அவளும் நானும் பெரும்பாலும் ஒத்தே இருப்பது எங்கள் வழக்கம். ஒத்திருக்கும் வேளைகளில் ஒருவரை ஒருவர் முந்த முயற்சிப்பதும் தவிர்க்க முடியாததாகிறது. ஆனால் அவள் எப்போதுமே பெண்மைக்குரிய நளினங்களோடும், ஆளுமைகளோடும் வெகு வேகமாய் எந்த இடத்திலும் வியாபிக்கும் குணமுடையவள். நானோ ஆணுக்கே உரிய வலிமையோடு மிகவும் இருகப்பற்றி இளப்பாறுபவன்.
இங்கும் அப்படித்தான், நாங்கள் இருவரும் ஒரே சமயத்தில் தான் இந்த வீட்டிற் புகுந்தோம். ஆனால் அவளின் ஆளுமைகள் மட்டுமே அதிகம் வியாபித்துள்ளது. மேலும் தொடர்வதற்கு முன்னால் இந்த வீட்டைப்பற்றி சிறிய அறிமுகம்.
இந்த வீட்டின் தலைவன் சீராளன் (ஸ்ரீனிவாசனாயிருக்கும் என்று எண்ணுகிறேன்) மிகுந்த நிதானமும் அதற்கேற்ற அன்பும் உடையவன். (பலசமயம் அந்த நிதானத்தில் ஒரு அக்கறையற்ற தன்மை உள்ளது என்று அவன் பாரியை மனத்தாங்கக் கேட்டிருக்கிறேன்.) மெல்ல மெல்ல ஒரு விதை நீர் உறிஞ்சுவது போல் இந்த வீட்டின் அத்தனை வேர்களிலும் அவன் ஆளுமை பரவி நிற்பதை நான் பலசமயம் கண்கூடாகக் கண்டு பொருமியிருக்கிறேன். ஆனால் என்னவளோ இந்த நிதானம் மட்டுமே அவளுக்கான தளத்தை இங்கு ஸ்தாபிதம் செய்தது என்று இன்றும் என்னோடு வாதிப்பதுண்டு.
அவன் மனைவி சோமை (சோமசுந்தரியாயிருப்பாள் என்று எண்னுகிறேன்) இவனுக்கு நேர்மாறானவள். பரபரப்பும், மிக துரிதமாய் பரவிச்செல்லும் ஆளுமையும் கொண்டவள். ஆரம்பத்தில் எனக்கான அந்த வீட்டின் தளங்களை ஓரளவு நிர்ணயித்துத்தந்தவளும் அவள்தான். எதிலும் அதீதமானவள் அன்பு செலுத்தவதிலாகட்டும் இல்லை சீற்றம் கொள்வதிலாகட்டும் வெகு வேகமானவள். இலகுவானவள். அப்போதைய நிகழ்வுகளை மட்டுமே சுமந்து செல்பவள். கடந்த காலங்களின் காயங்களை கட்டி இழுக்கும் திறனற்றவள் அதனால் தானோ என்னவோ என்னவளும் அவளோடு அதிகம் இணக்கமாயிருப்பதுண்டு. என்னை கொஞ்சம் கொஞ்சமாய் புறந்தள்ளியதில் என்னவளுக்கு அத்தனை மகிழ்ச்சி அதில் ஒரு தனி சுகம் (கடைசியில் சொல்வதாய் இருந்த என்னவளின் பெயரை இப்போதே சொல்லிவிட்டேன் மன்னித்து விட்டு தொடர்ந்து செல்லுங்கள்)
புது வரவாய் வந்த அவர்களின் இளம் மகவை சுமந்த நாட்களில் என்னை மறந்தே போனார்கள். எடுத்தும், கொடுத்தும் கொண்டாட ஆளில்லாத நாட்களில் கூட என்னைப் புறக்கணித்து தங்கள் இருவருக்குள்ளேயே என்னவளை சிறைவைத்துக்கொண்டார்கள். நான் சமயம் பார்த்து காத்திருந்தேன். வராமலா போகும் எனக்கான நேரம். வந்தது பேரிடியாய் மகன் பிறந்தான் கூடவே பிணியும் நொய்மையும் சேர்ந்து வந்தது. மருத்துவமனையே கதி எனக்கிடந்தனர், அந்தோ பரிதாபம் என்னவள் முதல் முறையாய் புறக்கணிக்கப்பட்டாள் நான் மெல்ல மெல்ல என் இயல்பான வலிமையோடு வந்திறங்கினேன் வலி பழகிய அவர்கள் வாழ்க்கையில் வழியும் பிறந்தது, குழவியின் குறுஞ்சிரிப்பும், மழலையும், சேதனமும், சாகசமும் என்னை ஒதுக்கத்துவங்கியது மீண்டும் என்னவள் ஆட்கொள்ளத்துவங்கினாள், நானும் என் இருப்பை அவர்களின் கோபங்களின் கூடேயும், அழுகைகளின் இடையேயும் சுற்றத்தவரின் எதிர்பார்ப்புக்களிலேயும் மெய்யிருத்திக்கொண்டாலும் அந்த மூவரின் இணக்கத்தில் நான் ஒதுக்கப்பட்டேன் என்பதே உண்மை. மூவர் நால்வரானார், அந்த இளம் குழவி தாயை குணத்திலும், உருவத்தில் தந்தையையும் கொண்டான், பெரும் வேகமும், பேர் அதிர்வும் கொண்டவனான், பார்க்கும் கேட்கும் அனைவரையும் அனைத்தையும் தன்னுள்ளே சுருட்டி இழுக்கும் தன்மையனன்.
ஆஹா இந்த வீட்டின் மற்றொரு நபரை உங்களுக்குச்ச்சொல்லாமல் என்னால் இந்த கதையை முடிக்க முடியாது அவள் என்னையும், என்னவளையும் அநேக காலம் ஆதரித்து எங்களோடு வாழ்ந்து வந்தாலும் அதன் சுவடுகளை அவ்வப்போது தடவிப்பார்த்து சுகமோ துக்கமோ அடைபவள், பலசமயம் என்னோடு மிகப்பிரியமாய் கைகோர்ப்பவள் அப்போதெல்லாம் என்னவள் அழும் அழுகுரல் எனக்கு மிகவும் நாராசமாயிருக்கும். அந்தக்கிழவிக்கு அவள் மீண்டும் மீண்டும் சொல்வாள், இறந்த காலங்களை சுமந்து திரியாமல் என்னோடு வந்து விடு என்று என்ன செய்ய வயதிற்கென்ற மூப்புக்களையும் புறந்தள்ள முடியாதே.. என்னிருப்பிற்கான காரணங்களையும் தான்.
சில துக்கங்களோடும் அதிக சந்தோஷங்களோடும் இன்றும் அந்த வீடு பயணிக்கிறது அதோடு கூட நாங்களும் எங்களுக்கான ஆளுமை வலைவிரித்து காத்திருக்கிறோம்.
தேவையற்ற கோபங்களினாலும் அசூயைகளினாலும், பற்றுணர்வற்ற தன்மைகளினாலும் பளுவான கடந்த காலங்களினாலும் ஆன வலையோடு நானும்.
ஒத்திசைவாலும், உள்ளக்கனிவுகளாலும், ப்ரியங்களினாலும், மன்னிப்புக்களாலும், இறைஉணர்வாலும், தோழமைகளாலும், பெருத்த காதலாலும் இலகுவான மனோநிலைகளாலும் பின்னப்பட்ட வலைகயோடு என்னவளும் காத்திருத்தலோடு அவர்களோடே பயணிக்கிறோம்.
8 comments:
சுயசரிதை நன்றாக வந்திருக்கிறது கிருத்திகா...சற்றே கனமான வார்த்தைகளில் ஆழமான சிந்தனைகள்..(முதல் முறையாக) உங்கள் எழுத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள 3 தரம் படிக்க வேண்டியிருந்தது...
முதிலில் புதிராய் இருந்து பின் புரிய ஆரம்பித்தது..
நன்றி மலர், தொலைந்து போன மொழிகளின் தேடுதல் களம் தானே இந்த முயற்சிகள்... (இப்படி சொன்ன நான் ஒரு இலக்கிய வாதி ஆனா உண்மைய சொன்னா சும்மா நானும் ஜமாலன் மாதிரி முயற்சித்துப்பார்த்தேன் அவ்வளவுதான்)
கலக்கலா இருக்குங்க அக்கா...
கலக்கலா இருக்குங்க அக்கா...
மலர் சொன்னது போல் முதல் தடவை படிக்கும்போது புரிந்துகொள்ள கடினமாய இருந்தது, மறுமுறை மனம் யோசிக்க ஆரம்பித்தது!!
வாங்க சிவா, ரசிகன்.
நன்றி இசக்கிமுத்து.. எழுத்துக்கள் சிந்திக்கத்தூண்டுவதுதானே ஒரு எழுத்தாளனின் குறிக்கோளாயிருக்க முடியும்.
நல்லெழுத்தில் நல்ல பதிவு...
தினேஷ்
படித்தேன். புரிந்துக்கொண்டேன்.
ஆனால் இருமுறை படிக்கவைத்தது என்பதே உண்மை.
வித்தியாசமான கோணம்.
Post a Comment