Friday, January 16, 2009

நடைமுறை வேதம்

வழக்கம் போல் தான் அந்தப் பேச்சு ஆரம்பித்தது. ஆனால் சங்கரிக்குள் அந்த தாகம் அதிகம் இருந்திருக்க வேண்டும் என்பது உரையாடலின் முடிவில் அவள் கண்களில் கோர்த்திருந்த நீர்த்துளிகளும், முகம் அடைந்திருந்த வருத்தச்சாயலும் காட்டிக்கொடுத்திருக்கவேண்டும் கிருஷ்ணனுக்கு அவள் உள்ளக்கிடக்கையை.

அக்கம் பக்கம் அனைவரும் கனுப்பொங்கல் கொண்டாட தன் பிறந்தகம் சென்றுவிட அதிக நடமாட்டமற்ற காலை வேளையில் போட ஆரம்பித்திருந்த பெரிய கோலத்தை முடித்துவிட்டு உள்ளேவந்த சங்கரிக்கு பூட்டிய பக்கத்து வீட்டு கதவுகளும், வெறிச்சோடிய தெருவும் சற்றே சிதைந்த மனநிலையை தந்திருக்க வேண்டும். உடன் பிறந்த சகோதரர்கள் இல்லாத நிலையில், அப்பாவின் காலத்திற்குப்பின் பிறந்த வீடு என்று ஒன்று இல்லாத போனதாலும், இருக்கும் ஒரு
சகோதரியின் வீடும் எங்கோ எட்டாதூரத்தில் இருப்பதாலும் எப்போதும் உண்டாகும் ஏக்கம் தான் இது. ஆனாலும் இது போன்ற பிறந்தகம் சார்ந்த பண்டிகை நாட்களில் மனதில் ஏற்படும் சலனத்தை மாற்றிக்கொள்ள எப்போதும் சிறிது பிரயத்தனப்படத்தான் வேண்டியிருந்தது.

வீட்டிற்கு உள்ளே வந்தவள் டீவி முன் அமர்ந்து காப்பி அருந்தியபடி இருக்கும் கிருஷ்ணனிடம் வந்து "நானும் எம்பொறந்தாத்துக்குப் போப்போறேன்" என்று அர்த்தமற்று சொல்லி அமர்ந்தாள். உடனே அவர் "அம்மாடி எங்களுக்கு இனிமே நல்ல நேரம்னு சொல்லு" என்று எள்ளல் செய்யவும் இது வழக்கம் தான் எனும் படி அவள் உள்ளே நகர்ந்தாள். ஆனால் வளர்ந்த இரு பிள்ளைகள் இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் அப்பாவின் பக்கத்தில் சார்ந்துகொள்வதையே பெருமையாய் நினைத்துக்கொள்வதால் ஆரவராம் செய்ய ஆரம்பித்தார்கள். "சபரி அம்மா பொறந்தாத்துக்கு போறாளாம்" என்று சின்னவன் சொல்ல பெரியவனோ "முதல்ல அந்த வேலையைச்செய் மா எந்த ஊருன்னு மட்டும் சட்டுனு சொல்லு எப்பாடு பட்டாவது டிக்கெட் எடுத்துத்தரேன்" என்று தொடர்ந்து நகையாடத்தொடங்கினான். கணவனும் சேர்ந்து கொள்ள சங்கரி சற்றே நிலை குலைந்து போனாள்.

கையில் வைத்திருந்த காப்பி டபாராவோடு எழுந்திருந்து "ஆமாம் நான் போகத்தான் போறேன் அப்பத்தெரியும் உங்களுக்கு" என்று சொன்னவளின் முகமாற்றம் தான் கிருஷ்ணனை உறுத்தியிருக்க வேண்டும்.

சட்டென்று நிலமையை கையில் எடுத்தவர், "சரி சங்கரி நீ ரொம்ப நாள் ஆசைப்பட்டுட்டிருந்தயே தென்னாங்கூர் பாண்டுரெங்கன் கோவில் இன்று சென்றுவரலாம், சமையல் வேண்டாம் போகும் வழியில் பார்த்துக்கொள்ளலாம் சீக்கிரம் கிளம்பு" என்றபடியே மகன்களையும் அழைத்து கிளம்பச்சொன்னர் அப்படித்தான் ஆரம்பித்தது அந்த பயணம்.

தென்னாங்கூர் கோவில் வாசலைச்சென்றடையும் வரை அதிகம் ஆர்ப்பட்டமில்லாத அந்த 2 மணி நேரப்பயணம் மனதுள் இனந்தெரியாத பக்தி உணர்வை தந்திருந்தது. ஒருவேளை மிகுந்த ஆவலோடு பல சமயம் முனைந்தும் முடியாமல் போனதாலேயும் கூட இருக்கலாம். சன்னதியின் முகப்பு மண்டபத்தை அடையும் முன்னரே கிடைத்த மூர்த்தியின் தரிசனம் கணவன் மனைவி இருவரையும் கட்டிப்போட்டது. இராஜ அலங்காரத்தில் பாண்டுரங்கணும் இரகுமாயியும் தம்பதி சமேதராய் கிளிப்பச்சை நிறப்பட்டும், கீரீடமும், அங்கியும் மாலையும், மீன்களைப்போன்ற தோள்வளையும் அணிந்து புன் சிரிப்போடு நிற்கும் காட்சி மனதில் எந்த வேறொரு எண்ணத்தையும் வரவொட்டாது அவரோடு இணைத்து வைத்தது. 10 நிமிடங்களுக்கும் மேலாக சன்னதியில் அமர்ந்திருந்து வெளியேறும் பொழுது அருகிருக்கும் யாரோ இருவரின் சம்பாஷானை சங்கரியை ஈர்த்தது. "ஆம்படையான் பொண்டாட்டி மாதிரி தான் இருக்கே தவிர பகவான்னு தோணவேயில்லை என்ன ஆதுரம் என்ன கம்பீரம் ஏதோ நம்பாத்து மனுஷா மாதிரி ஒரு நெருக்கம் என்ன சொல்றே .... அதையேதான் நானும் நினைச்சேன் மன்னி அதுவும் அம்மா அப்பா மாதிரி கூட இல்ல ரொம்ப ப்ரியமான சின்ன வயசு அண்ணா, மன்னி மாதிரி என்ன ஒரு நெருக்கம் என்ன ஒரு சௌஜன்யம் அவரோட சிரிப்புல கண்ணே போறல" தனக்கு இல்லையே என்று வருந்திய சொந்தத்தை நான் தருகிறேன் என்று உணர்த்துகிறானோ என்று நினைத்து வெடித்துக்கதறினாள் சங்கரி.

சபரியும், விக்கியும் இருபுறமும் நின்றபடி ஆதரவாய் தோள்பற்றி ஏதும் சொல்லாமல் கூடவே நடந்து வந்தது கூட மனதுக்கு ஆறுதலாய் இருந்தது. ஞானானந்தகிரி பீடமும் சென்று அமர்ந்து அமைதியாய் தியானித்து விட்டு காருக்கு அருகே வந்ததும் தான் அடுத்த யோசனை வந்தது அடுத்து என்ன என்று.


சங்கரிக்கோ வாய் வரை வந்த "பக்கத்துல தானே திருவண்ணாமலை" என்ற வார்த்தையை தன்னுள்ளே விழுங்கிக்கொண்டாள் ஏனென்றால் பெரியவனும் சின்னவனும் இன்றைக்கென்ற போட்டு வைத்திருந்த நிகழ்ச்சி நிரல் அவர்கள் அளவில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியிருந்தது நான்கு நாட்களாக அதைப்பற்றிய பேச்சோடுதான் அந்த நாட்கள் முடிந்திருந்தது. அய்யோ குழந்தைகள் ஏமாற்றம் அடைந்துவிடும் என்பதால் வாய் மூடி மௌனியானாள். ஆனால் கிருஷ்ணனோ "வாட் அபௌட் திருவண்ணாமலை இன்னும் 2 மணி நேரம்தான் ஒரு பிடி பிடிச்சா மத்தியானச்சாப்பாட்டுக்கு திருவண்ணாமலை போயிடலாம்" என்றதும் குழந்தைகள் ஏதும்
சொல்லாமல் சரி என்றதும் அளவிட முடியாத ஆனந்தத்தை தந்தது சங்கரிக்கு.

போகும் வழியில் கலசப்பாகம் சென்றது மற்றொரு பேரானந்த அனுபம். பூண்டி ஆற்று சுவாமிகளின் மூடியிருந்த அதிஷ்டானத்து கதவுகளுக்கு அருகே இருந்து மௌனமாய் தியானித்து எனக்கு ஒரு நல்ல ஆன்மீக வழிகாட்டியின், குருவின் நெருக்கத்தை தரமாட்டாயா, தாங்களெல்லாம் அனுபவித்த பேரானந்தக்கடலின் ஒரு துளியையாவது எனக்கு காட்டமாட்டீர்களா என்று உருகி, கசிந்து நிமிரும்போது மடத்தின் பொறுப்பாளர் "அம்மா உங்களுக்காக கோயிலை திறக்கறோம் போய் பழம் வெத்தலை பாக்கு வேணா வாங்கிட்டு வாங்க" என்றது தன் இறைஞ்சலை அந்த மகான் கேட்டு அருள் செய்கிறாரோ என்ற எண்ணத்தைத்தந்தது.


திருவண்ணாமலையை தொட்டதுமே ஒரு பரபரப்பு ஒட்டிக்கொள்ளும் மற்றவர்களோடான உரையாடல் குறைந்து விடும் தனித்து ஒரு கனத்த மௌனம் வந்து கவிந்து கொள்ளும் ஊரை விட்டு அகலும் வரை அந்த லயம் மாறாது உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கும். ஆனால் இந்த முறை எந்தஒரு படபடப்பும் இன்றி மனம் வெகு இலகுவாய் இருந்தது சங்கரிக்கு. கோவில் சிறப்பு தரிசனம் முடித்து வந்தபின்னும் அந்த நெருக்கடி கொஞ்சம் தொந்தரவு தருவதாகவே இருந்தது. "இந்த ஊரே கோவில், மலைதான் சுவாமி உள்ள போய் இப்படி கஷ்டப்பட்டிருக்க வேண்டாம்" என்று மெதுவாக முனகினாள் . இப்படித்தான் "ஒவ்வொருதரமும் நினைச்சிக்கறோம் ஆனால் உள்ள போகமா இருக்க
முடியறதில்ல" என்றபடி ஆமோதித்தார் கிருஷ்ணன்। பிள்ளைகள் இருவரும் தம் சொந்த சம்பாஷணையில் மூழ்கியிருந்தனர்। அடுத்து எங்கே என்று கேட்காமலேயே பழக்கப்பட்ட கால்கள் சந்நதி தெருவின் தேர்முக்கில் இருக்கும் அடியார்க்கு நல்லான், கடவுளின் குழந்தை, பிச்சைக்காரன் என்று தன்னை அழைத்துக்கொண்டு இந்த மானுடத்திற்கு மிகப்பெரும் பொக்கிஷத்தை விட்டுச்சென்ற பகவானின் வீடு நோக்கித்திரும்பியது. சின்னவன் ஏதோ சங்கரியிடம் சொல்ல வர கிருஷ்ணண் தன்னோடு அவனை இருத்திக்கொண்டு பெரியவனை சங்கரியோடு அனுப்பினார். பொதுவில் கிருஷ்ணன் பக்தி, கோவில் இவைகளைத்தாண்டி தியானம், மகான்களின் சந்நிதானம் இவைகளில் அதிகம் பற்றில்லாதவராகவே இருப்பது வழக்கம்.

ஆஸ்ரமத்தின் தாழ்வார நிழல் தந்த ஆசுவாசமோ அல்லது அந்த மகான் வாழ்ந்து பின் அங்கு விட்டுச்சென்ற ஆசீர்வாத அதிர்வலைகளோ சங்கரிக்கு மிக உன்னதமான தியான அனுபவத்தை தந்தது. நீண்ட சுகமான தியானத்திற்கு பிறகு குரலும் மனமும் தொலைந்தவளாய் அருகே பொறுமையோடு அமர்ந்திருந்த பெரியவனை பார்த்த பார்வையில் மிகுந்த அன்பிருந்தது. வற்றாத சாந்தியிருந்தது. கூடவே ஒரு சிறு கர்வம் இருந்ததையும் அவளால் மறுக்க முடியாததாயிருந்தது. அன்றைய தியானத்தில் அவள் அடைந்ததாய் நினைத்திருந்த நிலை தந்த சிறு கர்வம் கூடவே அவளுள் கனன்று கொண்டிருந்த ஒரு நல்ல வழிகாட்டி, குருவின் அண்மைக்குண்டான ஏக்கம் இவை எல்லாமும் சேர்ந்து ஒரு மேலான மனநிலையை அவளுக்குத்தந்திருக்க வேண்டும்.

திரும்பும் வழியெல்லாம் வழிந்தோடிய ஜேசுதாசின் பாடலகள் அந்த மனநிலையை சற்றும் குலைக்காதிருந்தது. இரவு படுக்கப்போகுமுன் சற்றே இலகுவாகி "தேங்யூ மாமா தேங்யூ ரொம்ப நல்ல நாளில்ல இன்னக்கி" என்றதும் அவள் மனநிலையை படித்தவரே போன்று சொன்னார் கிருஷ்ணன், "சங்கரி அன்பு செய்யறத விட பெரிய பக்தியோ, தியானமோ இல்லடா, இந்தச்சின்ன பசங்களைப்பாரு இன்னக்கி அவங்க போட்ட அத்தனை பிளானையும் விட்டுட்டு நம்மோட ஒரு வார்த்தைக்காக நம்ம கூடவே வந்தாங்க. பொதுவா கார்ல போகும் போது பாட்டும் கூத்தும் எப்படி இருக்கும்னு உனக்குத்தெரியும் இன்னக்கி உன்னோட மனநிலைக்கு ஒத்துப்போறமாதிரி எப்படி இருந்தாங்க இந்த அன்பு எப்பவும் உங்கூட இருக்கும் கண்ணா. இவங்களுக்கு உன்னோட அன்பை குறையில்லாம பகிர்ந்து கொடுத்த போறாதா? இன்னம் வேற யார் வேணும்? சொல்லு என்று சொல்லவும் அவளுள் இருந்த எத்தனையோ கேள்விகளுக்கு பதில் கிடைத்தது போலிருந்தது. தனக்குண்டான கர்மாவை அன்போடும் ஆசையோடும் செய்வதைப்போன்றதொரு மிகப்பெரும் தியானம் ஏதுமில்லை என்ற கீதையின் கர்மயோகத்தைச்சொன்ன சாரதியாய் தெரிந்தார் கிருஷ்ணன்.

9 comments:

ஜீவி said...

//தனக்குண்டான கர்மாவை அன்போடும் ஆசையோடும் செய்வதைப்போன்றதொரு மிகப்பெரும் தியானம் ஏதுமில்லை என்ற கீதையின் கர்மயோகத்தைச்சொன்ன சாரதியாய் தெரிந்தார் கிருஷ்ணன்//

ஏதோ சிறுகதை தான் எழுதியிருக்கிறீர்களோ என்று சுவாரஸ்யமாகப் படிக்கத் தொடங்கி, 'இது ஒரு திருக்கோயில் சுற்றுலாவோ' என்கிற உணர்வு இடையில் உந்தி, கடைசியில் பார்த்தால் இப்படி முடித்திருக்கிறீர்கள்!
ஓரிரு இடங்களில் உரையாடல் மிகச் சமீபத்தில் நெருங்கி வந்து நெஞ்சைத் தொட்டது. அந்த உணர்வு, ஆத்மார்த்த உரையாடல் பாணியிலேயே முழுசையும் ஏன் எழுதியிருக்கக் கூடாது என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மைதான்.

பல்வேறு சோதனை முயற்சிகளில் ஈடுபட வாழ்த்துக்கள்.

Unknown said...

கிருத்திகா,

நன்றாக இருந்தது.ஒரு உணர்வு பூர்வமான அனுபவம்/கதை.

//சத குரு ஞானானந்த மூர்த்திக்கீ ஜெய்! ஸ்வாமி ஹரிதாஸ் கிரி மஹாராஜிக்கீ ஜெய்!//

பாச மலர் / Paasa Malar said...

அழகான அனுபவங்களை மிக அழகாக வரிகளில் வடிக்கும் உங்கள் பாங்கு மிகச் சிறப்பு கிருத்திகா...படித்து மிகவும் ரசித்தேன்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

மிகவும் உணர்வுபூர்வமாய் இருந்தது.

கண்களில் கோர்த்திருந்த நீர்த்துளிகளும், முகம் அடைந்திருந்த வருத்தச்சாயலும் காட்டிக்கொடுத்திருக்கவேண்டும் கிருஷ்ணனுக்கு அவள் உள்ளக்கிடக்கையை.

இந்த அன்பு எப்பவும் உங்கூட இருக்கும் கண்ணா. இவங்களுக்கு உன்னோட அன்பை குறையில்லாம பகிர்ந்து கொடுத்த போறாதா? இன்னம் வேற யார் வேணும்?

:)-

Krishnan said...

என் நண்பர் ஆத்மாநாம் புத்தகம் கிடைக்கும் இடத்தை பற்றி தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வருகை புரிந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி...

கபீரன்பன் said...

வாழ்க்கையின் சில நிராசையான தருணங்கள் கூட அன்பான அரவணைப்பின் மூலம் மகிழ்ச்சிகரமாகும் என்பதை அழகாக எடுத்து சொல்லியிருக்கிறீர்கள். நன்றி

மெளலி (மதுரையம்பதி) said...

மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

Unknown said...

really touching and thought provoking one.. that too the last line in particular.."//தனக்குண்டான கர்மாவை அன்போடும் ஆசையோடும் செய்வதைப்போன்றதொரு மிகப்பெரும் தியானம் ஏதுமில்லை என்ற கீதையின் கர்மயோகத்தைச்சொன்ன சாரதியாய் தெரிந்தார் கிருஷ்ணன்//" ..
may god bless you more, krithigaa!
Sriram chennai