Tuesday, May 11, 2010

வாசிப்பு - சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு - மொழியாக்கம்


மிகவும் குற்ற உணர்ச்சிகளோடேயே எழுதிய கவிதைகளை இடம் மாற்றி வைத்துக்கொண்டிருக்கிறேன். கவிதைகள் எழுதுவதென்பது எளிதென்பதைக்காட்டிலும் உணர்வுகளை உடனே சொல்ல முடிந்த சவுகரியங்கள் மட்டுமே காரணமாயிருக்க முடியும்.


ஆராய்ந்து பார்த்தால் அடுத்தடுத்த பதிவுகளாய் கவிதைகளை இடுவதை தவிர்த்து வந்ததின் பிண்ணணி எனக்கு நானே இட்டுக்கொண்ட வேலியென இப்போது தான் புரிகிறது. ஆனாலும் கவிதையெழுதுவதின் போதை எழுதுபவரை எப்போதும் ஒரு போதத்தில் ஆழ்த்துவதென்பதும் உண்மைதானே..


மிகச்சமீபமாய் இத்தகைய போதம் தரும் புத்தகமொன்றை படிக்க நேர்ந்தது. சிதம்பர நினைவுகள் என்று பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதி ஷைலாஜா அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட அந்தப்புத்தகம் என் கைகளில் மொத்தம் இரண்டு நாட்களுக்கும் குறைவாகவே இருந்தது. பொதுவில் மிகவும் ஆழமான விரும்பத்தக்க எழுத்துக்களை மீள் வாசிப்பிற்கென எடுத்து வைத்தும் சில சமயம் மீண்டும் உடனே வாசித்தும் பழகிய எனக்கு மறுமுறை வாசிக்க வேண்டும் என்ற தேவையற்று வாசித்த வரிகள் தொடர்ந்து கண்களிலும் மனதிலும் நீர்வீழ்ச்சியின் பாதத்தில் தேங்கியிருக்கும் நீர்நிலையென கலங்கலற்றுத் தங்கிவிட்டது.

மிக எளிமையான தினப்படி நிகழ்வுகள் தந்த அவதானிப்புக்களை மிகவும் சரளமாகவும் எந்த ஒரு தாழ்வுணர்ச்சியோ இல்லை அதி உன்னத மிகப்படுத்தல்களோ இல்லாது எவருக்கோ நிகழ்ந்ததென படைக்கும் ஆற்றல் பெற்ற அந்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரரை எந்த மொழிகொண்டும் விவரிக்க இயலாது.

என்றோ இளமைக்குறும்பில் வாங்கிய முத்தத்தை நடு வயதில் மிகவும் நிதானாமாய் திருப்பித்தந்த நெகிழ்வான நிகழ்விலாகட்டும், நடுவயதில் தவறிய நிதானத்தை குற்ற உணர்வுகளோடு மீட்டெடுத்து உடனே செயல்படுத்தியதை சொல்லும் பொழுதிலாகட்டும் தன் மேதாவித்தனங்களை எந்த விதத்திலும் வெளிப்படுத்திக்கொள்ளாத எளிமை நம் எல்லோராலும் கைக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

மிகவும் வயதான தம்பதியரின் அந்நியோன்யம் கண்டு அதிசயத்த அதே மனது மற்றொரு சம்பவத்தில் தனது துணைவியாரின் சகிப்புத்தன்மையைப்பற்றி சொல்லும் பொழுது எதையெல்லாமோ எனக்காக சகித்துக்கொண்ட விஜயலெஷ்மி எனக்காக இதையும் சகித்துக்கொண்டாள்என்ற வார்த்தைகள் தரும் அழுத்தம் அபாரமானது. (படைப்புகளுக்குள்ளே படைப்பாளியை பொறுத்திப்பார்க்கும் இந்த பொது புத்தியினை எத்தனை முயன்றும் தவிர்க்கமுடிவதில்லை)

எப்பொழுதும் ஊசாலாடிக்கொண்டிருக்கும் ஆண்மனதின் அடி நாதத்தை எடுத்துக்காட்டும் இடங்களில் தான் கண்டு இரசித்த பெண்மணியின் இறப்பும் அது குறித்த குற்ற உணர்வு தரும் வலியைக் குறிக்கும் இடங்களில் வானாளாவி நிற்பது படைப்பின் உன்னதம் மட்டுமே. இதில் எடுத்துச்சொல்லாமல் விட்ட எத்தனையோ இடங்கள் இனிமேல் வாசிப்பவர்களின் அனுபவத்திற்கு விட்டுச்சென்றதேயன்றி வேறெதும் இல்லை

முன்னுரையில் ஷைலாஜா கூறியிருப்பதைப்போல் மலையாள மொழியினைக் கற்றுத்தேர்ந்தேயாகவேண்டும் என்ற முனைப்பு எழுந்துதான் உள்ளது. இடயே சிலகாலம் மறந்து போயிருந்த அந்த முனைப்பு இப்போது மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளது. தேடத்துவங்கியுள்ளேன் அரிச்சுவடிப்புத்தகங்களை.

மொழிபெயர்ப்பு என்ற எந்த நெருடல்களும் இல்லாது இந்த புத்தகத்தை படைத்துள்ள ஷைலாஜாவும் ஒரு படைப்பாளியின் அந்தஸ்த்திற்கு இணையானவர் என்று சொன்னால் அது மிகையாகது.


வாழ்வில் ஒரு முறையாவது வாசித்தேயாகவேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று என்று சொல்வதோடு ஒரு சிலருக்கு தன்னை செதுக்கிக்கொள்ளும் உளியாகவும் கூட ஆகிவிடலாம்.

Thursday, May 6, 2010

மிக நீண்ட கவிதையொன்று.....


மிக நீண்ட கவிதையொன்று

எழுதப்பெறாமாலே முற்றுப்பெற்றது


நான் வரும் வழியில்

எப்பொழுதும் எரிந்து கொண்டோ

புகைந்து கொண்டோயிருக்கும்

மின்மயாணப்புகை போக்கி உணர்த்தும்

வாழ்வின் முடிவின்மையைச்

சொல்லியிருக்கலாம்


சூழலில் கலந்து வரும்

நிண வாடை கலந்த

சுவாசமுணர்த்தும்

நித்யத்தை சொல்லியிருக்கலாம்


மரத்தினடியில் சரிந்து விழுந்திருக்கும்

நாகலிங்கப்பூவின் குவியலை

கூட்டி வாரி குப்பையிலிடுவைதை

காணும் பொழுதுணர்த்தும்

வாழ்வின் அபத்தத்தை சொல்லியிருக்கலாம்


கண்கலங்கி சிரித்து

நா வரண்ட பொழுதும்

உள்ளே உறைந்து போயிருக்கும்

எத்தனையோ ரணங்களின்

இருப்பு உணர்த்தும்

வாழ்வின் இருமையை சொல்லியிருக்கலாம்


மிக நீண்ட இருப்புப்பாதைகளில்

வளைந்தும் நெளிந்தும் செல்லும்

புகைவண்டியின் ………..மற்றும்

குறுகிய சாலைகளில் குவிந்திருக்கும்

மக்களை மாக்களை

லாவகமாய்க்கடந்து செல்லும்

பேருந்துகளின்

சாயலுணர்த்தும் நீர்மையைச்

சொல்லியிருக்கலாம்


இவையத்தனையையும் தாண்டி

என் உள்ளுணர்வும் உணர்த்தும்

உன்னிருப்பை மட்டுமே

எழுத முற்பட்ட

மிக நீண்ட கவிதை

எழுதப்பெறாமலே முற்றுப்பெற்றது

வாழ்வின் எல்லா ருசிகளையும் போல.


Saturday, April 10, 2010

மனவெளியில் சில வார்த்தைகள்

ஊரெங்கும் பூத்திருக்கும்

மின்விளக்குகளை விட

எங்கோ ஓர் மூலையில்

மினு மினுக்கும்

ஒற்றை சிம்மினியின் ஒளி

மிக நெருக்கமாய்

உணர்த்துகிறது

தனிமையை

நிராகரிப்பை

மற்றும்

உன்னிருப்பை

**************************************

சொற்களில் வழிந்தோடுகிறது

களிப்பு, காமம் காதல் மற்றும் கடமை

சர்ப்பம் உரித்த சட்டை போல்

உள்ளே கேட்பாரற்றுக்கிடக்கிறது மனது

Saturday, April 3, 2010

நாடோடிகளின் வெயில்


எதையும் பற்றிக்கொள்ளாததோர் அடர் வெளியில் மனம் எளிதில் புகுந்து கொள்கிறது. கூடவே கனம் சேர்க்கிறது சுட்டெரிக்கத்துவங்கியிருக்கும் வெயிலும் அதோனோடு சேர்ந்து துவங்கும் வழமையான பழக்க வழக்கங்களிலிருந்து மாறுபடும் பண்பும்.

உடையும், உணவும், கூடவே உறங்கும் பொழுதுகளும் தன்மைகளும் கூட இந்த வேனலின் பொருட்டு மாறிக்கொண்டிருக்கிறது. மிகவும் உற்றுநோக்கினால் ஒரு மெலிதான வன்முறையும் தனிமையும் எல்லோரிடமும் படர்வதைக்கூட உணர முடிகிறது. உள்ளும் புறமும் வியர்வையோடு ஒரு சிறு அலுப்பும் கூடவே ஒரு எதிர்ப்புணர்வும் ஒட்டிக்கொள்கிறது,

இத்தனையும் கொண்டு வரும் வேனல், எல்லோர்க்கும் ஒன்றேயான மனநிலையைத்தானா தருகிறது? குளிர்சாதன, காற்றாடி வசதிகளற்று நடைமேடைகளிலுறங்கும் அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வில் வேனல் எத்தகைய மாற்றங்களைக் கொணர்கிறது. அதைவிடவும் நாடோடிகளின் வெயில் எங்கணமிருக்கும். இந்தக்கேள்வி என்னுள் எழும் வேளையில் நானும் ஒரு குளிர்சாதனப்பெட்டிக்கு மிக அருகாமையிலிருந்தாலும் கூட நாடோடி வாழ்வுக்கான விழைதலை தவிர்க்க முடியவில்லை.

ஒரு மாற்று உடையும், சிறிதளவு பணமும் வாழ்வதற்குண்டான மனநிலையையும் மட்டும் கைக்கொண்டு ஊர்களைக்கடந்து செல்லும் நாடோடியின் வாழ்வில் வெயிலும் மழையும் குளிரும் செய்யும் மாற்றங்கள் என்னவாயிருக்கும். கையளவு சிலேட்டில் கல்குச்சி கொண்டு சிறு வீடு கட்டி கற்பனையில் பொங்கலிட்டு திருவிழா முதல் திருமணம் வரை செய்து முடிக்கும் குழந்தமையின் மனநிலையில் மட்டுமே யோசிக்க முடிகிறது இருப்பை விட்டு அதிக பட்சம் 50 மைல்கள் கூட தனித்து நடந்திராத கால்களுக்கு.

பறவைகளின் இடமாற்றம் போலும் ஒரு நாடோடியினால் குளிர் வெய்யில் பிரதேசங்களை இந்தந்த காலகட்டங்களில் தான் கடந்து செல்ல வேண்டுமெனும் கணக்குகளை உண்டாக்கிக்கொள்ள இயலுமா? அல்லது எதையும் எதிர்கொள்ளும் மனநிலைக்குச்சென்ற பின்பான பிரயாணங்களில் இத்தகைய முன்னேற்பாடுகளைச் செய்யும் எண்ணம் தோன்றாது போகுமா?

இதை இப்படித்தான் செய்யவேண்டும், இந்தந்த வார்த்தைகளைத்தான் பயன்படுத்த வேண்டும், இங்கு சென்றால் அந்த வழியை அடையலாம், இப்படிப்போட்டால் அப்படி எடுக்கலாம், இவரைப்பிடித்தால் அவரோடு நெருங்கலாம், அதை அடைய இதைப்பற்றிக்கொள்ளலாம என்ற எந்த ஒரு செயல்திட்டங்களும் அன்றி அன்றன்றைய நாட்களோடும், நிமிடங்களோடு வாழும் மனநிலையைக்கொள்வது கூட நாடோடியின் வெயிலாகத்தான் இருக்க முடியுமல்லவா?

நடந்து செல்வதென்பதும் கடந்து செல்வதென்பதும் வெறும் வழிகளையும் தூரங்களையும் மட்டுமல்லாது வாழ்க்கையையும் அதைச்சார்ந்த மனித மனங்களையும் தானே, நாடோடியின் வெயிலைப்போல...

Thursday, March 25, 2010

முகமூடிக்கவிதைகள் -11


சில சமயம் எதுவும் வேண்டாமென
ஓடிவிடத்தான் தோன்றுகிறது
பிறகெங்கே என்ற கேள்விகளுக்கான
பதிலொன்றும் தெரியாததால் மட்டுமே
இருப்பு என்பது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

கேள்விகள் தொலைந்துபோவதின்
நிகழ்வுக்களுக்கான நாளை
எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம்
மீளமுடியாது தொலைந்து போகாலமென
நாட்களை தள்ளிக்கொண்டும் இருக்கிறோம்
தெரிந்தும் தெரியாமலும்...

மீளவும் மறந்து போவதின் உண்டான
சௌகர்ய அசௌகர்யங்களுக்குள்
புதைத்துக்கொள்கிறோம்
அன்றன்றைய ஏமாற்றங்களையும்
நேற்றைய சந்தோஷங்களையும்


இருந்தும் ஏதோவொன்று எடுத்துச்செல்கிறது
அலையோடு புரண்டெழும் நுரையென

எப்போதும் நம்மோடு இருக்கும்
முகமூடிகளுக்குப்பின்னான
நாளைய நம்பிக்கைகள்.



Thursday, March 18, 2010

நினைவோடையின் சில வரிகள்



மிகப்பெரியதாய் உணரும் சில கணங்களை
தலைகீழாய் உருட்டித் தள்ளிவிடுகிறதுன் ஞாபகங்கள்

சிறு மணல் வீடு கட்டும் குழந்தையென
அலைவருமுன்னே ஆர்ப்பரிக்கின்றதென் மனது
உனக்காக உருவகிக்கும் கணங்களுக்கென.

நின்று துடிக்கும் இதயத்தை
ஓசையின்றி அடக்கிவைக்க
இயலாததின் இயலாமையில்
தினமும் கழிகிறதென் நாட்கள்

என்றேனும் ஒரு நாள் நிறைவேறக்கூடும்
நீ என்னவென்று நானுனக்கு சொல்லும் நாள்
அன்று தான் நான் மீண்டு வருவேன்
எனக்கான என்னை நோக்கி.

பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகளின் சுகம்
தேக்கிவைத்துக்கொள்வதில் இல்லைதானே...

Saturday, March 6, 2010

தொலைந்து போகச்செய்யும் ஓசைகள்

சப்தங்களை வெறும் ஒலிகளாய் உணர்வைதைக்காட்டிலும் அதனோடுடனான உருவங்களோடு உருவகப்படுத்திக்கொள்வது பால்யத்திலிருந்து நாம் கற்றுக்கொண்டவைதானே. தோத்தோ சொல்லு, காக்கா சொல்லு, ம்ம்மே.. எது கத்தும், ம்ம்ம்மாஆஆ எது கத்தும் இப்படி ஆரம்பித்தது தானே நம் ஒலிவாங்கியின் பயன்பாடுகள்.

மதியம் பள்ளி இடைவேளையை உணர்த்தும் மணிச்சத்தமும், அதனிடையே ஒலிக்கும் ஐஸ் வண்டிக்காரனின் சத்தமும் உணர்த்தியது பெரும் விடுதலையை அல்லவா.

மாலை வேளைகளை உணர்த்தும் சோன்பப்டிக்காரனின் வண்டிச்சத்தமும் கூடவே ஒலிக்கும் கோவில் மணிச்சத்தமும் உணர்த்துவது அன்றைய வீட்டுப்பாடங்களையோ அல்லது அம்மாவின் கட்டளைக்கு பயந்து நாம் கூட்டில் அடையவேண்டிய நேரத்தை உணர்த்தும் கட்டுப்பாட்டின் சரடுகளை அல்லவா.

அதுவே பதின்மங்களில் நமக்கு மிகவும் நெருக்கமாய் உணர்ந்தவர்களின் சைக்கிள் மணிச்சத்தமோ இல்லை பெரும் அதிர்வோடு கடந்து செல்லும் இரு சக்கர வாகனங்களின் இரைச்சலோ நம்முள் விதைத்து சென்றது அவரவர் முகங்களைத்தானே.

பேருந்தில் பள்ளி செல்லும் நாடகளில் பள்ளியின் ஏதோ ஓர் மூலையில் இருந்தாலும் பெவின் வண்டி பட்ணம் முக்கு தாண்டிட்டான் சீக்கிரம் ஓடு என்று பேருந்தை ஓடிப்பிடித்த நாட்களுண்டு. பெவின் வரான் என்று சொன்ன பின்னும் தயங்கித்தயங்கி நடக்கும் தோழியின் நடை கண்டு நமட்டு சிரிப்போடு சரி இன்னக்கு ரெண்டாம் நம்பர்ல போலாம் என்று சொன்னதும் கூடவே வரும் தோழிகள் ஏண்டி என்று வினவ, ஆமா இவளோட ஆளைப்பார்த்து ரெண்டு மூணு நாளாயிடுச்சு இல்லை அதான் அம்மா அன்ன நடை பாடறாங்க பாவம் இன்னக்கி ரெண்டாம் நம்பர்தான் என்று சிரிக்க அவளோ, ஆமா உனக்கென்ன உன் ஆளு நீ வரயான்னு பார்த்து பார்த்து வண்டியோட முன்வாசலுக்கும் பின்வாசலுக்கும் நடக்கறது எனக்குத்தானே தெரியும், எங்களை மாதிரி எங்கருந்தோவா வரனும் இங்கயே இருக்கப்பல என்று கிண்டலும் கேலியுமாக கழிந்த நாட்களில் கூட ஒலி என்பதை உணர்வுகளாகவும் மனிதர்களாகவும் தான் புரிந்து கொண்டதுண்டு.

உள்ளே உருவாகும் சிறு அசைவின் ஒலி கூட சுமந்து கொண்டிருக்கும் குழவியின் முகத்தையும் ஸ்பரிசத்தையுமல்லவா நினைவிறுத்தும். வழக்கமான எண்ணிக்கையில் ஒலிக்கும் பிரஷர் குக்கரின் ஒலி தீர்மானிக்கும் அன்றைய உணவின் தரத்தை. வெளியே ஒலிக்கும் குப்பை வண்டிக்காரனின் மணிச்சத்தம் நிர்ணயிக்கும் காலை நேர வேலையின் கடைசி இழையை, எல்லாவற்றையுன் தாண்டி கூடவே பின்காதில் இறைந்து கொண்டே வரும் சக பயணியின் வண்டிச்சத்தம் உருவகிக்கும் தலைமேல் அமர்ந்து கொள்ள காத்திருக்கும் மேலதிகாரியின் முகத்தையோ அல்லது கோபமான வாடிக்கையாளரின் முகத்தையோ.

ஒலிகளை அதன் உருக்களோடே உணர்ந்து கொண்டு கழிந்து கொண்டிருக்கும் வாழ்க்கை சக்கரத்தின் பல் எங்கே இடறிற்று என்று புரியவில்லை. இசையை உருவகங்களாய் உள்வாங்கிய நாட்கள் மெல்லத்தொலைந்து போகத்துவங்கியது சில காலங்களுக்கு முன்புதான். அன்பும் காதலும் பக்தியும் தெறிக்க தாளக்கட்டுக்களோடு இணைந்த ஓ.எஸ் அருணின் பாடல்கள் என்னை உருவகங்கள் இல்லாமலே ஈர்க்கத்துவங்கியது.

"ஷாந்தி நஹி பினா க்ருஷ்ண தருஷனுகோ ஷாந்தி நஹி என்றாலும்"

"ஆசை முகம் மறந்து போச்சே அதை யாரிடம் சொல்வேனடி தோழி"என்று கேட்டாலும் உள்ளே கனகுதூகலமாய் பொங்கிய உவகை வடிக்க உருவகங்களே இல்லாது போயிற்று.


பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் தொட்டு தொட்டு பேஷ வரான்... கண்ணண் தொட்டு தொட்டு பேஷ வரான்.. என்று பாடும்போதும் சரி,
எங்கு நான் செல்வனோ நீ தள்ளினால் என்று கேட்கும் போதோ ஒலிநாடாக்களின் இழைகளில் கால்களை நுழைத்துக்கொண்டு எடுக்க மனதின்று சிரித்திருக்கும் குழந்தையின் ம்ன் நிலையே மேலோங்கியது.

"எப்படி மனம் துணிந்தாரோ சுவாமி, வனம் போய் வருகிறேன் என்றார்"....என்ற அருணாச்சல கவிராயரின் வார்த்தைகளுக்கும் வடிவங்களற்று போயிற்று அந்த ஆழமான குரலின் மாயத்தால்.

வார்த்தைகளும், தாளக்கட்டுக்களும், இசையின் கோர்வைகளும் தளும்பி நிற்கும் நிலைக்கு வடிவங்கள் தேவையற்றதானது. அங்கு மொழியும் வார்த்தைகளும் தன் நிலைமறந்து நமையும் மறக்கச்செய்யிகின்ற இந்த மந்திர வித்தைகளில் கட்டுண்டு கிடப்பதிலும் ஓர் உன்னத சுகம் உள்ளது தானே.

ஏதோ ஓர் போதை நம்முள் எப்போதும் ஊறிக்கொண்டிருக்கும் நாமெனும் அகந்தையை தொலைந்து போகச்செய்ய.....அவை புத்த்கங்கள்... இசை... இன்னும் என்னவெல்லாம்..???