Tuesday, July 21, 2015

மாறும் பார்வைகள்


இப்ப எதுக்கு இந்த ட்ரிப் அதுவும் எந்த தகவலும் இல்லாம, மாப்ள ஒன்னும் சொல்லலைங்கறதுக்காக  நீ  இப்படி  நினைச்சப்பல்லாம்  வண்டிய தனியே எடுத்துட்டு 5 மணி நேரம் ட்ரைவ்  பண்ணி  வரது  நல்லாவே இல்ல.. பசங்க பெரியவங்களா ஆயிட்டாங்க அவங்களும்  நாளைக்கு கேள்வி கேப்பாங்க - என்று  திண்ணையில் இருந்த சாக்கு படுதாவை இன்னமும் இன்னமும் என்று சுருட்டி அதற்குண்டான கயிறுகளில் முடிச்சிட்டபடி பேசிக்கொண்டிருந்தவனின் செய்கையில் இருந்த நேர்த்தியை  ரசித்த படி பார்த்துக் கொண்டிருந்தேன்  ஐம்பதின் ஆரம்பம் தானென்றாலும் கொஞ்சம் அதிகம் தளர்ந்தது போலிருந்தான்.

வெளிச்சமும் இருளும் கலந்து பரவியிருந்த அந்த திண்ணையின் முகப்பில் பாவியிருந்த கருங்கல் தளம் அந்த இடத்திற்கு இன்னமும் குளிர்ச்சியைத் தந்து கொண்டிருந்தது. ஒட்டடை அடிக்கப் படாமலிருந்த கம்பி அழிகளின் ஊடே தெரிந்த,  கோவில் மதிலில் அடித்திருந்த வெள்ளையும் காவியும் கொஞ்சம் நிறம் மாறியிருந்தது. மதிலின் மேல் பாகம் மட்டுமே இப்போது தெரிந்தது.  முன்பெல்லாம் பாதிக்கும் மேல் தெரியும்,  கோவில் கொடி ஏறும் பொழுது அம்மா பெரும்பாலும் இந்த திண்ணையில் இருந்து தான் பார்ப்பதுண்டு.  பாட்டியும் அப்பாவும் தான் கோவில் வாசலுச் சென்று கொடி ஏறியதும் கோவிலுக்குள் மட்டும் சுற்றி வரும் சீவிலிக்கு இரண்டு கதலிப் பழமும், நாலு  வெத்திலை ரெண்டு  பாக்கு வைத்த அர்ச்சனை தட்டை நெய்வைத்தியம் செய்துவிட்டு வருவார்கள்.  இப்போது எதிராத்து  அம்பி அண்ணா மாடி கட்டிவிட்டார் போல அதனால் தான் மதிலின் மேல்புறம் மட்டும் தெரிகிறது.  ஆனாலும் கொடி ஏறினால் தெரியும் என்றே தோன்றியது.

என்ன  நா பாட்டுக்கு பேசிக்கிட்டேயிருக்கேன் நீ என்ன யோசனைல இருக்க? என்றவனிடம் கிழக்க இருக்கற தோப்புக்கு தொழுவத்துலேர்ந்து உரம் வாங்கிப் போட்றேன்னியே போட்டீயா  என்றேன்? என்  கேள்வி போகும் திசையை அறிந்தவன் போல் ஆமா போட்டாச்சு என்றவன் அவசமாக “அப்புறம் நாளைக்கு எனக்கு கொஞ்சம் ஆபிஸ் விஷயமா மதுர வரைக்கும் போக வேண்டியிருக்குஅதுக்காக  ஒரு ஆளப்பாக்கத்தான் கிளம்பிகிட்டிருந்தேன் பிச்சம்மா  நீ   வந்திருக்கன்னு சொன்னா  என்னடா சொல்லாம கொள்ளமா  வந்திருக்கியேன்னு ஓடி வந்தேன். இப்பம் என்ன விசயமா  வந்திருக்க??  மீண்டும் தொடங்கிய இடத்தில் வந்து நின்றான்.

