Friday, January 11, 2008

என் சமீபத்திய பயணம் – ஒரு பகிர்தல் - பகுதி -1


பயணங்களும், பயணக்கட்டுரைகளும் என்வரையில் மிகவும் சுவாரசியமானவை. அதுவும் சில கட்டுரைகள் நம்முள் அவர்களது பயண அனுபவங்களை விதைப்பதாக அமையும் அளவிற்கு மிகவும் கோர்வையாக ஒரு பார்வையாளர் நிலையில் இருந்து படைக்கப்பட்டிருக்கும். அதன் அடிப்படையில் என் முதல் முயற்சியாக என் மிக சமீபத்திய பயண அனுபங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விருப்பம்.

எனது இந்த மொத்த பயண நேரங்களிலும் நம் சக பதிவர்களும் என்னோடு பயணித்தனர் என்று சொன்னால் மிகையாகாது. எனவே இந்த பதிவில் அவ்வப்போது வந்து சென்ற சக பதிவர்களின் நினைவுகளையும் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.

இந்த விடுமுறைக்கு (25/12 – 01/01) வெளியூர் செல்வது என்று முடிவெடுத்த தருணம் மோகன்தாஸின்” காஷ்மீர் பயணம் பற்றிய பதிவு. அதைப்பார்த்த கணம் தான் இந்த பதிவிற்கான வித்து.

எங்கள் பயணங்கள் எப்போதும் முன்பே பதிவு செய்யப்பட்டோ அல்லது திட்டமிட்டோ அமையக்கூடியது அல்ல முதல் நாள் முடிவு செய்து மறுநாள் செல்வது போல் தான் அமையும். அது போல் எங்கு செல்வது, தங்குவது என்பவைகளையும் முடிவு செய்வதே இல்லை அந்தந்த நாள்களின் இயல்புக்கு தக்கபடி விட்டுவிடுவது வழக்கம். இந்த முறையும் வழக்கப்படி எந்த ஒரு முஸ்தீபும் இல்லாமல் தொடங்கியது எங்கள் பயணம் ஆனால் என் சொந்த ஊருக்குச்சென்று அங்குள்ள கோவிலுக்கு செய்ய வேண்டும் என்ற ஒரே ஒரு திட்டமிடல் மட்டும் இருந்தது.

25.12.07.அன்று சென்னை இசைவிழாக்காலங்களில் பாடகர் யேசுதாசின் மிக முக்கியமான கச்சேரி ஒன்று உண்டு, பாரம்பரியம் மிக்க இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சார்பில் ஜெர்மன் ஹாலில் நடைபெறும் அந்த கச்சேரியை மட்டும் நாங்கள் எந்த வருடமும் தவறவிடுவதே இல்லை எனவே மறுநாள் (26.12) கிளம்பினால் போதும் என்ற முடிவு திங்கள் காலை (24.12)வரை இருந்தது, பின் எங்கள் ஊர் கோவில் விஷயமாக எங்கள் கிராமத்தில் பேசியபோது தான் வியாழக்கிழமை (27.12) எங்கள் கிராமத்தின் மிக முக்கிய, எங்கள் பால்யவயதின் அதிமுக்கிய நிகழ்வாகக் கருதப்பட்ட “சாஸ்தாங்கோவில் (ஐய்யப்பன் கோவில்) மண்டல பூஜை” இருப்பது தெரியவந்தது எனவே அதன் முக்கியத்துவம் கருதியும் அந்த அனுபவத்தை என் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள தீர்மானித்தும் யேசுதாஸ் கச்சேரியை விடுத்து 25.12 புறப்படத்தீர்மானித்தோம்

முன்பெல்லாம் இரவு முழுவதும் வண்டி ஓட்டிச்செல்வது வழக்கம் துணையாக பாடகர் யேசுதாஸ், மற்றும் எம்.எஸ், பி.சுசீலா பாடல்களோடு எங்க வீட்டு ரங்கமணி (அப்படி விளிப்பது தானே நம் பதிவுலக வழக்கம்) காரோட்ட நான் அருகிருந்து ஏதோ நானே காரோட்டுவது போல் சாலையை விட்டு கண்ணை எடுக்காமல் இசையை அனுபவித்தபடி செல்வோம். இடையிடயே ஒரு தேனிருக்காக எங்காவது நிறுத்தும் வழக்கம் உண்டு, பிள்ளைகள் பின்னிருக்கையில் உறங்கிவிடுவர். ஆனால் இப்போதெல்லாம் இரவு காரோட்ட முடிவதில்லை எனவே எங்கள் பயணங்கள் விடியற்காலையில் துவங்கிவிடும், இம்முறையும் விடியற்காலை 6 மணிக்கு இட்லி, மிளகாய் பொடி, கத்தரிக்காய் வத்த குழம்பு, சாதம், (சிப்ஸ் போர வழியில வாங்கிக்கலாம்) சகிதம் கிளம்பியாச்சு, முதல் இலக்கு இரவு 7 மணிக்குள் தூத்துக்குடி (ஒரு காலத்தில் மிகச்சிறந்த பாண்டிய துறைமுகமான கொற்கையிடம் இருந்து அதன் தனிச்சிறப்பை தனதாக்கிக்கொண்ட, முன்னொரு காலத்தில் முத்துக்குளித்தலுக்கு பெயர்பெற்ற, இப்பொழுது பவழப்பாறை தீவுகளுக்கும், புரோட்டாவிற்கும், இலங்கையுடனான தோணி போக்குவரத்திற்கும் பெயர் பெற்ற முத்துநகரம்) என்று துவங்கியது….................................(தொடரும்)

(பி.கு) தொடரலாம் தானே…….

7 comments:

மங்களூர் சிவா said...

//
எங்க வீட்டு ரங்கமணி காரோட்ட நான் அருகிருந்து ஏதோ நானே காரோட்டுவது போல் சாலையை விட்டு கண்ணை எடுக்காமல்
//

பாத்து பாத்து பாத்து மெல்ல ரைட்டு ரைட்டு கொஞ்சம் லெப்ட் பாத்து முன்னாடி லாரி ப்ரேக் ப்ரேக்க் ப்ரேக்க் அப்டின்னு ரங்கமணிக்கு இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்துகிட்டே போகிற சுகம் இருக்கே!!

அடடா

Ayyanar Viswanath said...

/எனது இந்த மொத்த பயண நேரங்களிலும் நம் சக பதிவர்களும் என்னோடு பயணித்தனர் /

இந்த உணர்வு எனக்கும் அடிக்கடி ஏற்படும் சில எழுத்துக்கள்/ சில பதிவர்கள் அப்படியே தங்கிவிடுவது எதனால் என தெரியவில்லை :)
தொடர்ந்து எழுதுங்கள்..

cheena (சீனா) said...

சிவா - என்ன இது - அந்த சுகம் எப்படி - கற்பனையா -- இல்ல் தோழி ரங்க மணியா

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க அய்யனார்.. நம் நேசிப்பின் ஒரு அங்கமாக பதிவுலகையும் சேர்த்துக்கொண்டது கூட ஒரு காரணமாய் இருக்கலாம். (i meant the importance we give to the blogging).

சிவா.. சீனா சொன்னதுக்கப்புறம் தான் எனக்கும் கேள்வி வருது.. ரொம்ப அனுபவமோ....

தினேஷ் said...

பயணக் கட்டுரை நன்றாக பதிக்கப்படுகிறது, தொடர்ந்து பயணத்தை தொடருங்கள்…

தினேஷ்

பாச மலர் / Paasa Malar said...

ரங்கமணி காரோட்டும் போது வழிநடத்தும் அனுபவம்..
பதிவர்களுடனேயே பயணம் போன அனுபவம்..எனக்கும் உண்டு..பதிவுலகம் பகுதி உலகமாகிப் போனதால்தான்..

பயணம் தொடர வாழ்த்துகள்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க தினேஷ், பாசமலர்.. வாழ்த்துக்களுக்கு நன்றி...