Tuesday, November 18, 2008

இரயில் சிநேகிதம் - இல்லை விரோதம்.


அவர் ஏதாவது பள்ளி தலமை ஆசிரியராய் இருக்கலாம், இல்லை ஏதாவது நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி அதிகாரியாக இருக்கலாம், இல்லை அரசு அலுவலகங்களில் இருக்கும் ஒரு நேர்மையான அரசு அதிகாரியாக இருக்கலாம். மேலும் பெண்குழந்தைகளற்ற தகப்பனாய் இருக்கலாம். நெற்றியில் சிறியதாய் வைத்திருந்த குங்குமப்பொட்டும், சிறிதே நரைத்திருந்த மெல்லிய மீசையும், சிறிய கண்களும், முழுக்கை வெளிர்நீலச்சட்டையும், அடர் நீலத்தில் அணிந்திருந்த முழு கால்சராயும் எனக்கு இதைத்தான் உணர்த்திக்கொண்டிருந்தன.

எனக்கு நேர் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த மஞ்சளும் நீலமும் கலந்த, கழுத்தில் கருகமணியிட்டிருந்த அந்த சுரிதார் பெண்மணி உரத்த குரலில் ஆட்சேபித்துக்கொண்டிருக்கும் போதுதான் நான் அந்த மனிதரை இத்தனை தீவிரமாகப் பார்த்தேன்.

அவள் மனம் வெகுண்டெழுந்தவளாக தீவிரமாக குரலெழுப்பி கூறிக்கொண்டிருந்தாள். " டோண்ட் லுக் அட் லைக் திஸ், நான் பார்த்ததில் எந்த தவறும் இல்லை, அதற்காக நீங்கள் அவ்வாறு பார்க்க வேண்டிய தேவை இல்லை, முதல் வகுப்பில் பெண்களுக்கென்ற தனி இருக்கையும், அடுத்தது பொதுவான இருக்கையும் தான். இடமிருந்தால் நாங்கள் எங்கு வேண்டுமானாலும் உட்காரலாம், ஆனால் பெண்கள் என்று எழுதியிருக்கும் இருக்கைகளில் வேறு இடமில்லாதபோது ஆண்கள் அமர்ந்திருப்பது தவறுதான் அதுவும் ஒரு பெண் இடமின்றி நின்று கொண்டு வர அந்த இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்து வருவது தவறுதான் அதனால் தான் நான் அவ்வாறு பார்த்தேன் அதற்காக நான் இந்த இருக்கையில் அமர்ந்ததும் நீங்கள் இப்படி பார்க்கவேண்டிய தேவையில்லை. ஆண்களின் இருக்கை என்று குறிப்பிட்டிருந்தால் நாங்கள் இவ்வாறு ஆக்கிரமித்துக்கொண்டிருக்க மாட்டோம்" என்று கூறிவிட்டு கையிலிருந்த புத்தகத்தில் தன்னை அமிழ்த்திக்கொள்வேதே போன்று அமைதியானாள்.

அன்றென்னவோ அந்த மின்சார வண்டியின் முதல் வகுப்பில் கூட்டம் அதிகம் இல்லைதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கைகள் காலியாகத்தான் இருந்தது. அந்த பெண்மணி இத்தனை உணர்ச்சிவசப்பட்டதில் உடன் பாடு இல்லையென்றாலும் யாரை நோக்கி இங்கணம் பேசுகிறாள் என்பதைக்காணவே நான் அவரை சிறிது ஊன்றிப்பார்த்தேன்.

இந்த நேரடித்தாக்குதலை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை போலும், மிகவும் தர்ம சங்கடத்துடனும் ஒப்புமையற்றும் உடனே அந்த பெண்கள் எனக்குறிப்பிட்டிருந்த இருக்கையை விட்டு எழுந்திருக்கவில்லையென்றாலும் அதில் முள்மேல் அமர்வது போல் அமர்ந்திருந்தார். மிகவும் தாழ்ந்த குரலில் அடிபட்ட மனோபாவத்துடன் அருகிருப்பவரிடம் ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தார். இத்தனையையும் நான் மவுனமாக கவனித்துக்கொண்டே இருந்தேன்.