எனக்குத் தெரியும் நான் எதற்காக வந்திருக்கிறேன் என்று அவனுக்கும்  தெரியும் என்று. என்னை விட ஒரு சில வயது மூத்தவனாய் இருக்கலாம் எத்தனை வயது என்று இது வரை கேட்டதில்லை. பள்ளியில் எனக்கு ஒரு செட் முந்தி அது மட்டும் தெரியும்.

பொண்ணு மீரா டிக்கட் புக் பண்ணிட்டாளாமா பேசினாளா? மாப்பிளயாத்துலேர்ந்து  எப்ப வரா? நிச்சயம் தனியா பண்ணனும்னு சொன்னியாம்? என்றவளிடம், , பாத்தியா  பிச்சம்மா அதையும் தான் சொல்லச் சொன்னா பாத்துக்கிடு.. அந்தப் பையனும் அடுத்த மாசக் கடசீலதான்  வாரகளாம் , மவளும் அப்பத்தான் வாரா. வந்தப் பொறவு சும்மா வீட்டுக்கு வந்துட்டு ஒரேதடியா கல்யாணத்தை வைச்சுப்பிடலாம்னு அவிய வீட்டுலயும்  சொல்லுதாவளாம் .. பிச்சமாளுக்கு அத்தனை ஒப்பில்ல,  ஆனா மவ திருப்பித் திருப்பிச் சொல்லப்போக வேற வளியில்லாம அர மனசா சரின்னு சொல்லியிருக்கா. ஓங்கிட்டையும் ஒரு வார்த்தை பேசனுமுன்னு சொன்னா. சாயங்காலம் கோயிலுக்கு வரும்போது வருவாளாக்கும்.  ச்சரி மதியம் என்ன சாப்ட்ட, ராத்திரிக்கு  அம்மணி மெஸ்ல சொல்லிட்டு போகட்டா என்றபடி கிளம்பத்தயாரானான்.

ஆனால் போக மாட்டான், என் அடுத்த செயல் திட்டம் என்னவென்று தெரியாத வரை அவன் போக மாட்டான். நான் கால்களை தழைவாக தொங்க விட்டபடி பக்கத்தில் இருந்த கை பேசியை எடுத்து. டயல் செய்தேன்.  ராஜு நாந்தான்... ம்ம் ஒரு குட்டி தூக்கம் போட்டேன்.  கொஞ்சம் மெயில்ஸ் பாத்தேன்.   இல்ல ஒன்னும் பிரச்சனை இல்ல அதான் அப்பவே சொன்னேனே  ரோடு போட்டுட்டான் அந்த  பேட்ச் கூட சரி பண்ணிட்டான் நல்லா வந்துட்டேன். நாளைக்கு ரெண்டு மணிக்கு மேல கிளம்பறேன் மேக்சிமம் ஏழு எட்டு மணிக்குள்ள வந்திடறேன்.. இல்ல  இருட்டறதுக்குள்ள டபுள் ரோட் தொட்டுடுவேன். கவலைப் படாதே. அப்புறம் வேற என்ன விஷயம். இங்கயா இங்க ஒன்னும் இல்ல மகராஜன் வந்திருக்காப்பல பேசிண்டிருக்கேன். என்னது அவன் பொண்ணு கல்யாணமா  ஆமா இப்பத்தான் அதைப் பத்தித்தான் பேசிண்டிருந்தோம். சொன்னான் அடுத்த மாசக் கடைசீல  வந்தோன்ன கல்யாணம்  .. ஆமாமா டைம் இருக்கு.  வேற .. வேற ஒன்னும் இல்ல நா அப்பறமா  போன் பண்றேன்  யூ டேக் கேர். என்ற படி போனை வைத்தேன்,

கோவிலுக்கு போவதற்காக ஒன்றிரண்டு பேர் வாசல் தாண்டி போவது தெரிந்தது.  திறந்திருக்கும் கதவையும் ஏற்றியிருக்கும் அழி படுதாவையும் பார்த்தபின் "யாரு விசாலியா" வந்திருக்கயா, வண்டியப் பாத்தேன் நீயாத்தான் இருக்கும்னு நினைச்சிண்டேன். இருப்பியா, ஆத்துல எல்லாரும் சவுக்கியமா, வந்திருக்காளா என்றபடி வாசல்படி ஏறினாள் பாகிபெரீம்மாவின் மகள் . அவள் ஒன்றும் சொந்தப் பெரியாம்மா இல்லை ஆனால்  இந்த தெருவில் எல்லோர்க்கும் அவள் பாகிபெரீம்மா தான்.  இல்ல ஜெயா நா மட்டுந்தான் வந்தேன் நாளைக்கு திர்நேலில ஒரு வேல இருக்கு முடிச்சுட்டு அப்படியே கிளம்ப வேண்டிதான்” என்றதும் “ஓ சரி நான் கோவிலுக்கு போய்ட்டு வந்துர்றேன் அப்படியே சந்தனமாரியம்மன் கோவிலுக்கும் போயிட்டுத்தான் வருவேன். ராத்திரி தோசை குடுத்து விடட்டா ஒன் ஒருத்திக்கு ஒன்னும் பண்ணின்டிருக்காதே என்று  சொன்னாள்”. “வேண்டாம் ஜெயா இப்பத்தான் மகராஜன் அம்மணிக்காட்ட சொல்லிட்டுப்போறேன்னு சொல்லின்டிருக்காப்ல உனக்கெதுக்கு சிரமம் நான் அங்க பாத்துக்கறேன்” என்றதும்  செயற்கையாக வந்த பதட்டத்துடன் ஓ அவர் வந்திருக்காரா என்றபடி தலையை திருப்பி பார்த்துவிட்டு சரி வேணும்னா சொல்லு என்று முகத்தில் ஒரு அசுயை படர கிளம்பிச்சென்றாள்

 இப்ப என்ன திர்நேலில வேல, நான் மதுர போகணும் நான் வரல என்றவனிடம் ஒரு அரமண்நேரந்தான்  எங்கூட வா மகா. நாளையோட பரோல் முடியுது அடுத்த பரோல்ல அவன் வரதுக்குள்ள அநேகமா நாங்க பெரியவனோட யூ.எஸ் போனாலும் போயிடுவோம். அப்பறம் எப்போ இந்தியான்னு  தெரியலை.  நானும் கீழத் தோப்புக்கு அவன் அப்பாம்மா வீட்டுக்கு வந்தா பாக்கலாம்னு நினைச்சேன் ஆனா தளவாய் சொன்னான் இந்த தடவை இங்க வரலையாம் அவன் அண்ண வீட்டோட இருந்துட்டானம். அதான் திர்நேலிக்குப் போலாம்னு நினைச்சேன். வாயேன். குரல் சிறிது இறஞ்சியது  

சாலம் நீ என்தாலிய அறுக்க கேட்டியா? மனுசன கோட்டிக்காரனாக்குத இப்பம் எதுக்கு அவனை பாக்கணும், அவன் அவன் பொண்ட்டாட்டிய போட்டுட்டு ஆயுள்ள வாங்கிட்டு பரோல்ல வந்திருக்கான் நீ இப்படி அவென் வரும்போதெல்லாம் பாக்குது எதுக்கு. என்று முனுமுனுக்கத்துவங்கிய நேரம் அவன் மனைவி பிச்சம்மா படியேறினாள்.

