Saturday, January 12, 2008

நான் (சரவணன்)வித்யா – வெளியீடு – கிழக்கு பதிப்பகம் – ஒரு பார்வை


இதை இந்த கணம் செய்தே ஆக வேண்டும் என்ற தவிப்புக்களை கடந்து செல்லும் இயல்புகளோடே நான் அதிகம் பழக்கப்பட்டிருந்தாலும்,இந்தப் புத்தகம் என் அத்தனை இயல்புகளையும் புரட்டிப்போட்டுவிட்டது. என்னால் இந்த என்னவென்று விவரிக்க இயலாத என்னுள் ஊரும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாமல் இந்த இரவை என் தூக்கத்தை எதிர் கொள்ள முடியாது என்ற தவிப்பு மிகுந்த ஒரு உணர்ச்சிப்போராட்டத்தை உருவாக்கி விட்டது இந்த புத்தகம்.

எந்த விதமான பரிதாபத்தையும் யாசிக்காத அதே சமயம் திருநங்கைகளின் உலகம் பற்றிய ஒரு விகசிப்பான புரிதல்களை இந்தப்புத்தகம் ஏற்படுத்திவிட்டது.

மிகவும் சுயம் சார்ந்த உணர்ச்சிகளையும் அதற்கான ஜீவ மரணப்போராட்டத்தையும் எந்த வித சுய பச்சாதாபமும் இன்றி மிகத்தெளிவாக அதே சமயம் புனைவுகளின் சாயல்களின்றி ஓர் கம்பீரமான் எழுத்து நடையில் படைத்துள்ளார். “Non fiction/Autobiography” என்ற பிரிவின் கீழ் இந்தப்புத்தகம் தொகுக்கபட்டிருந்தாலும், இது அவரது சொந்த வாழ்க்கையாக மட்டும் கருதப்படாமல் மொத்த திருநங்கைகளின் ஒரு வாழ்வியல் போராட்டத்தை விளக்கும் விதமாக அமைந்திருப்பது இந்த புத்தகத்தின் வெற்றிக்கு ஒரு வித்து.

“ஊழல், வன்முரை, நயவஞ்சகம், ஆபாசம், பேராசை, எல்லாம் இருந்தும் அதுவிலாதது போலவும் பொற்கால வாழ்வு வாழ்வதாகவும் உலகத்தில் பொது மக்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்”

என்பது போன்ற இடங்களில் அவரது கோபங்களையும்.

“நீங்கள் ஒரு ஆண் உங்களால் புடவை கட்டிக்கொண்டு அலுவலகத்துக்கு செல்ல முடியுமா? அல்லது நீங்கள் ஒரு பெண் என்றால் உங்களுக்கு கனமாகக் கருகருவென்று மீசை முளைத்து அப்படியே நீங்கள் வெளியே போக விரும்புவீர்களா? உங்கள் அடையாளம் அதுவல்ல என்று தானே நினைப்பீர்கள்”


என்பது போன்ற இடங்களில் தன் சுயத்துக்கான மறுப்பெதும் எழுப்ப முடியாத வாதத்தையும்..

“சுய பாதுகாப்போடு என் தேவையை முடித்துக்கொள்ளும் எண்ணமில்லை எனக்கு”
என்று தனக்கு சேரவேண்டிய நியாத்திற்காக போராடும் தன் போராட்டகுணத்தையும்..


“சொர்க்கம் வேண்டும் என்று நான் கேட்கவில்லை, நரகம் வேண்டாமே என்றுதான் மன்றாடுகிறேன் எனக்காகவும் என்னைப்போன்ற திருநங்கைகளுக்காகவும்”

என்ற புரிதல்கள் வேண்டிய விருப்பங்களுடனும் இந்த புத்தகத்தை படைத்துள்ளார்.

கடைவீதிகளிலோ அல்லது மற்ற பொது இடங்களிலோ திருநங்கைகளை எதிர்கொள்ளும் நம் மனப்பாங்கை இப்புத்தகம் முற்றிலுமாக மாற்றிவிடக்கூடிய சாத்தியக்கூற்கள் அதிகம் உண்டு।

புரிதல்களோடும், தேடல்களோடும் வாழ்வியல் சதுரங்களை கடந்து கொண்டிருக்கும் அனைவரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகங்களில் இதுவும் ஒன்று.

11 comments:

வினையூக்கி said...

நன்றி புத்தகத்தின் மீதான உங்கள் பார்வையைப் பகிர்ந்து கொண்டமைக்கு.. வாங்கி வாசிக்க வேண்டும்

Jayaprakash Sampath said...

ஒருவேளை நான் தான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டனோ என்று நினைத்தேன். நல்லவேளை :-) .

வாசித்ததும் கிட்டதட்ட உங்களுக்கு ஏற்பட்ட அதே உணர்வுகள் தான் எனக்கும்.

துளசி கோபால் said...

படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகின்றது உங்கல் 'பார்வை'

தினேஷ் said...

முன்றாம் பாலினமான திருநங்கைகளின் வாழ்வியல் போரட்டங்களைப்பற்றி மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என எண்ணி, இந்த புத்தகத்தை பகிர்ந்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி!

நல்ல சமுக பொறுப்புள்ள நல்ல ப(கிர்)திவு...

தினேஷ்

பாச மலர் / Paasa Malar said...

லக்கி லுக்கின் வலையில் பார்த்த போதே படிக்க வேண்டுமென்று நினைத்தேன்..சீக்கிரம் படிக்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு..

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி வினையூக்கி, துளசி கோபால்.பாசமலர். படித்து விட்டு பகிர்ந்துகொள்ளுங்கள் உங்கள் அனுபவத்தை.

பிரகாஷ், எனக்கும் ஒரு சின்ன ஆறுதல் உங்கள் பின்னூட்டம் கண்டுவிட்டு.. நான் மட்டும் அல்ல...

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி தினேஷ், என் பார்வைகளை அதன் கோணங்களோடே புரிந்து கொண்டமைக்கு...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வாங்கிப் படிப்பேன்.

manjoorraja said...

வித்யா பதிவெழுத வந்த நாளிலிருந்து அவருடைய பதிவுகளை தொடர்ந்து படித்துவருகிறேன்.

இந்த புத்தகம் மூலம் மக்கள் மத்தியில் ஒரு நல்ல விழிப்புணர்வு தோன்றவேண்டும்.

cheena (சீனா) said...

லிவிங் ஸ்மைல் வித்யாவின் அனைத்துப் பதிவுகளையும் படித்து மறு மொழி இட்டிருக்கிறேன். திருநங்கைகளைப் பற்றிய புரிதலை மேம்படுத்திய பதிவுகள். புத்தகத்தையும் படிப்போம். நன்றி

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க மஞ்சூர், சீனா.. மிகவும் இயல்பான நடையில் ஒரு கருத்துள்ள புத்தகம்.. நல்ல வாசிப்பு அனுபவத்திற்கு வாழ்த்துக்கள்...