Saturday, November 1, 2008

மௌனியின் கதை உலகம் - ஒரு பகிர்வு


நம்மை சுற்றிலும் இருந்த கதை சொல்லிகளின் கதைகளைக்கேட்டே வளர்ந்த பால்யங்களைக் கொண்டிருந்ததாலோ என்னவோ, கதை கேட்பதைக்குறித்தான அலுப்பேதுமின்றியே நான் வளர்ந்திருக்கிறேன்.

தாட் தாட் என குதிரையில் சென்ற இராஜகுமாரன் முதல் பள்ளியின் நான்கு வாசல்களில் எந்த வாசல் வழியே மகன் வந்தாலும் ஏறிச்செல்வதற்கு ஏற்றாவாறு அத்தனை வாசல்களிலும் சாரட் வைத்து காத்திருந்த நேருவின் கதை வரை தந்தை சொல்ல கேட்டதுண்டு, இப்போதும் கதை சொல்லும் என் மகவுகளின் வார்த்தை சரிவிலேயே என் இரவு எப்போதும் கரை தட்டும்.

ஆனாலும் முன் முடிவுகளைத்தராத கதைகளையெதையும் நான் அதிகம் கண்டதில்லை. பல சமயம் சம்பவங்களின் கோர்ப்பு முடிவுகளின், கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல்களை தானாக ஈன்றெடுத்து விடும். சிலசமயம் தத்துவ விசாரங்கள் முன் சொன்ன, படித்திருந்த, கேட்டிருந்த, நம் மனம் யோசித்திருந்த தளங்களை கண்முன்னே காட்டிச்செல்லும்.

வாசிப்புகளின் தேர்வு குறித்தான கர்வம் எப்போதும் எந்த வாசகனுக்கும் இருக்காமலிருந்ததில்லை. என்னுள்ளும் எத்தனையோ கர்வங்களை விதைத்துச்சென்றிருந்த புத்தக வரிசைகளுண்டு ஆனாலும், வாசிப்பு முடிந்தும் அடுத்திப்போது என்ன செய்ய வேண்டுமென்ற எந்த யோசனையையும் கொண்டு தராது மின் விளக்குகள் போன நொடியில் ஏற்படும் மையிருட்டுக்கு கண்கள் பழகுவதற்கு முன் ஏற்படும் ஒரு அமைதியையும், குளுமையையும், அதே சமயம் குழப்பத்தையும் ஏற்படுத்தியது மௌனியின் கதைகள்.

மொத்தம் 24 கதைகளோடு சிறு பத்திகளும் சேர்ந்து மொத்தம் 336 பக்கங்கள் நம் அகவெளியின் எத்தனையோ அடுக்குகளில் இது வரை புதைந்திருந்த காதலை, குழப்பத்தை, பயத்தை, நகைச்சுவையை, தேடலை, வாழ்க்கை குறித்த முன் முடிவுகளை, மிகவும் நுண்ணிய உணர்வுகளை எந்த ஒப்பனைகளுமற்று என் முன் நடமாட வைத்தது. அடுத்து இது தான் என்ற எந்த ஒரு முடிவுகளையும் எடுக்க வொட்டாது வெறுமே பார்வையாளனாக நம்மை இருக்க வைத்து கதைகள் தானே நகர்ந்து செல்கிறது என்று சொல்லலாம்.

அவரது கதைகள் வெளிக்கிட முடியாத மனோ உணர்வுகளின் அணிவகுப்பு. நிராகரிப்பும், காதலும், சாவும், வாழ்வும் ஒரே நோக்கில் எந்த பாகுபாடுகளுமின்றி காட்சிப்படுத்தப்படுகிறது. அக்காலத்தில் புனிதப்படுத்தப்பட்ட எத்தனையோ உறவுகளை, நிலைகளை கேள்விக்குறியாக்கும் அவரது பார்வைகள் எத்தனையோ வருடங்களுக்குப் பின்பும் விகசிக்கவைக்கிறது. வாழ்க்கை குறித்த சாமானியனின் பார்வையோடு அகத்தேடல்கள் நிறைந்த ஒரு ஞானியின் பார்வையும் இணைந்த நாயகபாவம் அவரின் கதைகளில் கண்கூடாக காணமுடிகிறது. பெரும்பாலான படைப்பாளிகளின் படைப்பில் தொக்கி நிற்கும் பால் வேறுபாட்டை மௌனியின் எழுத்துக்களில் நம்மால் தேடினாலும் உணரமுடிவதில்லை. பெண்களைக்குறித்தான அவரது பார்வைகள் அசாதராணமானது. மிகுந்த நிதானமான சிந்தனை மிகுந்த கதா நாயகிகள் இவரது எழுத்துக்களில் பளிச்சிடுகிறார்கள்.

மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்த கதைகள் எத்தனையோ உண்டு. எப்போது வாசித்தாலும் அப்போது புதியதாய் புரிந்து கொள்ள அடுக்கடுக்கடுக்காய் இரகசியங்களை தன்னுள் பொதிந்து வைத்துள்ளது அவ்வெழுத்துக்கள்.

ஒரு நாயகனின் வாழ்வின் பல்வேறு சம்பவங்களின் தனித்தனி வெளிப்பாடாகவும் இக்கதைகளைக் கொள்ளலாம். முடிவில் ஒவ்வொரு கதைக்கும் உண்டான தொடர்பான சம்பவங்களைக்கொண்டு மற்றொரு கதையை கோர்க்க முயன்றால் அத்தனை கதைகளும் ஒரே சங்கிலியில் வந்து சேரும். நகுலனின் எழுத்துக்களிலும், கோபி கிருஷ்ணணின் எழுத்துக்களிலும் இத்தகைய தன்மையை கண்டிருந்தாலும் மௌனியின் கதைகள் சொல்லும் அகவெளி நமக்கு மிகவும் நெருக்கமாயிருப்பதாகவே படுகிறது. சாமானியனின் மன ஓட்டங்களை பதிவித்து சென்றுள்ளத்ய் இவ்வெழுத்துக்கள்.

ஒவ்வொரு கதைகளும் பிரசுரமாயிருக்கும் ஆண்டுகளின் குறிப்புகளும் இருப்பது நமக்கு அந்தக்கதை நிகழ்வுகளின் கால ஓட்டத்தை உணர்ந்து கொள்ள வெகு எளிதில் ஏதுவாகிறது. அத்தனை கதைகளைப்பற்றியும் எழுதும் ஆசையிருந்தாலும், ஒரு சில கதைகளை குறித்து மட்டுமாவது விரிவாக எழுதும் எண்ணமிருக்கிறது பார்ப்போம்.. எவ்வளவு தூரம் முடிகிறதென்று...

16 comments:

Anonymous said...

படிக்கத்தூண்டும் உற்சாகமான விமரிசனம்.

நன்றி
ஜிஜி

ஜீவி said...

மெளனியைப் பற்றி எழுத வேண்டுமென்று எண்ணியிருந்தேன். நீங்கள் முந்திக் கொண்டீர்கள். யார் எழுதினால என்ன?..''அவர்' எழுதப்பட வேண்டும். அது முக்கியம். அவர் தந்த உணர்வுகள், யார் அவர் பற்றி எழுதினாலும், வெளிப்படாமலா போய்விடும்?.. எழுத்துலகின் ஜாம்பவான்களுக்கு பிதாமகர் அவர்.
தொடர்ந்து சொல்லுங்கள்.. '
'ஆத்மா'வில் ஒன்றரக் கலந்திருப்பதால்,
அவ்வப்போது வாசகனாய் வந்து கலந்து கொள்கிறேன், என்ன?..

தொடக்கம் கம்பீரத்துடன் இருக்கிறது; அது தொடரட்டும்.
வாழ்த்துக்கள்..

நாமக்கல் சிபி said...

நல்ல பதிவு!

மௌனியின் கதைகளில் எனக்கும் இப்போது ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்!

குப்பன்.யாஹூ said...

நல்ல பதிவு, நன்றிகள். நல்ல புத்தகம் அறிமுகம் செய்தமைக்கு.

நன்றிகளுடன்

குப்பன்_யாஹூ

Vassan said...

மெளனியைப் பற்றி

பாச மலர் / Paasa Malar said...

மீண்டும் பொறாமைப்பட வைக்கும் ஒரு பதிவு..கதைகளைப் பற்றி அவசியம் எழுதுங்கள் கிருத்திகா..

MSK / Saravana said...

"மௌனியின் கதைகள்" படிக்க தூண்டி விட்டீர்கள்..

புத்தகம் பற்றியும், பதிப்பகம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்..

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி.. ஜிஜி இது போன்ற பகிர்தல்களின் நோக்கமே யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் தான்...:)

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி ஜீவி... நீங்கள் எழுதியிருந்தால் அந்த அனுபவம் மற்றுமொரு உன்னதமான் வாசிப்பு அனுபவத்தை தந்திருக்கும்.. இப்போது தவறிவிட்டது.. கதைகள் குறித்து எழுதும் போது உங்கள் பார்வையையும் நீங்கள் பதிந்து சென்றால் நன்றாக இருக்கும் என்பதே என் கருத்து

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி நாமக்கல் சிபி, குப்பன்.. படித்துப்பாருங்கள் நாம் தவறவிடக்கூடாத தொகுப்புகளில் இதுவும் ஒன்று.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாசன் தாங்கள் கொடுத்துள்ள லிங் சென்று பார்த்தேன் ஆனால் என் பிரவுசரில் அந்த பீரியட் யாகு குழுமத்து மடல்களில் சில ஃபாண்ட் பிரச்சனைகள் உள்ளது வாசிக்க முடியவில்லை.. ஏதும் வழியுள்ளதா...சொல்லுங்களேன்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க மலர்... கதைகளைப்பற்றி எழுத வேண்டும் என்ற ஆர்வம் வலுப்பட்டுள்ளது உங்கள் மறுமொழியைப்பார்த்தபின்...

தமிழ்நதி said...

தொடர்ந்து எழுதுங்கள் கிருத்திகா. வாசிக்க ஆவல். மெளனியின் கதைகள் ஆங்காங்கே வாசித்திருக்கிறேன். முழுத்தொகுப்பை ஒரு நண்பர் இரவல் வாங்கிச்சென்றுவிட்டார். அவரிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொண்டதும் முழுவதுமாக வாசிக்கவேண்டும். நிறையப் படிக்கிறீர்கள் போலிருக்கிறது:)

Vassan said...

வாசன் தாங்கள் கொடுத்துள்ள லிங் சென்று பார்த்தேன் ஆனால் என் பிரவுசரில் அந்த பீரியட் யாகு குழுமத்து மடல்களில் சில ஃபாண்ட் பிரச்சனைகள் உள்ளது வாசிக்க முடியவில்லை.. ஏதும் வழியுள்ளதா...சொல்லுங்களேன்.

**

// சில வருடங்களுக்கு முன்பு ராயர் காஃபி கிளப் என்கிற மடற்குழுவில்
மௌனி பற்றி எழுத்தாளர்கள் வே.சபாநாயகம் மற்றும் இரா.முருகன்
எழுதிக் கொண்டது, அப்போது தகுதர எழுத்துருவில் எழுதப்பட்டது-தற்போது
ஒருங்குறியில் மாற்றப்பட்டுள்ளது.//


**

1.


http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/2508

திரு ஷாஜஹான் மௌனியைச் சந்தித்தது பற்றி எழுதியிருந்தார்.


எனக்கும் அவரைச் சந்தித்த அனுபவம் உண்டு.
1979ல் சிதம்பரத்தில் மௌனி வசித்த வீட்டருகே இருந்த பஸ் ஸ்டாப்பில் விருத்தாசலம் திரும்ப
காத்திருந்தேன். பஸ் வரத் தாமதமானதால் மௌனியை - சினிமா ஸ்டாரைப் பார்க்க ஆசைப்படும் ரசிகன் போல-
பார்த்துப் பேச விரும்பிச் சென்றேன். தெருத்
திண்ணை மீது அமர்ந்திருந்தவரை நெருங்கி வணக்கம் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டேன். நானும் ஒரு எழுத்தாளன்
என்றும் அவரது கதைகளைப் படித்திருக்கி§ற்ன் என்றும் சொன்னேன். என்ன எழுதுகிறீர்கள் என்று கேட்டார். கையில்
இருந்த 78ல் வெளியாகி இருந்த என் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைக் கொடுத்து நான் எழுதும் பத்திரிகைகளை
சொன்னேன். நான் படித்ததில்லை, என் கதைகள் உங்களுக்கு பிடிக்கிறதா என்று கேட்டார். உங்கள் கதைகள் எனக்குப்
புரியவில்லை என்றேன். எது புரியவில்லை என்றார். குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை என்றேன். எல்லோரும்
புரியவில்லை என்கிறீர்களே தவிர என்ன புரியவில்லை என்று சொல்லமாட்டேன் என்கிறீர்களே என்றார்.
1960லேயே அவரது முதல் சிறு கதைத் தொகுதியான - ஸ்டார் பிரசுரம் வெளியிட்ட
`அழியாச்சுடர்`( ரூ.2.25 ) வாங்கிப் படித்திருக்கிறேன். பிறகு 67ல் வெளியான`மௌனி கதைகள்` வாங்கிப்
படித்தேன். பலமுறை படித்தும் இன்று கூட அவரது கதைகள் எதுவும் புரிய
வில்லை. புதுமைப்பித்தன் அவரை சிறுகதைத் திருமூலர் என்றார். திருமூலர் ஆண்டுக்கு ஒரு பாடல் தான் எழுதினார்
என்பார்கள். அதோடு அவரது பாடல்கள் நான்கு வரிகளும் ஒரே
மாதிரி குழப்பமாக இருப்பதாலும் கிண்டலாக அவருடன் ஒப்பிட்டாரா என்று தெரியவில்லை.
மௌனியே குறிப்பிட்டது போல அவரது கதைகளை எல்லோரும் புரிந்து கொள்ள இன்னும்
200 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ என்னவோ? அதுவரை நாம் இருக்கவேண்டுமே!

-வே.சபாநாயகம்.

*****

2. http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/2522

Re: Mouniyudan n-aanum.

அன்புள்ள சபா சார்,


இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதக் காரணம், நம் இருவருக்கும் ஒரு சிறிய

ஒற்றுமை - நீங்களும் நானும் மௌனி கதைகளைப் படித்தவர்கள். முழுக்கப்

படித்தவர்கள்.


அவை புரியவில்லை என்று மௌனியிடமே சொல்லி 'என்ன புரியலை? எல்லாரும்

அதத்தான் சொல்றா' என வெறுப்பை வாங்கிக் கொண்டு வந்தவர்கள் நீங்கள்.


'மௌனியைப் படித்து விட்டுப் பேசுங்கள்' என்று சொல்லி, அவரைப் படிக்காமல்

மனதில் ஒரு பிம்பத்தை வளர்த்துக்கொண்டு அதற்கு முட்டுக்கொடுக்கவும்,

என்னோடு சண்டை போடவும் இங்கே தயாராக வந்த என் அன்பு நண்பர்களால்

காட்டமாக விமர்சிக்கப்படுகிறவன் நான். இதுவும் மகிழ்ச்சியே.


நம் இனிய நண்பர், இளைஞர் சிவகுமார் சொல்கிறார் - 'மட்டுறுத்துனர்கள் மட்டுமே

பொருளோடு பேசுகிறார்கள். மற்றவர்கள் வெட்டி அரட்டை அடிக்கிறார்கள் என்று

நினைக்கிறீர்களா? என்று.


நான் "உளற வேண்டாம்" என்று உரிமையோடு கோபித்துக் கொண்டது

மட்டுறுத்துனரான பிரகாஷைத்தான். மற்றவர்களை இல்லை.


பிரகாஷ் மீதும் அவர் எழுத்தின் மீதும், வளர்ச்சியிலும் பெரும் நம்பிக்கை கொண்ட

நானும், பா.ராகவனும் அவரை எங்களின் இளவலாகத்தான் அன்பு செலுத்தி

வருகிறோம். அந்த உரிமையில் கடிந்து கொண்டது. அவருக்கு இது வேண்டாம்

என்று பட்டால் என் மனமார்ந்த மன்னிப்பைக் கோருகிறேன்.


"நான் படித்திருக்கிறேன். நீங்களும் படித்து விட்டு வந்து பேசுங்கள்" என்பது

அறிவுஜீவித வன்முறை என்று குற்றம் சொல்வது, தண்டி யாத்திரைக்குத் தடியோடு

போன காந்தி பயங்கரமான ஆயுதங்களைச் சுமந்து போன வன்முறையாளர் என்பது

போன்றது.


அருமை நண்பர் சிவகுமாருக்கு இன்னொரு சிறு மயக்கம் இருப்பதும் தெரிகிறது -

எது தனிவாழ்க்கை, எது பொதுவாழ்க்கை என்பதில் தான் அது.

மௌனியின் குடும்பம் பற்றிய முழுத் தகவல்களும் எனக்குத் தெரியும். இன்னும் பல

எழுத்தாளர்களின் தனிமனித வாழ்க்கை பற்றியும் நெருங்கிப் பழகி அறிந்தவன் நான்.

அவற்றை நான் இங்கே எழுதினால் அது அந்தரங்கமானதை அரங்கமேற்றுகிற

அசிங்கம். நான் அதைச் செய்ததில்லை. செய்யவும் மாட்டேன்.


எழுத்தாளன் தன் சமகால, காலத்துக்கு முற்பட்ட எழுத்தைப் பற்றியோ, அரசியல்,

கலை குறித்தோ சொல்லும் கருத்துக்கள் இப்படியான தனிமனித வாழ்க்கை பற்றிய,

அந்தரங்கம் சார்ந்த விஷயங்கள் இல்லை. இவை படைப்பாளியின் சமூகக்

கண்ணோட்டட்தோடு, மதிப்பீடுகளோடு தொடர்புடையவை. அவருடைய எழுத்தை

நாம் பார்க்கும் பார்வைக்கு வலுச் சேர்க்கிறவை - அல்லது வலுவிழக்க

வைக்கிறவை. எனவே இவற்றைப் பதிவு செய்வது தனிமனிதச் சுதந்திரத்தில்

அத்துமீறி நுழைவதாகாது. மாறாக, இம்மாதிரியான பதிவுகள் ஆராதனை

நிலையிலிருந்து நம்மை மீட்டெடுக்கும். நமக்கு எதிரே சவுகரியமான தளத்தில்

எழுத்தை, படைப்பாளியை நிறுத்தும். ஒரு மறுவாசிப்புக்கு, மறு மதிப்பீட்டுக்கு

வழிகோலும்.


இறந்தவர்களை விமர்சிக்கக் கூடாது என்பது தனிவாழ்வைப் பொறுத்தவரை

உண்மை. படைப்பை விமர்சிப்பதற்கு இது பொருந்தாது. படைப்பாளியின் சமூகம்

சார்ந்த உறவுகளை, நிலைப்பாட்டைப் பற்றி எழுதுவதற்கும் இது பொருந்தி வராது.

ஏனென்றால் இதெல்லாம் கலந்ததுதான் அவரின் படைப்புகள் பற்றிய பிரக்ஞை.


மௌனியை நான் நிராகரிக்க எனக்கு ஒரே தகுதி (இப்போதைக்கு) நான் அவர்

எழுத்தை அட்சரம் விடாமல் தேடித்தேடிப் படித்தவன். ஒரு காலத்தில் பக்கம்

பக்கமாகப் பாராயணம் செய்து பயின்றவன். அப்புறம் அந்த மாயையிலிருந்து

விடுபட்டு, நம்பிக்கை இழந்து போனவன்.


பிரமிள், அஸ்வகோஷ், நு·மான் என்று நுண்ணிய விமர்சகர்கள் - படைப்பாளிகள்

(நான் ஜெயமோகனைச் சொல்வதைத் தவிர்க்கிறேன் - அவர் நண்பர் என்பதால்)

மௌனி மேல் நம்பிக்கை இழந்து போனது என்னை விடவும் அதிகம்.


என் நம்பிக்கை இழப்புக்கு என் கலை இலக்கியச் சார்பு ஒரு காரணியாக

இருக்கலாம். மார்க்சீயர்கள் இலக்கியத்தில் மனிதம் போற்றும் எந்தப் பழமையையும்

உரக்கக் கூவிச் சொல்கிறவர்கள். எந்தப் புதுமையையும் மனமாற வரவேற்பவர்கள்.

பின் நவீனத்துவமோ, மாந்திரீக யதார்த்தமோ, சர்ரியலிசமோ - இலக்கிய அனுபவப்

பகிர்வுக்கு ஒரு தடை இல்லை. இவை மேலதிகம் வாசல்களையே

திறந்திருக்கின்றன.


ஆனால் நம்பிக்கையின்மையின் அடிப்படையில் எழும் எக்சிஸ்டென்ஷியலிசத்தையும்

அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி வாழ்க்கையில், சக மனிதர்களின் மேல்,

சமுதாயத்தின் மேல் அவநம்பிக்கையைக் கனமாகக் கவியவிட்டுப் போகும்

படைப்புகளையும் நிராகரிப்பதே முறையானது.


படைப்பாளிக்குச் சமூக அக்கறை இருக்க வேண்டும் என்று கிளிப்பிள்ளை மாதிரிப்

பாடம் சொல்ல மாட்டேன். தான் வாழும் காலமும், சமூகமும், அரசியலும்,

வாழ்க்கையும் கொஞ்சம் கூடப் பாதிக்காமல் வெற்றிடத்தில் கருக்கொள்ளும்

இலக்கியம் படைத்திருந்தால் பாரதியை, பாரதிதாசனை நாம் நினைவு

வைத்திருப்போமா இன்னும்?


('பாரதிக்குக் கவிதை எழுதத் தெரியாது. அவன் எழுதியது மகா அருவருப்பானது'

என்ற ஒற்றை வாக்கியமே போதும் மௌனியைப் பற்றிய மதிப்பீடுகளை

மறுபரிசீலனை செய்ய வைக்க. அன்புள்ள சிவகுமார், நீங்களும் நானும் பெரிதும்

மதிக்கும் ஜெ.கே அவர்களிடம் மௌனி பற்றிக் கேட்டுப் பாருங்களேன்!)


மௌனியின் படைப்பிலக்கிய வாழ்வை (கவனிக்கவும், நான் சொந்த வாழ்வைப்

பார்க்கவில்லை)ப் பார்த்தால் பளிச்சென்று புலப்படும் ஒரு விஷயம் - அவர்

மணிக்கொடியில் எழுதினாலும், புதுமைப்பித்தன் ஆசிரியராக இருந்த கதிரில்

எழுதினாலும், விஜயபாஸ்கரனின் சரஸ்வதியில், எம்.வி.வியின் தேனியில்,

சி.சு.செயின் எழுத்தில் எழுதினாலும், சமகால அரசியல், சமுதாய, எழுத்திலிருந்து,

வாழ்க்கையிலிருந்து ஒதுங்கியே இருந்திருக்கிறார்.


தனக்குத்தானே ஒரு மாயக் கூண்டைச் சிருஷ்டித்துக் கொண்டு அதன் உள்ளே

கண்ணை மூடிக்கொண்டு இருந்து மனதில் ஏற்பட்ட பயங்களை அசைபோடுவதே

அவருக்குக் கதை எழுதுவது. அந்தத் தனிமையில் அவருக்குச் சக மனிதர்கள் பற்றி,

அவர் இயங்கும் சமுதாயம் பற்றி என்ன அக்கறை இருந்திருக்கப் போகிறது?

அவருடைய மன வெறுமையின் நீட்சியே எழுத்தாகிறது.


"நான் இருப்பது, அதுவும் பெரிய பொய்தானே. நிற்கும் பொய்யைத்தானே நிஜமென்று

காணப் பக்கத்தில் வருகிறார்கள்? பொய்யை நம்பும் நீயும் இறக்கப் போகிறாய்.

இறப்பைத் தவிர உலகில் நடக்கிறது எது நிஜம்?" (குடை நிழல்)

என்றும்,


"அல்ப மகிழ்ச்சி இந்த சிருஷ்டியில் கொள்ளும் ஆனந்தம், உயிர்

கொடுக்கப்பட்டவுடனே அவை யாவும் உடனே அழிவிற்குத் தாமே எல்லாம் விரைந்து

செல்கின்றன?" (மாபெரும் காவியம்)

என்றும்,


"நடப்பில் என்ன முழுமை காண இருக்கிறது? நடந்ததின் சாயையும் நடக்கப்

போவதின் நிச்சயமின்மையும் கலந்து புதிராகப் படவில்லையா?" என்றும்

கழிவிரக்கத்தில், விரக்தியில் புலம்பும் படைப்பாளியோடு என்ன விதமாக வாசகன்

ஊடாட முடியும்?


தமிழில் எழுதினாலும் அம்மொழி மேல் மௌனிக்கு எந்த விதமான நம்பிக்கையும்,

பரிவும் இல்லை. சக மனிதன் மேல் நம்பிக்கை இல்லாத ஒருவருக்கு, ஊடகமான

மொழி மேல் என்ன நம்பிக்கை வரும்?


ஆனாலும் மொழி அவருக்கு வேண்டித்தான் இருக்கிறது. சிக்கலான மொழியாடலை

வலிந்து உருவாக்க. போலியான கருத்தாங்களைக் கட்டி நிறுத்த. தன்னை

உன்னதமாக உணர. அடுத்தவர்களுக்குப் பூடமாகச் சொல்லி மருட்ட. அவர்கள் தன்

உன்னதத்தில் மெய்மறந்து செயல் மறக்க வைக்க.


"ஆதாரம் தெரிந்தும், தவறை (பிரமை) தவிர்ப்பது எப்படி .. தவறென உலகைக்

காண்பதில்தான் போலும். யாரோ ஒருவன் கனவின் சாயையெனத் தன் கனவில்

உலகைக்கண்டு களித்திருந்தாள் போலும்" (தவறு)

என்றும்,


"வேறு ஒரு விதமாகவும் அது மரமில்லை என அங்கே அப்படி நின்றிருக்க

முடியாதென்றும் தோன்றவிருப்பதே அது மரமெனத் தோன்றப் பொதுவான

அத்தாக்ஷ¢யாக இருந்து நிச்சயமாக மரமெனவே இருந்தது." (அத்துவான வெளி)