 யக்கா எப்படிருக்கிய, நல்லாருக்கியளா, என்னத்த சொல்ல இன்னமூம்  நமக்கு அக்ரஹாரத்துக்குள்ள நொளஞ்சா காலு மடங்குது, ஆனா  இந்தப் புள்ள எப்படித்தான் ஐயிரு வீட்டுப் பையன கட்டிகிட்டு குடுத்தனம் நடத்தப் போகுதே எனக்கொன்னும் புரியலக்கா.. இளம்பிள்ள பயோம் அறியாது ஆனா இந்தா நீங்களுமில்ல அவுகளுக்கு ஏத்துட்டு வாரிய, அடுத்த மாசக்கடைசில வாராகளாம், வந்து பேசிட்டு நேர பதிநேஞ்ச்சாம் நேத்து கல்யாணத்துக்கு மண்டபத்துக்கு வந்திருதாகளாம். அன்னைக்கு என்னாடான்னா மீரா போனப்போட்டு அம்மா சாப்பாடு உட்லேன்சுல சொல்லியாச்சு நீங்க ஒன்னும் ஏற்பாடு பண்ண வேணாம்னு சொல்லுது, இவியளும் ச்சரி ச்சரின்னுதாவ உட்லேன்ச்சுலன்னா கறிச் சாப்பாடு கிடையாதுல்லா நம்ம சாதி சன்னத்துக்கு என்ன சொல்லுதுடின்னு கேட்டா பின்ன ஒரு நாளு நம்ம வீட்டுல விருந்து வச்சிகிடுன்னு சொல்லுதா. இவரும் மண்டைய ஆட்டுதாரு.  மனுசங்க என்ன சாப்பாட்டுக்கா படியேருதாவ எனக்கு மிடியல சாலக்கா என்று திண்ணையின் ஓரத்தில் காலை மடக்கி உட்கார்ந்தாள். கையில் இருந்த என்னைக் கிண்ணத்தை பக்கத்தில் வைத்தபடி பிள்ளைய நல்லாருக்காவளா வரல்லியாக்கும் ஆனா மீரா சொல்லுதா ஒங்க மவனும் கலியாணத்துக்கு வருவாகளாமில்ல.  ஏதோ ஒரு ஊரு புள்ளக ஒண்ணா தூர  தேசத்துல இருக்குங்க ஒன்ன ஒன்னு பாத்திகிடுதுங்கன்னு சந்தோசமாத்தான் இருக்கு ஆனா இப்படி உங்க மவனோட கூட்டுக்காரனை கட்டிக்கிடுவேன்னு சொன்னப்ப எனக்கு ஆடிப் போச்சு கேட்டியளா? இவுக என்னமோ ரெடியாத் தான் இருந்தாக போல ஒரு வேள உங்கள சம்பந்த்தகார ஆக்கிப் புடலாம்னு நினைச்சாவளோ என்னமோ என்று சிரித்தாள்.

 நானும் கூடச் சேர்ந்து சிரித்தபடி எனக்கு இதுக்கும் மேல விஷயம் இருக்கு பிச்சம்மா.. நீயாவது வேற ஜாதி மாப்பிளைய பொண்ணு பிடிச்சிட்டான்னு பேசற யாரு கண்டா எம் பையன் வேற நாட்டுப் பொண்ணயே கூட்டிண்டு வருவானோ என்னமோ தெரியலை நான் எதுக்கும் ரெடியாத்தான் இருக்கேன் என்று சிரித்தேன்.  யக்கா நீங்கதான் அந்தக் காலத்துலயே உங்க வீட்டுக் காரவுகள லவ் பண்ணித்தான் கட்டிகிட்டிய என்ன.... சாதி சனம் ஒண்ணா போச்சு அம்புட்டுதான். இப்ப இவுக லெவலுக்கு இவுக பண்ணுதாக நீங்களும்  நாயம்னு தான் சொல்லுதீக இந்த மனுசனுமில்லா சரின்னுதாக என்று சிரித்தாள்.

 ஆனா பாத்திகிடுங்க நேத்துகூட மாப்ள வீட்டுல இவுக பேசுனாக நாளைக்கு ஒரு சோலியா கூட்டுக்காரனப் பாக்க திர்நேலி வருவேன் அப்பம் விட்டுக்கு வரேன்னு சொன்னவக. குரலைத் தணித்தபடி அதான் அந்த கிழக்குத் தோப்பு செகதீசன் அண்ணாச்சி.. பொஞ்சாதிய வெட்டிபுட்டு ஜெயில்ல இருக்காவல்லா அவிய வந்திருக்காவளாம் அவியள பாக்கப் போவாக.. இப்ப என்னடான்னா மதுரைக்கு போரேங்காவ மாப்ள வூட்ல என்ன நினைச்சுக்கிடுவாக சொல்லுங்க . என்று அவளரியாமல் ஒரு உண்மையை,  நான் உணர்ந்திருந்த ஒரு விஷயத்தை போட்டு உடைத்தாள்.

