Tuesday, February 10, 2009

வாசிப்பின் லயம் - நா.பிச்சமூர்த்தி கதைகள்.

தொடர்ச்சியாய் ஒரு செயலைச்செய்யும் பொழுது அது ஒரே லயத்தில் இருந்தாலும் பிரச்சனை இல்லாவிட்டாலும் பிரச்சனை.

இது என்ன முதல் வரியிலேயே ஒரு குழப்பம் என்ற பயம் வேண்டாம் விளக்கமாகவே சொல்ல முயற்சிக்கிறேன்.

பூ தொடுத்துக்கொண்டிருக்கிறோம், எதையாவது பார்த்து நகலெடுத்துக்கொண்டிருக்கிறோம், இப்படி ஏதாவது ஒரு வேலையை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கும் வேளையில் பத்து இருபது நிமிடங்களுக்கு மேல் அந்த வேலையை நம்மால் தொடர முடிவதில்லை சலிப்படைந்து விடுகிறோம். ஏனென்ன்றால் அதில் இருக்கும் ஒற்றைத்தன்மை. எனவே நாம் செய்யும் வேலையை சுவாரசியமாக்க சின்னச்சின்ன மாற்றங்கள் அந்த வேலையில் தேவைப்படுகிறது.

ஆனால் அதே சமயம், ஒரு பாடல் தொகுப்பை கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம் பல்வேறு தாள லயங்களும், காட்சி அமைப்புக்களும் உடையதாக இருக்கலாம், அதாவது ஒரு குத்துப்பாட்டு, ஒரு மென்மையான இசை, ஒரு சாஸ்திரிய சங்கீதப்பாடல், ஒரு செமிகிளாசிக்கல் பாடல் என்று தொடர்ந்து கேட்க/பார்க்க முடிவதில்லை அதற்கு ஒரு லயம் தேவைப்படுகிறது. நம் மனம் அந்தந்த நிமிட இடைவெளிகளுக்குள் முந்தய அனுபவத்தை மாற்றிக்கொள்ளும் பொழுது சோர்வடைந்து விடுகிறது.


அது போல் ஒரு தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பை வாசித்துக்கொண்டிருக்கிறோம் எனும் சூழ்நிலையில் ஒரு நாவலை வாசிப்பது போல் சிறுகதை தொகுப்பை வாசிக்க முடிவதில்லை. ஒரோர் சிறுகதைக்கும் உண்டான அமைப்பு, கதை மாந்தர்கள் அவர்களது குணாதிசயப்படைப்புகள், கதை ஓட்டம் இவைகளையெல்லாம் நம்மால் ஒரு பக்கத் திருப்பலில் மறந்து விட்டு அடுத்த கதைக்கு செல்ல முடிவதில்லை. அதனாலேயே சில சமயம் ஒரு 80 பக்க சிறுகதை தொகுப்பை படித்து முடிக்க கூட சில நாட்கள் ஆகிவிடுகிறது. அதேசமயம் சில நாவல்களின் 300 பக்கங்களைக்கூட தொடர்ந்து வாசித்து முடித்து விட முடிகிறது.

இது தான் நடந்து கொண்டிருக்கிறது இப்போது நான் வாசித்துக்கொண்டிருக்கும் ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பில். ஒரு கதைக்கும் மறுகதைக்குமுண்டான இடைவெளி சில சமயம் நாட்கணக்காக, மணிக்கணக்காக ஊர்ந்து கொண்டிருக்கிறது. உணர்வுகளால் ஆக்கப்பட்டு அந்த உணர்வுகளின் மூலமாக தன்னையும் எதிர்புலனாக உணரவைக்கின்ற அவரின் எழுத்து தரும் வர்ண ஜாலத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. கை விரல்களினூடே வழியும் மணியென ஓரோர்புறம் சிதறி வழிகிறது நம் உணர்வுகள். தேடல் நிறந்த வாழ்வை வாழ்ந்தெவரென்றும், ஆற்றின் கரைகளில் சாட்சியாய் நிற்கின்ற படித்துறைகள் போல அவரது கதைகள் அவரது தேடலின் சாட்சிகளென்றும் படிக்க, சொல்ல கேட்டு மிகுந்த எதிர்பார்ப்புகளோடேயே இந்த புத்தகத்தை வாசிக்கத்தொடங்கினேன்.

நாம் எதிர்ப்பார்ப்புகள் மிகுதியாய் ஒரு செயலை செய்ய நேரும் வேளையில் நாம் எதிர்கொள்வது பெரும்பாலும் ஏமாற்றமாய் முடிந்துவிடும். அந்த பயமும் என்னுள் இருந்ததென்றாலும் துணிந்து வாசிக்க எடுத்தேன் ஆனால் ஒரு கவளம் சோற்றில் உண்டி நிறையும் சிறு குழந்தையென அவரது ஒவ்வோரும் கதைக்குப்பின்னும் மனம் நிறைந்து விடுகிறது.

வாழ்வைக்குறித்தான் தேடலும் கேள்விகளும், தன்னுணர்வைக்குறித்தான சுய அலசலும் உள்ள இன்றைய தலைமுறை வாசகர்கள் அவசியம் தேடி வாசிக்க வேண்டிய எழுத்துக்கள் ந.பிச்சமூர்த்தியின் கதைகள் என்பது என் எண்ணம்.

14 comments:

ஜீவி said...

//வாழ்வைக்குறித்தான் தேடலும் கேள்விகளும், தன்னுணர்வைக்குறித்தான சுய அலசலும் உள்ள இன்றைய தலைமுறை வாசகர்கள் அவசியம் தேடி வாசிக்க வேண்டிய எழுத்துக்கள் ந.பிச்சமூர்த்தியின் கதைகள் என்பது என் எண்ணம்.//

இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லாமல் மனத்தில் பதிகிற மாதிரி சொல்லியிருக்கிறீர்கள்.

மாதவய்யாவுக்கு அடுத்து பிச்சமூர்த்தி சாரா?.. தொடர்ந்து செல்லுங்கள்..
அருமையான பணி. பாதியில் விட்டு விட்டோமே தொடர்ந்து எழுத வேண்டும், எழுத வேண்டும் என்று அவ்வப்போது நினைத்துக் கொள்ளும்
பணியை நீங்கள் தொடர்வது கண்டு
மகிழ்ச்சியாய் இருக்கிறது.

புதிய தலைமுறைக்கு பழைய தலைமுறையை அறிமுகப்படுத்துதல் காலத்தின் கட்டாயமாகத் தெரிகிறது.
விரைவில் பயணத்தில், நானும் கலந்து கொள்கிறேன்.

வாழ்த்துக்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ப்லாக் வந்தபின் தான் எனக்கு நிறைய பேரின் எழுத்துக்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

இதற்கு முன் பாலாவையும், சுஜாதாவையும் விட்டால் தமிழுக்கு வேறு எழுத்தாளர்களே இல்லை என்று நினைத்திருந்தேன்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இருவரையும் வாசிக்கவேண்டும்.

Radhakrishnan said...

மிகவும் அருமையான கண்ணோட்டம். நன்றி. அகிலனின் சிறுகதைகள் தொகுப்பு படித்த உணர்வைத் தூண்டியது உங்களின் ந.பிச்சமூர்த்தி கதைகள் பற்றிய கண்ணோட்டம்.

மெளலி (மதுரையம்பதி) said...

குபரா, பிச்சமூர்த்தி இவர்களெல்லாம் ஒரே காலகட்டம் (மணிக்கொடி?) அல்லவா?.

குபரா எழுத்துக்களைப் படித்த அளவு பிச்சமூர்த்தி அவர்களது எழுத்துக்களைப் படித்ததில்லை. படிக்க வேண்டும்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

sury siva said...

//நாம் எதிர்ப்பார்ப்புகள் மிகுதியாய் ஒரு செயலை செய்ய நேரும் வேளையில் நாம் எதிர்கொள்வது பெரும்பாலும் ஏமாற்றமாய் முடிந்துவிடும்/


நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.
நடந்ததையே நினைத்துவிட்டால் அமைதி எங்குமில்லை

என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது.

சுப்பு ரத்தினம்.
ஸ்டாம்ஃபோர்டு, கனெக்டிகெட், யூ.எஸ்.ஏ.

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி கிருத்திகா..

உங்னளை நிறைய பின்னூட்டங்களில் பர்த்திருந்தாலும் இன்றுதான் உங்களுக்கு பின்னூட்டமிட்டிருக்கிறேன் உங்களிடமும் நிறைய வாசிக்க இருக்கிறது...

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஜீவி.... நான் முன்னொரு சமயம் மௌனியின் கதைகள் குறித்த தங்கள் பின்னூட்டம் கண்டபோது சொல்ல நினைத்தது, சில சமயம் இப்படித்தான் சில விஷயங்களை நினைத்தபோது சொல்ல மறந்து விடுகிறோம் !!! நான் புதியதாய் படித்துவிட்டு எழுதுகிறேன் தாங்கெளெல்லாம் சில காலங்களாக அனுபவத்து வந்திருப்பீர்களல்லவா அதன் வெளிப்பாடு இன்னும் மேன்மையாய் இருக்கும். எனவே தயவுசெய்து சீக்கிரம் எழுத ஆரம்பியுங்கள் ஆவலாயிருக்கிறேன்...

கிருத்திகா ஸ்ரீதர் said...

அமித்துஅம்மா- மிகவும் வெளிப்படையாய் இப்படி ஒத்துக்கொள்ளும் மனம் வெகு சிலருக்கே வரும். உங்களை உண்மையாய் பாராட்டுகிறேன்... படிக்க படிக்க குறையாத எத்தனையோ வியப்புகளை தரும் எழுத்துக்களும் புத்தகங்களும் உள்ளது. நல்ல வாசிப்பு அனுபவத்திற்கு வாழ்த்துக்கள்.

- வெ.இராதகிருஷ்ணன் - நன்றி.. அகிலனின் எழுத்துக்களின் தளங்கள் சிறிதே வித்யாசப்படும் என்பது கருத்து. ஆனாலும் வாசிப்பின் அனுபவம் அவரவர் சொந்த அனுபவம் என்பதை மறுத்துக்கூற முடியாது. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

- ம்துரையம்பதி - ஆமாம் கிட்டத்தட்ட நான் அந்த இலக்கை வைத்துதான் புத்தகங்களை வாசித்து வருகிறேன் (மணிக்கொடி எழுத்தாளர்கள், அவர்கள் குறிப்பிட்டிருந்த எழுத்துக்கள் என்று)

கிருத்திகா ஸ்ரீதர் said...

- சூரிசார் - உங்க பின்னூட்டத்திற்கு நீங்கதான் இணை வேற யாரும் அடிச்சுக்கமுடியாது..

- தமிழன் கறுப்பி - "உங்களிடமும் நிறைய வாசிக்க இருக்கிறது..."
நிசமாவா....நன்றி....

திவாண்ணா said...

கதை அனுபவிக்கத்தானே? அனுபவிக்கவில்லையென்றால் சீக்கிரம் படித்துமுடிப்பதில் என்ன இருக்கிறது?

ஜீவி said...

கிருத்திகா said...

//இன்னும் மேன்மையாய் இருக்கும். எனவே தயவுசெய்து சீக்கிரம் எழுத ஆரம்பியுங்கள்//

எண்ணத்தைச் செயல்படுத்தியாகி விட்டது. 'மணிக்கொடி' பி.எஸ்.
ராமையா பற்றி எழுதியிருக்கிறேன்.
படித்துப் பார்த்துச் சொல்லுங்கள்.

ஜீவி

Anonymous said...

//நாம் எதிர்ப்பார்ப்புகள் மிகுதியாய் ஒரு செயலை செய்ய நேரும் வேளையில் நாம் எதிர்கொள்வது பெரும்பாலும் ஏமாற்றமாய் முடிந்துவிடும். அந்த பயமும் என்னுள் இருந்ததென்றாலும் துணிந்து வாசிக்க எடுத்தேன் ஆனால் ஒரு கவளம் சோற்றில் உண்டி நிறையும் சிறு குழந்தையென அவரது ஒவ்வோரும் கதைக்குப்பின்னும் மனம் நிறைந்து விடுகிறது.//

நல்லா சொல்லியிருக்கீங்க.

நன்றி
சூர்யா ஜிஜி

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க திவா.. உண்மைதான் கதை அனுபவிக்கதான்...:)

நன்றி சூர்யா