Wednesday, July 11, 2012

அசைபோடுகிறேன்- பழைய புதிய பருவகாலங்கள்மழை தொடங்கிவிட்டது, இரவெல்லாம் இடி இடித்து பெய்த மழையின் மிச்சங்கள் காலயிலும் சற்றே தொடர்கையில், உள்ளே மட்டும் மழையடித்துப் பெய்துகொண்டே இருக்கிறது. ஓயமறுக்கும் மழையின் திவலைகள் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது சிறு சிறு குழிகளாய். கடந்து வந்த சிறுவயது கிராமத்து வாழ்க்கையின் மைல்கற்களில் தடவிப் பார்க்கிறேன், முன்பெல்லாம் இதுபோல் மழைக்காலம், வெயில் காலம் என்றெல்லாம் நமக்குத் தெரியுமா? தோண்டித்தோண்டிப் பார்க்கிறேன் எதுவும் தோன்றவில்லை, இல்லையென்று சொல்லாமல் காற்றுக்காலம் தெரியும், ஆடிமாசமும், அதனோடு கூடிய அடிப்பிரதட்சணமும் தெரியும் மற்றபடி வருடத்தின் பகுதிகளை பண்டிகைகளால் மட்டும் அடையாளப்படுத்திக்கொண்டதாய் ஞாபகம்.


பங்குனித்திருநா – கோவிலுக்கு வெள்ளையடிச்சாச்சு, திருச்செந்தூர் செல்வம் கடை போட்டாச்சு, ராட்டு வந்தாச்சு, ஐஸ் வண்டிக்காரன் இன்னும் வரலை, பாயசக்கடையும் ஜவ்வுமிட்டாய்க்காரனும் சாயங்காலம் வந்துருவான், வாகனக்காரா வந்தாச்சு, கச்சேரி லிஸ்டுல இந்த தடவை பிராபகர் கச்சேரி இல்லை, இன்னும் பல


வைகாசி விசாகம் வரப்போறது – காலைல பார்த்தா புளிய மரத்தடி பூரா வில்லு வண்டி, சாயங்காலம் ஸ்கூல் விட்டு வந்தா எந்த வண்டியும் இல்ல சமைச்ச அடுப்புக்கரியும் அங்கங்க மாட்டுச்சாணியும், கொஞ்சமா வைக்கப்பிரியுமா இருக்கும், அன்னிக்கெல்லாம் பொன்னுக்குட்டி அத்தைக்கும் அவாத்து உமாக்கும் கூடுதல் வேலை.


ஆடி மாசம் பொறந்தச்சு, காத்து தொடங்கியாச்சு, அடிப்பிரதட்சணம்,பின்ன ஆவணித்திருநா, அப்படி ஒன்னும் பங்குனித்திருநா மாதிரி திமிலோகப்படாது, புரட்டாசி வந்தா கொலு, லட்சார்ச்சனை, கூடவே ஐப்பசில தீவாளி, திருகார்த்திகையும் சொக்கப்பானையும் முடிச்சு திரும்பினா உடனே மார்கழி மாசம், திருவாதிரையும் வைகுண்ட ஏகாதசியும், பின்ன இருக்கவே இருக்கு தைமாசப்பொறப்பு பொங்கலும், மாட்டுப்பொங்கலும், . மாசிமாசம் நோம்பும் பின்ன மறுபடியும் பங்குனித்திருநா.


இதுல வேனலும், மழையும், எங்க இருந்ததுன்னு இப்பவும் ஞாபகம் வரலை.

தேடிச்சோறு நிதம் தின்று, பல சின்னஞ்சிறுகதைகள் பேசி, மனம் வாடித் துன்பமிக வுழன்று -பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – பாரதி என்றோ கேட்ட கேள்வி இன்றும் தினம் தினம் நெஞ்சில் அலையடித்து அலைக்கழிக்க நாள் கடத்தும் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் இப்போது வேனலும் மழையும் மட்டுமே பருவ காலங்கள்

8 comments:

ஜீவி said...

மழையைப் பார்த்ததில் மகிழ்ச்சி;
நெடுநாள் கழித்து என்பதால் மனசுக்குள் ஆரவாரம். தேங்கிப் போகாமல் வடிகாலில் வழிந்தெல்லாம் அப்புறம் தான்.

som said...

All authoor based.nice to reproduce the visuals back

som said...

Rewinding all authoor visuals.Very nice

som said...

All authoor based.nice to reproduce the visuals back

som said...

authoor visuals are running in the mind.Very nice

கிருத்திகா said...

Hi Somu

Good to know you here, are you from Authoor?

som said...

Yes krithika

கிருத்திகா said...

சோம், யாரென்று அடையாளம் கண்டுகொள்ள ஆவலாய் உள்ளது, முடியுமானால் தனி மெயிலுக்கு எழுதலாமே