மிக நீண்ட கவிதையொன்று
எழுதப்பெறாமாலே முற்றுப்பெற்றது
நான் வரும் வழியில்
எப்பொழுதும் எரிந்து கொண்டோ
புகைந்து கொண்டோயிருக்கும்
மின்மயாணப்புகை போக்கி உணர்த்தும்
வாழ்வின் முடிவின்மையைச்
சொல்லியிருக்கலாம்
சூழலில் கலந்து வரும்
நிண வாடை கலந்த
சுவாசமுணர்த்தும்
நித்யத்தை சொல்லியிருக்கலாம்
மரத்தினடியில் சரிந்து விழுந்திருக்கும்
நாகலிங்கப்பூவின் குவியலை
கூட்டி வாரி குப்பையிலிடுவைதை
காணும் பொழுதுணர்த்தும்
வாழ்வின் அபத்தத்தை சொல்லியிருக்கலாம்
கண்கலங்கி சிரித்து
நா வரண்ட பொழுதும்
உள்ளே உறைந்து போயிருக்கும்
எத்தனையோ ரணங்களின்
இருப்பு உணர்த்தும்
வாழ்வின் இருமையை சொல்லியிருக்கலாம்
மிக நீண்ட இருப்புப்பாதைகளில்
வளைந்தும் நெளிந்தும் செல்லும்
புகைவண்டியின் ………..மற்றும்
குறுகிய சாலைகளில் குவிந்திருக்கும்
மக்களை மாக்களை
லாவகமாய்க்கடந்து செல்லும்
பேருந்துகளின்
சாயலுணர்த்தும் நீர்மையைச்
சொல்லியிருக்கலாம்
இவையத்தனையையும் தாண்டி
என் உள்ளுணர்வும் உணர்த்தும்
உன்னிருப்பை மட்டுமே
எழுத முற்பட்ட
மிக நீண்ட கவிதை
எழுதப்பெறாமலே முற்றுப்பெற்றது
வாழ்வின் எல்லா ருசிகளையும் போல.
4 comments:
ரொம்ப நல்லாருக்குங்க.
அழகான கவிதை. படமும் பொருத்தம் :)
நல்லா வந்திருக்கு கிருத்திகா...நிறைய விஷயங்கள் முற்றுப் பெறாமல் இருப்பது கூட சுவாரசியம்தானே...
எப்போதும் போல அருமை கிருத்திகா!பூங்கொத்து!
Post a Comment