Tuesday, January 27, 2009

ஆ..மாதவன் கதைகள் - ஒரு பகிர்தல்

ஒரு வாசகனாய்/வாசகியாய் மட்டுமே இருப்பதென்பது மிகப்பெரும் ஆசுவாசமாய் இருந்திருக்குமோ என்று இப்பொழுதெல்லாம் தோன்ற ஆரம்பித்து விட்டது. ஒரு பத்தியோ, சிறுகதையோ, புத்தகமோ வாசிக்க ஆரம்பிக்கும் பொழுதே அதைக்குறித்தான எழுத்துக்கள் என் மனதில் பதிய ஆரம்பித்தது என் எழுத்துப்படலம் தொடங்கிய பிறகு தான். அதுவரை புத்தகமும், எழுத்தும், சிலசமயம் எழுத்தாளரும் மனதுக்கு மிக அருகில் நெருங்கி நிற்பது மட்டுமே நடந்து வந்தது.

ஆனாலும் பகிர்ந்து கொள்ளும் இப்பகிர்வுகள் ஒரு சிலருக்கு சில சமயம் நல்ல அறிமுகமாகும் விசித்திரங்களும் நடந்து போவதுண்டு. நானும் எத்தனையோ புத்தகங்களை, எழுத்துக்களை, எழுத்தாளர்களை மற்றவர்களின் வாசிப்பானுபவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து அது குறித்த சந்தோஷமோ, துக்கமோ அடைவதுண்டு. அதுபோன்றதொரு பகிர்தலுக்ககாவே ஆ..மாதவனின் எழுத்துலகைக்குறித்து இங்கு நான் பகிர்ந்து கொள்ள விரும்புவதும்.

மிகப்பெரும் உள்ளுணர்வுச்சிக்கலையோ, இல்லது சமூகப்பிரச்சனைகளையோ கருவாகக்கொண்டதில்லைதான் ஆ.மாதவனின் கதைகள். ஆனால் நம் போன்ற சாதரணர்களின் வாழ்வை, சக மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை எந்த முகப்பூச்சுக்களுமின்றி தோலுரித்துக்காட்டுகிறது. இலக்கியம் என்று இசைந்து எழுத முற்படாத எதார்த்தங்களே இவரது கதா பாத்திரங்கள். படைப்புலகுக்கும் வாழ்விற்கும் உண்டான இட்டு நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கிச்செல்வதல்ல இவரது எழுத்துக்கள். யதார்த்தத்தில், மனித மனத்தின் அடி ஆழத்தில் இருண்டுகிடக்கும், வக்கிரத்தை, துரோகத்தை, ஏமாற்றத்தை இயலாமயை எழுதிச்செல்கிறது இவரது எழுத்துக்கள்.

அவரது படைப்புலகில் ஆறாம் அறிவுகொண்ட இரண்டு கால் இரண்டு கை மனிதர்கள் மட்டுமல்ல ஒரு கதைக்கான கருவை, களத்தை நிர்ணயிப்பது, வெறும் சம்பாஷனைகளோ அல்லது நிகழ்சிகளோ மட்டுமல்லாது, அதை மீறிய கதைக்களமும் அதைக்குறித்தான வர்ணணைகளும் பாதி கதைக்கான கருவை நம்முள் இட்டு நிரப்பிவிடுகிறது.

திருவனந்தபுரம் கடைத்தெருவும், பத்மனாபபுரம் கோட்டையையும் காண்பவர்கள் ஆ.மாதவனின் கதைகளை படித்தவர்களானால் அவரை நினைவுகூறாது அவ்விடத்தை விட்டு அகலுவது கடினமாயிருக்கும்.

அவரது கதை மாந்தர்கள் கற்பிதப்படுத்தப்பட்ட ஒழுக்கத்தை திணிப்பதை அடியோடு களைந்தவராகவே காணப்படுகிறார்கள். பாம்பு உறங்கும் பாற்கடலில் வரும் வாசுப்போற்றியாகட்டும், அமுத கலசத்துடன் வந்து நிற்கும் மோகினி என வர்ணிக்கப்படும் கார்த்தியாயினியாகட்டும் அவர்களின் சுய சிந்தனை தெளிவுகளோடே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

திருட்டு கதையில் வரும் திருடனின் சமர்த்காரமும், நாயனம் கதா மாந்தர்கள் சாவு வீட்டிலும் சகித்துக்கொள்ள முடியாத இசைக்கொலையை எதிர்ப்பதிலாகட்டும் வாய்விட்டு சிரிக்க வைக்கும் இலகு மனநிலையை தரத்தவறுவதில்லை.

காமினிமூலம் கதையில் வரும் முஸ்தபாவை கண்முன் கொண்டு நிறுத்தும் ஆசிரியர் அவர் வாழ்வை முடிப்பதிலும் கூட அதிக சோடனைகளற்று முடித்துப்போவது ஒவ்வொரு ஆழ்மன உறக்கங்களில் ஒளிந்திருக்கும் காழ்ப்புணர்ச்சியின் திட்டமிடப்படாத வடிகால்களை நமக்கு உணர்த்திச்செல்கிறது.

கோமதியிலும், இறைச்சியிலும், ஐந்தறிவான விலங்கினத்திற்கும், ஆறாம் அறிவான மனத இனத்திற்கும் மிகப்பெரும் வேற்றுமைகள் ஏதுமில்லை என்பதை சிறிதே பூடகமாகச்சொல்லியிருப்பதும் நம்மை மீண்டும் யோசிக்கவைக்கிறது. அதுவும் கசாப்புக்காரரான நாயர் அன்னிய துக்கம் அறியாத எல்லாவனும் பாவிகதான்.. வெட்டுவேன்.. எல்லாத்தையும் வெட்டுவேன்…” என்று புலம்பும்போது நம்முள்ளும் மண்டிக்கிடக்கும் துக்கத்தை வஞ்சத்தை இனங்காட்டுகிறது.

பிரித்தறியப்பட்டுள்ள இவ்வுணர்வுகள் ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் போலில்லை, இன்னும் பகிர்ந்துக்கொள்ளப்படாத ஓருலகத்தை கோடிட்டு காட்டத்தலைப்படும் ஒரு சிறு வெளிப்பாடுதான். ஆர்வமுள்ளவர்களுக்கான ஒரு சிறு துரும்பு. மேலும் அனுபவத்தை அவரவர்கள் வாசிப்பு மட்டுமே முழுமை செய்யமுடியும் என்பது தானே உண்மை.

14 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவர் ஆ மாதவன். சாலை பஜாரை அவர் விவரிக்கும் பாங்கு...

அவருடைய முழுக் கதைகள் அடங்கிய தொகுப்பு வந்திருப்பதாய் நினைவு...

நட்புடன் ஜமால் said...

\\ஆனாலும் பகிர்ந்து கொள்ளும் இப்பகிர்வுகள் ஒரு சிலருக்கு சில சமயம் நல்ல அறிமுகமாகும் விசித்திரங்களும் நடந்து போவதுண்டு\\

உண்மையே ...

நட்புடன் ஜமால் said...

க மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை எந்த முகப்பூச்சுக்களுமின்றி தோலுரித்துக்காட்டுகிறது\\

இதுவரை படித்ததில்லை.

படிக்கிறேன் விரைவில்

Unknown said...

கிருத்திகா,

நான் இவருடைய “நாயனம்” கதைப் படித்து சிலாகித்திருக்கிறேன்.

narsim said...

Good useful post.. nandri..

பாச மலர் / Paasa Malar said...

//ஆனாலும் பகிர்ந்து கொள்ளும் இப்பகிர்வுகள் ஒரு சிலருக்கு சில சமயம் நல்ல அறிமுகமாகும் விசித்திரங்களும் நடந்து போவதுண்டு//

மிகவும் உண்மை..நானே அதற்கு ஒர் உதாரணம்..உங்கள் பதிவுகள் மூலம் நான் பெற்ற அறிமுகங்கள் அதிகம்..படிக்க வேண்டிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது..

TamilBloggersUnit said...

தமிழ் பிலாக்கர்ஸ் குழுவில் தங்களை இணைத்துக்கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்!

butterfly Surya said...

நல்ல அறிமுகத்திற்கு நன்றி.

இதுவரை இவரை படித்ததில்லை..

வாழ்த்துக்கள்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி சுந்தர். ஆம் சாலை பஜாரை அவர் வர்ணித்திருக்கும் பாங்கு அலாதிதான். கொஞ்சம் தொடர்ந்து படித்தால் திருவனந்தபுரத்தை அலாதியாய் காதலிக்க ஆரம்பித்துவிடுவோம் போலிருக்கிறது :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆம் ஜமால் அவசியம் படிக்க வேண்டிய தெரிவுகளில் இது முக்கியமானதுதான்.

நன்றி நர்சிம்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி ரவிஷங்கர், நாயனம் படித்து முடித்ததும் வாய்விட்டு வெகு நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன். வீட்டில் உள்ளவர்கள் என்ன என்ன என்று கேட்கும் அளவிற்கு பிறகு எல்லோர்க்குமாய் வாசித்து காட்டவேண்டிர்யிருந்தது :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

மலர் உங்களோட பின்னூட்டங்கள் உண்மையில் எனக்கு மிகவும் உற்சாகம் அளிக்கிறது. சில சமயம் புத்தக பார்வை எழுதவேண்டுமா என நினைக்கும் சமயங்களில் உங்கள் ஞாபகம் வந்து எழுத வைத்துவிடும் :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி வண்ணத்துப்பூச்சியார். என்ன அழகான பெயர்...:) அவசியம் படியுங்கள்.

butterfly Surya said...

நன்றி கிருத்திகா. கண்டிப்பாக படிக்கிறேன்.

உலக சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும்.

நிறை / குறை சொல்லவும்

வாழ்த்துக்கள்..