வார்த்தையெனும் வடிவங்களுக்குள் அடைக்கமுடியாத உணர்வுகளை எந்தப்பெயரிட்டு அழைப்பது அழைத்தும் தான் என்ன பயன்? வார்த்தைகளை நேசிப்பதைக்காட்டிலும் சுவாசிப்பது அதீத சுவாரஸ்யமானது. அதிக கவனமெடுத்து அச்சுக்கோர்த்து பல வித வர்ணங்களுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் அச்சிட்ட புத்தகங்களைக்காண நேரும் போது கூட வார்த்தைகளின் தோரணமென்று எண்ணும் போது எண்ணங்களில் வர்ணம் கூடுகிறது. திறந்து கிடக்கும் புத்தகத்தை காண நேர்கையில் சிறு குழந்தையின் கைவழியே இறைந்து கிடக்கும் அரிசிப்பொறியென மடியெங்கும் சிதறிக்கிடக்கின்றன வார்த்தைகள்
உறவுகளின் தொடர்ச்சியாய் எவரேனும் உரையாடலைத்தொடரும் வேளையில் அவர்களின் நாவினின்று வரும் மொழியில் வார்த்தைகளே எஞ்சி நிற்கின்றன. வாக்கியங்களின் பின்னிருக்கும் செய்திகளைக்காட்டிலும் அதினுள்ளிருக்கும் வார்த்தைகளே கையிலிருந்து உருண்டு செல்லும் கண்ணாடிக்குண்டுகளென உள்ளெங்கும் வழிந்து உருண்டு செல்கிறது. முதல் கேள்விக்கான பதில்களை அவர்களின் மூன்றாவது கேள்வியின் போது மட்டுமே கூட்டுச்சேர்க்க முடிகிறது. அப்போதும் அந்த வார்த்தைகளின் வசீகரங்களில் அமிழ்ந்து தொலைந்து மீண்டு வரும் வேளையில் உரையாடலின் சங்கிலி அறுந்து போயிருக்கும். எதிராளியின் பார்வையில் நானொரு ஊமையாகவோ இல்லை கவனமற்றவளாகவோ இல்லை செவியற்றவளாக உருக்கொண்டிருக்கும் வேளையில் நான் வெளித்தள்ள வேண்டிய வார்த்தைகளை பூக்களைத்தொடுப்பது போல தொடுத்து மெதுவாக உச்சரிக்கத்துவங்குவேன். சில சமயம் வார்த்தைகளின் கனம் தாங்க முடியாமல் மிக மெதுவாகவோ அல்லது வேகமாகவோ உதிர்க்கத்துவங்குகையில் பொங்கும் பிரிவாற்றாமையின் துக்கம் தாங்க முடியாததாயுள்ளது.
ஒரு வாக்கியத்தில் தனித்தனியே நின்று உறவாடும் வார்த்தைகளுக்குண்டான வாசனை எந்த ஒரு முழுமையான வாக்கியத்திற்கும் இல்லாமல் போகிறது.
ஒரே வாக்கியதின் சில வார்த்தைகள் அணுக்கமாகவும் சில வார்த்தைகள் விலகியும் செல்ல நேர்கையில் விலகும் வார்த்தைகளை துரத்திப்பிடிப்பதிலுண்டான ஆனந்தத்தில் எதிராளியின் மனதில் நான் என்னவாவேன் என்று கூட எண்ணத்தோன்றுவதில்லை.
எதையேனும் எழுதி முடித்து பின் மீண்டும் வாசித்துப்பார்க்கையில், அதிகாலையில் உதிர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருக்கும் பவழமல்லியின் வாசனையோடு வார்த்தைகள் கண்முன்னே பரந்து விரிந்திருக்கும். பின்னெப்படி நானந்த வனத்தை விட்டு மீள்வதாம் அந்த மணத்தை விட்டு விலகுவதாம்.
வார்த்தைகளுக்கும் எனக்குமுண்டான நேசம் எங்கு தொடங்கியதென்ற கெள்வியைக்காட்டிலும் தொடங்கிய காலமுதலான அதன் ஆக்ரமிப்பின் வசீகரம் மீண்டுவரமுடியாததாயுள்ளது.
பொங்கிப்பிரவகிக்கும் ஆற்றின் கரையில் நான் அமர்ந்திருக்கிறேன்... வர்ண பேதமற்று இறைந்திருக்கும் வார்த்தைகளை வாரி வாரி விழுங்குவதற்காக.
8 comments:
பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv
http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx
//பொங்கிப்பிரவகிக்கும் ஆற்றின் கரையில் நான் அமர்ந்திருக்கிறேன்... வர்ண பேதமற்று இறைந்திருக்கும் வார்த்தைகளை வாரி வாரி விழுங்குவதற்காக//
ellaarum appadithaane.
good one.
நல்லாருக்கு. பொங்கல் வாழ்த்துக்கள்...
வசீகரித்தது வார்த்தைகள்!
பல் நாட்கள் கழிச்சு ரீடரைவிட்டு நேரடியா வலைக்கு வந்தேன். அடிவமைப்பு மிக அழகாக உள்ளது!
அப்புறம் வாழ்க்கையை நல்லாவே அனுபவிக்கிறீங்க. கொடுத்து வெச்சவங்க!
வார்த்தைகள் வசீகரமானவை தான் ஆனால் வலிகள் மிகுந்த வார்த்தைகள் சில நேரங்களில் மனதை ரணமாக்கிவிடுகின்றன.
மற்றபடி உங்கள்
வார்த்தைகள் வார்த்தைகள் மிகவும் வசீகரமானவையாகவே இருக்கின்றன
ஆமாம், இந்த வார்த்தைகள் தங்களுக்கென்று தேர்ந்தெடுத்தத் தனி ஆடைகளைப் பூண்டு மிகவும் வசீகரமாகத்தான் தோற்றமளிக்கின்றன. ஒவ்வொரு தடவையும் பழையதைக் களைந்து புதுசைப் பூணும் பொழுதும் இவற்றின் தோற்றப் பொலிவு கண்டு நாம் சொக்கித்தான் போகின்றோம்.
வார்த்தைகள் அந்தந்த மொழி சம்பந்தப்பட்டும் இருப்பதினால், அந்தந்த மொழியின் சகல அழகுகளும் அவற்றில் புதைந்திருக்கின்றன. அதற்காகவே அவற்றை நேசிக்கலாம்; அதையும் தாண்டி அவற்றை சுவாசிக்கவும் செய்யலாம்.
இன்னொன்று பாருங்கள். சொல்லுகின்ற கருத்துக்களை நோக்கி நம்மை வயப்படுத்துகிற மாதிரி
இந்த வார்த்தைகள் நம் கைபிடித்து பையப்பைய அழைத்துச் செல்வதையும் பாருங்கள்.
வார்த்தைகளின் வசீகர அழகுக்காகவே அது சொல்லும் கருத்துக்களை நேசிக்கும் அழகும் ஆபத்தும் ஒருசேர உண்டு. இந்த நேசித்தல் பல நாட்டு சரித்தரங்களையே புரட்டிப் போட்ட சான்றுகளும் உண்டு.
வார்த்தைகள் வெறும் ஜடமில்லை; உயிருள்ளவை. சிந்தையில் ஜனித்து உச்சரிப்பின் மூலம், உயிர்கொள்பவை. எழுத்தின் மூலமும் என்று இவற்றிற்கு இன்னொரு பரிமாணமும் உண்டு. தெய்வப்புலவனிலிருந்து தெருப்பாடகன் வரை இதைப் பூஜித்திருக்கிறார்கள். இவை அவரவர் சிந்தையையே பிரதிநிதித்துவப் படுத்துவதால் அவர் அவராகவே இவற்றைக் கொள்ளலாம்.
வார்த்தைகளைப் பற்றி ஒரு யோசிப்பை ஏற்படுத்தியமைக்கு நன்றி, கிருத்திகா!
வார்த்தைகளின் வசீகரம் பதிவுவினை படித்தேன். படித்து முடித்தவுடன் கொஞ்ச நேரம் அப்படியே உங்கள் எழுத்துக்களைப்பற்றி சிந்தனையிலே இருந்துவிட்டேன். உங்கள் எழுத்தின் மேன்மை, வார்த்தைகள் மற்றும் வார்த்தை கோர்வைகளை கானும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் எழுத்துக்கு என் வணக்கம்... உங்கள் அடுத்த பதிவை எதிர்னோக்கி...
தினேஷ்
Post a Comment