அடுத்த நிலையம் வந்தது மீண்டும் வண்டி கிளம்பியதும் அந்த இருக்கை காலியாக இருந்தது. நானும் அவர் இறங்கி விட்டாரோ என எண்ணி சுற்றும் முற்றும் பார்க்க அவரோ வாயிலுக்கு மிகவும் பக்கத்தில் சென்று நின்றுகொண்டே என்னையே நோக்கிக்கொண்டிருந்தார். நான் சிறிதே துணுக்குற்றேன். பின் கையில் இருந்த புத்தகத்துள் ஆழ்ந்து போனேன். மேலும் பல இருக்கைகள் காலியாகிக்கொண்டே போனது ஆனால் அவர் மட்டும் எந்த இருக்கையிலும் அமராமல் நின்றுகொண்டே வந்தார். நான் சிலசமயம் ஏன் இவ்வாறு என எண்ணி அவரைப்பார்த்துவிட்டு என் புத்தகத்தில் மூழ்கிக்கொண்டே இருந்தேன்.

நான் இறங்கும் நிறுத்தத்திற்கு ஒரு நிறுத்தம் முன்பாக அவர் இறங்கிக்கொண்டார். சன்னல் ஓரம் எனைக்கடந்து சென்றபோது பார்த்த பார்வையில் கொஞ்சமும் தோழைமையில்லை மாறாக வெகு விரோதமான கண்களூடே கடந்து போனார்.

அந்தப்பெண்மணியின் பேச்சை விட என் பார்வையே அவருக்கு மிகவும் தர்மசங்கடத்தை தந்திருக்கும் போல.....

14 comments:

பாச மலர் said...

அந்த ரயில்பெட்டியில் அமர்ந்து நிக்ழ்வுகளைப் பார்த்தது போன்றதொரு உணர்வு..நல்ல புனைவு

திவா said...

சில சமயம் மௌனம் பலமானது! :-))

அருள் said...

இயல்பாய் ஒரு பதிவு...

பிடித்திருந்தது.

Saravana Kumar MSK said...

தர்மசங்கடத்தை உருவாக்கியவர்களை விட, அந்த நிகழ்விற்கு பின்பான பிறர் பார்வை, மிகவும் வலி கொடுக்கும்.. கோபம் கொடுக்கும்..

நல்ல புனைவு..

ஆட்காட்டி said...

அநுபவம்.

கென்., said...

இருந்தாலும் ஒரு இருக்கைக்காய் ஆண் மகனை துன்புறுத்தியதை வன்ன்மையாக கண்டிக்கிறேன்.

ஆணாதிக்க வாதிகள் சங்கம்'
108 வது கிளை சென்னை

அனுஜன்யா said...

தோழர் கென்,

இந்த அத்துமீறலை, நம்ம பெருந்தலை அய்ஸ் அவர்களுக்குத் தெரியப்படுத்தி ஒரு போராட்டம் நடத்த வேண்டும்.

அனுஜன்யா
செயலாளர்

சந்தனமுல்லை said...

:-)

கிருத்திகா said...

வாங்க மலர், நன்றி..
ஆமாம். திவா - பல நேரங்களில் மௌனம் நம்மை நின்று கொல்லும் :)

நன்றி அருள்
நன்றி சரவணக்குமார்.
நன்றி ஆட்காட்டி - சில சமயம் அனுபவம் தான் மிகச்சரியான ஆசான்.
நன்றி சந்தனமுல்லை

கிருத்திகா said...

கென், அனுஜன்யா...
"ஆணாதிக்க வாதிகள் சங்கம்'
108 வது கிளை சென்னை"
இவ்ளோதானா... பத்தாது போலிருக்கே... சங்கத்துக்கு ஆள் பிடிக்கற வேலைய உடனே ஆரம்பிக்கப்பூ

துளசி கோபால் said...

ஆஆஆஆஆ......புனைவா?????

நெசமுன்னு நம்பிட்டென்லெ!

தீரன் said...

ரொம்ப மொறச்சுடீங்க போல... பாவம் அந்த மனுஷன்...நொந்து நூடுல்ஸ் அயிருப்பாறு...

இனியவள் புனிதா said...

நல்ல புனைவு!!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

இது கதையல்ல நிஜம்தானே.

அந்தப்பெண்மணியின் பேச்சை விட என் பார்வையே அவருக்கு மிகவும் தர்மசங்கடத்தை தந்திருக்கும் போல.....


:-)