 ஆமா உனக்கு இவியளக் கண்டா எங்கம்மைய  கண்டயது போல என்னப்பத்தி வளக்கு வைக்காட்டி முடியாதே சோலியப் பாப்பியா என்று மகராஜன் அவளை அடக்கியபடி என்னைப் பார்த்த பார்வையில் ஒரு சின்ன குற்ற போதம்  தெரிந்தது.   விடு பிச்சம்மா எனக்கும் நாளைக்கு திர்நேலில ஒரு வேலையிருக்கு ஆதித்யாவும் சொன்னான் அம்மா நீயும் எதுக்கும் சூர்யாவாத்துக்குப் போய் மீரா அப்பா அம்மா சைட்ல கல்யாணத்துல நீயும் அப்பாவும்   நிப்பிங்கன்னு பேசிட்டு வந்திடுன்னு சொன்னான். மீராக்கும் சூர்யாக்கும் பெரிய சப்போர்ட்டா இருக்கும்னு சொன்னான். அதனால விடு நாளைக்கு நானும் அவங்களை பாத்து பேசிட்டு வரேன் இவனும் வருவான்.  நம்ம வீட்டுக்கு வந்து போறவங்க தான் ஆனா கல்யாணம்னு வந்துட்டா நாம போய் பாக்கறதுல அவங்களுக்கு ஒரு மரியாதை. என்று சொன்னதும் சரிக்கா போயிட்டு வருவியாள இல்ல,, என்று இழுத்தவளிடம் இல்ல அப்படியே போறேன். அடுத்தாப்ல கல்யாணத்துல பாக்கலாம் என்றதும் ச்சரி நான் வாரேன் கோயில்ல மணி அடிச்சிட்டாவ என்று கிளம்பினாள்.

 உனக்கு நான் வருவேன் என்று தெரியும், அவனைப் பார்க்க கூப்பிடுவேன் என்று தெரியும், அவனிடமும் அதற்கான ஆயத்தம் செய்திருப்பாய் என்றும் தெரியும் ஆனாலும் என் முன் நாடகம் ஆடுவாய் அதுவும் எனக்குத் தெரியும்.

  28 ஆண்டு கால மண வாழ்க்கையில் கிடைத்திருக்கும் அத்தனை சந்தோஷங்களும் பிரியங்களும் சுதந்திரங்களும் மட்டும் காதலில்லை. மனைவியை ஆத்திரத்தில் கொன்று விட்டு ஆயுள் அனுபவிக்கும் அவனோடும்என்னைப் போலவே  பெண்ணை  வளர்த்து இன்று அவள் மனம் போல் திருமணத்திற்கு சம்மதித்து நிற்கும் உன்னோடும் உள்ளதும் காதல் தான்.  அன்று சொல்ல முடியாத கட்டுக்களில் கட்டுண்டு கிடந்த நாம் இன்று இளைய தலைமுறைக்கு  ஆதரவு தருவதன் முலம் நம்  பதின்மத்தை  மீட்டெடுத்துக் கொள்கிறோம்.

 காதல் என்பது வெறும் கல்யாணமோ காமமோ இல்லை.  இது புரியாமலோ  இல்லை புரிந்தும் காண்பித்துக் கொள்ளாமல் நம்மை அங்கீகரித்தபடி நம்மோடு வாழும் இணை நமக்கு கிடைத்த பெரும் வரம் என்று இலக்கியமாய் தோன்றிய வரிகளை மனதோடு முழுங்கி விட்டு

 சரி காலைல ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிடலாம் அப்பத்தான் அங்கேர்ந்து சீக்கிரம் கிளம்ப முடியும். நேரத்தோட ஊருக்குப் போகணும்  இல்லேன்னா ராஜு கவலைப் படுவார் என்றவளிடம். சரி ரெடியாயிடறேன் என்றபடி கலைந்து நடந்தான்.


இதுவும் காதல்தான்.

 

 

 

 

 

 

 


 

 

2 comments:

Unknown said...

paarvaigal maarattum.

Unknown said...

paarvaigal maarattum.