Sunday, February 25, 2018

எண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 1

பொதுவாக இன்றைய உலகில் நாம் இரண்டு அடிப்படைகளுக்குள் ஆட்பட்டு விடுகிறோம். அது ஆத்திகம், நாத்திகம்.
ஆத்தீகம் என்பது இறை நம்பிக்கையை அடிப்படையாகவும், நாத்தீகம் என்பதை இறை மறுப்பு கொள்கையை அடிப்படையாகவும் கொண்டு நாம் கையாள்கிறோம்.
ஆத்திகம் பற்றி பேசுகையில் கடவுள் எனும் தன்மையின் முழு அதிகாரத்தையும், ஆளுமையையும் ஒப்புக் கொண்டு இயங்க முற்படுகிறோம்.
நாத்திகத்தைப் பற்றிப் பேசும் பொழுது இங்கு கடவுள் எனும் தன்மையை முழுவதுமாக புறக்கணித்து விட்டு நமது அறிவுசார்ந்தும், சிந்தனா வாதத்தின், அடிப்படையிலும் விஷயங்களை புரிந்து கொள்ள அல்லது செயல்படுத்த முனைகிறோம்.
இரண்டுமே சரியா, இல்லை இரண்டுமே தவறா, மாற்றுப் பார்வை என்ன?? இதன் பல்வேறு கோணங்கள் என்ன?? என்பதைப் பற்றி ஆராய வேண்டியது இன்றைய கால கட்டத்தின் மிக முக்கியமான அடிப்படை தேவை.
இதைப் பற்றி மேலும் பேசுவோம்

ஆசீவகம் - ஆதி தமிழரின் தொன்ம மெய்யியல் - வெண்காயபர் - ஆசீவக சித்தர்

சாலை ஓரத்தில்  கண்ட காட்சியால் காலுக்கு ப்ரேக் போட வேண்டி வந்தது. அது “மாறுகால் தலை” சமணர் சின்னம் என்ற வழி காட்டியபடி நின்றிருந்த அறிவுப்பலகை. பக்கத்து பெட்டிக்கடையில் கேட்டதில் 13 கிலோ மீட்டர் உள்ளே செல்ல வேண்டும் என்று சொல்ல ஸ்ரீயிடம் 10 கிலோ மீட்டர் தானாம் ரோடு நன்றாக இருக்குமாம். என்று எக்ஸ்ட்ரா பிட் போட சரி என்று கிளம்பி வயல்காடுகளின் நடுவே செல்லத்துவங்கினோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித வாடையே இல்லை. எங்கோ ஓர் இடத்தில் ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருக்க கேட்டதும் இப்படி போங்க சீவலப் பேரி வரும் அங்கபோய் மலக்கோவில்னு கேளுங்க சொல்லுவாங்கன்னு சொல்ல. மேலும் பயணித்தோம்.
இதற்கிடையில் நான் நெட்டில் அது என்ன இடம் என்று தேட ஆர்வம் அதிகம் பற்றிக் கொண்டது ஏனெனில் அது சமணருக்கும் முன்னறேயான ஆசீவகம் என்னும் தொல் மரபு சார்ந்த மதத்தின் மிக முக்கியமான மூவரில் ஒருவரான “வெண் காயபர்” வாழ்ந்து மறைந்த இடம். வாழ்வியல் முறையில் சமணருக்கு ஒத்து இருப்பதால் சமணப் படுகை என்றே அழைக்கப் படுகிறது.











யார் இவர்கள் இவர்களுக்கு என்ன பெயர்.. தேடத் தேட நம் மெய்யியல் மரபின் ஆணிவேரைச் சென்று சேர்க்கிறது தகவல்கள்.
இப்பொழுது இது எவ்வாறு உள்ளது? அதன் பரிமாணங்கள் எவ்வாறு வளர்ந்துள்ளது பார்க்க பார்க்க கண்ணைக் கட்டுகிறதுமலையடிவாரம் சென்றதும் விதம் விதமான கிராம தேவதைகளின் சந்நிதிகள்
அங்கிருந்த சிவனனைந்த பெருமாள் சந்நிதியில் இருந்த பெரியவரிடம் சமணர் படுகை எங்கே என்று கேட்க அதா... பின்னா....ஆ...டி இருக்கு இடக்க திரும்பி மலைக்குப் பின்னாடி போனா வரும் என்று சொல்ல அட எப்படி போவது என்று ஒரு நிமிஷம் குழப்பம் வந்ததும். பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது ஆள் பக்கத்துல தான் மேடம் போகலாம் என்று சொல்லவும் லபக் என்று தாவிப் பிடித்துக் கொண்டேன். கொஞ்சம் கூட்டிடுப் போகறீங்களா என்று கேட்க சரி என்று தலை ஆட்டிவிட்டு கூட வர பின்னாடி யார் வருகிறார்கள் என்று கூட பார்க்காது நான் உடன் நடந்தேன். தலையெழுத்தே என்று நவீன் தொடர ஸ்ரீ யும் நித்தாவும் தயங்கி தயங்கி கிளம்பினார்கள்.
கரடுமுரடான மலைப்பாதையில் நடக்க அவர் பேசிக் கொண்டே போனார். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் நம்மால் உள்ளே செல்ல முடியும் பார்க்கலாம். என்பதைத் தாண்டி மேலதிக விபரங்கள் இல்லை. பங்குனி உத்திரத்திற்கு அந்த கோவிலில் விசேஷம் அதிக மக்கள் வருவார்கள். மேல உள்ள சாமி சைவம், ஆனா கீழ உள்ள சாமி, சிவனனைந்த பெருமாள் நீங்கலாக மற்ற அனைவரும் அசைவ சாமி. அவங்களுக்கு அசைவம் படைக்கலாம் அதனால மேல போய் பூலுடையார் சாஸ்தாவைப் பார்த்துட்டு வந்து கீழ வந்து படையல் போடுவாங்க.
இத்தனை விஷயம் பேசிக்கொண்டே நடக்க அந்த இடம் வந்தது. பார்வைக்கு ஒரு பெரும் பாறை அதனடியில் ஓராள் உயரத்திற்கு ஒதுங்கக் கூடிய அளவுக்கு இடம் அதனடியில் ஐந்து சமணர் படுக்கை, கூடவே ஒரு முடியாத நிலையில் ஒரு படுக்கை.
அத்தனை இடங்களிலும் ஒராள் அகலத்திற்கு உயரத்திற்கு ஒரு சின்ன பள்ளம், தலை மாட்டில் கொஞ்சம் உயரமாக சின்னதாக செதுக்கப்பட்ட தலையணை போன்ற அமைப்பு. கூடவே இடமெங்கும் கோலம் போன்ற கோடுகள், கட்டங்கள், அதை சித்திரம் என்றோ, அல்லது அல்லது சக்கரம் என்றோ வகைப் படுத்த முடியாத கோடுகள். அவர்கள் காலத்தில் ஏற்படுத்தியதா இல்லை பின்னாளில் ஆடு மேய்க்கும் ஆட்கள் வரைந்து ஆடுபுலி கட்டம் விளையாடியாத என்று தெரியவில்லை. ஆனால் அங்கிருந்த பழமையான மற்ற எழுத்துக்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பழமை வாய்ந்தது என்றே தோன்றியது. ஆனால் அதைக் குறித்த குறிப்புகள் ஏதுமில்லை.
பாறையின் மேலே “வெண் காசிபன் கொடுப்பித்த கஞ்ச்சனம்” என்று பிரம்மி எழுத்துக்களாலும், “சுவாமி அழகிய அம” என்று எட்டாம் நூற்றாண்டு தமிழ் எழுத்துக்களிலும் எழுதிள்ளதாக மட்டுமே தொல்லியல் துறை குறிப்புகள் சொல்கிறது.
அந்த பாறையின் கீழ் உள்ள இடம் சிறிதாக இருந்தாலும் மழை நீர் அங்கு விழாதவாறு குடையின் அமைப்பில் அந்தப் பாறை சிறிதே செதுக்கப் பட்டிருப்பதைக் காண முடிந்தது. பார்க்கப் பார்க்க வியப்பு மேலிட்டது.
சுட்டெரிக்கும் வெயிலையும் தாண்டி அங்கு அமர்ந்து தியானிக்க மனம் சொல்ல கண்மூடி அமர தலையில் வெள்ளை ஒற்றை ஆடையோடு வெள்ளை வெட்டி சகிதம் ஒரு பெரிசு பக்கத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த உணர்வு. உள்ளே உள்ளே என அமிழ்த்தியது. அது மிகையுணர்வு அல்ல என்பது தெள்ளத் தெளிவான உணர்தல்.
எங்களை அழைத்து வந்த ஆளும் சிவனே என்று காத்திருக்கக் கண்டு நவீன் மெல்ல தோள் தொட்டு போலாமா என்று கேட்க மீண்டும் மலை அடிவாரத்துக்கு வந்தோம்.

ஆசீவகம் - ஆதி தமிழரின் தொன்ம மெய்யியல் - 3

"விழு" என்பது ‘வீழ்’ என குறிப்பிடப் படுவது போல் உழு எனும் சொல் “ ஊழ்” எனும் சொல்லாக கிளர்ந்தது. ‘உழு’ என்ற சொல் நிலத்தை உழுதல் என்ற பொருளிலும் குறிக்கப் படும். இது ஊழ்கம் அதாவது யோகம் என்ற சொல்லுக்கு எவ்வாறு தொடர்பு படுகிறது என்று திரு. ஆதி சங்கரன் அவர்கள் தனது ஆதி தமிழர் மெய்யியல் எனும் புத்தகத்தில் கூறுவது மிகவும் பொருத்தமானதாக உள்ளது.
நிலத்தில் பஞ்ச பூதங்களை சேமிக்கும் ஒரு அற்புதமான செயலே உழுதலாகக் கொள்ளலாம். 
நிலத்தை முதலில் புரட்டி விடுதல் என்று சொல்லும் பொழுது மண்ணோடு (பிருத்வி ) காற்று (வளி) சேர்வதும், மேலும் பின்னர் நீர் (ஜலம்) சேர்ந்து ஒளி (நெருப்பு, தேயு ) உமிழும் கதிரவன் பார்வையில் கிளர்ந்து விடப்படும் பொழுது மண்ணின் நுண் உள்ளறைகளில் (அணுவில்) உயிர்காற்று (வாயு, வளி ) அதாவது உயிர்சத்து சேமிக்கப் படுகிறது. இந்த மண்ணின் நீர் சத்து குறைந்ததும் அந்த வெற்றிடங்களில் ஆகாயச் சத்து வந்து நிறைகிறது.

இவ்வாறு உயிர்வளி சேமிக்கப்படுதல் உழு எனும் சொல்லால் குறிக்கப்படுகிறது. இந்த உழு, ஊழ் எனும் சொல்லின் அடிப்படையில் அமைந்த ஊழ்கம் எனும் பயிற்சி மாந்தர் உடலின் (நுண்ணிய) கண்ணறைகள் தோறும் உயிர்வளி சேமிக்கப் பயன்படுகிறது. இந்த உயிர்வளியினை அதிகம் பெறும் இயற்கைச் சூழல் அமைந்த சோலைகளிலும், மலைக் குகைகளிலுமே பெரும்பாலும் ஆசீவகப் பள்ளிகள் அமைந்திருந்தன.
இந்த ‘ஊழ்’ எனும் சொல்லிற்கு இயற்கையில் நிகழும் அணுவியல் மாற்றத் தொடர் நிகழ்வு என்பதே ஆசீவக விளக்கமாகும். இயற்கை நிகழ்வுகளின் ஒழுங்கு என்பது விதிப்படியே நிகழும் ஆதலால் அணுவியம் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
இவ்வாறு ஊழ்க நிலையில் உயர் நிலையினை அதாவது ஆறு வண்ணங்களின் 18 படிநிலைகளையும் கடந்து ஊழ்கத்தினால் அணுக்கள் ஆற்றல் செறிவுற்று ஆகூழ் அதாவது அணுக்கள் எஞ்சி, மிஞ்சி அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இறுகி யிணைந்து உடலழியா நிலையும், ஒளியுடலும் பெறும் நிகழ்வே மிக இறுதி இலக்காகக் கருதப் படுகின்றது. அவ்வாறு இறுதி நிலைப் பேறு பெற்றவர்கள் எண்வகை உறுதிப் பொருள்களைக் கடக்க வேண்டி இருக்கின்றது என்கிறது ஆசீவகக் கோட்பாடு. அவை எதுவெனக் கண்டால்.
1. கடைமிடறு, 2, இறுதிப்பாடல், 3, இறுதி ஆடல், 4, இறுதி வரவேற்பு, 5, காரிருள், 6, நிறையா வழிகை அமிழ்தூற்று, 7. தடைக்கல் தகர்ப்பு அல்லது தமர் திறப்பு, 8. ஐயன் நிலை அடைதல்.
இவைகளை இன்னும் தெளிவாக அடுத்த பதிவில் காணலாம்.
குறிப்பு - இவைகளை நான் இணையத்திலும், புத்தகங்களிலும் தேடி எடுத்த தரவுகளின் செய்திகளின் அடிப்படையிலேயே தொகுத்து அளிக்கிறேன்

ஆசீவகம் - ஆதி தமிழரின் தொன்ம மெய்யியல் - 2



ஆசீவகத்தினை நிறுவியவர் எவர், அவர்தம் பெயர்கள் என்ன? என்ற விபரங்களுக்குச் செல்வதற்கு முன் அவர்தம் அடிப்படை கோட்பாடுகளும் அதன் வெளிப்பாடுகளும் எவ்வாறு இருந்தன என்று அறிந்து கொள்வதும் மிகவும் முக்கியமான ஒன்று.
ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். அத்துறவிகளின் வாழிடங்கள் பெரும்பாலும் கற்குகைகளே. துறவி கூட உழைத்தே உண்ண வேண்டும் என்பது ஆசீவகப் பொருளியல்
இந்தத் துறவிகளின் துறவு வாழ்க்கையில் அறுவகையான நிறக் கோட்பாடு பின்பற்றப் பட்டது.
ஆசீவகத்தினர்அவரவர் சிந்தனை, செயல், தகுதி, அறிவுநிலை, ஊழ்கப் பயிற்சி,மெய்யியல் அறிவு இவற்றை அடிப்படையாகக் கொண்டு அறுவகை நிறங்களால் வகைப்படுத்தப் பட்டனர் :
1. கருமை & சாம்பல் - துவக்க நிலை – இரவு விண்ணின் நிறம்
2. நீலம் - இரண்டாம் நிலை – விடியற்காலை கதிரவன் உதிக்கும் முன் விண்ணின் நிறம்
3. பசுமை - மூன்றாம் நிலை – கதிரவன் உதிக்கத் துவங்கும் பொழுது சிறிய நேரத்திற்கு      இருக்கும் நிறம்
4. செம்மை - நான்காம் நிலை – கதிரவன் உதித்தப் பிறகு விண்ணின் நிறம்
5. மஞ்சள் - ஐந்தாம் நிலை - கதிரவன் உதித்தப் பிறகு கதிரவனின் நிறம்
6. வெள்ளை - இறுதி நிலை – கதிரவன் உச்சிக்கு வந்த பிறகு கதிரவனின் நிறம்
இந்த ஆறு வகைக்குள்ளும் மும்மூன்று உட்பிரிவுகளை கொண்டதாக அமைத்தனர். படிநிலை உயர உயர நிறத்தின் அழுத்தம் குறைக்கப்படும்
1. கரும்பிறப்பில் - 1.கருமை முதல் படி, 2. கருமை இரண்டாம் படி, 3. சாம்பல் மூன்றாம்         படி
2. நீலப் பிறப்பில் - 1.கருநீலம் முதல் படி, 2. நீலம் இரண்டாம் படி, 3. வான்நிறம்              மூன்றாம்    படி
3. பசும் பிறப்பில் - 1. அடர்பச்சை முதல் படி, 2. பச்சை இரண்டாம் படி, 3. வெளிர்பச்சை மூன்றாம் படி
4. செம்பிறப்பில் - 1. செம்மை முதல் படி, 2. இளம்சிவப்பு இரண்டாம் படி, 3. காவி மூன்றாம் படி
5. மஞ்சள் பிறப்பில் - 1. அடர் மஞ்சள் முதல் படி, 2. இளமஞ்சள் இரண்டாம் படி, 3. பொன்மை மூன்றாம் படி
6. வெண்பிறப்பில் வெண்மை மூன்று படிகளிலும்
இந்த 18 படிநிலைகளை கடந்த பின்னரே நல்வெள்ளை எனும் நிறமிலி நிலையினை அடைவர் என்பதே ஆசீவக நிறக்கோட்பாடு. அதாவது கருமையிலிருந்து நல்வெள்ளை நிலை வரையிலும் தகுதி உயர உயர நிறத்தின் அடர்வு குறைவதனைக் காணலாம்.
நல்வெள்ளை எனும் இறுதி நிலை நிறமிலி எனும் நிலையினைக் குறிக்கும். கருமையில் பிறவி துவங்கி அறியாமை இருளுடன் வாழ்வைத் துவங்கும் ஆசீவக மாணவன் தனது பயிற்சியினாலும் ஒழுக்கத்தினாலும் அறுநிறப் பதினெண் படி கடந்து நிறமிலி நிலையினை அடைவதே ‘வீடடைதல்’ எனப்படும். அப்படி ஒளியடைதலே ஆசீவக மெய்யியலின் நோக்கம்.
வள்ளல் பெருமான் கூட ‘ஒளிதேகம்’ என்று குறிப்பிடுவதும் இந்த நல்வெண்மை நிலையையே என்ற கருதுகோளும் உண்டு.
தொடரும்....
குறிப்பு - இவைகளை நான் இணையத்திலும், புத்தகங்களிலும் தேடி எடுத்த தரவுகளின் செய்திகளின் அடிப்படையிலேயே தொகுத்து அளிக்கிறேன்
No automatic alt text available.

ஆசீவகம் - ஆதி தமிழரின் தொன்ம மெய்யியல் - 1



ஆசீவகம் என்பதை “இந்திய மெய்யியல் கொள்கையும் துறவு இயக்கமும்” என்றும் கிமு 500 – 250 காலப் பகுதியில் தொல் பெளத்தர்கள், ஜைனர்களோடு ஒத்த காலத்தில் இருந்தாக கருதப்படுகிறது. என்றும், இந்த மெய்யியல் பெளத்தம், ஜைனம், சார்வகம் போன்றே வேதத்தை முழுமையாக புறக்கணித்த மெய்யியல் ஆகும் என்றும் சொல்கிறது விக்கி பக்கங்கள்.
இது அமணம் என்றும் குறிப்பிடப் படுகிறது. (சமணம் அல்ல என்பதற்கான சான்றுகளும் நிறுவப் பட்டுள்ளது)
1. அமணர் = அம்மண்ணர் = அம்+அண்ணர் = அம்+ம்+அண்ணர்
அம் - ஊழ்கப் பயிற்சியில் உயிர்வளி மேலேறும் போது மேல்நோக்கி மேலண்ணத்தைக் கடக்கும் போது அம்மெனும் ஒலியை எழுப்பும் என்பது ஊழ்கக் கருத்து.
அண்ணம் - ஊழ்கியின் மேலண்ணம்
அர் - பலர்பால் சிறப்பு விகுதி
அம்மெனும் ஒலியைக் கொண்ட ஊழ்கம் பயிலும் மேலண்ணத்தினை உடையவர் எனும் பொருள் கொண்டது. .இத்தகு அறிவர் வாழ்ந்த இடங்கள் திரு அண்ணர் மலை, அண்ணல் மங்கலம் எனும் பெயர்களுடன் வழங்கப் பட்டு இன்று திருவண்ணாமலை, அண்ணமங்கலம் எனும் பெயர்களால் வழங்கப்பட்டு வருகின்றன.
சித்தன்னவாசல் - அண்ணல் வாயில், திருவண்ணாமலை - திரு அண்ணர் மலை, அண்ணமங்கலம் - அண்ணல் மங்கலம்
இவ்விடங்களில் இன்றும் ஆசீவகப் பள்ளிகளின் எச்சங்கள் காணக் கிடக்கின்றன என்ற குறிப்புகள் கிடைக்கிறது. இச்சமயத்தின் அறிவர்கள்
1. ஆசீவகர் (அ) ஆசீவகச் சித்தர் (அ) சித்தர்
2. ஐயன், ஐயனார், நல்வெள்ளையார் - கழிவெண் பிறப்பு அல்லது நல்வெள்ளை         நிறத்தை அடைந்தவர்கள்
3. அண்ணர் (அ) அண்ணல்
என்றும் அழைக்கப் பட்டிருந்தார்கள். மேலும் ஆசீவகம் என்ற சொல்லுக்கு
ஆசீவகம் = ஆசு+ஈவு+அகம் என்றும் பொருள்கொ ள்வர். 
ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென,
ஈவு – தீர்வு (எட்டை இரண்டால் வகுத்தால் 4 வரும். இதில் முதலில் அவரிடம் இருக்கும் எண்கள் 8 மற்றும் 2, இந்த இரண்டைக் கொண்டு கணக்கிடும் பொழுது வரும் 4 ஐ ஈவு என்று சொல்வோம்)
அகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.
ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம். அத்தீர்வுகளைத் தருபவர்கள் ஆசீவக சித்தர்கள் ஆவர்.
எந்த ஒரு அறிந்த செய்தியிலிருந்தும் அறியாமல் உள்ள விடையை அறியலாம். அதற்கு ஈவு என்று பெயர். ஈவு என்பது வகுத்தும் பகுத்தும் பெறப்படும் விடையாம். கணக்கியலில் மட்டுமின்றி இயங்கியலில் உள்ள அனைத்துத் திணைதுறை, பல்தொழில், மூவிடம், ஐம்பாலிலும் நமக்குத் தெளிய வேண்டியவற்றைப் பகுத்தும் வகுத்தும் நாம் காணும் விடை ஈவு ஆகும்
அத்தகைய ஈவை அன்றைய இல்லறத்தானுக்கு நல்கும் இடமாக அமைந்தது ஆசீவகத் துறவிகளின் கற்படுக்கை. அங்குச் சென்று தனக்குத் தேவையான ஈவுகளைப் பெற்றதால் அத் துறவிகளின் கற்படுக்கை ஈவகம் (ஈவு+அகம்) எனப் பெயர் பெற்றது. இதற்காக கைம்மாறு எதுவும் கருதாமல் எவ்வகைப் பிழையுமின்றிச் செம்மையாக ஈவு தந்ததால் ஆசு+ஈவகம் எனச் சிறப்பிக்கப் பட்டது. இக்கற்படுக்கைகள் ஆசீவகக் கற்படுக்கைகள் எனவும், இங்கிருந்த துறவிகள் ஆசீவகத் துறவிகள் எனவும் பெயரிடப் பெற்றுச் சிறப்புற்றனர்.
இது தொடர்பான பல ஆய்வுகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்து கொண்டே இருப்பதும் ஒவ்வொரு கால கட்டத்திலும் சிலர் அதை ஒவ்வொரு விதமாக முன்னெடுப்பதும் நடந்து கொண்டே இருக்கிறது.
ஆசீவகத்தை நிறுவியவர்கள் எவர்?? அதன் முழுமுதல் கடவுளர் எவர்? போன்ற பல விஷயங்களை வாசிக்கும் பொழுது எதுவொன்றும் புதியதாகத் தோன்றாது ஏற்கனவே அறிந்த ஒன்றை மீள் வாசிப்பு செய்வது போன்ற உணர்வைத் தருவது எனக்கு ஒரு புதிய அனுபவம். உங்களோடு என் புரிதல்களை தொடர்ந்து இயன்று வரை பகிர்ந்து கொள்ளவும் முயல்கிறேன்.
இவைகளை நான் இணையத்திலும், புத்தகங்களிலும் தேடி எடுத்த தரவுகளின், செ்ய்திகளின் அடிப்படையிலேயே தொகுத்து அளிக்கிறேன்.

Monday, January 22, 2018

ஐயா வைகுந்தர் - சுவாமித்தொப்பு - ஆதி மூலத்தின் தரிசனத்தை நோக்கிய பயணம் - 20 - Jan-2018

அகவழிப் பயணங்களில் முதன்மையானது ஒப்புக் கொடுப்பது அதன் மூலமாகவே நாம் ஆற்றின் கரையில் இருந்து அதன் மைய நீரோட்டத்திற்கு இழுத்துச் செல்லப் படுகிறோம். பின் ஆற்றின் ஒழுக்கினோடே இயைந்து பயணம் செய்வதொன்றே வழி. நீரின் ஓட்டத்திற்கு எதிராகவோ, குறுக்கு மறுக்காகவோ அல்லது அந்த ஒழுக்கின் திசையோடோ நாம் முனைந்து நீந்த முற்படும் பொழுது விளைவுகள் எனும் வினைகளை சந்திக்க நேருகிறோம்.

அதுபோலவே 2016 துவக்கத்தில் இருந்தே மைய நீரோட்டத்தின் ஒழுக்கினோடே பயணிப்பதே வாழ்வென்றானது. குறிப்பாக பக்தி, மெய்யியல், மெய்ஞானம் சார்ந்த விஷயங்களில் தினசரி வாழ்வில் ஊடுபாவு போல ஒரு தனி இழையோடு பயணம் நடந்து கொண்டே இருக்கிறது.

அந்த தரிசன நீட்சியில் இந்த பயணத்தில் நான் சென்று நின்றது “ஐயா வைகுந்தரின்” வாசல். ஏகத்தை வலியிருத்தும் மற்றொரு மாற்று இந்து மதக் கோட்பாடுகளை உடைய மரபு. தந்தையின் பாதை, என்று பொருள் தரக்கூடிய “ஐயா வழி”.  My father blesses My father blesses  என்று சொன்ன யோகி ராம்சுரத்குமாரின் மாற்று வடிவம். எல்லா மாற்றுக் கோட்பாடுகளுக்கும் நேரும் சமூக ஒழுக்குகள் இந்த மரபிற்குள்ளும் நிகழ்வதைக் கண்கூட காண நேர்ந்தாலும் எவரோ சிலரின் உணர்தலுக்காக சாட்சியாக நிற்பதாக உணர்கிறேன் “சுவாமித் தோப்பில்” முதல் பதி என்றழைக்கபடும் இந்தப்  புனிதத்தலம்.

ஆதி உண்மையின் பரிணாமங்களைப் பேசும் எல்லா மாற்று இந்து மரபுகளையும் போல இங்கும் வருணாஸ்ரம நிராகரிப்பு, அத்வைதம், அகம்பிரம்மாஸ்மி, சமூக அக்கறை என்ற ஸ்ரத்தைகளை உள்ளடக்கி ஆதியில் உருவாக்கப் பட்டிருந்தாலும் காலப் போக்கில் பக்தி மரபின் ஒரு வாசலாக மாறியிருப்பதை உள்ளங்கை நெல்லிக் கனியாக காண முடிகிறது. இது சரியா தவறா என்று எழுந்த கேள்விக்கான விடையையும் மறு புலரியில் அருணனின் வரவுக்காக காத்திருந்த பொழுதுகளில் கிடைக்கச் செய்ததும் அதை மேலும் பேசிப் பேசி விரித்துக் கொள்ளும் சக உயிரினை தந்தற்குமான இந்தப் பிரபஞ்ச்சத்தின் உள் நோக்கத்தில் இருக்கிறது என் ஸ்வதர்மாவிற்கான பதில் என்று உள்ளுணர்வு சொல்கிறது.

வடக்கு வாசல் அவர் தவம் இருந்த இடமாக போற்றப் படுகிறது அங்கு ஒரு மர இருக்கையும் அதன் மேல் அமையப் பெற்ற கண்ணாடியும் உத்திராட்சமும். கண்டு அமர்கையில் உள்ளே எழும் ஓசையின் அளவுகள் தனித்து வேறு எதனோடோ லயிக்கிறது. பின் கிழக்கு வாசல் சென்றால் பள்ளியறை என்று அழைக்கபடும் ஐயாவின் சமாதி அறை உள்ளது அங்கு உள்ளே நுழையுமுன் அவரது தொண்டர்களின் அனுமதி பெற்று நெற்றியில் செங்குத்தாக ஒற்றை பட்டை தரித்து உள்ளே செல்ல வேண்டியுள்ளது.
அங்கும் அமர்ந்து தியானத்தில் ஒன்ற,  காணும் தரிசனங்கள் இன்னும் மைய நீரோட்டத்திற்கு அழகாக இட்டுச் செல்கிறது.



Tuesday, January 2, 2018

திருப்பெருந்துறை Vs திருப்பெருந்துறை (பாண்டியநாடு Vs சோழநாடு ) – நிறைவு

ஒரு நிமித்தம் போலும் சென்ற மே மாதத்தில் துவங்கிய மாணிக்கவாசகர் குறித்த ஒரு தேடலில் மிகவும் முக்கியமானதொரு ஒரு கட்டத்தில் தாளா மன உந்துதலில் துவங்கியது தான் திருப்பெருந்துறை Vs திருப்பெருந்துறை (பாண்டியநாடு Vs சோழநாடு ) என்று ஆறு பகுதிகளாக நான் எழுதிய ஒரு பதிவு.
அதன் முற்றுருவாக அமைந்தது இந்த முறை மேற்கொண்ட ஆவுடையார் கோவில் தரிசனம்.
ஆவுடையார் கோவில் அற்புதங்கள் என ஏராளமான விஷயங்கள் உள்ளது. அவைகளை நினைவில் இருந்தவரை தொகுத்து அளித்துள்ளேன்.
கருவைரையில் லிங்கம் கிடையாது, அங்கு சதுர வடிவ ஆவுடையும் அதன் நடுவில் அகண்ட குவளை வடிவக் குழியுமே உள்ளது. இது அவுடையே உடலாகவும் அதன் நடுவில் அமைந்துள்ள குவளை வடிவ குழியே ஆத்மாவாகவும் உருவகப் படுத்தப்படுகிறது. அதனாலேயே இறையனார் ஆத்மநாதர் என்று பெயர் கொள்கிறார்.
இறையனாரின் சந்நதியில் உள்ள திருவாச்சியின் விளக்கில் இருக்கும் விளக்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு அவை 27 நட்சத்திரங்கள், ஜீவாத்மா, பரமாத்மா தத்துவங்கள், பஞ்ச பூதங்கள், 36 தத்துவங்கள், 51 பஞ்சாக்கர எழுத்துகள், 224 வார்த்தை பிரிவுகள் போன்றவற்றை குறிப்பதாக செய்திகள் கூருகிறது.
இங்கு இறையனாருக்கு காட்டப்படும் ஆரத்தியை பக்தர்களுக்கு கண்களில் ஒற்றிக் கொள்ள கொண்டு வருவதில்லை. ஏனெனில் அங்கு இறைவனே ஜோதிஸ்வருபம் என்ற தத்துவத்தினால்.
கருவறையில் சந்திரன், சூர்யன், அக்னியைக் குறிக்கும் வண்ணம் சிவப்பு, வெள்ளை, பச்சை நிறங்களில் விளக்கு ஏற்றப்பட்டுள்ளது.
அம்பிகைக்கும் திருவுருவம் இல்லை. அவரது பாதங்களே முதன்மை தெய்வமாக சந்நிதியில் வணங்கப் படுகிறது. அதுவும் அங்கு அமைக்கப் பட்டுள்ள கல் அழிகள் போன்ற அமைப்பில் மனதை ஒருமித்து கண்டால் மட்டுமே முழுவதுமாக தரிசிக்க முடிகிறது. அம்பிகை அங்கு யோகாம்பிகை என்று நாமம் கொண்டிருக்கிறாள்.
இறையனாருக்கு நெய்வைத்தியமாக புழுங்கல் அரிசி சாதமும், பாகற்காயும், கீரையும் அமுதாகப் படைக்கப் படுகிறது. அது அங்குள்ள 3 அடி உயரம் 7 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட ஒரே பாறையால் ஆன படிக்கல்லில் தான் படைக்கப் படுகிறது. ஆவி போங்க படைக்கப்படும் இவற்றின் ஆவியே நிவேதனம் என்று சொல்லப் படுகிறது.
இந்தக் கோவிலில் நந்தி, கொடிமரம், மற்றும் பலி பீடம் இல்லை.
இங்கு மாணிக்கவாசகரும் சிவனின் மறு பிறப்பாகக் கொண்டாடப் பட்டு தனி சந்நிதியில் போற்றப் படுகிறார். ஆனாலும் குருவின் முன் அமர்ந்திருத்தல் முறையல்ல என்பதால் இங்கு, விநாயகர், முருகர், வீரபத்திரர் உட்பட அனைவரும் நின்ற திருக்கொலத்திலேயே அருள் பாலிக்கிறார்கள்.
இக்கோவிலின் சிற்பக்கலைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்தக் கோவிலில் அமைந்த கொடுங்கைகள் சிற்பக்கலையின் சிகரம் என்றே போற்றப் படுகிறது. ஒவ்வொரு சிலையும் உயிரோட்டமிக்க காவியங்கள். நரியை பரியாக்கிய மாணிக்க வாசகர் திருத்தலம் என்பதானால் முன் மண்டபத்தில் விதம் விதமான பல நாட்டு குதிரைச் சிற்பங்களும் அந்தந்த நாட்டு தனித்துவத்தை விளக்குவது போன்ற உடை நகை அலங்காரங்களோடு அதன் மேல் அமர்ந்திருக்கும் வீரர்களும் கண்கொள்ளா காட்சி.
உள் பிரகாரத்தில் சிவனும் உமையும் அர்ச்சுனனுக்கு பாசுபதாச்ரம் வழங்குவதாக வடிக்கப்ட்டிருக்கும் சிற்பம் சொல்லும் கதை என அவர்கள் சொல்லும் விளக்கம் அருமை. அம்மையின் அணிகள் பஞ்சாட்சர மந்திர பெருமையை குறிப்பதாகவும் சொல்லப் படுகிறது. கல்லாலான சங்கிலியில் பினைந்திருக்கும் நாகம், இசை எழுப்பக் கூடிய தூண்கள், நளினம் மிகுந்த நாட்டிய மாதுகளின் சிற்பங்கள் என அனைத்தும் புகைப் படக் கலைஞர்களுக்கு பெருவிருந்து.
இந்தக் கோவிலில் நவக்கிரக சந்நிதி இல்லை.
தெற்கு நோக்கி தென்னனாகக் காட்சி தரும்
கோவில் இது. தெற்கு என்பது முக்தியின் திசை என்பதும் நாம் அறிந்ததே.
திருவாசகத்தின் ஆதி ஓலை அங்கு இருப்பதாகவும் ஆருத்திரா தரிசனத்தன்று மட்டுமே அதைக் காண முடியும் என்பதும் சேதி.
இவை அனைத்துமே சென்ற முறை நாங்கள் அங்கு சென்று காத்திருந்த பொழுதுகளில் கோவில் வாசலில் எங்களோடு அமர்ந்திருந்த வீர பத்திரர் கோவில் உடையவர் சொன்ன சேதிகள். ஆனால் சென்ற முறை கோவிலைச் சார்ந்த ஒருவர் இறந்து விட்டதால் கோவில் திறக்கவில்லை. எனவே இந்த முறையே இத்தனை அதிசயங்களையும் கண்ணாரக் கண்டு அனுபவிக்க முடிந்தது.
இத்தனை ஆவணப் படுத்துதல்களில் இருந்த மெனக்கெடல் மீண்டும் சோழ நாட்டு திருப் பெருந்துறையே மாணிக்க வாசகருக்கு ஆத்ம போதம் வழங்கிய இடமாக இருக்கக் கூடும் என்ற செய்தி என்னுள் இன்னமும் பலமாக ஆழப்பதிந்து போனதும் ஒரு அதிசயமே. ஒரு வேளை நன் சென்ற முறை அந்தக் கோவிலில் உணர்ந்த உணர்வுகளின் தாக்கம் அதிகம் போலும் என்றும் எண்ணிக் கொண்டேன்.
பெருமிழலைப் பிரானை மிழலை நாட்டு திருப் பெருந்துறையில் கண்டதை மற்றொரு பதிவில் எழுதுகிறேன்