அகவழிப்
பயணங்களில் முதன்மையானது ஒப்புக் கொடுப்பது அதன் மூலமாகவே நாம் ஆற்றின் கரையில்
இருந்து அதன் மைய நீரோட்டத்திற்கு இழுத்துச் செல்லப் படுகிறோம். பின் ஆற்றின்
ஒழுக்கினோடே இயைந்து பயணம் செய்வதொன்றே வழி. நீரின் ஓட்டத்திற்கு எதிராகவோ,
குறுக்கு மறுக்காகவோ அல்லது அந்த ஒழுக்கின் திசையோடோ நாம் முனைந்து நீந்த
முற்படும் பொழுது விளைவுகள் எனும் வினைகளை சந்திக்க நேருகிறோம்.
அதுபோலவே 2016
துவக்கத்தில் இருந்தே மைய நீரோட்டத்தின்
ஒழுக்கினோடே பயணிப்பதே வாழ்வென்றானது. குறிப்பாக பக்தி, மெய்யியல், மெய்ஞானம்
சார்ந்த விஷயங்களில் தினசரி வாழ்வில் ஊடுபாவு போல ஒரு தனி இழையோடு பயணம் நடந்து
கொண்டே இருக்கிறது.
அந்த தரிசன நீட்சியில்
இந்த பயணத்தில் நான் சென்று நின்றது “ஐயா வைகுந்தரின்” வாசல். ஏகத்தை வலியிருத்தும்
மற்றொரு மாற்று இந்து மதக் கோட்பாடுகளை உடைய மரபு. தந்தையின் பாதை, என்று பொருள்
தரக்கூடிய “ஐயா வழி”. My father
blesses My father blesses என்று சொன்ன யோகி ராம்சுரத்குமாரின் மாற்று வடிவம். எல்லா
மாற்றுக் கோட்பாடுகளுக்கும் நேரும் சமூக ஒழுக்குகள் இந்த மரபிற்குள்ளும்
நிகழ்வதைக் கண்கூட காண நேர்ந்தாலும் எவரோ சிலரின் உணர்தலுக்காக சாட்சியாக நிற்பதாக
உணர்கிறேன் “சுவாமித் தோப்பில்” முதல் பதி என்றழைக்கபடும் இந்தப் புனிதத்தலம்.
ஆதி உண்மையின்
பரிணாமங்களைப் பேசும் எல்லா மாற்று இந்து மரபுகளையும் போல இங்கும் வருணாஸ்ரம
நிராகரிப்பு, அத்வைதம், அகம்பிரம்மாஸ்மி, சமூக அக்கறை என்ற ஸ்ரத்தைகளை உள்ளடக்கி ஆதியில்
உருவாக்கப் பட்டிருந்தாலும் காலப் போக்கில் பக்தி மரபின் ஒரு வாசலாக மாறியிருப்பதை
உள்ளங்கை நெல்லிக் கனியாக காண முடிகிறது. இது சரியா தவறா என்று எழுந்த கேள்விக்கான
விடையையும் மறு புலரியில் அருணனின் வரவுக்காக காத்திருந்த பொழுதுகளில் கிடைக்கச்
செய்ததும் அதை மேலும் பேசிப் பேசி விரித்துக் கொள்ளும் சக உயிரினை தந்தற்குமான இந்தப்
பிரபஞ்ச்சத்தின் உள் நோக்கத்தில் இருக்கிறது என் ஸ்வதர்மாவிற்கான பதில் என்று
உள்ளுணர்வு சொல்கிறது.
வடக்கு வாசல்
அவர் தவம் இருந்த இடமாக போற்றப் படுகிறது அங்கு ஒரு மர இருக்கையும் அதன் மேல்
அமையப் பெற்ற கண்ணாடியும் உத்திராட்சமும். கண்டு அமர்கையில் உள்ளே எழும் ஓசையின்
அளவுகள் தனித்து வேறு எதனோடோ லயிக்கிறது. பின் கிழக்கு வாசல் சென்றால் பள்ளியறை
என்று அழைக்கபடும் ஐயாவின் சமாதி அறை உள்ளது அங்கு உள்ளே நுழையுமுன் அவரது
தொண்டர்களின் அனுமதி பெற்று நெற்றியில் செங்குத்தாக ஒற்றை பட்டை தரித்து உள்ளே
செல்ல வேண்டியுள்ளது.
அங்கும்
அமர்ந்து தியானத்தில் ஒன்ற, காணும்
தரிசனங்கள் இன்னும் மைய நீரோட்டத்திற்கு அழகாக இட்டுச் செல்கிறது.
No comments:
Post a Comment