Tuesday, January 2, 2018

திருப்பெருந்துறை Vs திருப்பெருந்துறை (பாண்டியநாடு Vs சோழநாடு ) – நிறைவு

ஒரு நிமித்தம் போலும் சென்ற மே மாதத்தில் துவங்கிய மாணிக்கவாசகர் குறித்த ஒரு தேடலில் மிகவும் முக்கியமானதொரு ஒரு கட்டத்தில் தாளா மன உந்துதலில் துவங்கியது தான் திருப்பெருந்துறை Vs திருப்பெருந்துறை (பாண்டியநாடு Vs சோழநாடு ) என்று ஆறு பகுதிகளாக நான் எழுதிய ஒரு பதிவு.
அதன் முற்றுருவாக அமைந்தது இந்த முறை மேற்கொண்ட ஆவுடையார் கோவில் தரிசனம்.
ஆவுடையார் கோவில் அற்புதங்கள் என ஏராளமான விஷயங்கள் உள்ளது. அவைகளை நினைவில் இருந்தவரை தொகுத்து அளித்துள்ளேன்.
கருவைரையில் லிங்கம் கிடையாது, அங்கு சதுர வடிவ ஆவுடையும் அதன் நடுவில் அகண்ட குவளை வடிவக் குழியுமே உள்ளது. இது அவுடையே உடலாகவும் அதன் நடுவில் அமைந்துள்ள குவளை வடிவ குழியே ஆத்மாவாகவும் உருவகப் படுத்தப்படுகிறது. அதனாலேயே இறையனார் ஆத்மநாதர் என்று பெயர் கொள்கிறார்.
இறையனாரின் சந்நதியில் உள்ள திருவாச்சியின் விளக்கில் இருக்கும் விளக்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு அவை 27 நட்சத்திரங்கள், ஜீவாத்மா, பரமாத்மா தத்துவங்கள், பஞ்ச பூதங்கள், 36 தத்துவங்கள், 51 பஞ்சாக்கர எழுத்துகள், 224 வார்த்தை பிரிவுகள் போன்றவற்றை குறிப்பதாக செய்திகள் கூருகிறது.
இங்கு இறையனாருக்கு காட்டப்படும் ஆரத்தியை பக்தர்களுக்கு கண்களில் ஒற்றிக் கொள்ள கொண்டு வருவதில்லை. ஏனெனில் அங்கு இறைவனே ஜோதிஸ்வருபம் என்ற தத்துவத்தினால்.
கருவறையில் சந்திரன், சூர்யன், அக்னியைக் குறிக்கும் வண்ணம் சிவப்பு, வெள்ளை, பச்சை நிறங்களில் விளக்கு ஏற்றப்பட்டுள்ளது.
அம்பிகைக்கும் திருவுருவம் இல்லை. அவரது பாதங்களே முதன்மை தெய்வமாக சந்நிதியில் வணங்கப் படுகிறது. அதுவும் அங்கு அமைக்கப் பட்டுள்ள கல் அழிகள் போன்ற அமைப்பில் மனதை ஒருமித்து கண்டால் மட்டுமே முழுவதுமாக தரிசிக்க முடிகிறது. அம்பிகை அங்கு யோகாம்பிகை என்று நாமம் கொண்டிருக்கிறாள்.
இறையனாருக்கு நெய்வைத்தியமாக புழுங்கல் அரிசி சாதமும், பாகற்காயும், கீரையும் அமுதாகப் படைக்கப் படுகிறது. அது அங்குள்ள 3 அடி உயரம் 7 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட ஒரே பாறையால் ஆன படிக்கல்லில் தான் படைக்கப் படுகிறது. ஆவி போங்க படைக்கப்படும் இவற்றின் ஆவியே நிவேதனம் என்று சொல்லப் படுகிறது.
இந்தக் கோவிலில் நந்தி, கொடிமரம், மற்றும் பலி பீடம் இல்லை.
