Tuesday, May 12, 2009

வா வாவென அழைக்கும் காடு- பகுதி 2

மனதுக்கு மிகவும் நெருக்கமான எழுத்துக்கள், மெல்லிய தேர்ந்த இசை, புரிதல்களோடு உண்டான உறவுகள், ஆளுமையற்ற நட்பு இவைகளை மீறியும் மனதில் எப்போது நினைத்தாலும் நெகிழவைக்கும், நெருக்கமாய் உணரவைக்கும் தருணங்கள் நாம் இயற்கையோடு நம்மை இருத்திக்கொண்ட தருணங்களாய்தானிருக்க வேண்டும் என்பது என் தீராத நம்பிக்கை.

வாழ்வின் கணக்குகளுக்கான ஓட்டத்தில் திவங்கி திணறும் போதெல்லாம் நான் மூச்செடுத்து ஆசுவாசிக்க விரும்புவது இயற்கையோடு ஒன்றிப்போய்த்தான்.

தொல்லைபேசிகளற்ற, தொலைக்காட்சிபெட்டிகளற்ற, ஆடம்பர விடுதிகளற்ற, சில சமயம் மின்சார வசதி கூட இல்லாத காட்டினுள் சென்று பதுங்கிக்கொண்டு சில நாட்கள் கழித்து விட்டு வருவதே என்னை உயிர்ப்பித்துக்கொள்ளும்
வழியென்று எப்போதும் நினைப்பதுண்டு. ஓரளவிற்கு ஒத்துப்போகும் பிள்ளைகளும் ஏதும் சொல்லாது உடன் வரும் துணையும் தரும் ஆதுரத்தில் வருடத்திற்கு ஒரு முறையேனும் என்னை இங்கணம் தொலைத்துக்கொள்வதுண்டு.

வயநாட்டின் தாழ்ந்த பள்ளத்தாக்குகளுக்குளும் அதுதான் நடந்தேறியது மூன்று புரமும் மலையின் முகடுகள் சூழ்ந்ததொரு பள்ளத்தாக்கில் அடர்ந்த பெயர் தெரியாத எத்தனையோ மரங்களுக்கு நடுவில் தெரிந்த சில வீடுகளில் ஒன்றில் ஒன்றிக்கொள்ள இடம் கிடைத்தது. அங்கெல்லாம் ஹோம் ஸ்டேஸ் எனப்படும் இத்தகைய தனித்த வீடுகள் அதிகம் கிடைக்கிறது. நம் கையிருப்பிற்கு தக்க அளவில் அமைவதும் ஒரு சிறப்பு. அதோடு கூட நாளில் குறைந்த பட்சம் இரு வேளைகளாவது அவர்களே நமக்கான உணவை சமைத்துத்தருவது கூடுதல் சந்தோஷம்.


எப்போது வேண்டுமானாலும் படியிறங்கிச்சென்றால் வா வாவென உள்ளிழுக்கும் காடு மிகப்பெரும் வசீகரம் அதுவும் அதிகாலை வேளை கனத்த இருளோடு கூட அடர்ந்த பனியும் குளிரும் உடலை தடித்துப்போகச்செய்ய நானென்று ஏதுமின்றி சாலையில் யாரோவென நடந்து செல்லும் அனுபவம் உணர்ந்து பார்த்தே ஆகவேண்டியது.

சிறிதே மேடேறிச்சென்றால் வரும் சுத்தமான தார்ச்சாலையில் மழையின் மிச்சங்கள் உதிர்ந்திருக்கும் இலைகளாலும் குரங்குகளும் விலங்குகளும் பிய்த்துப்போட்டிருக்கும் பலா சக்கைகளாலும் இன்னபிற பழங்களோடும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருந்தது.அங்கங்கே அட்டைகளும் ஓரறிவு, ஈரறிவு ஜீவிகளும் தன்போக்கில் சுருண்டிருக்க நாம் அத்துமீறித்தான் அந்தப்பிரதேசத்தில் நுழையவேண்டியிருக்கும். ஆனாலும் அந்நியனாய் உணரமுடியாதபடி நான் தான் இங்கே தொலைந்து போயிருக்குமே...

ஈரத்தில் ஊறிப்போயிருக்கும் எந்த மரத்தின் கிளையைத்தொட்டாலும் கையோடு ஒட்டிக்கொண்டு வரும் இயற்கையின் மிச்சங்கள், இன்னும் சற்றே மேலேறி நடந்தால் திகைக்கவைக்கிறது கிட்டத்தட்ட 10 ஏக்கர் பரப்பில் அமைதியாய் விரிந்திருக்கும் நன்னீர் ஏரி பூக்கூடைலேக் என்று சொல்கிறார்கள் பெயரின் காரணத்தாலேயோ இல்லை மூன்று புரமும் மலைகள் சூழ்ந்திருக்க தணிந்த ஓர் பூத்தொட்டி போல் தான் இருக்கிறது அந்த ஏரி கூடவே வந்த குளிரோடு சேர்ந்து கொண்டது ஏரியின் காற்று. காற்றின் கிசுகிசுப்பும், மரங்களின் சலசலப்பும் எங்கிருந்தோ சப்தமிடும் பெயர் தெரியாத பறவைகளின் இசையும், நம்மை கண்ணுருட்டி விழிக்கும் மூதாதையர்களின் பார்வையும் அந்தப்பகுதியின் இரம்மியத்திற்கு இன்னும் சுருதி சேர்க்கிறது. எங்கோ மேட்டில் சூரியனின் கிரணங்கள் மெள்ளத்தெரிய மரங்களின் கூரைகளில் பொன்வேயப்படுகிறது.சூரியனின் கதிர்கள் காட்டிற்கோர் பொன்கூரை வேய்கிறது.

வரும் வழியில் திறந்திருக்கிறது ஒரு சாயாக்கடை..." பாலில்லா..வேணங்கில் கட்டஞ்சாய் தரா...வேணோ..".கேள்விக்கு தலையாட்டினாலும் கையில் காசேதும் இல்லாது இறங்கிவந்தது அப்போது தான் நினைவில் வந்தது. என்ன செய்வதென்று யோசித்திருக்கும் வேளையில் ரெங்கமணி ஆபத்பாந்தவனாய். வா நான் இப்பத்தான் குடிச்சேன். என்றபடி அங்கிருந்த கட்டையில் அமர்ந்திருந்தது மற்றுமொரு ஆஸ்வாசம். "ஏ குட்டி ஆ கசரெடுக்கு" என்றபடி ஒரு மர நாற்காலி வந்து சேர்ந்தது. சற்றே இனிப்பு கூடிய பாலில்லா தேநீர் இப்போது நினைத்தாலும் என்னால் என் நாகரீக அடுமனையில் உண்டாக்க முடியாதது.

"எவ்விடபோய். நமெக்கு காடடுக்கணும்னு பறஞ்ஞில்லே" என்றபடி அந்த வீட்டின் கேர்டேக்கர் நின்றிந்தார். ரெங்கணி விலகிக்கொள்ள நானும் பிள்ளைகளும் அவர் வழிகாட்ட முழு காட்டிற்குள்ளும் அந்த மூண்று முகடுகளிலும் ஏறி இறங்கினோம்.

அந்த அனுபவத்தை எப்படிச்சொல்ல ... நீரின் அடிஆழத்தில் மூச்சடக்கி மூழ்கியிருக்கும் போது நம்மைச்சுற்றி தோன்றுமே ஒரு அடர்த்தி, குளுமை கூடவே ஒரு பயம் அது போலத்தான் காடு வசீகரத்தையும், குளுமையையும் , இருமாப்பையும், நிசப்பத்தத்தையும், சப்தத்தையும், அச்சத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டிருந்தது....

ஒரு முகட்டின் மேல் தட்டில் இன்னும் அங்கங்கே மிச்சமிருக்கும் காடுகுடிகளின் வீட்டையையும் காண நேர்ந்தது. அவர்கள் பணியர் என்று அழைக்கப்படுகிறார்களாம். ஓரளவு நாகரீகம் கலந்த குடியிருப்பு தான். துளுவும் மலையாளமும் கலந்த மொழி பேசுகிறார்கள். ஆண்களை விட பெண்கள் சற்றே உயரமாகவும் வளர்ந்தும் உள்ளார்கள். (போட்டோ எடுக்க முடியவில்லை... பெரியவன் கையில் கேமரா இருந்தது அவனுக்கு ஏதோ ஒரு தயக்கம். சும்மா அவங்களை நாம ஏதோ காட்சி பொருள் போல போட்டோ எடுத்தா அவங்களுக்கு கஷ்டமாயிருக்கும் அதனால வேண்டாம் என்பது அவன் எண்ணம். நான் அவனை தொந்தரவு செய்ய விரும்பவில்லை.. அவரவர் மனோலயம்....)

ஜெயமோகனின் காடு நாவல் அங்கே ஒரு காட்சியாய் படிமமாய் ஊறிக்கிடந்தது. ஒவ்வொரு அயனிமரமும், பலாமரமும் கிரியையும், நீலியையும், அய்யரையும் குட்டப்பனையும் நினைவு படுத்தியபடியே வந்தது. கீரைக்காதனைக்கூட மனம் தேடித்தவித்தது என்றுதான் சொல்ல வேண்டும். பிள்ளைகள் இருவரும் சலசலத்தபடியே வர வழிகாட்டியும் ஏதோ பேசிக்கொண்டே வந்தாலும் தனித்திருப்பது போல் நம்மை சுற்றி அடர்ந்த காடு. அங்கங்கே தென் படும் சிறு குட்டைகளில் தேங்கியிருக்கும் நீரில் கால்வைத்தல் வந்து அப்பிக்கொள்ளும் அட்டைகள் (லீச் எனப்படும் சிறு பூச்சிகள்). இன்னும் மழை ஆரம்பித்தபின் சென்றால் காடு முழுக்கவே இந்தப்பூச்சிகள் மிகுந்திருக்குமாம். கையில் உப்பை கழியாக கட்டிவைத்துக்கொண்டு உடனே அதை நீரில் தோய்த்து அந்தப்பூச்சிகளின் மேல் விட்டால் நம்மை விட்டு விடுகிறது.. (இயற்கையை வெல்லும் /கொல்லும் வழி...) கிட்டத்தட்ட 3 மணிநேரம் காட்டில் சுற்றியலைந்து விட்டு வீடேறினால் மனமுழுக்க காட்டைப்பற்றிய உணர்வுகள் இறைந்து கிடந்தது

வீடு திரும்பி அவர்கள் செய்து தந்த புட்டு கடலைக்கறி வாழைப்பழம் கலந்த காலை உணவை முடித்த பிறகு தான் கால் கெஞ்சத்துவங்கியது அப்படியே ஒரு தூக்கம். விழித்தெழுந்தால் இரம்மியமான மாலை வேளை போல் இளவெயில். மீண்டும் ஒரு பெரிய நடை முடித்து வரும் வழியில் சிறு தூறலாய் ஆரம்பித்த மழை வீடு சேர்வதற்குள் நம்மை இரும்புக்கரத்தோடு அரவணைத்துக்கொண்டது. அந்த மழையின் வாசனை காடுகளுக்கேயுண்டான பெருமணத்தையும் சப்தத்தையும் கொண்டுவந்தது.


ஆச்சர்யங்கள் அடுத்தநாளும் காத்திருந்தது....

சில போட்டோக்கள்....


பயணிப்போர்களின் உதவிக்கு

ஊரின் பெயர் - வைத்ரி (கல்பேட்டா என்பது முக்கியமான ஒரு சிறிய நகரம். அதிலிருந்து துவங்குகிறது இந்த எழில் கொஞ்சும் இடங்கள் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில், வைத்ரி மற்றும் லக்கிடி போன்ற ஊர்கள் அங்குதான் இது போன்ற 100க்கும் மேற்பட்ட ஹோம்ஸேடேக்கள் கிடைக்கிறது)

நாங்கள் தங்கிய இடத்தின் பெயர் - லேக் வியூ ஹோம்ஸ். தொலைபேசி - 04936256016/ மொபைல் 9447447549/9961621479.
ஒருநாள் வாடகை - 1500ல் இருந்து 2500 வரை கிடைக்கிறது. ஒரு படுக்கைஅறை மட்டுமே நமக்கானது மற்றபடி வரவேற்பரையும், சமையல் கூடமும், ஹாலும் பொதுவில். ஆனால் மொத்தம் குடும்பமாக கிட்டத்தட்ட 3 குடும்பங்களும், டார்மிட்டிரி வகையில் ஒரு 10 பேர்களும் தங்குவதற்குண்டான அளவில் வசதி செய்யப்பட்டுள்ளது.
(சில ரிசார்ட்கள் இன்னும் அதிக பள்ளத்தாக்குகளில் மர உச்சிகளில் வீடு கட்டி தங்கும் வண்ணம் உள்ளது ஆனால் செலவு டாலரில் செய்யவேண்டியுள்ளது.)



4 comments:

ஜீவி said...

///பிறகு தான் கால் கெஞ்சத்துவங்கியது அப்படியே ஒரு தூக்கம். விழித்தெழுந்தால் இரம்மியமான மாலை வேளை போல் இளவெயில். மீண்டும் ஒரு பெரிய நடை முடித்து வரும் வழியில் சிறு தூறலாய் ஆரம்பித்த மழை வீடு சேர்வதற்குள் நம்மை இரும்புக்கரத்தோடு அரவணைத்துக்கொண்டது. அந்த மழையின் வாசனை காடுகளுக்கேயுண்டான பெருமணத்தையும் சப்தத்தையும் கொண்டுவந்தது.//

நெஞ்சில் பதிந்த நினைவுகள் நினைத்துப் பார்க்க பார்க்க இன்பம் தான்! அதை வார்த்தைகளில் வடித்துப்பார்க்கும் பொழுது வீணையின் உறையை பிரித்து எடுத்து மீண்டும் மீட்டிப் பார்த்த உணர்வு தான் ஏற்படுகிறது.. நினைவின் வாசம் மணக்கிறது.. வாழ்த்துக்கள்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகான வர்ணணை...

நான் தலைப்பை படித்தவுடன் ஜெ.மோவின் காடு விமர்சனமோ என்று நினைத்துவிட்டேன். முடிவில் தான் அறிந்தேன்.

ஆரம்பத்தில் நீங்கள் சொல்லியிருக்கும் வார்த்தைகள் ஆழ்ந்த உண்மை.

முடிக்கும் வரை கட்டிப்போடும் எழுத்து நடை.

பாச மலர் / Paasa Malar said...

நல்ல வர்ணனை கிருத்திகா...சில இடங்களில் ஏதோ நான் உங்களுடன் இருந்த உணர்வு தோன்றியது படித்த போது..

நித்தி .. said...

நல்ல வர்ணனை கிருத்திகா...சில இடங்களில் ஏதோ நான் உங்களுடன் இருந்த உணர்வு தோன்றியது படித்த போது..

repeatuuu....