Sunday, February 25, 2018

எண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3

கடந்த பதிவில் தன்னை கட்டுப்படுத்தும், அல்லது தன்னை அச்சம் கொள்ள வைக்கும் சக்தியை மீறும் பொருட்டே மனிதனது அறிவு சார் பயணம் துவங்கியது என்பதைக் குறித்து பேசியிருந்தோம்.
ஒன்றை கையாளும் பொருட்டு நாம் கற்றுக் கொள்ளும் அறிவு வளர்ச்சியானது பின் அதை ஆளும் எண்ணத்தைத் தருகிறது. அங்கு நாம் உணர்ந்து கொள்ளத் தவறும் ஒரு சிறு புள்ளி ஒன்றுள்ளது, அது அதை கையாளக் கற்றுக் கொள்கையில் நாம் நம் அறிவுக்கு புலப் படக்கூடிய அதன் பரிமாணத்தையே அணுகுகிறோம். அதை நோக்கி அதைக் கையாளும் பொருட்டு, அல்லது ஆளும் பொருட்டு நமது பரிணாமத்தை வளர்த்துக் கொள்கிறோம். மேலும் அதன் பன்முகத் தன்மையை நாம் அறியும் தோறும் அது விரிந்து கொண்டே செல்கிறது.
எடுத்துக் காட்டாக மீண்டும் இங்கு நெருப்பையே பேசு பொருளாகக் கொள்ளலாம். முதலில் சிக்கி முக்கி கற்களின் மூலம் ஒளியை உருவாக்கப் பயன்பட்ட நெருப்பானது இன்று உலகின் அதி முக்கியமான எனர்ஜி சோர்சாக அதாவது சக்தியின் மூலக் கூறாகத் திகழ்கிறது. நெருப்பின் தன்மைகளையும் அதன் ஆக்கக் கூறுகளையும் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது மிக நுண்ணிய இம்மூலக் கூறுகளை மேலும் மேலும் பகுப்பதன் மூலம் அதன் ஆற்றலை பல்வேறு விதமாக பிரித்தும் சேர்ந்தும் புதிய விஷயங்களை நாம் அடைந்து கொண்டேயிருக்கிறோம்.
அதாவது அதன் பரிமாணங்களை நாம் பல்வேறு ஆராய்ச்சியின் மூலம் அறிந்து கொள்கிறோம். இன்னும் எத்தனை தூரம் இதை விரிக்க முடியும் என்ற கேள்விக்கு நாம் இன்னமும் எத்தனை தூரம் நம் பரிணாமங்களை பெருக்கிக் கொள்கிறோமோ அத்தனை தூரம் என்பது தானே பதிலாக இருக்க முடியும்.
இதில் பிரம்மாண்டம் என்பது விரிந்து கொண்டே செல்லும் நம் அறிவா இல்லை அந்த அறிவைக் கொண்டு அறியும் தோறும் விளங்கும் அந்த அறிபடு பொருளின் பரிமானங்களா??
எந்த அறிபடு பொருளின் தன்மைகள் குறித்த நம்பிக்கைகளை மறுத்து நாம் நம் அறிவை வளர்த்துக் கொள்கிறோமோ அதை நிராகரிப்பதா?? இல்லை நம் அறியும் திறனை நிராகரிப்பதா?? இரண்டுமே சாத்தியமா? இல்லை இரண்டில் எதுவுமே சாத்தியமில்லையா?
இதை பற்றி மேலும் பேச நாம் பல நூற்றாண்டுகள் பின்னே செல்ல வேண்டியிருக்கலாம்.. லாமா???

No comments: