Saturday, August 16, 2008

கதை சொல்லிக்கு புரிந்த கதை


இரண்டு பேரை மட்டும் வைத்து கதை சொல்ல முடியுமா, முடியும் என்று தான் தோன்றுகிறது ஏனெனில் என்னுடைய இந்த கதையில் சியாமளியும் அவள் அம்மாவும் மட்டும் தான் கதை மாந்தர்கள். அவள் கணவனோ, இல்லை குழந்தைகளை கதைக்குள் வரத்தேவையில்லை என முடிவு செய்திருக்கிறேன்.. கதை சொல்லியின் முடிவுகளாலாயே எல்லா கதைகளும் கட்டமைக்கப்படுகின்றனவா இல்லை படைப்பு அவனை மீறி படைத்துக்கொள்கிறதா முடிவை முடிவில் பார்த்துக்கொள்ளலாம். இப்போது கதைக்குள் செல்வோம்.

எல்லோராலும் மாதத்தில் எந்தெந்த தேதியை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளமுடியும், 1ம் தேதி, சம்பளநாள் என்பதால், 7 தேதி வேலைக்காரி, பேப்பர்க்காரன் பில் கொடுக்க வேண்டும் என்பதால், 10ம் தேதி ஆவின் பாலுக்கு பணம் கொடுத்து கூப்பன் வாங்க வேண்டும் என்பதால், 15ம் தேதி மின்சார கட்டணம் கட்ட வேண்டும் என்பதால், அப்புறம் ஒரு பத்து நாட்கள் விச்ராந்தியாக இருந்து விட்டு 25 தேதிக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாகத் தீர்ந்து போகும் மளிகை சாமன்களை வாங்கி நிரப்ப வேண்டியிருப்பதால் அடுத்த 5 நாட்களும் மொத்தமாக மாத கடைசி என்ற ஞாபகம் இருக்கும். 30 அல்லது 31ம் தேதி மாதாந்திர இலக்கை கணக்கு பார்த்து முடிக்க வேண்டியிருப்பதால் ஞாபகம் இருக்கும். ஆனால் சியாமளிக்கு 13ம் தேதியும் ஞாபகம் இருக்க வேண்டும், ஏனெனில் அவள் அம்மாவை மருத்துவரிடம் அழைத்துச்செல்லவேண்டிய நாள் அது. அன்று அவளுக்கு இரண்டே இரண்டு சாய்ஸ்தான் ஒன்று ஞாபகமாக அம்மாவை மருத்துவரிடம் அழைத்துப் போய்விட்டு அம்மா மருந்து மாத்திரை வாங்கி வரும் வரை மருந்து கடை வாசலில் கால் மாற்றி நின்று அழைத்து வரவேண்டும். இல்லையேல் சுத்தமாக மறந்து விட்டு அலுவலகத்தில் இருந்து தாமதாக வரவேண்டும், இத்யாதி இத்யாதி பிரச்சனைகளால் வரும் போதே மருத்துவரிடம் டோக்கன் எடுத்து வைக்க மறந்து வந்து விட்டு அதனால மருத்துவரிடம் பத்து மணி வரைக்கும் காத்திருக்க வேண்டுமே என்ற கடுப்பு தரும் பயத்தினால்
மருத்துவரிடம் போகமல் இருக்க ஏதோதோ உபாயம் செய்யவேண்டும். இதில் பிரச்சனை என்னவென்றால் இரண்டாவது பிரயோகத்தினால் கூடுதலாக அம்மாவின் அதிருப்திக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதன் விளைவுகளைச்சொல்வதிற்கில்லை இந்தக்கதை.

இப்படி மாசா மாசாம் மருத்துவரிடம் காட்டி மருந்து வாங்கிவந்தாலும் ஒவ்வொரு மாதமும் சில இடைப்பட்ட ஆஸ்பத்திரி தேவைகளும் இருக்கும், ஆனால் ஒன்றுதான் சியாமளிக்கு புரிந்து கொள்ள முடியாததாய் இருந்தது. அவ்வப்போது அம்மா மருந்து கடைக்குச்சென்று சில மருந்துகளை திருப்பிக்கொடுத்தும் சில மருந்துகளை அதற்குப்பதிலாய் வாங்கிக்கொள்வதும் எதற்கென்று அவளுக்கு புரிந்ததேயில்லை. மருத்துவரிடம் காட்டி அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை வாங்கிய பின் எதற்காக அதை திருப்பிக்கொடுக்க வேண்டும்??? வேறு மாத்திரைகளை ஏன் வாங்க வேண்டு, அவள் அம்மாவிடம் கேட்டதற்கு அந்த டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்து எதுவும் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை அதனால் நான் பழைய டாக்டர் (சுமார் 10 வருடங்களுக்கு முந்தி) கொடுத்த மாத்திரையையே வாங்கிக்கொண்டேன் என்பாள். ஆனால் அடுத்த 13ம் தேதி மருத்துவரை சென்று பார்த்தேயாகவேண்டும்… இது எதற்கு? அவர் மேல், அவர் தரும் மருந்தின் மேல் நம்பிக்கை இல்லையென்றால் எதற்கு அவரிடம் செல்ல வேண்டும்?. ஆனால் அம்மாவோ உற்சாகமாக சில புதிய மாத்திரை பட்டைகளை வாங்கிக்கொண்டு வருவாள். 3 அல்லது 4 நாட்களுக்கு பிரச்சனை ஏதும் இல்லாமல் இருக்கும் பிறகு வழக்கம் போல அந்த டாக்டர் மருந்து எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை நான் ஒரு மாதத்திற்கு மாத்திரை வாங்கி வந்துவிட்டேன் என்று சொல்லி மாத்திரை மாற்றவேண்டிய படலம் ஆரம்பிக்கும். இதன் ஆணிவேர் என்ன என்பது சியாமளிக்கு புரியாமலே பல சமயம் குழந்தைகளிடம் அந்தக் கோபத்தை காமித்திருக்கிறாள். (இதுல மாத்திரையை கொஞ்ச நாளைக்கு மாத்திரம் வாங்கிட்டு அது ஒத்து வந்தா மீதம் வாங்கிக்கலாமே, வேற டாக்டரைப்பார்க்கலாமா, (எந்த டாக்டர் கிட்ட போனாலும் இது தான் கதைங்கறது வேற விஷயம்) போன்ற ஆலோசனைகளை எல்லாம் சியாமளியால் சொல்ல முடியாது சொன்னால் என்னால உன்னை இன்னோருதரம் தொந்தரவு பண்ணமுடியாது, நீயே பாவம் தினைக்கும் அலையறே அதனால நான் ஒட்டு மொத்தமா வாங்கிக்கறேன் இந்த தடவை ஒன்னும் பண்ணாதுன்னு டாக்டரே சொல்லியிருக்கார் போன்ற சமாதானமோ இல்லை வேறு சில எதிர்வினைகளோ வரும் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியதில்லை)

இந்த சூழ்நிலையில் தான் கதை சொல்லி அவளை சந்தித்தான் பிரச்சனையின் அடிவேரைத்தேடும் ஆர்வம் அவனுக்கும் வந்தது இலக்கியவாதியாயிற்றே!!!

