Monday, January 28, 2008

பெண் - யாரிவள்? - கேள்விகள் ஒரு சங்கிலித் தொடர் பதிவு - 2


பெண் என்பவள் யார்?
அவளின் குணாதிசயங்கள் யாவை?
அவளின் எதிர்பார்ப்புக்கள் எவை?
அவளிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது? – ஏன்?

இதெற்கெல்லாம் பதில் ஒரு ஆணால் கூறமுடியுமா? அல்லது ஆணை அளவுகோலாகக்கொண்டு பதில் தேட முடியுமா…இரண்டும் இல்லை, நம்மை நம்மால் மட்டுமே வரையருக்க முடியும் இதற்கென ஒரு அளவுகோல் கொண்டு தேட முடியாது,

ஒரு மாமரத்தோடு வேப்பமரத்தையும் மல்லிகையுடன் மருக்கொழுந்தையும் ஒப்பிடமுடியுமா? இரண்டும் இரு வேறான இயல்புகளோடும், இருவேறான பயன்பாடுகளோடும் இருக்கக்கூடியவை ஆனால் இதில் உயர்வென்பதும் தாழ்வென்பதும் உண்டோ, மாமரம் உபயோகப்படும் இடத்தில் வேம்புக்கு தேவை இல்லை அது போல் ஆண் சில இயல்புகளோடும், சில பயன்பாடுகளோடும், பெண் சில குணாதிசயங்களோடும் சில பயன்பாடுகளோடும் படைக்கப்பட்டுள்ளனர் இதில் ஒருவரை ஒருவர் ஒப்பிட்டுக்கொண்டு மற்றவர் உலகத்திற்குள் தன்னை திணித்துக்கொள்வது தேவையற்ற அவஸ்தை. எதிரெதிர் உலகத்தைப்பற்றிய புரிதல்கள் மட்டுமே தேவை.

உடுப்பு மாற்றங்கள் கூட தன் சுய சவுகரியங்களுக்காக மட்டுமே இருந்தவரை அதற்கு மிகப்பெரிய மரியாதை இருந்தது, அந்தக்காரணங்களாலேயே, தாவணியும் புடவையும், பாவடை சட்டையாகவும், சுரிதாராகவும் மாறியபோது மிக எளிதாக அதிகம் முணுமுணுப்புக்களின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் அதுவே குட்டை சட்டையாகவும், கட்டை பாவடையாகவும், மொட்டைக்கையாகவும் மாறும்பொழுது தலைப்புச்செய்திகளாகிறது. நம் உடுப்பு சுதந்திரம் என்பதை ஆண்கள் உலகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து நாம் செய்த தவறான புரிதல்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

அலுவலகப்பணிக்கு செல்வதோ, வியாபாரம் செய்வதோ, ஊர்திகள் ஓட்டுவதோ, காலத்தோடு ஒட்ட வழுவி நம்மை மேம்படுத்தச்செய்யும் உத்திகள் அதாவது அதை கற்றுக்கொள்வதின் நீட்டிப்பு என்றோ கூடுதல் பொறுப்பு என்றோ கொள்ளலாம் அதை விடுத்து நம் அடிப்படை பொறுப்புக்களை நாம் மறந்து தட்டிக்கழிக்க முற்பட்டால் நம்மை நாமே தோற்கடித்துக் கொள்பவர்களாகிறோம்.

முண்டியடித்து முகம்சிவந்து
முந்திச்செல்வதில் சுகம் கண்டதை
புரட்சி எனச்சொல்லாதே
புரட்சி புத்தியில் வரவேண்டியது,

யாரிடமும் நாம் நமக்கான உரிமையை கேட்டுப் பெறவேண்டியதில்லை, சாலையில் நாம் ஊர்திகளோட்டும் போது நமக்கென நாமென்ன தனி சாலை ஒதுக்கீடு கேட்கிறோமா அல்லது வாகன நெரிசலை நிறுத்தச்சொல்கிறோமா, இரண்டும் இல்லை ஊர்திகளோட்டும் திறமையும் தன்னம்பிக்கையும் உள்ளவர்கள் தனியாகச்செல்கிறோம். இதில் சக பயணிகளோடு சண்டைகள் எதற்கு அவரவர் இலக்கு அவரவர் பாதை, குறுக்கே செல்லும் சக பயணியை நமக்கு காயங்கள் இல்லாத வண்ணம் கடந்து செல்வதும் நம் திறமைகளுள் ஒன்று.