என்றும்


"மிகைப்பட்டதினால் ஒலிக்கப்பட்டவன் என்ற உணர்வு கொள்ளும் ஒரு வகை

இனிப்பு - இல்லை என அடித்து நிரூபிக்கும் ஆர்வத்தில் அமைதியற்ற அலைகளைத்

தான் அவள் மனத்தில் எழுப்பினான்" (நினைவுச் சூழல்)

என்றும்


"நீங்கள் எனக்குச் செய்த இச்சிறு காரியத்தை ஏன் செய்தோமென மனக்

கசப்பின்றி நினைக்க நான் யார் என்று தெரிந்து கொண்டபின் உங்களால் முடியுமா

என்பதை நீங்கள் இப்போது சொல்ல முடியுமா? (குடை நிழல்)

என்றும்

மௌனி எழுதிப்போவது இதற்குச் சிறு உதாரணங்கள்.


சபா சார், உங்களுக்கு மட்டுமில்லை, எனக்கும் இதெல்லாம் புரியவில்லை.

மௌனிக்குப் புரிந்திருக்குமா அவரைப் படித்த, படிக்காத ஆராதகர்களுக்குப்

புரிந்திருக்குமா என்று தெரியவில்லை.


மௌனியே அபூர்வமாகத் தன் படைப்பாக்க முறையைப் பதிவு செய்திருக்கிறார்.

அவ்வப்போது மனதில் தோன்றும் அமைப்புகளை (கன்ஸ்ட்ரக்ட்)ப் பிடித்து

வைத்துவிட்டு, அப்புறம் அவற்றைச் சுற்றிக் கதை எழுப்புவது.


இதில் அடங்குகிறவை -

"நாம் சாயைகள் தானா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?" (அழியாச் சுடர்)

மற்றும் "ஆழித் தண்ணீரில் எல்லை பிரித்துக் கோடிட்டதுதானோ தானோ நம்

வாழ்க்கை?" (எங்கிருந்தோ வந்தான்), இன்னும், "தலை எழுத்தையா மாற்றி எழுதப்

போகிறேன் - தலை எழுத்தைத் தான் எழுதுகிறேன்" (மாறுதல்); மற்றும்,

"உங்களைத் தனியாக உங்களுக்காகவே நான் உங்களை மணக்கவில்லை"

(சிகிச்சை).


அவருடைய படைப்பாக்கம் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம்தான். ஆனால் இந்த

வார்த்தை மயக்கமும் மொழி மயக்கமும் தான் கதைக்கு அடிப்படை; தான்

இயங்கும் சூழலின் பாதிப்பை விட, இதைச் சுற்றி வார்த்தையைக் கட்டி எழுப்பிப்

பதிவு செய்வதுதான் இலக்கியம் என்றால் நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை.


மௌனியைக் கா·ப்காவோடு ஒப்பிடுகிறார்கள் சிலர். கா·ப்கா இருந்தால், வக்கீல்

நோட்டீஸ் அனுப்பியிருப்பார் இப்படி அவமதித்ததற்காக. (கா·ப்காவைப்

படித்துவிட்டு இதைச் சாட கீபோர்ட் முன் உட்காரும் படி என் இளம் நண்பர்களை

வேண்டுகிறேன் - எப்படியாவது எனக்குப் பிடித்ததை உங்களையும் படிக்க வைக்க,

படித்தபிறகு, பிடிக்காவிட்டாலும் விவாதம் செய்ய உங்களைத் தூண்ட நான்

கையாளும் 'அறிவு ஜீவித வன்முறை' இது :-)


சமூகத்தை விட்டு விலகாமல், அதன் மீதான விமர்சனத்தைத் தன் சர்ரியலிசக்

கதைகளில் வைத்த (மெட்டமோர்·பசிஸ், அந்நியன் போன்ற கதைகள்)

கா·ப்காவோடு, எதனோடும் ஒட்டாமல் தானே சிருஷ்டித்த மாய உலகின்

ஆயாசங்களில் மூழ்கியிருந்த மௌனியை ஒப்பிடவே முடியாது.


முடிக்கும் முன்னால் -

லா.ச.ரா மேல் மௌனிக்கு இருந்த கோபம் புரிய லா.ச.ராவின் " நான் சௌந்தர்ய

உபாசகன்", மௌனியின் "அழகின் பாழ்பட்ட வசீகரன்" இரண்டையும் பக்கத்தில்

வைத்துப் பார்த்தால் போதும்.


