Sunday, July 5, 2015

இறுதியில் தலைப்பு வரும் ஒரு கதை - சிறு கதை


அவளை எங்கேயோ பார்த்தது போல் இருந்தது. ஒரு சிலருக்கே அப்படி கூந்தல் அமையும் நெளி நெளியாக கொஞ்சம் முரட்டுத்தனம் கலந்த கூந்தல். அதில் சிறிதே சால்ட் அண்ட் பெப்பர் லுக் வந்திருந்தது. அந்த பெரிய இரப்பைகள் கொண்ட அகண்ட விழிகள் இந்த வயதிலும் அவளை துறு துறுவென காட்டிக்கொண்டிருந்தது. அகண்ட இடுப்பும் சற்றே விகிதாசாரம் குறைந்த தோள்களும் கொஞ்சம் அந்நியமாகத் தெரிந்து தயக்கத்தை தந்தது.
 
ஈரக்கையை புடவைத் தலைப்பில் ஒற்றியபடி என்னைத் தாண்டி இரு மேசைகளுக்கு அப்பால் இருந்த குடும்பத்தோடு ஒன்றிக் கொண்டாள்.

இப்போ அந்த மேசையில் இருந்த ஆணின் முறை போலும் நல்ல டெர்லின் பேண்ட் பார்த்தவுடன் டெய்லர் கடை பிராண்ட் ஸ்லிப் மட்டும் தான் தெரியவில்லை மத்தபடி ரெடிமேட் இல்லை எனத்
தெளிவாகத் தெரிந்தது. மேட்சாக பெரிய பெரிய கட்டம் போட்டு முழங்கை வர நீண்டிருந்த அரைக்கை சட்டை, கால்களில் தோல் செருப்பு பாணியில் வார் வைத்த செருப்பு, கொஞ்சம் தடிமனான பிரேம் போட்ட கருப்புக் கண்ணாடியும் முன் வழுக்கையும் சொன்னது இன்னும் ஒன்றிரெண்டு வருடங்களில் பணி ஓய்வு பெற காத்திருக்கும் அரசு ஊழியர் என. சற்றே கால் அகட்டி நின்று கொஞ்சம் அசைந்து சரி செய்தபடி என்னைக் கடந்து போய் கை கழுவி வந்தார். மகனும் மகளுமாய் இருக்கும் போல அவரவர் கை பேசியில் ஆழ்ந்து நோக்கிய படி இருந்தார்கள். மாமியார் போலும் ஒரு வயதானாவர் "எனக்கு ரெண்டு இட்லி சொல்லு போரும், காப்பியெல்லாம் வேண்டாம், ஆத்துல போய் மோரக் குடிச்சிக்கறேன்" என்று பிறந்த குடியை பறைசாற்றிக் கொண்டிருந்தாள்.

இன்னும் நான் இவளை எங்கே பார்த்திருக்கிறேன் என்று யோசித்தபடி தட்டில் இருக்கும் விருதுநகர் பரோட்டோவோடு சண்டையிட்டுக்கொண்டிருந்தேன்.

எல்லோருக்கும் அவரவர் சொன்னவை வந்ததும் அவள் ஏதோ வீட்டில் விளம்பித் தருவது போல் ஒவ்வொருவருக்கும் செர்வ் பண்ண ஆரம்பித்தாள்.

அப்போது தான் அவள் கணவர் அகிலா அந்த தேங்கா சட்னியை போடு என்று சற்று உரத்த குரலில் சொன்னதும் எனக்கு அடிச்சது ப்ளாஷ்....

 ஆஹா இது பாரு சித்தி பொண்ணு அகிலா.... அந்தக்காலத்துல நாங்களெல்லாம் படிய வாரி, ரிப்பன் கட்டின ரெட்டைப் பின்னலும் அரை / முழுப் பாவாடையோடு இருக்கையில் முதன் முதலில் சுடிதார் போட்டு முரட்டுக் குழல் பறக்க, காதில் பெரிய வளையங்களோடு நெய்வேலியில் இருந்து வரும் அகிலா.

பாரு - சித்திதான் ஆனால் அம்மாவின் சொந்த தங்கையோ உறவோ இல்லை சமவயதுத்தோழி, அடுத்தடுத்த வீட்டில் ஆறுமங்கலத்து அக்ரஹாரத்தில் வளர்ந்தவர்கள்.

 பாரு சித்தி வந்ததை எனக்கு சுப்பு தான் வந்து ரகசியமாய் சொல்லுவான். நானும் அம்மாவிடம் ஓடிப்போய் சொன்னதும் அடுத்த வார்த்தை அந்தக் கடங்காரனும் வந்திருக்கானா?? என்பதாகத்தான் இருக்கும். அது சித்தப்பாவைத்தான் என்று சொல்லாமலே தெரிந்திருக்கும் தானே. அவர் பெயர் ஈஸ்வர மூர்த்தி ஆனாலும் ஒரு முறை கூட நான் சித்தப்பா என்று அழைப்பதற்கு அனுமதிக்கப் பட்டதில்லை.

 நான்கு தெரு தள்ளி, பிள்ளைமார் தெருவிலிருக்கும் சித்தப்பாவின் அண்ணா வீட்டிற்குத்தான் அவர்கள் வருவார்கள். வந்து இரண்டு மூன்று நாள் கழித்து பாரு சித்தி மட்டும் ஒரு நடு மதிய வேளையில் சாஸ்தாங்கோவிலைச் சுத்திக்கொண்டு கொல்லைப் புறமாக பதட்டத்தோடு அம்மாவைப் பார்க்க வருவாள்.

 அம்மா அவளைக் கூட்டிக் கொண்டு கிணத்தடிக்கு போய் விடுவாள் இருவரும் ரகசியமாக வெகு நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். கடைசியில் சித்தி கிளம்பும் போது கண்ணும் முகமும் சிவந்து அத்தனை நேரம் அவள் அழுதிருப்பது நன்றாகத் தெரியும்.

நாங்கள் அம்மாவுக்கு தெரிந்து பாதி தெரியாது மீதி அகிலாவையும் அவள் அக்காவையும் பார்க்கப் போவோம். சுப்புவும், பரமனும் தான் எங்களுக்கு அந்தக் கடங்காரன் அதாவது அவர்கள் சித்தப்பா வீட்டில் இல்லாத சமயம் எதுவென சொல்லிக் கூட்டிச் செல்வார்கள்.

 நாங்கள் தாயமோ இல்லை பல்லாங்குழியோ விளையாடி விட்டு நெய்வேலி டவுன் ஷிப் கதைகளை ஆவென வாய் பிளந்து கேட்டு விட்டு வெளியேறும் போது சில சமயம் வீட்டு வாசலில் அவர் ஈசிச்சேரில் சாய்ந்த படி படுத்திருப்பார். என்னைக் கண்டதும் அடர்த்தியான இணைந்த புருவம் ஏறி இறங்க இங்க வா எனக் கூப்பிடுவார். நானும் குறுகுறுப்போடு போய் நிற்கையில் எனக்குப் பின்னால் பாரு சித்தியின் பதட்டமான கண்கள் முதுகை துளைக்கும்.

 ஆனால் அவர் என்னமோ மிகவும் வாஞ்சையோடு ஒரு தகப்பனுக்கிருக்கும் ப்ரியத்தோடு ஏதாவது கேட்பார் நானும் பதட்டத்தோடு பதில் சொல்லிவிட்டு விட்டால் போதும் என்று ஓடி விடுவேன்.

இதெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான் பிறகு அண்ணனுக்கும் தம்பிக்கும் நடந்த சொத்து பிரச்சனையில் அவர்கள் எங்கள் ஊருக்கு வருவது அறவே நின்று போனது. அகிலா வெறும் பெயராகிப் போனாள்.

 வளர்ந்து சில காலங்களில் வர்க்கப் பிரிவினைகள் புரிய ஆரம்பித்த காலத்தில் புரிந்து கொண்டேன் பாரு சித்தி வேற்று ஜாதிக்காரரான பரமனின் சித்தப்பாவை காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டாள் என்றும் சித்தப்பா கொஞ்சம் அளவுக்கு அதிகமான முன் கோபி என்றும்.

 கிட்டத்தட்ட 36 வருடங்களுக்குப் பிறகு இன்று தான் அகிலாவைப் பார்க்கிறேன்.

 அதற்குள் அவர்கள் சாப்பிட்டு ஒவ்வொருவராக கை கழுவ கடைசியாகச் சென்ற அகிலாவை கிட்டத்தட்ட துரத்திய படி சென்று வாஷ்பேசினில் பிடித்து விட்டேன்.

பரஸ்பர பரிமாற்றத்தில் அவள் ஒன்றும் என்னைக் கண்டு என்னைப் போல் எக்ஸைட் ஆகவில்லை என்பது நன்றாகப் புரிந்த போதும் என் ஆர்வம் விடாது கேள்வி கேட்டது.

 அக்கா என்ன பண்ரா?? அக்காவை அம்மாவோட தம்பி சேச்சா மாமா மன்னியோட ஒன்னு விட்ட தங்க பையனுக்கு குடுத்திருக்கு. அம்மா மாமா கால்ல கைல விழுந்து எப்படியோ சம்மதம் வாங்கி பண்ணிக் குடுத்திட்டா. இவாளும் நம்மவாதான் அக்காவோட புக்காத்துக்கு தூரத்து ஒறவு, கொஞ்சம் வயசு வித்யாசம் ஜாஸ்தி ஆனாலும் அம்மா நம்மவாளா இருக்கணும்னு பிடிவாதமா இந்த இடத்தையே முடிச்சுட்டா. அப்பா காலம் ஆயிடுத்து அம்மா போய் இப்பத்தான் ரெண்டு வருஷம் ஆச்சு.

ஏதோ போயிண்டிருக்கு நான் இப்போ கடலூர்ல பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா இருக்கேன், அவர் 2016 ல ரிடையர்ட் ஆகிடுவார். பொண்ணுக்கு இங்க டி.சி.எஸ் ல கேம்பஸ்ல கிடைச்சிருக்கு அதனால சென்னைல வீடு பாத்து வைச்சிருக்கோம். அவரும் ரிடையர்ட் ஆனோன்ன இங்கயே வந்துட வேண்டியது தான்.

உங்கிட்ட சொல்றதுக்கென்ன எங்க அம்மா மாத்து ஜாதில கல்யாணம் பண்ணிண்டு இங்கயும் இல்லாம அங்கயும் இல்லாம எவ்ளோ அல்லாடினா, எத்தனை கஷ்டப்பட்டு எங்களுக்கு நம்மதுல கல்யாணம் பண்ணினா...

இதெல்லாம் இந்தப் பொண்ணுக்குப் புரியலை..கூட வேல பாக்கறானாம், ஏதோ இந்திக்காரனை பண்ணிப்பேன்னு தல கீழ நிக்கறது எனக்கு என்ன பண்றதுன்னே புரியல என்று நீட்டமாகப் பேசிக் கொண்டே போனாள்.

எனக்கு கண்முன் அடர்த்தியான இணைந்த புருவங்களைக் கொண்ட கொஞ்சம் முன்கோபியான சித்தப்பா முகமும், அழுது சிவந்த அம்மாவின் தோழி பாருவின் முகமும் அவர்களது செத்துப் போன காதலும் கண்ணில் இன்னமும் வந்து கொண்டேயிருக்கிறது.

ஒரு இறந்தகால காதல் கதை இத்தோடு முடிந்தது.

 

No comments: