அந்த அலுவலக அறையின் சன்னலை ஒட்டிய என் இருக்கையே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அதன் சன்னல் கதவுகளுக்குப்பால் தாழ்ந்து வளைந்திருந்த மரக்கிளையில் பறைவைகள் வந்து அமர்வது முதலில் எனக்கு ஆச்சர்யமாய் இருக்கும். இந்த செல்போன் டவர் காடுகளில் இப்போதெல்லாம் பறவைகளைப்பபர்ப்பதே அபூர்வமாகிப்போனது. ஆனாலும் தினமும் நான் வந்து அமர்ந்ததும் அந்த தாழ்ந்த கிளைகளில் குறைந்தது ஐந்து அல்லது ஆறு பறவைகளாவது வந்து அமர்ந்து கொள்ளும்.வெகு நாள் கவனித்தலுக்குப்பின் தான் நான் உணர்ந்தேன் அத்தனையும் வெவ்வேறு விதமான பறவைகள் அதனாலேயே ஆர்வமானேன்.
கொஞ்சம் கொஞ்சமாய் நன்பர்களுடனான அரட்டை குறைந்தது . பொட்டி தட்டும் நேரம் போக மற்ற நேரங்களை ஆக்ரமித்துக்கொண்டிருந்த தமிழ்மணமும், பதிவுலகமும் மெல்ல மெல்ல கண்முன் தேய்ந்து மறைந்து பறவைகளைப்பற்றிய தேடல் தொடங்கியது.
இதனிடையில் அம்மாவின் சுகவீனம் என்னை இரண்டு வார கட்டாய விடுமுறையில் வீட்டில் இருக்கவைத்தது. இணையம் இல்லாத கணணிபோல் மனமெல்லாம் பறவைகளைக்காண மெல்ல ஏங்கியது. காலை வேளைக்கான மருந்துகளை கொடுத்துவிட்டு அவளை மெல்ல தூங்கச்செய்துவிட்டு பலகனிக்கு வந்து வெகுநாட்கள் முன்பு விட்டுப்போன புத்தகத்தை வாசிக்கத்துவங்கியபொழுதில் தான் கவனித்தேன் எதிர்வீட்டு பலகனியில் அமர்ந்திருந்த அந்தப்பறவைகளை. புரண்டு வரும் வெள்ளி அலையென ஓட்டமாய் ஓடிப்போய் அம்மாவிடம் சொன்னேன் அம்மா அந்தப்பறவைகளைப்பார் என அவள் என்னைத்தான் பார்த்தாள் வித்யாசமாய்.
பின்னெப்போதும் கூடு திரும்பும் வேளைவரை சில பறவைகள் என்னோடு இருப்பதையும். சாலைகளில் வாகனக்கூட்டங்களுக்கு நடுவிலும் பறவைகள் கண்களுக்கு தனித்து தெரிவதையும் உணரத்துவங்கினேன்.
மொட்டை மாடியில் பறவைகளுக்கென நீர் கிண்ணங்கள் வைத்தாலும் வராத பறவைகள் இப்போதெல்லாம் என்னோடு நெருங்கிவந்து சம்பாஷிக்கத்துவங்கியது.
அப்போது சொன்னது ஒரு பறவை உன்னால் பறக்க முடியுமென, நகைத்து திரும்பிய நான் சொன்னேன் உன்போல் நானொன்றும் பறவையல்ல மனிதவர்க்கம் என்று. மீண்டும் சொன்னது அந்தப்பறவை உன் பூர்வீகம் பறவைதான் உனக்கும் இறக்கைகள் உண்டு உன் தோள்களுக்கு கீழே கூர்ந்து பாரென்றது. பயந்து போன நான் சன்னலை மூடிவிட்டு படுக்கைக்கு வந்தேன்.
ஆனாலும் ஆர்வம் யாரை விட்டது, மெல்ல உடைவிலக்கி தடவிப்பார்க்கையில் மெலிதாய் விரிந்தது அந்த சவ்வுப்படலம். திகிலில் ஓவெனக்கத்தி ஓய்ந்தேன். சன்னல் திறந்து பறவை தேட இப்போது புரிந்ததா நீ எங்கள் கூட்டமென்று ஒரு பறவைகூறும் மொழியுணர்ந்தேன். வடிவங்களற்ற வார்த்தைகளற்ற மொழியும் அன்று முதல் புரியலாயிற்று.
என் வீடே எனக்கு அந்நியமாயனது. எனக்கான இடம் இதுவெல்ல என ஒவ்வோரு நாளும் ஒதுங்கிப்போனேன். உணவும் பழக்கமும் மாறிப்போனது, வடிவோடு கூடிய எந்த மொழிகளும் செவியில் மரத்துப்போனது.
என்னவர் என்னை எங்கோ கட்டிடக்காட்டுக்குள்ளும், இயந்திரக்குப்பைகளுக்குள் அழைத்துச்சென்றார். ஏதேதோ மனிதர்கள் எதையெதையோ கேட்டனர், சோதனை சாலைகளில் என் ரத்தமும் மலமும் சோதிக்கப்பட்டது ஆனாலும் என்னுள் ஏதும் மாற்றமில்லை
எங்கு சென்றாலும் என் கூட்டத்தை தேடத்துவங்கினேன் அவைகளும் என்னோடு இடைவிடாது தொடர்பிலிருந்தது.
வசந்த காலம் முடியப்போகிறதென்றும் வேறு நீர்நிலை தேடிச்செல்லவேண்டும் என்றும் என்னோடு முடிவெடுத்து சொன்ன நாள், நான் என் தோள்களுக்கு கீழே இருந்த இறக்கைகளை விரித்து அந்த கட்டிடத்தின் 11 வது மாடியில் இருந்து பறந்து போனேன் மிகவும் சந்தோஷமாய் ஆனாலும் கட்டிடத்தின் கீழே மட்டும் இரத்தச்சகதியாய் யாரோவும் கூடவே அழுகையும் புலம்பலுமாய் ஒரு கூட்டமும்….
4 comments:
அழகா இருக்குங்க.. ரொம்ப க்யூட்டா இருக்கு..
//வசந்த காலம் முடியப்போகிறதென்றும் வேறு நீர்நிலை தேடிச்செல்லவேண்டும் என்றும் என்னோடு முடிவெடுத்து சொன்ன நாள், நான் என் தோள்களுக்கு கீழே இருந்த இறக்கைகளை விரித்து அந்த கட்டிடத்தின் 11 வது மாடியில் இருந்து பறந்து போனேன்//
இந்த வரிகளை படிக்கும் போதே, முடிவை அனுமானிக்க முடிந்தது..
நன்றி சரவணகுமார். நமக்குள் இருக்கும் ஏதோவதொரு உணர்வை எப்படியாவது வெளிப்படுத்தித்தானே ஆகவேண்டும்....
அருமை
Post a Comment