Wednesday, July 22, 2015

எதிர்பார்ப்பு


ஜிம்முக்கு  போனவனுக்கு மனசு ஒன்றவேயில்லை. மணி எட்டாச்சு இன்னமும் தாத்தா எழுந்திருக்க வில்லை. பொதுவாக 5 மணிக்கு முதல் ஆளாக எழுதிருப்பது அவர்தான். இன்னம் கொஞ்சம் தூங்கலாம் என நினைக்கும் நேரத்தில் தாத்தாவிற்காக அவரோடு எழுந்து ஹாலுக்கு வந்து விடுவது வழக்கம். அவரால் தனித்திருக்க முடியாது. யாரவது கண்டிப்பாய் கூட இருக்க வேண்டும்.

அவருக்கு தானாக பல்தேய்க்க எடுத்துக் கொள்ளத் தெரியாது. பேஸ்டை எடுத்து கையில் பிதுக்கி வைக்க வேண்டும். பிரஷ் உபயோகிக்க மறந்து போய் பல வருஷம் ஆகிறது. சொல்லப்போனால் இவனை மட்டுமல்ல தன் பிள்ளை மருமகளைக் கூட அடையாளம் தெரியாமல் போய் நாலைந்து வருடங்கள் ஆகிறது. தொடர்ந்தால் போல் நாலு மணி நேரம் பார்க்கவில்லை என்றால் மீண்டும் பார்க்கையில் “உங்காத்துல எல்லாரும் சவுக்கியாமா” என்று கேட்பார்.

அப்பாதான் பார்த்து பார்த்து செய்வது. அம்மாவும் உகந்து உகந்து உடன் செய்வாள். பெரும்பான்மையான தூங்காத இரவுகளில் இவர் உரக்க தனக்குதானே பேசிக்கொள்ளும் அரவம் கேட்டு அப்பா வந்து நீ போய் எங்க ரும்ல படுத்துக்கோ என்று அவரோடு விடிய விடிய விளக்கை போட்டபடி அவரது அர்த்தமற்ற கேள்விகளுக்கும் பேச்சுக்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பார். 94+ வயதான அல்சைமர் பாதித்த தாத்தாவை 50+ வயதான அப்பா இத்தனை பொறுமையாய் பார்த்துக் கொள்வதைக் கண்டு மனது விம்மும். நாமும் அப்பா போல இருக்க வேண்டும் என்று தோன்றும்.

ஆனால் இன்று தாத்தா எட்டு மணிவரை எழும்பாதது மனதை என்னவோ செய்தது. பாதியில் ஜிம்மை முடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பினான். தாத்தா இன்னமும் எழுந்திருக்க வில்லை. நேரே அறைக்குச் சென்றவன் தாத்தாவிற்கு மிகவும் அருகில் நின்றபடி அவர் தூங்குவதையே உற்று நோக்கினான். என்ன பார்க்கிறான் என்று அவன் உள் மனதிற்கு புரிந்தது. சிறிது குழப்பமாகவும் குறுகுறுப்பாகவும் இருந்தது. சில நிமிட உற்று நோக்கலுக்குப் பிறகு போர்வை மிக மெதுவாக ஏறி இறங்குவது தெரிந்தது.  தாத்தா மெல்ல கண்விழித்து பார்த்துவிட்டு மறுபுறம் புரண்டு படுத்தார். இவன் ஜன்னலை திறந்து வைத்து விட்டு வெளியேறினான்.

இது என்ன மாதிரி மனநிலை என்று யோசித்த வண்ணம்.

1 comment:

ஜீவி said...

//நேரே அறைக்குச் சென்றவன் தாத்தாவிற்கு மிகவும் அருகில் நின்றபடி அவர் தூங்குவதையே உற்று நோக்கினான்.//

உணர்வுகள் எழுத்தானதின் உச்சப்பட்ச படப்பிடிப்பு. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பலருக்கு இதுவே அனுபவமாகியிருக்கலாம்

//சில நிமிட உற்று நோக்கலுக்குப் பிறகு போர்வை மிக மெதுவாக ஏறி இறங்குவது தெரிந்தது.//

'அம்மாடி' என்றிருந்தது.