இங்கு மாணிக்கவாசகரும் சிவனின் மறு பிறப்பாகக் கொண்டாடப் பட்டு தனி சந்நிதியில் போற்றப் படுகிறார். ஆனாலும் குருவின் முன் அமர்ந்திருத்தல் முறையல்ல என்பதால் இங்கு, விநாயகர், முருகர், வீரபத்திரர் உட்பட அனைவரும் நின்ற திருக்கொலத்திலேயே அருள் பாலிக்கிறார்கள்.
இக்கோவிலின் சிற்பக்கலைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்தக் கோவிலில் அமைந்த கொடுங்கைகள் சிற்பக்கலையின் சிகரம் என்றே போற்றப் படுகிறது. ஒவ்வொரு சிலையும் உயிரோட்டமிக்க காவியங்கள். நரியை பரியாக்கிய மாணிக்க வாசகர் திருத்தலம் என்பதானால் முன் மண்டபத்தில் விதம் விதமான பல நாட்டு குதிரைச் சிற்பங்களும் அந்தந்த நாட்டு தனித்துவத்தை விளக்குவது போன்ற உடை நகை அலங்காரங்களோடு அதன் மேல் அமர்ந்திருக்கும் வீரர்களும் கண்கொள்ளா காட்சி.
உள் பிரகாரத்தில் சிவனும் உமையும் அர்ச்சுனனுக்கு பாசுபதாச்ரம் வழங்குவதாக வடிக்கப்ட்டிருக்கும் சிற்பம் சொல்லும் கதை என அவர்கள் சொல்லும் விளக்கம் அருமை. அம்மையின் அணிகள் பஞ்சாட்சர மந்திர பெருமையை குறிப்பதாகவும் சொல்லப் படுகிறது. கல்லாலான சங்கிலியில் பினைந்திருக்கும் நாகம், இசை எழுப்பக் கூடிய தூண்கள், நளினம் மிகுந்த நாட்டிய மாதுகளின் சிற்பங்கள் என அனைத்தும் புகைப் படக் கலைஞர்களுக்கு பெருவிருந்து.
இந்தக் கோவிலில் நவக்கிரக சந்நிதி இல்லை.
தெற்கு நோக்கி தென்னனாகக் காட்சி தரும்
கோவில் இது. தெற்கு என்பது முக்தியின் திசை என்பதும் நாம் அறிந்ததே.
திருவாசகத்தின் ஆதி ஓலை அங்கு இருப்பதாகவும் ஆருத்திரா தரிசனத்தன்று மட்டுமே அதைக் காண முடியும் என்பதும் சேதி.
இவை அனைத்துமே சென்ற முறை நாங்கள் அங்கு சென்று காத்திருந்த பொழுதுகளில் கோவில் வாசலில் எங்களோடு அமர்ந்திருந்த வீர பத்திரர் கோவில் உடையவர் சொன்ன சேதிகள். ஆனால் சென்ற முறை கோவிலைச் சார்ந்த ஒருவர் இறந்து விட்டதால் கோவில் திறக்கவில்லை. எனவே இந்த முறையே இத்தனை அதிசயங்களையும் கண்ணாரக் கண்டு அனுபவிக்க முடிந்தது.
இத்தனை ஆவணப் படுத்துதல்களில் இருந்த மெனக்கெடல் மீண்டும் சோழ நாட்டு திருப் பெருந்துறையே மாணிக்க வாசகருக்கு ஆத்ம போதம் வழங்கிய இடமாக இருக்கக் கூடும் என்ற செய்தி என்னுள் இன்னமும் பலமாக ஆழப்பதிந்து போனதும் ஒரு அதிசயமே. ஒரு வேளை நன் சென்ற முறை அந்தக் கோவிலில் உணர்ந்த உணர்வுகளின் தாக்கம் அதிகம் போலும் என்றும் எண்ணிக் கொண்டேன்.
பெருமிழலைப் பிரானை மிழலை நாட்டு திருப் பெருந்துறையில் கண்டதை மற்றொரு பதிவில் எழுதுகிறேன்
































No comments: