Sunday, February 10, 2008

எஸ். ராமகிருஷ்ணனின் - யாமம்.- உயிர்மை வெளியீடு - ஒரு பார்வை



ஒரு வரலாற்று நாவலுக்குரிய பெரும் முனைப்போடு எழுதப்பட்ட சமூக நாவல். கதைக்களம் நம்மைச்சுற்றியுள்ள பகுதிகளாயும், கதை மாந்தர்கள் பெரும்பாலும் நமக்கு மிகவும் பரிச்சியப்பட்ட தளங்களிலிருந்து பேசுபவர்களாய் இருப்பதாலேயும் நம்மால் கதையின் ஓட்டத்தில் மிக எளிதாக கலந்து கொள்ள முடிகிறது. எதார்த்தங்களை அதிகம் மீறாத புனைவுகள் பெறும் அங்கீகாரங்களை இப்புத்தகமும் பெற்றுச்செல்கிறது.

மதரா பட்டணம் உருவாகும் விதமும், படிப்படியாய் அது ஆங்கிலேயர் வசம் தனை இழக்கும் பாங்கும் மிகவும் எளிமையாக அதே சமயம் அதிக வார்த்தை விரயமின்றி எஸ்ராவால் சொல்ல முடிந்தது மிகவும் ஆசுவாசமாய் உள்ளது.

முக்கிய கதை மாந்தர்களான பத்ரகிரி, கிருஷ்ணப்ப கரையாளர், அப்துல் கரீம், சதாசிவப் பண்டாரம், ஆகியோர் ஒருவருக்கொருவர் நேரடியாய் தொடர்பற்றிருந்தாலும் இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு மாயக்கயிராக “யாமம்” எனும் ஒரு வாசனைத்திரவியமும் கதை மாந்தருள் ஒருவராக திகழ்கிறது. வாசனைகளின் பின்னே செல்லும் மனித மனமும் அம்மாந்தர்களின் வாழ்க்கை முடிவுகளும், வாசனைகளைத் துறந்து ஓடும் சதாசிவப்பண்டாரத்தின் வாழ்வும் அந்திமத்தில் அவர் வாழ்வின் சுகந்தமும் நேரடியாய் பேசப்படாத கருப்பொருளாகிறது.

இருளும், இரவும் எப்போதும் போலவே எஸ் ராவால் தவிர்க்கப்படாத ஒன்றாக இங்கேயும் பேசப்பட்டுள்ளது.


அப்துல் கரீமின் மனைவி சுரையா, வாஹிதா, ஏழைக்குடும்பத்தில் பிறந்து சிறு ஆசைகளோடும், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்களோடும் அப்துல் கரீமின் குடும்பத்தின் சந்தோஷத்திலும், துக்கத்திலும் பங்கு கொள்ளும் சந்தீபா, வேசையாக படைக்கப்பட்டிருக்கும் எலிசபத், சொத்துக்களையெல்லாம் தொலைத்து விட்டு அதற்காக கால நிர்ணயங்களில்லாமல் போராடிக்கொண்டிருக்கும் கிருஷ்ணப்ப கரையாளார், ஓராயிரம் வளங்களை தன்னுள்ளே கொண்டிருந்தாலும் தன் இரகசிய நன்பனுக்கு மட்டுமே தனை வெளிக்காட்டிக்கொண்டிருக்கும் மேல்மலை (மாஞ்சோலையாயிருக்கும் என்று எண்ணுகிறேன்), தனயனுக்கு தந்தையின் இடத்தில் இருந்து வழிகாட்டும் பத்ரகிரி, ஏதோ ஒரு உணர்வுகளால் உந்தப்பட்டு மைத்துனரோடு தனைப்பிணத்துக்கொள்ளும் தையல், உல்லாசமான உணர்வுக்குவியலோடு சற்குணம், திருநீலகண்டம் என்று தானே பெயரிட்ட ஒரு விலங்கினத்தோடு தன்னை பிணைத்துக்கொண்டு எதையோ தேடி அதனுடன் பயணிக்கும் சதாசிவப்பண்டாரம், இப்படி அனைவருமே தன்னியல்புகளை மீறி சூழ்நிலைகளின் கரங்களில் கைதிகளாகி பின் எதிர்மறை உணர்வுகளோடு மீள்வதையும் அதை கண்கூடாகக் கண்டு தன்னுள்ளே பொதிந்துகொள்ளும் ஒரு மவுன சாட்சியாக இரவும் நம்மோடே பயணிக்கிறது.

யாமம் எனும் நறுமணத்தை உருவாக்கக்கூடிய இரககசியத்தை கரீமின் மூதாதையர்களுக்கு எடுத்துச்சொல்லும் “சூபி ஞானி அல் அசர் முஸாபா” கேட்கும் கேள்விகளும் அதற்குண்டான பதில்களும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் பக்கங்கள், வாழ்க்கை பற்றிய பல கேள்விகளோடு தேடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு கயிற்றின் நுனியை காட்டிச்செல்லும் வல்லமை கொண்ட பக்கங்கள் என்று சொன்னால் அது மிகயாகது.


எஸ்ரா தன் அடுத்த பரிணாமங்களை நோக்கி நகரத்தொடங்கிவிட்டாரோ என்ற கேள்வியும் தவிர்க்க முடியாததாகிறது.


15 comments:

ரவி said...

இப்ப புத்தகத்த வாங்கி படிக்கலாங்கறீங்களா, இல்ல வாங்காதீங்கன்றீங்களா ?

//எஸ்ரா தன் அடுத்த பரிணாமங்களை நோக்கி நகரத்தொடங்கிவிட்டாரோ என்ற கேள்வியும் தவிர்க்க முடியாததாகிறது.
//

ஒன்னும் விளங்களையே...!!!

பாச மலர் / Paasa Malar said...

நல்ல புத்தகங்களை உடனுக்குடன் படித்து விடுகிறீர்கள்..புத்தக நிலையம் கூப்பிடுதூரத்தில் இருக்கும் உங்களைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமைதான்..நல்ல அலசல்

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க ரவி, நான் எப்போதும் சரி தவறு என்ற வாதப்பிரதிவாதங்களில் நம்பிக்கை இல்லாதவள், இந்த புத்தகம் பற்றிய ஒரு (unbiosed - தமிழில் அர்த்தம் வார்த்தை கிடைக்கவில்லை) பார்வை. என்னளவில் மிக நல்ல படிக்க வேண்டிய புத்தகம்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

மலர் அருகிலிருந்தால் பகிர்ந்து கொள்வதில் ஆட்சேபம் இல்லை. என்ன புத்தகம் திரும்பி வரும் வரை பயங்கர டென்ஷன் பார்ட்டி ஆயிடுவேன். எப்போதுமே ஒன்று வாங்க சென்று விட்டு குறைந்தது நாலு புத்தகங்களாவது வாங்கி வருவது வழக்கம். என்ன செய்ய மாற்றமுடியவில்லை.

siva gnanamji(#18100882083107547329) said...

bias:(ஒரு)பக்கச்சார்பு

unbiased: பக்கச்சார்பற்ற;
பக்கச்சார்பின்மை.

இவை பாடநூல்களில் பயன்படுத்தபடும் சொற்கள்

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி சிவஞானம்ஜீ..ஜ்யோவ்ராம் சொன்னது போல், அலுவலக வேலையில் தொலத்த தமிழ் மொழியின் பாதிப்புக்கள் இவை, மீட்டெடுக்கும் முயற்சியில் பல சமயம் சரியான வார்த்தைகள் சரியான சமயத்திற்கு நினைவில் வருவதில்லை.. நன்றி மீண்டும்

ஆடுமாடு said...

படிச்சிட்டீங்களா? நான் வாங்கணும்னு நினைச்சேன். கொஞ்சம் விலை ஜாஸ்தி மாதிரி தெரிஞ்சுது. வாங்கலை. பக்கத்துல இருந்தீங்கன்னா ஓசியில வாங்கலாம்.

பரவாயில்லை... வேற யார்ட்டயாவது வாங்கிக்கறேன்/.

நல்லா எழுதியிருக்கீங்க. இன்னும் கொஞ்சம் விரிவா எழுதியிருக்கலாமே...

ஒரு தகவல் மேல்மலைங்கறது மாஞ்சோலை இல்லை.

வாழ்த்துகள் கிருத்திகா.

writer S.Ramakrishnan said...

அன்பிற்குரிய கிருத்திகா

எனது யாமம் பற்றிய தங்களது விமர்சனத்தை வாசித்தேன்.

நாவலை மிக நுட்பமாக, ஆழ்ந்து வாசித்திருக்கிறீர்கள்.

நீங்கள் உணர்ந்தவற்றை சுருக்கமாகவும் அழகாகவும் பதிவு செய்திருக்கிறீர்கள்

மிக்க நன்றி

அன்புடன்.
எஸ். ராமகிருஷ்ணன். சென்னை.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எஸ்ரா எனக்குப் பிடித்த எழுத்தாளர். யாமம் எப்படித் தவற விட்டேன் எனத் தெரியவில்லை.

நிச்சயம் வாங்கி வாசிக்க வேண்டும்.

மிகச் சுருக்கமாக அழகாக எழுதியுள்ளீர்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எஸ்ரா எனக்குப் பிடித்த எழுத்தாளர். யாமம் எப்படித் தவற விட்டேன் எனத் தெரியவில்லை.

நிச்சயம் வாங்கி வாசிக்க வேண்டும்.

மிகச் சுருக்கமாக அழகாக எழுதியுள்ளீர்கள்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி ஆடுமாடு.. மாஞ்சோலை இல்லையென்றால் வேறு எந்த இடமாயிருக்கும். தென்காசி சரகத்தில் வருவதாலும், மிகப்பழமையான் தேயிலை தோட்டம் அது என்பதாலும் நான் மாஞ்சோலையாயிருக்கும் என்று எண்ணினேன்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

தங்கள் வருகைக்கு நன்றி எஸ்.ரா. மற்றும் சுந்தர் .

ஜீவி said...

நறுக்குத் தெரித்தாற்போல் நல்லதொரு விமர்சனத்தைச் செய்துள்ளீர்கள். அடுத்து அடுத்துப் பரிமாணங்களை வளர்ச்சிக்கேற்ப செழுமைபடுத்திக் கொண்டு, பயணத்தைத் தொடர வேண்டியது இயல்பானதுதான். அதுவே இருப்புக்கு அறிகுறி. உணர்ந்து அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

தமிழ்நதி said...

ஏற்கெனவே சொல்லப்பட்டதுதான். சுருக்கமாக அழகாக எழுதியிருக்கிறீர்கள். புத்தகம் வாங்கிவைத்திருக்கிறேன். இந்த விமர்சனம் புத்தகத்தை வாசிக்கத் தூண்டியது. எஸ்.ரா.எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர். துணையெழுத்து,உறுபசி,கதாவிலாசம்,நெடுங்குருதி மிக ஈர்த்தவை. யாமமும் அதில் சேருமென நம்புகிறேன்.

முஹம்மது ,ஹாரிஸ் said...

தோழியரே அருமையான விமர்சனம். நான் பெங்களூரில் இருக்கிறேன் சென்னைக்கு வரும் போதெலாம் என்ன
நூல் வாங்குவது என்று தவிப்பேன். இந்தவிமர்சன அதை போக்கி விட்டது