ணிக்கை முக்கியமில்லை.. நிதானமாக நிறைய எழுதுங்கள்;
நிறைய வர்ணஜாலங்கள் காத்திருக்கு..

நல்லதொரு அனுபவத்தையும் வாசிப்பையும் தந்தமைக்கு மிக்க நன்றி..

திவாண்ணா said...

excellent piece!
அனுபவிச்சதை அப்படியே எழுதி இருக்கீங்க. உள்ளத்தை தொடுது!

Unknown said...

இப்பத்தான் சுட சுட ஒரு 10 தடவை ஒரு “நாதத்தின் பிரவாகத்தை” கேட்டுவிட்டு உங்கள் பதிவுக்கு வந்தேன்.

தயவு செய்து இங்கு போய் இந்த இசையைக் கேளுங்கள். வயலின் அழுகிறது.உங்களுக்கு என்ன பாட்டு என்று தெரிந்து விடும். சந்திரகோன்ஸ் ராகம் என்று நினைக்கிறேன்.
உருகிவிடுவீர்கள்.

வோகல் இல்லை.symphony orchestration.

நீங்கள் சொல்வது மாதிரி நாதப்பிரம்மம்தான்.ஆரம்ப வயலின் தீற்றலைக் கவனியுங்கள்.

கேட்டுவிட்டு இங்கேயே(உங்கள் வலையில்) பின்னூட்டம் போடுங்கள்.

http://www.ilayarajaonline.com/2009/09/ilayaraja-live-in-italy.html

அல்லது http://uwillget- ilayaraja. blogspot. com போய் ilayaraja-live-in-italy மெனுவை கிளிக் செய்யவும்.