மன வளர்ச்சி என்பதும் முதிர்ச்சி என்பதும் பெண்ணிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்று ஏனெனில் அவளைச்சார்ந்தே ஒரு குடும்பமும், சுற்றமும், ஊரும் பின்னிபிணைக்கப்பட்டுள்ளது. மற்றவர்களை புரிந்து கொண்டு ஆதுரப்படுத்தும் ஒரு மேதமை பெண்களிடம் இயல்பிலேயே குடிகொண்டுள்ளதால் ஆண்களிடம் இந்த சமூகம் அதிகம் எதிர்பார்ப்பதில்லை. அவர்களுக்குள் மறைந்திருக்கும் அன்பையும், புரிதல்களையும் வெளிக்கொணர்வது கூட நம் திறமைகளில் ஒன்றானதாகும். இப்பணியை நாம் செவ்வெனே செய்துவிட்டால் ஒத்திசைந்த வாழ்வியல் இசையில் நாமே ஒரு மிகப்பெரும் படைப்பாளி.

சங்க காலங்கள் தொட்டு பெண்களின் மேதமை எப்போதும் எல்லோராலும் அறியப்பட்ட ஒன்றாகவே இருந்துவந்துள்ளது, இடைப்பட்ட காலங்களில் நேர்ந்த சமூக சீர்கேடுகளினால் பெண்களும் அவர்களின் மேதமையும், திறமையும் இருட்டடிப்பு செய்யப்பட்டாலும் தற்போதைய காலங்களில் அதன் விழுக்காடுகள் முன்பெப்போதையும் விட குறைவே. நாம் மிக வேகமாக நமக்குண்டான இயல்புகளை புரிந்து கொண்டு அந்த இலக்கை நோக்கி சென்றுகொண்டுதான் இருக்கிறோம். நம் பாதைகள் சில சமயம் முட்களாலும், பலசமயம் பூக்களாலும் நிரப்பட்டுள்ளது என்பது தான் உண்மை, முட்களை கடந்து செல்லும் வேளயில் அதைப்பற்றிய நம் வீண் கூச்சல்கள் நம் கவனங்களை திசை திருப்பத்தான் பயன்படுமே தவிர நம் இலக்குகளை அடைவதில் அல்ல.

படித்த, படிக்காத, சுய சிந்தனையுள்ள பெண்களின் கருத்துக்கள் பெரும்பான்மையான சமயங்களில் வெற்றிபெறுவது அதை நாம் எவ்வாறு மற்றவர்களை ஏற்றுக்கொள்ளச்செய்கிறோம் என்பதினால் தானே தவிர கருத்துகளின் மேதமையினால் அல்ல.

இந்த பிரபஞ்சமும் அதன் படைப்புக்களும் எல்லோருக்கும் ஒன்றுதான், ஆண்களின் உலகிலும் முட்களும் இருக்கலாம், பூக்களும் இருக்கலாம், அதை அவரவர் பூத்ததற்கு தக்கபடி கைகொள்ளுவர்.

நாம் நம் இலக்குகளை தவறான ஒப்பிடுதல்களோடு தவறவிடவேண்டாம், நமக்கான பாதை மிக மிக நீளம்......

14 comments:

பாச மலர் said...

//யாரிடமும் நாம் நமக்கான உரிமையை கேட்டுப் பெறவேண்டியதில்லை//

Well said கிருத்திகா..

இசக்கிமுத்து said...

ଧଧநாம் நம் இலக்குகளை தவறான ஒப்பிடுதல்களோடு தவறவிடவேண்டாம், நமக்கான பாதை மிக மிக நீளம்......ଧଧ

அருமையான சிந்தனை!! வாழ்த்துக்கள்!

கிருத்திகா said...

நன்றி பாசமலர். வாங்க இசக்கிமுத்து.. நன்றி

Rasiga said...

\\படித்த, படிக்காத, சுய சிந்தனையுள்ள பெண்களின் கருத்துக்கள் பெரும்பான்மையான சமயங்களில் வெற்றிபெறுவது அதை நாம் எவ்வாறு மற்றவர்களை ஏற்றுக்கொள்ளச்செய்கிறோம் என்பதினால் தானே தவிர கருத்துகளின் மேதமையினால் அல்ல.\

கிருத்திகா,
மிக சரியாக கூறியிருக்கிறீர்கள், அருமையானதொரு பதிவு, ரசித்தேன் உங்கள் எழுத்தையும் கருத்தையும்.

தினேஷ் said...

வார்த்தைகளில் வழிக்காட்டும் வழிகளையும் கருத்துகளையும் கொண்ட பதிவு மட்டும் அல்ல, சிந்தனையை சிந்திக்க வைத்து சிர்ப்படுத்தி கொள்ளவும் வழிக்காட்டும் ஒர் சிறந்த பதிவு.

தினேஷ்

ரசிகன் said...

அருமையா சிந்திச்சு எழுதியிருக்கிங்க..
வாழ்த்துக்கள்..

மங்களூர் சிவா said...

எக்கா ஒரு நிமிசம்

//
பெண் என்பவள் யார்?
அவளின் குணாதிசயங்கள் யாவை?
அவளின் எதிர்பார்ப்புக்கள் எவை?

இதெற்கெல்லாம் பதில் ஒரு ஆணால் கூறமுடியுமா?
//
மொதல்ல இதுக்கெல்லாம் பெண்களால் பதில் சொல்ல முடியுமா???

மங்களூர் சிவா said...

//
ஒரு மாமரத்தோடு வேப்பமரத்தையும் மல்லிகையுடன் மருக்கொழுந்தையும் ஒப்பிடமுடியுமா?
//

மாமரத்தோடு மாமரத்தையே ஒப்பிட முடியாதே அப்புறம் எப்படி வேப்பமரம்????

பெங்களூராவாம், மல்கோவாவாம், செந்தூராவாம் .......

மங்களூர் சிவா said...

//
மன வளர்ச்சி என்பதும் முதிர்ச்சி என்பதும் பெண்ணிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்று
//

காமெடி கீமெடி பண்ணலியே!!
:))))

சும்மா ஜோக்கு நோ டென்சன் ப்ளீஸ்

மங்களூர் சிவா said...

//
இந்த பிரபஞ்சமும் அதன் படைப்புக்களும் எல்லோருக்கும் ஒன்றுதான், ஆண்களின் உலகிலும் முட்களும் இருக்கலாம், பூக்களும் இருக்கலாம், அதை அவரவர் பூத்ததற்கு தக்கபடி கைகொள்ளுவர்.
//

அவ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

//
நாம் நம் இலக்குகளை தவறான ஒப்பிடுதல்களோடு தவறவிடவேண்டாம், நமக்கான பாதை மிக மிக நீளம்......
//
அதே!

வாழ்க்கைய யோசிங்கடா
தலையெழுத்த நல்லா வாசிங்கடா

கிருத்திகா said...

ஆஹா வாங்க சிவா.. ரொம்ப நாளாச்சு காணவேயில்லையேன்னு பார்த்தேன்.. எப்படி இருக்கீங்க??
"காமெடி கீமெடி பண்ணலியே!!" பண்ண வரமாட்டேங்குதுப்பா....

Thenie said...

ஒரு மாமரத்தோடு வேப்பமரத்தையும் மல்லிகையுடன் மருக்கொழுந்தையும் ஒப்பிடமுடியுமா?

இங்கு பெண்ணை மென்மையானவள் என சொல்ல விளைகிறீர்களா

மிக நல்ல சிந்தனை

கிருத்திகா said...

வாங்க தேனி... இல்லை இங்கு மென்மையானவள் என்ற பொருளில் குறிப்பிடவில்லை. மாமரம், வேப்பமரம் இரண்டுமே அதனதன் வழிகளில் உபயோகமானது இதில் ஏதாவதொரு மரம் உயர்வு என்று கொள்ளமுடியுமா, அதுபோல மருக்கொழுந்து மல்லி இரண்டுமே நல்ல மலர்கள் இதில் உயர்வு தாழ்வு கொள்ளமுடியுமா அதுபோல் ஆண், பெண் இருவரும் அவரவர் வழிகளில் சிறந்தவர்கள், இதில் ஆண் உயர்வென்றோ இல்லை பெண் உயர்வென்றோ தனித்தறியும் முயற்சி அறியாமை என்று தான் சொல்ல முயற்சித்தேன்...