மண்டையை முட்டி மோதி விடை காண எல்லா முயற்சிகளும் செய்துகொண்டிருந்தான் கிட்டத்தட்ட ஒரு மாதமாகியும் ஒன்றும் புலப்பட்டாதியில்லை। இதில் மற்றுமொறு 13ம் வந்து விட்டு போனது। வேறு கதையோ, கவிதையோ எழுதும் எந்த முயற்சியையும் செய்ய விடாது சதா இதுவே அவன் மனதுக்குள் குடைந்து கொண்டிருந்தது। அப்போதுதான் அவன்
இரு குழந்தைகளுக்கும் இடையேயான் சம்பாஷனையை கேட்க நேர்ந்தது

பையன் - ஏண்டி அப்பாகிட்ட நேத்திக்கு தானே பென்சில் வாங்கின இன்னக்கே எல்லாத்தியும் சீவிட்டு இப்ப பென்சில் இல்லன்னா என்ன அர்த்தம்

பெண் - போடா எனக்கிந்த பென்சில் பிடிக்கல ஒரே பட்டையா எழுதுது, அதனாலதான் வேற பென்சில் வாங்கனும்.

பையன் - ஏண்டி போன தடவை இதே பென்சில் தானே வாங்கினே நல்லாருக்குன்னு சொன்னியே.

பெண் - ஆமாம் இந்த தடவை நல்லாயில்ல அதுக்கென்ன இப்போ,

பையன் - ஏய் நீ ஏதோ திருட்டுத்தனம் பண்ற என்ன சொல்லிடு இல்லேன்னா இன்னிக்கு நாட்ஜியோ பார்க்கும் போது டீவியை அணைச்சுடுவேன்

பெண் - டேய் டேய் வேண்டாண்டா, பின்ன என்ன அப்பா உனக்கு மட்டும் இங் காலியாக காலியாக பேனா வாங்கி கொடுத்துட்டே இருக்காங்க, நான் வேற பென்சில் கேக்கலேன்னா இது முடியறமட்டும் எனக்கு வாங்கித்தரமாட்டாங்க நீ மத்திரம் புதுசு புதுசா பேனா வாங்கிப்பயாக்கும் அப்பா கூட இதுக்காக வண்டில உக்காந்து கடைக்கு போயிட்டேயிருப்பயாக்கும் நானும் அப்பா கூட கடைக்கு போகனும் அதாண்டா.. பிளீஸ்டா அப்பா கிட்ட சொல்லிடாதடா.


கதை சொல்லிக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது… என்ன உங்களுக்கும் புரிஞ்சுதா கொஞ்சம் சியாமளிக்கும் புரிய வையுங்களேன்.

(குறிப்பு, கதை சொல்லி நினைத்தபடி இரண்டு பேரை மட்டும் வைத்து கதை முடியவில்லை, கடைசியில் அவனும் அவன் பிள்ளைகளும் கூட அவனறியாமலே பாத்திரமாகிப்போனார்கள்… இதனால் யாவருக்கும் சொல்லவருவது என்ன வென்றால்……..)

9 comments:

MSK / Saravana said...

புரிஞ்ச மாதிரிதான் இருக்கு..

:)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ம்ம். நல்ல ஃபார்ம்தான், பரவாயில்லை :)

தொடர்ந்து முயலுங்கள்.

Subash said...

எ லெவலுக்கு கொஞ்ஞ்ஞ்சம் இறங்கி வந்து சொல்லுங்களேன்ன்ன்!!!!

நல்லாருக்கு

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி.. சரவணக்குமார்... புரிஞ்ச மாதிரி இருக்குன்னு சொன்னதுக்கு
:)

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி சுந்தர்...

பொன்ஸ்~~Poorna said...

vow!

குப்பன்.யாஹூ said...

Hi Krithika

Nalla muyarchi and good. 2 para vil kadhai solli pazagalaam or Sujatha sonna maadri 2 wrodsil kooda kadhai solli pazagalaam.

Sujatha andru nattu vaitha vidhai indru ella Blogg kalilum kaniyaaga uruvaagi irukkiradhu.

Vaazthukkaludan

KUppan_Yahoo

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி பொன்ஸ்,

இண்டெர் நெட் இன் டமில் - இது வாழ்த்தா வசவான்னு புரியல :)
ஆனாலும் வரவிற்கு நன்றி...

Ayyanar Viswanath said...

கிருத்திகா :)
தொடருங்கள்...