Monday, January 14, 2008

நான் ஒரு திறமையற்ற நிர்வாகி..


என்னால் நீ வந்து இப்போது விடுப்பு கேட்டால் மாட்டேன் என்று சொல்ல முடியாது


ஏனெனில் உன் சிற்றூரில் உனக்காகா "யேஞ்சாமி, யே ராசா பொங்கலுக்கு வாரேன்னு சொல்லியிருக்காமுல்ல, அவனையும் கூட்டிகிட்டு உங்கோயிலுக்கு பொங்க வைக்க வந்திருதேன் எங்க அய்யா... எங்களை காப்பாத்து" என்று கடவுளிடம் வேண்டுகோள் வைத்திருக்கும் ஒரு பாட்டியிருக்கலாம்"ஏட்டி அவே வந்தா தொணதொணன்னு தொணக்காம அவன சோரு திங்க விடுங்கடி, பாவம் புள்ள வாயில வைக்க விளங்காத சோத்த தினைக்கும் தின்னு தின்னு நாக்கு செத்துப்போயி வருவா(ன்) வாய்க்கு ருசியா ரெண்டு செய்து போடணும்" என்று சைவமோ அசைவமோ செய்யக்காத்திருக்கும் தாயிருக்கலாம்

"இன்னம் பத்தே நாளு பின்ன எங்க அண்ண வருது எனக்கு மெட்ராஸ்லேர்ந்து சரவணா ஸ்டோர்லேருந்து சுடிதார் வாங்கியாரேன்னு சொல்லிருக்கு இந்த தடவை சாமி கும்பிட அந்த ட்ரெஸ் தான் போடுவேனாக்கும்" என்று காத்திருக்கும் தங்கை இருக்கலாம்.

"எங்க வீட்டு பெரியவன் மெட்ராசிலதான் வேலபாக்கமில்ல நல்ல விவரமான ஆளு அவங்கிட்ட கேட்டா மெட்ராசில யாரைப்பாக்கணும், என்ன செய்யணுமின்னு சொல்லிட்டு போரான் நீரு ஏ கவல படுதீரு" என்று நன்பனை ஆற்றுப்படுத்தும் ஒரு தந்தை இருக்கலாம்

"எங்க அண்ணே எல்லா புது படமும் பாத்திருவாகல்ல, அவியளுக்கு எல்லா ஸ்டாரும் தெரியும் தெனைக்கும் யாரவது ஒரு ஸ்டார மெட்ராசில பாப்பாகளாமில்ல, அவியளும் கடை கண்ணிக்கெல்லாம் வருவாகளாம், இந்த வாட்டி எங்கண்ண யார புதுசா பாத்தகன்னு தெரியல வந்தா எல்லாஞ்சொல்லுவாக" என்று உனக்காக காத்திருக்கும் தம்பி இருக்கலாம்…

"ஏட்டி லட்சுமி, பார்வதி அவுக அண்ண (ன்) எப்ப வாராகளாம் அவ இந்த குதிகுதிக்கா" என்று நாசுக்காக விசாரிக்கும் உனக்காக காத்திருக்கும் ஒரு அண்டை வீட்டு பெண் இருக்கலாம்…

"அங்கனெ நாங்கெல்லா தினைக்கும் பஸ்டாண்டுல நின்னா போதுமில்ல எவ்ளோ பிள்ளைங்க எம்மா… அவிய யாருகிட்ட வேணா பேசுவாளுக என்னா ட்ரெசு, என்னா நடை, செல்போனு.. அதப்பாரு…. அன்னிக்கொருனா…. (நாள்)" என்று உன் கதை அளத்தல்களை வாய்பிளந்து கேட்க காத்திருக்கும் ஒரு நண்பர் கூட்டம் இருக்கலாம்

இல்லை இங்கிருந்து கொண்டு செல்லும் பெண்ணின் நினைவுகளை உன்னுள் போட்டு புதைத்து மற்றவர்களோடு சிரித்து பேச வேண்டிய அனுபவங்கள் காத்திருக்கலாம்…

இவையெல்லாம் தெரிந்திருந்தும் நான் எப்படி நீ விடுப்பு கேட்டு என்னிடம் வரும்பொழுது மாட்டேன் என்று சொல்வது, நான் அப்போது ஒரு திறமையான நிர்வாகியாக நிற்பதை விட ஒரு மனிதாபிமான மனுஷியாகவே நிற்க விரும்புகிறேன்.. இப்போது கூறுங்கள் நானொரு திறமையற்ற நிர்வாகி தானே….


(பின் குறிப்பு.. )
என் நிறுவணம் பல இளவயது பனியாளர்களைக் கொண்டு நடத்தும் ஒரு மிகப்பெரியதும் இல்லாத மிகச்சிரியதும் இல்லாத நடுவாந்திர BPO நிறுவணம். அதற்கென புள்ளி இலக்குகளும் மாதந்திர வருடாந்திர வருமான இலக்குகளும் உண்டு, இங்கு பணி செய்பவர்களில் பெறும்பான்மையான பணியாளர்கள், தமிழகத்தின் தென், வட பகுதி சிற்றூர்களில் இருந்து வந்து தங்கி பணி புரிபவர்கள், இவர்களுக்கு, தீபாவளியை விட, தமிழ் புத்தாண்டை விட பொங்கல் பண்டிகையும், விடுமுறையும் மிக முக்கியம்.

எல்லா வருடமும் என் ஜனவரி மாத புள்ளி இலக்குகளையும், மாதந்திர வருமான இலக்குகளையும் நான் என் நிறுவண நிர்வாக சபையின் எதிர்பார்புக்களையும் மீறி மிகவும் குறைவாகவே இலக்கிடுவது வழக்கம். ஏனெனில் (பதிவை மீண்டும் ஒருமுறை படித்துக்கொள்ளலாம்…)

13 comments:

Prakash said...

//"ஏட்டி லட்சுமி, பார்வதி அவுக அண்ண (ன்) எப்ப வாராகளாம் அவ இந்த குதிகுதிக்கா" என்று நாசுக்காக விசாரிக்கும் உனக்காக காத்திருக்கும் ஒரு அண்டை வீட்டு பெண் இருக்கலாம்//

டேங்கப்பா...என்னமோ யோசிக்கிறீங்க?

ப்ரில்லியண்ட்...

பாச மலர் said...

மண் வாசனை, மன வாசனை..
நச்சென்று உள்ளது, கிருத்திகா.

ஸ்ரீதர் said...

ஒரு திறமையான நிர்வாகி, மனிதாபிமானியாக இருக்க கூடாது என்பது அவசியமில்லை.

நான் படித்தவரை பல இந்திய நிர்வாகிகள், மனிதாபிமானத்தில் தான் தொழில் நடத்தி வருகின்றனர்.

நிங்கள் நல்ல நிர்வாகியாக இருந்தால், ஜனவரி மாதம் விடுப்பு தந்தும் வருமான இலக்குகளை அடைய வழி தேடுங்கள்.

பொங்கல் வாழ்த்துகள்,

ஸ்ரீதர்.

பி.கு: நிங்க எந்த நிறுவனம்னு சொன்னிங்கனா, அந்த பக்கம் கூட நான் வர மாட்டேன்.. :-)

பதிவுல நெல்லை தமிழ் நல்லா இருந்தது. அப்படியே ஊர்ல ஒரு எட்டு பாத்துட்டு வந்த மாதிரி இருக்கு.

கானா பிரபா said...

வணக்கம் கிருத்திகா

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

அமர பாரதி said...

பொங்கலுக்கு லீவு கொடுத்த மனிதாபிமானி மேனேஜருக்கு பிரிட்டிஷ் கவர்மென்டிலிருந்து "சர்" பட்டமும் வாடிகனிலிருந்து "செயின்ட்" பட்டமும் இந்தியாவிலிருந்து "பாரத ரத்னா" பட்டமும் குடுக்கோனும்.

கிருத்திகா said...

prakash - நிசமாத்தானா?????
வாங்க பாசமலர், நன்றி,
ஸ்ரீதர் - அதெல்லாம் நிர்வாக இரகசியம்....வெளிப்படையாய் பேசமுடியாது...
அமரபாரதி - இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்.....

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

பதிவு நல்லாருக்கு.

நான் பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது எங்கள் குழுவில் உங்கள் பெயருள்ள ஒருத்தர் இருந்தார்.அவர்தானோ என்ற சந்தேகம் இருந்தது.இப்போது அந்த சந்தேகம் தீர்ந்தது.
<==
ஸ்ரீதர் - அதெல்லாம் நிர்வாக இரகசியம்....வெளிப்படையாய் பேசமுடியாது ==>
அதானே.ராணுவ ரகசியாமாக்கும்.

ஜீவி said...

//என்னால் நீ வந்து இப்போது விடுப்பு கேட்டால் மாட்டேன் என்று சொல்ல முடியாது//
ஒரு வரிச் செய்திதான். அடேயப்பா! அதை வைத்து எவ்வளவு விஷயங்கள் சொல்லிவிட்டீர்கள்!
மலைப்புத்தான் ஏற்படுகிறது!.. இயல்பான நடை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது!
நிறைய எழுத வாழ்த்துக்கள்!
ஜீவி

கிருத்திகா said...

வங்க ஜீவி, நன்றி பாராட்டுக்களுக்கு...

தினேஷ் said...

தரமான தமிழில் எழதிவீர்கள் என்று தெரியும். ஆனால் பல தரப்பட்ட தமிழிலும் எழுதிவீர்கள் என்று இந்த பதிவின் முலம் தெரிந்துக்கொண்டேன்… வாழ்த்துக்கள்…

நிங்கள் மனிதநேயமுள்ள திறமையான நிர்வாகி…

தினேஷ்

கிருத்திகா said...

நன்றி தினேஷ்.. ஏதோ நம்ம பக்கத்து பேச்சு வழக்கு.. ரொம்ப நாளாச்சு கேட்டு அதான் நாமளாவது எழுதலாமேன்னுதான்.

தமிழ்நதி said...

'எங்கேயும் மனிதராக இருப்பது முதலில் முக்கியம்'அடிக்கடி நினைவுகூருமொரு வாசகம். அதிலும் எம்மிலும் தாழ்ந்தோர்முன் இருப்பதிலும் எளியோராய் நடந்துகொள்வது சிறப்பு. வித்தியாசமான ஒரு பதிவு. நீங்கள் மதுரைப் பக்கமாக இருப்பீர்களென்று நினைத்துக்கொண்டேன்.:)

கிருத்திகா said...

வாங்க தமிழ்நதி... நன்றி நான் மதுரைக்கு கொஞ்சம் தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவள்..