Friday, July 20, 2012

உறவாடும் வாக்கியங்கள்

எழுத்துக்களும், வார்த்தைகளும், வாக்கியங்களும் மனிதர்களைப் போலவே உடன் உறவாடுகிறது, உள்ளத்தை உறு மாற்றுகிறது. உற்றுப்பார்த்தால் நான் எண்ணியிருந்தது போல் இவை உணவோ இரையோ இல்லை சூட்சுமமாக நம்மோடு தொடர்ந்து உரையாடிக்கொண்டும் உறவாடிக்கொண்டுமிருக்கிறது.



சில வார்த்தைகள், மிக நெருக்கமான சிறுபிரயாத்து நட்பைப்போல் நினைவுகளை கிளறிப்போடுகிறது, சில வாக்கியங்கள் மிகப்பிரியாமானவர்களைப்போல் மனதிற்கு மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொண்டு அன்றைய நாட்களின் நடவடிக்கைகளை தீர்மானிக்கிறது. மற்ற சில வாக்கியங்களோ அடங்க மறுக்கும் பிள்ளைகளென பிடிவாதமாய் போராடி சில மணித்துளிகள் வேறொன்றையும் சிந்திக்கவொட்டாமல் ஆதிக்கம் செலுத்துகிறது.

சில பத்திகளை வாசிக்கும் நேரங்களில், ஜேசுதாஸ் “நகுமோ கனலே நினஜாலி தெலிசி” என்று திருவாரூர் பக்தவத்சலம் மிருதங்கதோடும், திருப்பணித்துரா இராதகிருஷ்ணன் கடத்தோடும், நாகை முரளிதரன் வயலினோடும் பாடி முடித்ததும், சபை நிறந்து ஆகர்ஷிக்குமோ அது போல் கூட்டமாய் நம்மை சூழ்ந்து நிற்கும். அதே சமயம் சில பக்கங்கள் வெகு ஆழத்தின் மோனத்திலிருந்து வரும் ஒ.எஸ் அருணின் “எப்படித்தான் என் உள்ளம் திறந்து என்னை அடிமை கொண்டீரோ ஸ்வாமி” என்று பாடி முடித்ததும் கை தட்டக்கூட திராணியற்று கூட்டாமாய் தன்னுள்ளே அமிழ்ந்திருப்பவர்களைப்போல் ஆழத்தில் கொண்டு நிறுத்துகிறது.

அப்பா, அம்மா, அக்கா, கணவர் குழந்தைகள், நன்பர்கள் போலவே ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் வாக்கியங்களும் குணமும் நிறமும் ஒரே மாதிரி இருப்பதில்லை, பல சமயம் இதன் நிறங்களும் குணங்களும் மாறிக்கொண்டேயிருக்கிறது. அநேக சமயங்களில் என்னையும் மீறி தறிகெட்டு வந்து விழும் சில வார்த்தைகளை உணருகையில் யாருக்கும் அடங்க மறுக்கும் என் வீட்டு கடைக்குட்டியை உருவகப்படுத்துகிறது.

சில சமயங்களில் ஒவ்வொரு கணத்துளிகளிலும் தேடித்தவிக்கும் ஒரு குருவின் அருகாமையை அளிக்கிறது, மீண்டும் சில சமயங்களில் இவ்வளவுதான் போதும் முடிந்து விட்டது ஆட்டம், என்று அத்தனையும் உதறிவிட்டு செல்லத்துடிக்கும் நானாகவும், இத்தனையையும் மீறி தினமும் உழலும் வாழ்வைக்கொண்டாடி மகிழும் சுகவாசியாகவும் தோன்றுகிறது.



உறவுகளை விட்டு விலகுவது எவ்வளவு துக்கமோ அது போல் வார்த்தைகளையும் வாக்கியங்களையும் விட்டு இருப்பதும் என்றே தோன்றுகிறது. சில பேர் அதிகம் பேசுவதும், அதிகம் வாசிப்பதும் கூட இதனால் தானோ….

3 comments:

som said...

please thalaippai thiruthavum

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\உறவுகளை விட்டு விலகுவது எவ்வளவு துக்கமோ அது போல் வார்த்தைகளையும் வாக்கியங்களையும் விட்டு இருப்பதும் என்றே தோன்றுகிறது. சில பேர் அதிகம் பேசுவதும், அதிகம் வாசிப்பதும் கூட இதனால் தானோ….//

அப்படித்தான் இருக்கும் போல..:))

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் கூறியது உண்மை தான் ...
பகிர்வுக்கு நன்றி...