ராஜேந்திர சோழன் (அஸ்வகோஷ்) சொல்வது போல், மௌனிக்குத் திராவிடப்

பாசறை எழுத்து மேல் ஒரு கோபம் இருந்தது - யார் எழுத்து மேல்தான் இல்லை

அவருக்கு. ('பகலில் எரியும் தீவட்டிகள்' என்ற மௌனியின் பிரயோகம்

உதாரணமாகக் காட்டப்படுகிறது அஸ்வகோஷால்).


ஆனாலும், சமயத்தில் மௌனி எழுத்து, எதை அவர் இளக்காரம் செய்தாரோ,

அதையே போலி செய்ய முற்படுவதையும் காணலாம் -


"விட்டில் பூச்சிகள் போன்று விளக்கை வட்டமிட்டே அழிவதுதானா ஆடவர்

வாழ்க்கை? கிட்டே நெருங்கிக் கவர்ச்சி கொடுக்க எப்படி முடியும் பெண்களால்?

இருள் சுடரைக் கொண்டு விளக்காக முடியுமா?" (சாவில் பிறந்த சிருஷ்டி)


மற்றப்படி, இலக்கியச் சநாதனி மௌனியைப் பற்றி அப்புறம் ஒரு நாள்

சாவகாசமாகப் பேசலாம் - "பெண் தன் பலத்தை மறக்க, மறைக்கத்தான்

மனைவியாகிறாள். ஒன்றிலும் கட்டுப்படாது தனியே எட்டி நின்று உற்றுப் பார்ப்பதே

பெண்மையின் கருவிழிகள் தான். சேகருக்கு சுப்பையரின் மனைவி

அருவருப்பைத்தான் கொடுத்தாள்" --மனக்கோலம்).


பாரதி பாட்டு, சுப்பையர் மனைவி - எதுதான், எவர்தான் அருவருப்பில்லை

மௌனிக்கு. ஈரம் வரண்ட மனதில் வேறென்ன வரும்?

போகட்டும்.


நாம் இங்கே பேச நிறைய இருக்கிறது; மௌனியை எல்லோரும் படித்துவிட்டு

வந்ததும் மீதியைப் பேச உத்தேசம். அதுவரை பரிமாற ஏகப்பட்டது இருக்கிறதே.


அன்புடன்,
இரா.மு


**

3. http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/2586

Vanakam.

For Your Information Please....

திண்ணை (சிவக்குமார்): மௌனியின் "மாறுதல்" மிகப் பிடித்த கதை என்று ஒரு முறை
நீங்கள் சொன்னீர்கள். .

ஜெய காந்தன் : அப்போதிருந்த மன நிலையைச் சொன்னேன். கொட்டாவி விடும்போது
என்னைப் படம் எடுத்து விட்டு எப்போதும் கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பேன் என்று
நினைத்தால் தவறு.

மௌனியின் தமிழ் நடை பலருக்கு ஆயாசம் தரும் அதனாலேயே அது எனக்குப் பி
டிக்கும். அது ஆங்கில பாதிப்புக்கு ஆட்பட்ட ஒரு புதிய உரை நடை. அதை இன்னும்
மேற்கொண்டு வளர்க்கலாம்.

திண்ணை (துகாராம்): மௌனி ஒரு முறை தமிழ் எனக்குப் போதுமான மொழி
இல்லை அதனால் எழுதுவதை நிறுத்தி விட்டேன் என்று சொன்னார்.

ஜெயகாந்தன் : நல்ல வேளை. தமிழ் பிழைத்தது. ஆனால் எழுதுகிற வரையில் சிறப்பாகத் தான்
இருக்கிறது.

http://www.thinnai.com/pl100101.html

***

4. http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/2634

மௌனியை நான் சந்தித்த போது `எல்லோரும் புரியிலேங்கிறீங்களே தவிர என்ன புரியிலேன்னு
சொல்லமாட்டேங்கிறீங்க` என்று அவர் சொன்னது வெறுப்பினால் என்று சொல்லமுடியாது என்றாலும்
ஒருவித சலிப்புடனும்ஆதங்கத்துடனும் சொன்னதாகவே எனக்குப்பட்டது. முகத்துக்கு நேரே நான் அவரது கதைகள்
புரிய வில்லை என்று சொன்னதை நிச்சயம் அவர் ரசித்திருக்கமாட்டார் என்றுதான் நினக்கிறேன்.

-வே.சபாநாயகம்.

**

MSK / Saravana said...

"மௌனியின் கதைகள்" படிக்க தூண்டி விட்டீர்கள்..

புத்தகம் பற்றியும், பதிப்பகம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்..

WordsBeyondBorders said...

"யாருடைய நடமாடும் நிழல்கள் நாம்?"

மறக்க முடியாத வரி.