Thursday, March 20, 2008

சொனாட்டா கோல்டும் மாம்பலம் குறுக்குச்சந்தும்.

11 கி.மீ துரத்தை 20 நிமிஷத்தில் சென்னை வாகன நெரிசலில் கடந்து செல்ல முடியுமா??? முடியும் 11 கி.மீ 14 கி.மீ ஆவதை பொருட்படுத்தாமல் பிரதான சாலை சிக்னல்களை விலக்கிவிட்டு தட்டு முட்டு சந்துகளில் புகுந்து புறப்பட்டால் உங்களால் வெகு எளிதில் 20 நிமிடங்களில் கடந்து விடலாம்.

என் ஆபிஸ் மாறினப்புறம் மொதல்ல கொஞ்ச நாளைக்கு ரொம்ப பொறுப்பா என்னோட 2 வீலர்ல என் வீட்டில் இருந்து புறப்பட்டு பிரதான சாலை வழியாக (ஏன்னா மத்த வழி எல்லாம் தெரியாது) எல்லா சிக்னலிலும் நின்று ஒரு 40 நிமிஷ நேரத்தில் அலுவலகத்திற்கும். பின் அலுவலகத்தில் இருந்து 50+ நிமிஷத்தில் வீட்டிற்கும் போவது வழக்கம். சில சமயம் இரங்கமணி கொண்டு விடுவது வழக்கம் அது போன்ற சமயங்களில் காரில் ஏறியவுடன் ஒரு முடிவு செய்து கொள்வேன் “இவர் போகும் வழிகளை நன்கு பார்த்து வைத்துக்கொள்ளவேண்டும்”(ஏன்னா எப்படியோ சிக்னலே இல்லாத ரோட்டுல போயி வேகமா கொண்டு விடுவது வழக்கம்) பின் நாமும் அது போல போகலாம் என்று முடிவு செய்து கொள்வேன். ஆனால் வழக்கம் போல் ஏதாவது பேச ஆரம்பிப்பேன் இல்லேன்னா அவர் ஏதாவது பாட ஆரம்பிப்பார் (எங்க வீட்டு இரங்கமணி அவ்ளோ நல்லா பாடுவாரு) நான் என் பிரதிஞ்ஞைகளையெல்லாம் மறந்து பேச்சு/பாட்டில் மும்மராமாகி ஆபிஸ் வாசல் வந்ததையே அவர்தான் சொல்லித் தெரிஞ்சுக்கரமாதிரி ஆயிடும்.

ஆனால் இப்பெல்லாம் (அதான் 3 வருஷம் ஆயிடுச்சே) தி.நகருக்குப்போகும் அத்தனை குறுக்குச்சந்தும் எனக்கு மனப்பாடம். நான் திருப்ப வேண்டிய அவசியமே இல்லாம என் வண்டி தானே திரும்பி போற அளவுக்கு பழக்கம் ஆயிடுச்சு. எங்க ஹார்ண் அடிக்கணும் எங்க மெதுவா போகணும் இது போன்ற இன்னபிற நுணுக்கங்களுக்கு கூட என் மூளையின் கட்டளைகளை என் வண்டியோ என் கைகளோ எதிர்பார்பதேயில்லை ஒரு தானியங்கி சாதனம் மாதிரி போயிகிட்டே இருக்கும். ஆனா இதுல இருக்கற ஒரு பெரிய தொல்லை பத்திதான் இந்த பதிவே (தலைப்புக்கு வரவேண்டாமா அட்லீஸ்ட் தமிழ் சினிமா மாதிரி கடைசிலயாவது சொல்லித்தானே ஆகணும்.)

இப்படி வர முட்டுச்சந்துகளின் மொத்த அகலத்தில்

01. இரண்டு இரு சக்கர வாகனங்கள் எதிரும் புதிருமா ரொம்ப வசதியா போகலாம், (ஏன்னா எல்ல சந்திலேயும் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கும் அது வாசல்ல அவங்கவங்க 2 வீலர் இருக்கும்)
02. ஒரு நான்கு சக்கர வாகனம் ஒரு புறமாக போக மட்டுமெ செய்யலாம். (அதுவும் மாருதி ஆல்டோ, 800, பழைய மாருதி ஜென், மாருதி ஆம்னி போன்றவைகள் மட்டுமே , ப்ரிமியர் பத்மினிய இதுல சேர்க்க மாட்டேன் ஏன்னா திடீர்னு திருப்பணும்னா ஓட்டுநர் ஒரு ஹெவி வெகிக்கிள் லைசன்ஸ் வைச்சிருந்தார்னாத்தான் முடியும்)
03. ஒரே ஒரு மீன்பாடி வண்டி (சென்னை நகரவாசிகளுக்கு இதன் மகத்துவம் நல்லாவே தெரியும்) ஒரு புறமாக போக மட்டுமே முடியும்.
04. ஒரு ஆட்டோ போகலாம்( இவங்களுக்கு ஒரு/மறு புறமெல்லாம் கிடையாது எங்க வேணா எப்ப வேணா திரும்புவாங்க பின்னாடி வர்ரவங்க அதை அனுசரித்து ஒட்டினா அவங்கவங்களுக்கு நல்லது).

ஒரு முக்கியமான் விஷயத்தை விட்டுட்டேன், ஒவ்வொரு சந்துலேயும் ஒரு மாநகராட்சி குடிதண்ணீர் தொட்டி இருக்கும் அதற்கு தண்ணி வினியோகம் செய்ய எப்ப வேணா மாநகராட்சி வாகனங்கள் வரும் அந்த நேரங்களில் எந்தப்பக்கமும் வாகன போக்கு வரத்து இருக்காது (ஏன்னா மொத்த தெருவையும் அந்த வாகனம் தான் அடைச்சு நிக்குமே).

இந்த அழகில பல 4 சக்கர வாகன ஓட்டிகளும் இந்த தெருக்களை தாண்டிச்செல்வதையே குறிக்கோள்களாகக்கொண்டு வருவது வழக்கம் அப்பெல்லாம் எனக்கென்னமோ அவங்கள பார்த்த கோட்டு சூட்டு போட்டு கிட்டு பஞ்சுமிட்டாய் சாப்பிடர மாதிரியும், மடிசார் புடவை கட்டிகிட்டு மீன் வாங்கற மாதியும் தோணும். இன்னக்கி எல்லாத்தையும் தூக்கி சாப்டுவது போல இது போன்ற ஒரு குறுக்குச்சந்தில் ஒரு நல்ல ஹுண்டாய் சொனாட்டா கோல்ட் கார ஒட்டிகிட்டு வந்தார் ஒரு கனவான். கரெக்டா இவரு நடு தெருவுக்கு வரவும் மாநகராட்சி தண்ணி வாகனம் வரவும் ரொம்ப சரியா இருந்தது. பின்னாடி வந்த எங்களைப்போன்றவங்க ரொம்ப சமயோசிதமா இந்த சொனட்டா கோல்டை தாண்டி போகலாம்னு முயற்சி பண்ணினா இதையெல்லாம் முன்னமே உணர்ந்த ஆட்டோ எங்களை முந்திகிட்டு தாண்டிப்போக முயற்சித்து அந்த அடுக்குமாடி குடியிருப்புக்காரரின் 2 வீலரை இடிச்சு ஒரே ரகளை டிராபிக் நின்னாச்சு, சரி பின்னாடி போயிடலாம்னு பார்த்தா , ஆட்டோ, ஒரு காரு, நிறைய 2 வீலர், அப்புறம் ஒரு மினிலாரி, எங்க திரும்பறது ஒரு 15 நிமிஷம் எந்த வழியும் இல்லாம நின்னு மாநகராட்சி வண்டிக்காரனை கெஞ்சி கூத்தாடி பின்னாடி போக வெச்சு (அதுக்குள்ள அது பின்னாடி ஒரு 10 /25 வண்டி வந்தாச்சு – ஆனா இந்த மாதிரி சமயத்தில சில திடீர் பரோபகாரிகள் வந்துருவாங்களே) நாங்க அந்த இடத்தவிட்டு வர்ரதுக்குள்ளே வந்த எரிச்சல்ல தமிழ்மணத்துக்கு ஒரு பத்து பக்க மொக்க போடனும்போல ஆச்சு.

தி மாரல் ஆப் தி ஸ்டோரி இஸ்… இதனால் யாவருக்கும் சொல்லவருவது என்னவென்றால் இவ்வளவு பெரிய காரையெல்லாம் எந்த காரணத்துக்காகவும் இந்த மாதிரி சின்ன சந்துக்கு கொண்டு வராதீங்க அது உங்க காருக்கும் மரியாதை இல்ல எங்க மாதிரி பொது ஜனத்துக்கும் நல்லதில்ல.

7 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆகா, போக்குவரத்துகளில் என்னென்ன பிரச்சனை போக்குவரத்துன்னு புட்டு புட்டு
வச்சு இருக்கீங்க. சிங்காரச் சென்னையின் எழில், கூவம் நதிக்கரை வழியாகச் சென்ற அனுபவம் உண்டா?

அன்புடன்,
ஜோதிபாரதி.

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

//கோட்டு சூட்டு போட்டு கிட்டு பஞ்சுமிட்டாய் சாப்பிடர மாதிரியும்//

ரசிக்க வைத்த வரிகள்.

நானும் மூன்றரை வருடங்கள் நங்கநல்லூர்-இல் இருந்து கதீட்ரல் ரோடு போய் கொண்டிருந்தேன். இதற்கு பல வழிகளில் போன அனுபவம் உண்டு. சைதாபேட்டை தண்டியவுடம் இடது திரும்பி நந்தி சிலையை சுற்றி தி-நகர் வந்து பல குறுக்கு சந்துகளில் புகுந்து பாண்டி பஜார் வழியே ஜி. என். செட்டியை பிடித்து அண்ணா மேம்பாலம் கீழே வலது திரும்பி அலுவலகம் போவது தான் நார்மல் ரூட். இதில் பல முறை நீங்கள் சொன்ன கார் அல்லது தண்ணி லாரி அடைத்துக் கொண்டு நின்று விடும். அப்போதெல்லாம் இதற்கு அண்ணா சாலையிலேயே போயிருக்கலாமோ என்று ஒரு எண்ணம் தப்பாமல் வரும். அடுத்த நாள் அண்ணா சாலையில் போனால் நந்தனம், தேனாம்பேட்டை சிக்னல்களில் மாட்டிக் கொண்டு உயிர் போய் விடும்.

வடுவூர் குமார் said...

கார் வாங்கிய பிறகு தானே அந்த பிரச்சனை...
அப்ப பாத்துக்கலாம். :-))

பாச மலர் / Paasa Malar said...

கிருத்திகா..மொக்கைன்னு சொல்லியிருந்தாலும் மிகவும் சுவாரசியாமாக இருந்தது...கோட்டு சூட்டு பஞ்சு மிட்டாய், மடிசார் மீன்...அமர்க்களம்..அழகான அங்கலாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க ஜோதி என்னசெய்ய நம்மக்குத்தான் புலம்ப ஒரு இடம் கிடைச்சிருக்கில்ல விட்டுடலாமா.....

வந்தியத்தேவன் - நீங்க சொல்வது சரிதான் இன்று இப்படி இருக்கே நாளைக்கி வேற வழியா போனா அங்க மாட்டிப்போம் (எல்லாரும் நம்மளப்போலத்தான் புத்திசாலின்னு நம்க்கு கொஞ்சம் லேட்டத்தான் புரியுது)

வடுவூராரே இப்பெல்லாம் கார் வங்கறது என்ன அவ்வளவு பெரிய விஷயமா வாழ்த்துக்கள் சீக்கரமே ஒரு பெரிய கார் வாங்க

மலர் நீங்க வந்தாத்தான் பதிவு நிறைவுற்றமாதிரி ஒரு பீலிங். நன்றி

ஜீவி said...

முதலில் இதைச் சொல்லிவிட வேண்டும்: ஒரு சிறுகதைக்கு கொடுக்க வேண்டிய நல்ல தலைப்பு.

தி.நகருக்குப் போகும் மாம்பலம் குறுக்கு தெருதானே?..நீங்கள் சொல்லாமலே, அடிக்கடி தண்ணீர் லாரிகள் அடைத்துக் கொள்ளும் அந்தத் தெரு எதுவென்று தெரிகிறது.
தி.நக்ரிலிருது, மேட்லி மேம்பாலம் தாண்டி, அந்த சின்னத்தெருவிற்குள் நுழைய எத்தனிக்கையிலேயே எனக்கும் தண்ணீர் லாரிகள் நினைவுதான் வரும்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆஹா ஜீவி எப்படி இவ்வளவு சரியா சொல்லியிருக்கீங்க.. உண்மையில் நான் அந்த தெருவைப்பற்றித்தான் சொல்லியிருக்கேன். அதெப்படி கூடவே இருந்த மாதிரி.. இனிமே அந்த தெரு வழியா போகும்போது கூடவே உங்க ஞாபகமும் வந்தாலும் வரும்....
தலைப்பு பற்றிய கமெண்ட்.. பாசிட்டிவாவே எடுத்துக்கறேன். நன்றி