Monday, May 12, 2008

சேதி என்ன....


கனவுகள் எப்போதும் ஓர் அதிசய உலகத்தின் திறவுகோல்கள்। சில விழித்திருக்கும் நிகழ்வுகளோடு தொடர்புடையதாய் இருந்தாலும், பல நேரங்களில் உள் மன விழைதல்களின் வெளிப்பாடாகவோ அல்லது இனம் காண முடியாத நிகழ்வுகளின் தொடராகவோ வருவதுண்டு। நானின்றொரு கனவு கண்டேன் எனத்தொடங்கினால் கேட்கும் பலருக்கு இளநகை, குறுநகை, கொட்டாவி முதலியன வருவதுண்டு ஆனால் கனவுகள் பெரும்பாலும் மிக அந்தரங்கமாக ஒரு செய்தியை சொல்வதுபோல் தோன்றும்.

மிகவும் நெருக்கமான அந்த செய்திகள் நம் மனதிற்கு பலசமயம் புரியும் படியும் சிலசமயம் ஏதும் புரியாத சிக்கலாகவும் இருப்பதுண்டு. எதையும் அறிவியலாய் நோக்கும் அறிஞர்கள் இதெற்கென ஒரு தனி விளக்கங்களையும், பிராய்ட், ஆல்பிரட் ஆட்லர் போன்றவர்களையும் துணைக்கழைத்தாலும் தனிப்பட்ட மனிதர்களின் கனவுகள் அவரவர்க்கு மிகவும் நெருக்கமானவை என்பதை மறுப்பதிற்கில்லை.

எத்தனையோ நிகழ்வுகளை காட்டிச்செல்லும் கனவுகளோடு மிகச்சந்தோஷமாய் மரணிப்பது போன்று, அதுவும் மரணிக்கும் நேரத்தை குறித்து வைத்துக்கொண்டு (மாலை 5.29 ) ஒரு சங்கீதக்கச்சேரி ஆரம்பிக்கும் முன் இருக்கும் குதூகலமான மனநிலையோடு மரணத்தை எதிர்கொண்ட தருணங்களை காட்டிச்சென்றது ஓர் கனவு. அந்த அனுபவத்தை இப்போதும் மீள்நுகர்வு செய்ய முடிகிறதென்பது பெறும் அதிசயமாக உள்ளது. கனவின் எல்லைக்கோட்டிற்கு சென்று மீண்ட பின் விழித்துப்பார்க்கும் கண்களுக்கு பக்கத்திலிருந்தயில் மணி 2.29 என்றிருந்தது. செய்தி என்னவென்பது புரியாமலே அடுத்த நாளுக்கான ஆயத்தங்கள் தொடங்கியது….

13 comments:

narsim said...

அருமையான வார்த்தை ப்ரயோகம்..

தென்றல்sankar said...

continue kiruthica weldone!

தமிழ்நதி said...

நான் ஒரு கனவு கண்டேனெனில் அந்தக் கனவின் உணர்வு, விழித்தபிறகும் தொடர்வதை அவதானித்திருக்கிறேன். குறிப்பாக ஒருவரோடு சண்டை பிடிப்பதாகக் கனவுகண்டிருந்தால் அன்று முழுவதும் அவரைக் காணுந்தோறும் வெறுப்பை உணர்வேன். இது அபத்தமானதே. என்றாலும் என்ன செய்ய... அது அப்படித்தானிருக்கிறது:)

பாச மலர் / Paasa Malar said...

மிகவும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..அருமையான விளக்கம்..லயித்து உனர முடிந்தது..

மங்கை said...

மரணத்தை அருகில் பார்க்கும் அனுபவங்கள் அதீத கற்பனையின் வெளிப்பாடுகளாய் இருக்கலாமாம்...

கிருத்திகா உங்களுக்கு அப்ப பொறுந்தும்தானே....உங்க எழுத்து நடையே சொல்லுதே...:-))

Sanjai Gandhi said...

திகில் கதையா? :(

//மிகவும் நெருக்கமான அந்த செய்திகள் நம் மனதிற்கு பலசமயம் புரியும் படியும் சிலசமயம் ஏதும் புரியாத சிக்கலாகவும் இருப்பதுண்டு.//

கனவுகளை கண்டுகாதிங்க.. அதுக்கு சரியான காரணம் யாராலும் இன்னும் சொல்ல முடியவில்லை. பல சமயங்களில் கனவுகள் நமக்கு சிறிதும் தொடர்பில்லாமல் தான் வருகிறது.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க நரசிம் பாரட்டிற்கு நன்றி
தென்றல் சங்கர், நன்றி நான் ஆங்கிலத்தில் என்பெயரை kiruthika என்றே எழுதுவேன்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆமாம் தமிழ்நதி, பலசமயங்களில் கனவுகள் நினைவிலும் தொடர்வதுண்டு அப்போதெல்லாம் நம் உள்ளுணர்வை நாம் உற்றுப்பார்க்க ஏதுவான தருணங்கள் என்று கொள்வதுண்டு... (ஏன் தங்களிடம் இருந்து புதிய பதிவுகள் சமீபத்தில் இல்லை...)

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி மலர்... ரொம்ப பிசியோ... தொடர்ந்து சமயம் எடுத்துக்கொண்டு எழுதுங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..(றோம்..)

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆமாம் மங்கை கற்பனைகள் பெரும்பாலும் நம் வாழ்வின் சுவாரசியங்களை சுமந்து வரும் கார்கால மேகங்கள் தானே... அதிலொரு சுகமிருக்கும் ஆனாலும் இப்போதெல்லாம் இது கற்பனை என்று உணரும் அளவிற்கான அனுபவ வயது ஆகிவிட்டதே எனவே எதார்த்தத்தை மீற முயற்சிப்பதே இல்லை.. இதுவும் கடந்து போகும் என்பதே இப்போதைய நிலைப்பாடு.

கிருத்திகா ஸ்ரீதர் said...

சஞ்சை.. இது திகில்கதை வரிசை போல இருக்கா... அப்ப முழுசா ஒண்ணை முயற்சிபண்ணிடலாமா...

கலை said...

எனக்கும் சில சமயங்களில் என் மனதுக்கு தொடர்பேயில்லாமல் கனவுகள் வருவதுண்டு. ஆனால் பொதுவாக என் எண்ணங்களின் அல்லது ஆசைகளின் கலவையே கனவாக வருவதை உணர்கின்றேன்.

முஹம்மது ,ஹாரிஸ் said...

நல்லப்பதிவு. லேசாக சுஜாதா வாடை அடிக்கிறது.......