Friday, September 21, 2018

கங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்

கங்காளநாதர் சந்நிதிக்கு போயிட்டு போங்கோ” என்று உத்தரவு போலுமல்லாது செய்தியாகவுமல்லாது பிரஹன் நாயகி அம்மையின் சந்நிதி அர்ச்சகர் சொன்ன பொது எனக்கு அந்தக் குரல் தனித்து தெரிந்தது. ஏனெனில் எங்களை #அம்பாசமுத்திரத்திற்கு அருகில் இருக்கும் #பிரம்மதேசம்(#அயனீஸ்வரம்) கோவிலுக்கு அழைத்துச் சென்றவர்கள் அந்தக் கோவிலோடு குறைந்த பட்சம் 30 வருட தொடர்புள்ளவர்கள். அங்கு அருட்கொடையும் அருட்பணியும் செய்பவர்கள். அவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் அந்த சந்நிதியின் மகத்துவம் பற்றி அப்படியானால் இந்த சொல் எனக்கானது என்று எண்ணி முடிக்கும் தருணம். அந்த சந்நிதியை சென்றடைந்திருந்தோம். மூடிய அழிக்கதவுகளுக்கிடையே பிரம்மாண்டாமாகத் தெரிந்த அவரது திருமேனியை உள்வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது எவரோ அருகில் பிட்சாடனர் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். குருடன் தடவிக் கண்ட யானையாக அழிகளின் இடையே அவரை காண முயற்சித்துக் கொண்டிருக்கையில் அதே அர்ச்சகர் வந்து கதவைத்திறந்து 2 அடி தூரத்தில் கொண்டு நிறுத்தினார்.
எனக்கும் அவரது திருமேனிக்கும் இடையில் எவருமில்லாது வெளி மட்டுமே நிரம்பியிருந்த தருணம் அது.. குறைந்தபட்சம் 7 அடி உயரம் நீண்ட கைகளும் கால்களும். பீடம் ஏதுமின்றி தேர்ந்த வேடுவனைப் போல் நிற்கிறார். இடது கையில் கங்காளம் எனப்படும் உடுக்கை போன்றதொரு வாத்தியம், வலது கையில் எலும்பைப் போன்றதொரு தண்டம். இடைக்கால் பூமியில் அழுந்தப் பதிந்திருக்க வலக்கால் சற்றே வளைந்து நடந்து செல்வதைப் போன்ற தோற்றம். மலரும் பிறையும், சர்ப்பமும் சூடிய ஜடா மகுடம். பெருக்கிய காதுகளில் ஒரு காதில் மிகப்பெரிய குண்டலம். இடையில் புலிக்கச்சையாக இருக்கலாம் வஸ்திரம் தரித்திருந்ததால் தெரியவில்லை. புன்னகையும், கருணையும், அருளும் ததும்பும் கண்களை உடைய திருமுகம். நான்கு கரங்களில் பின்னிரு கரங்களில் ஒரு கையில் பாணமும் மறுகையில் முத்திரையும்.
அவரைச் சுற்றி இசைக்கருவிகளோடு அவரது முழங்கால் உயரத்திற்கு 5 பூத கணங்களின் நின்ற திருக்கோலம். உச்சிக்கு மேலே சுவற்றில் புடைப்புச் சிற்பமாக இந்திராதி தேவர்கள், விஷ்ணு, ரிஷி புங்கவர்கள், கின்னரர், கிம்புருடர், குதிரை, யானை, அப்சரஸ்கள் இதில் சில அப்ஸ்ரச்களின் உருவங்கள் சுதை சிற்பமாக செய்யப்பட்டு வஸ்திரமும் வர்ண கலாபமும் கொண்டு அழகு செய்யபட்டவை மிகவும் பழமையானவை.
அந்த இடத்தில் நிற்க நிற்க சந்நதியின் வெம்மையும் அவரின் ஆகர்ஷ்ணமும் நம்மை இழுக்க நம்முள் கங்காளத்தின் ஒலி இயல்பாக கேட்கத்துவங்குகிறது. உடலும் உயிரும் ஒரு புள்ளியில் சேர சில கணங்களில் நாம் அந்த சிவ கணங்களில் ஒன்றென மெய்மறந்து போகிறோம் என்பதே உண்மை.
கண்டு வந்து இத்தனை நாட்களாகியும் அப்படியே கண்ணுள் நிற்கும் அந்தக் காட்சியை என்னவென்று சொல்ல. பொதுவாக இந்த தருணங்களில் புகைப்படம் எடுக்கத் தோன்றுவதே இல்லை. இணையத்தில் எங்காவது இருக்கும் தேடிக்கொள்ளலாம் என்று வந்து விட்டேன். அதன்படி இணையத்தில் கிடைத்த சில படங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.
மற்றபடி கோவிலின் அம்மையும் அப்பனும் அத்தனை அழகு. அம்மையைக் காண்கையில் எங்கள் ஊர் அம்மன் #ஆத்தூர்சோமசுந்தரியைக் .கண்டது போல் இருந்தது. நெல்லை காந்திமதியை ஒத்த உயரம். மடிசார் உடுத்திய பாங்கில் அருள் பொழிகையில் எங்கள் ஊருக்குச் சென்று வந்த உணர்வு கிடைத்தது. அழகிய வேலைப்பட்டுகள் அமைந்த மிகப் பெரிய இரண்டு மண்டபங்கள் என்று கோவிலின் பிரம்மாண்டத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.
திருநெல்வேலியைச் சுற்றியுள்ள நவகைலாய கோவில்களில் முதன்மையாக #சூர்ய_ஸ்தலமாக இதுவே விளங்குகிறது என்பதுதான் உண்மை. ஆனால் தற்போது மக்கள் பாபநாசம் கோவிலையும் சூர்யஸ்தலமாக வணங்கி வருகிறார்கள்.
நான் தேடி அறிந்து கொண்டவரை #கங்காளநாதருக்கும்#பிட்சாடனருக்கும் கிழே கண்ட வித்தியாசங்கள் உள்ளது. நினைத்த மாத்திரத்தில் உள்ளே ஆழ அமிழ்த்தும் கங்காளரை வாழ்வில் ஒருமுறையாவது கண்டு மீள வேண்டும்.


 

No comments: