Sunday, February 25, 2018

ஆசீவகம் - ஆதி தமிழரின் தொன்ம மெய்யியல் - 3

"விழு" என்பது ‘வீழ்’ என குறிப்பிடப் படுவது போல் உழு எனும் சொல் “ ஊழ்” எனும் சொல்லாக கிளர்ந்தது. ‘உழு’ என்ற சொல் நிலத்தை உழுதல் என்ற பொருளிலும் குறிக்கப் படும். இது ஊழ்கம் அதாவது யோகம் என்ற சொல்லுக்கு எவ்வாறு தொடர்பு படுகிறது என்று திரு. ஆதி சங்கரன் அவர்கள் தனது ஆதி தமிழர் மெய்யியல் எனும் புத்தகத்தில் கூறுவது மிகவும் பொருத்தமானதாக உள்ளது.
நிலத்தில் பஞ்ச பூதங்களை சேமிக்கும் ஒரு அற்புதமான செயலே உழுதலாகக் கொள்ளலாம். 
நிலத்தை முதலில் புரட்டி விடுதல் என்று சொல்லும் பொழுது மண்ணோடு (பிருத்வி ) காற்று (வளி) சேர்வதும், மேலும் பின்னர் நீர் (ஜலம்) சேர்ந்து ஒளி (நெருப்பு, தேயு ) உமிழும் கதிரவன் பார்வையில் கிளர்ந்து விடப்படும் பொழுது மண்ணின் நுண் உள்ளறைகளில் (அணுவில்) உயிர்காற்று (வாயு, வளி ) அதாவது உயிர்சத்து சேமிக்கப் படுகிறது. இந்த மண்ணின் நீர் சத்து குறைந்ததும் அந்த வெற்றிடங்களில் ஆகாயச் சத்து வந்து நிறைகிறது.

இவ்வாறு உயிர்வளி சேமிக்கப்படுதல் உழு எனும் சொல்லால் குறிக்கப்படுகிறது. இந்த உழு, ஊழ் எனும் சொல்லின் அடிப்படையில் அமைந்த ஊழ்கம் எனும் பயிற்சி மாந்தர் உடலின் (நுண்ணிய) கண்ணறைகள் தோறும் உயிர்வளி சேமிக்கப் பயன்படுகிறது. இந்த உயிர்வளியினை அதிகம் பெறும் இயற்கைச் சூழல் அமைந்த சோலைகளிலும், மலைக் குகைகளிலுமே பெரும்பாலும் ஆசீவகப் பள்ளிகள் அமைந்திருந்தன.
இந்த ‘ஊழ்’ எனும் சொல்லிற்கு இயற்கையில் நிகழும் அணுவியல் மாற்றத் தொடர் நிகழ்வு என்பதே ஆசீவக விளக்கமாகும். இயற்கை நிகழ்வுகளின் ஒழுங்கு என்பது விதிப்படியே நிகழும் ஆதலால் அணுவியம் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
இவ்வாறு ஊழ்க நிலையில் உயர் நிலையினை அதாவது ஆறு வண்ணங்களின் 18 படிநிலைகளையும் கடந்து ஊழ்கத்தினால் அணுக்கள் ஆற்றல் செறிவுற்று ஆகூழ் அதாவது அணுக்கள் எஞ்சி, மிஞ்சி அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இறுகி யிணைந்து உடலழியா நிலையும், ஒளியுடலும் பெறும் நிகழ்வே மிக இறுதி இலக்காகக் கருதப் படுகின்றது. அவ்வாறு இறுதி நிலைப் பேறு பெற்றவர்கள் எண்வகை உறுதிப் பொருள்களைக் கடக்க வேண்டி இருக்கின்றது என்கிறது ஆசீவகக் கோட்பாடு. அவை எதுவெனக் கண்டால்.
1. கடைமிடறு, 2, இறுதிப்பாடல், 3, இறுதி ஆடல், 4, இறுதி வரவேற்பு, 5, காரிருள், 6, நிறையா வழிகை அமிழ்தூற்று, 7. தடைக்கல் தகர்ப்பு அல்லது தமர் திறப்பு, 8. ஐயன் நிலை அடைதல்.
இவைகளை இன்னும் தெளிவாக அடுத்த பதிவில் காணலாம்.
குறிப்பு - இவைகளை நான் இணையத்திலும், புத்தகங்களிலும் தேடி எடுத்த தரவுகளின் செய்திகளின் அடிப்படையிலேயே தொகுத்து அளிக்கிறேன்

No comments: