Thursday, May 15, 2008

அப்பா......


அப்பா என் ஞாபக அடுக்குகளில் என்றுமே படர்ந்திருக்கும் ஓர் இனிமயான உறவு। சூரியனின் கதிர்கள் யாருடைய உத்தரவும் இல்லாமல் நம் பூட்டியிருக்கும் புத்தக அறைக்குள் நுழைவதுபோல் இந்த மூன்றெழுத்து வார்த்தை என்னுள் எப்போதும் திறந்து விடும் பல ஞாபகக்கதவுகளை என் உணர்வுகளின் அனுமதியின்று.

இரண்டும் பெண்களென்ற போது பெண்ணென்ற பேதமற்று என்னை எனக்கான எந்த ஒரு சுதந்திரத்திலும் இருந்து விலக்காது ஊக்குவித்தவர். என்னை பொது நூலகத்திற்கு கூட்டிச்செல்வார் அவர் படிப்பதோ தினசரிகள் நானோ அங்குள்ள சிறுவர்/பெரியவர் புத்தகங்களை முழுவதும் மேய்ந்து வரும் வரை மிகப்பொறுமயாக காத்திருப்பார். ஒரு நாள் கூட காத்திருத்தலுக்காக அலுத்துக்கொண்டதே இல்லை. என் சிறிய கிராமத்தில் 8 வயதுப்பெண் சைக்கிள் ஓட்டியதென்றால் அது நானாகத்தான் இருக்கமுடியும். அதுவும் அப்பாவின் சைக்கிளில் குரங்குப்பெடல் கவலையே படாமல் கடைத்தெரு வரைக்கும் சுற்றத்தருவார். (இது நினைவுக்கு வந்த நாளிலிருந்து தான் நான் என் மகனை நம்பி என் ஹோண்டா ஆக்டிவாவை குடுக்க ஆரம்பித்தேன்). பால்யம் தாண்டி வளர்ந்த பெண்ணாகிய போது கூட நானும் அப்பாவும் ஒன்றாகவே கடைத்தெருவில் சுற்றுவோம். மாரியப்பன் கடை அல்வாவும் அதன் தித்திப்பை சரி பண்ண கொஞ்சமே கொஞ்சம் காரபூந்தியோ மிக்சரோ கடை வாசலிலேயே சுடச்சுட அப்பாவும் பெண்ணுமாய் நின்றும் சாப்பிட்டவர்கள் நாங்களாய்த்தானிருப்போம்.

என் அம்மாவின் எதிர்ப்பையும் மீறி “நீ தைரியமா அடிச்சிட்டு வா நான் பார்த்துக்கறேன் எவன் ஒன்னைக்குத்தம் சொல்றான்னு” என்று எனக்கு பிரச்சனையான நேரங்களில் அறிவுரை?? கூறுவார். கல்யாணம் வரை எந்த ஒரு விஷயத்திலும் எனக்கும் அவர்கும் முரண் வந்ததே இல்லை, நானே தேர்ந்தெடுத்த வரனில் அவர்க்கு சிறிதே அதிர்ச்சி இருந்தாலும் பிறகு தன்னை சமாதனம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகும் அவர் உடல்நிலை காரணமாக அவரை தனித்து விடாதது மட்டுமே நான் அவருக்கென செய்ததாயிருக்கும். சகோதரிகளுக்குள் எந்த வேறு பாட்டையும் காண்பித்ததில்லை என்றாலும் நான் எப்போதுமே அப்பா செல்லம். அவர் இருந்த வரை நான் குழந்தையாகவே இருந்து வந்தேன் என்று சொன்னால் அது வெறும் வாய்வார்த்தை இல்லை. என் வீட்டுக்கதவின் சாவி எது? என் பையனின் சைக்கிள் பூட்டும் பூட்டு எது? முன் வாசல் கேட்டின் சாவி எது? இப்படி என் வீட்டின் பாதுகாப்பிற்கான எந்த முஸ்தீபுகளும் அவர் இருந்த வரை நான் அறியாதது.

இன்று நான் என் புதிய வீட்டிற்கு சென்றிருக்கும் வேளையில் எத்தனையோ விஷயங்களை அப்பா மட்டும் இருந்திருந்தால் என்று எண்ணுவதை தவிர்க்க முடியாத அளவிற்கு அவர் தனக்கான தடயங்களை எங்களோடே விட்டுச்சென்றிருக்கிறார்.

அப்பா .. இவர் பற்றி எழுத என்னில் ஆயிரம் கதைகளுண்டு. அப்பாவின் நினைவுகளை மேலதிகமாய் கிளர்த்தெழுப்பும் இன்னுமொரு நாள் வரும்வரை காத்திருக்கட்டும் அந்தக்கதைகள்

Monday, May 12, 2008

சேதி என்ன....


கனவுகள் எப்போதும் ஓர் அதிசய உலகத்தின் திறவுகோல்கள்। சில விழித்திருக்கும் நிகழ்வுகளோடு தொடர்புடையதாய் இருந்தாலும், பல நேரங்களில் உள் மன விழைதல்களின் வெளிப்பாடாகவோ அல்லது இனம் காண முடியாத நிகழ்வுகளின் தொடராகவோ வருவதுண்டு। நானின்றொரு கனவு கண்டேன் எனத்தொடங்கினால் கேட்கும் பலருக்கு இளநகை, குறுநகை, கொட்டாவி முதலியன வருவதுண்டு ஆனால் கனவுகள் பெரும்பாலும் மிக அந்தரங்கமாக ஒரு செய்தியை சொல்வதுபோல் தோன்றும்.

மிகவும் நெருக்கமான அந்த செய்திகள் நம் மனதிற்கு பலசமயம் புரியும் படியும் சிலசமயம் ஏதும் புரியாத சிக்கலாகவும் இருப்பதுண்டு. எதையும் அறிவியலாய் நோக்கும் அறிஞர்கள் இதெற்கென ஒரு தனி விளக்கங்களையும், பிராய்ட், ஆல்பிரட் ஆட்லர் போன்றவர்களையும் துணைக்கழைத்தாலும் தனிப்பட்ட மனிதர்களின் கனவுகள் அவரவர்க்கு மிகவும் நெருக்கமானவை என்பதை மறுப்பதிற்கில்லை.

எத்தனையோ நிகழ்வுகளை காட்டிச்செல்லும் கனவுகளோடு மிகச்சந்தோஷமாய் மரணிப்பது போன்று, அதுவும் மரணிக்கும் நேரத்தை குறித்து வைத்துக்கொண்டு (மாலை 5.29 ) ஒரு சங்கீதக்கச்சேரி ஆரம்பிக்கும் முன் இருக்கும் குதூகலமான மனநிலையோடு மரணத்தை எதிர்கொண்ட தருணங்களை காட்டிச்சென்றது ஓர் கனவு. அந்த அனுபவத்தை இப்போதும் மீள்நுகர்வு செய்ய முடிகிறதென்பது பெறும் அதிசயமாக உள்ளது. கனவின் எல்லைக்கோட்டிற்கு சென்று மீண்ட பின் விழித்துப்பார்க்கும் கண்களுக்கு பக்கத்திலிருந்தயில் மணி 2.29 என்றிருந்தது. செய்தி என்னவென்பது புரியாமலே அடுத்த நாளுக்கான ஆயத்தங்கள் தொடங்கியது….

Tuesday, April 22, 2008

இரண்டல்லாதது.


பொய்-வாய்மையோடும்
இன்ப-துன்பத்தோடும்
சுக-துக்கத்தோடும்
பகலிரவோடும்
சந்திர-சூரியனோடும்
ஆண்-பெண்ணோடும்
இரண்டோடே வாழும்
த்வைதமான வாழ்க்கையில்
இரண்டல்லாத பிரம்மம் தேடி
அத்வைதம் காணும் வழி
உண்மையோடு உறவாடும்
உன்னதமான வாழ்வென்ற

பால பாடம் கற்றுக்கொள்ள
ஆயுளில் பாதியானதே….

Friday, April 18, 2008

கைகூடா தியானம்




குரங்கை நினையாது
மருந்தைக் குடியென்றார்
குப்பி திறக்குந்தோரும்
குரங்கின் நினைவு

உன்னில் வெளிகாண
உள்மூச்சு பாரென்றார்
அடிக்கடி
மறந்து போனதென் மனது

விதிகள் ஒன்றல்ல போலும்
மனதிற்கு

Wednesday, April 9, 2008

காதல், கல்யாணம், சடங்கு ஒரு பிரதிபலிப்பு

திடீர்னு தான் எங்க வீட்டில அப்படி ஒரு எண்ணம் வந்தது. அதிலும் பெரியவன் தான் ஆரம்பிச்சான், அம்மா உங்களுக்கு கல்யாணம் ஆகி 25 வருஷம் முடியப்போகுது நாங்கெல்லாம் உங்க கல்யாணத்தைப் பார்க்கவே இல்லை!!! நீங்களும் சரியா ஒரு வீடியோவோ போட்டாவோ கூட எடுத்து வைக்கல (ஏன்னா எங்களோடது காதல் கல்யாணம் பெத்தவங்க சம்மதத்தோடத்தான் ஆனாலும் எடுத்துச்செய்ய ஆள் இல்ல நாங்களே முடிவு பண்ணி ரொம்ப குறைஞ்ச பட்ஜெட்ல பண்ணிக்கிட்ட கல்யாணம். நன்பர்கள் கை காமரா வைச்சி எடுத்த புகைப்படங்கள் தான்.) அதனலா திரும்பவும் உங்க கல்யாணத்தை ரொம்ப விமரிசையா நடத்தலாம் எங்களுக்கு ரொம்ப ஆசையா இருக்குன்னு ஆரம்பிச்சான்.

எனக்கும் ரொம்ப ஆசைதான் இப்பெல்லாம் அடிக்கடி தோணரதுதான் நம்ம கொஞ்சம் நல்லா கல்யாண ஏற்பாடு பண்ணியிருக்கலாமோன்னு அதனாலா அரை மனசா சம்மதிக்கரமாதிரி ரொம்ப சந்தோஷமா முழு மனசா சம்மதிச்சேன். அப்ப வந்தது வினை.

என் பையனோட வருங்கால மனைவி (ஒண்ணா படிச்சாங்க இப்ப தனித்தனியா வேலை பார்க்கறாங்க) ஆண்ட்டி அப்பெல்லாம் என்ன ஆண்ட்டி நார்மல் பொரஸீஜர், முதல்ல எல்லாரும் வந்து வரிசையா பொண்ணு பார்த்து பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுட்டு அப்புறம் தானே கல்யாணம். என்ன ப்ராசஸ் இது ஆண்டி நல்ல வேள நீங்க தப்பிச்சீங்க ஐ ஜஸ்ட் கான் இமாஜின் என்றபடி சுற்றிவந்தாள்.

என்னோட அருமை பொண்ணு வந்து அம்மா நாந்தான் உன்னோட மாமியார் (என் மாமியார் புண்னியவதி ரொம்ப சீக்கிரமே போய் சேர்ந்துட்டாங்க) அதனால அடக்க ஒடுக்கமா என்கிட்ட நடந்துக்கணும் சரியா நான் மாப்பிள்ளை வீட்டுக்காரி என்று கட்சி பிரிக்கத்தொடங்கினாள். என் மாப்பிள்ளை ஆண்ட்டி மே ஆப்கே சைட் ஹூம் என்றான் (எங்க வீடு ஒரு பாரதவிலாஸ் எல்லாம் காதல் கல்யாணம் தான்). என் சின்னப்பையன் இப்பத்தான் இஞ்சினியரிங் படிச்சிட்டிருக்கான் (இன்னும் ஒருத்தரையும் அதிகார பூர்வமா அறிவிக்கல அதுனால அவனோடு கூட யாரும் இல்ல) அவன் என் பக்கம்னும் பெரியவன் அவங்கப்பா பக்கம்னும் அவனோட காதலி என் பக்கம்னும் அவங்களே ரெண்டு கட்சியா பிரிஞ்சிகிட்டாங்க.

நான் என் பங்குக்கு சொஜ்ஜி, பஜ்ஜி நல்ல டிகிரி காப்பி (உபயம் காபிடே & எலக்டிரிக் காபி பில்டர்) எல்லாம் தயார் செய்து வைச்சாச்சு, எங்க சீனு அதாங்க என் வீட்டுக்காரரு வழக்கமா பண்ற எந்த எடக்கு முடக்கும் பண்ணாம அமைதியா எல்லாத்தையும் இரசிச்சிட்டு இருந்தாரு.

ஜமக்காளம் எல்லாம் விரிச்சி எல்லா ஏற்பாடும் நடந்துகிட்டு இருந்தது. நான் சின்னப்பொண்ணு மாதிரி ஏம்பா நீ மொத மொதல்ல திருவனந்தபுரத்துல இருந்து வாங்கிட்டு வந்தியே அந்த இராமர் கலர் பச்சை புடவை கட்டிக்கட்டுமா என்றபடி நிசம்மாவே பொண்ணு பாக்கப்போர மனநிலையில இருந்தேன். எல்லோரும் உட்கார்ந்தாச்சு, என் பொண்ணு ரொம்ப தோரணையா "ம்ம் நல்ல நேரம் தாண்டரதுக்குள்ள பொண்ண அழைச்சுண்டு வாங்கோ என்று சொல்லவும்" என் நாட்டுப்பொண் (அதாங்க வருங்கால) என்னை ரொம்ப மெதுவா கூட்டி வந்து உட்கார வைச்சா, என் பொண்ணு "எங்காத்துப்பிள்ளைக்கு பாட்டுன்னா உசிர், ரொம்ப நன்னா பாடுவான், உங்காத்துப் பொண் பாட்டெல்லாம் பாடுவோல்லியோ" என்றாள். உடனே என் சின்னப்பையன் "ம்ம் பாடுவோ சிட்சையெல்லாம் சொல்லிக்கல கேள்வி ஞானம்தான் உங்காத்துப்பிள்ளை ரொம்ப நல்லா பாடுவாங்கரளே ஒரு பாட்டு பாடச்சொல்லுங்கோளேன் எங்காத்துப்பொண்ணும் பாடுவோ என்றான்". உடனே என் வீட்டுக்காரர்.
மெதுவா பாட ஆரம்பிச்சாரர்
அழகே அழகு தேவதை ஆயிரம் காவியம் … (இராஜபார்வைல கமல் பாடுவாரே அந்தப்பாட்டுத்தான்)
அவ்வளவுதான் கூட்டம் களை கட்ட ஆரம்பிச்சிடுத்து. மெல்ல நேயர் விருப்பம் போல் ஒரோர் பாட்டா கேக்க ஆரம்பிச்சி கடைசில

“பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று…….
… ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன காதல் நிறம் மாறுமா…..
(வெற்றி விழான்னு நினைக்கிறேன். எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு)ன்னு முடிச்சார். எனக்கு ஒரே சந்தோஷமா போயிடுத்து.

உடனே என் பொண்ணு அம்மாடி நீ ஏதாவது சுலோகமாவது சொல்லுங்கவும் எனக்கு ரோசம் வந்துடுத்து எனக்கு நன்னாத்தெரிஞ்ச (ஒரே) பாட்டை எடுத்து விட்டேன்.

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன் (கண்ணன்)
எங்கிருந்தோ வந்தான் …….

சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்னக் குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமை காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக்காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன்
எங்கிருந்தோ வந்தான்…….

(என் சீனு பெரியவனோடும் பெண்ணோடும் சின்னவனோடும் இரவுகளில் தாலாட்டு பாடியது, நீ தூங்கு கண்ணா காலேல 4.30 பிளட்டப்பிடிச்சாத்தான் செமினார் அட்டண்ட் பண்ண முடியும் நான் பாத்துக்கறேன்….. இல்ல எனக்கு தூக்கம் அதிகம் வராது அவன் படிச்சு முடிக்கர வரைக்கும் நான் உக்காந்துக்கறேன் டீ வேணா போட்டுத்தரேன் நாளைக்கு உனக்கு நிறைய வேலை இருக்கு நான் வேர பிசினஸ் விஷயமா ஊருக்குப்போரேன் தனியே திண்டாடுவே நீ ரெஸ்ட் எடு… போன்ற பிண்ணணிக்காட்சிகளை கற்பனை செய்து கொள்ளவும்.)

பற்று மிகுந்து வரப்பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மை எல்லாம் பேசி முடியாது
நன்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்

(நிறைவான குடும்பம், வீடு, காரு, மனசு நெரஞ்ச சந்தோஷம், -அவர்கள் படத்துல காற்றுக்கென்ன வேலின்னு பாடிண்டு சுஜாதா ரொம்ப வேகமா ட்ராலி போரமாத்ரி ஒரு ஷாட் … அப்புறம். வேலைல ரொம்ப டென்ஷன் ஜாஸ்தியாகிப்போனதும் கண்ணா ரொம்ப முடியலன்னா வேலைய விட்டுட்டு சொந்தமா ஏதாவது தொழில் பண்ணே என்று சொந்த பிசினஸ் தொடங்க செய்த ஊக்கம் இதெல்லாம் பிண்ணனணிக்காட்சிதான்)

இங்கிவனை யான் பெறவே என்னதவம் செய்து விட்டேன்…..

முடிக்கும் போதுதான் எல்லாரும் கவனிச்சோம் நான் அவர் மேல சாய்ஞ்சிட்டு இருக்கேன். என் பொண்ணு மாப்பிள்ளை கையையும் என் பெரிய பையன் அவன் காதலியையும் பார்த்துட்டு இருக்கான். என் சின்னப்பயன் என் மடில படுத்துட்டு இருக்கான். அந்த இடமே ரொம்ப சிவாஜியா (அதாங்க நடிகர் திலகம் சிவாஜி) பாத்திரத்தோட ஒன்றியிருந்தது. ஏதோ நான் ரொம்ப நல்லாத்தான் பாடியிருப்பேன் போல….

சட்டுனு எல்லார் கிட்டயும் அன்பு ததும்பி வழிஞ்சிட்டு இருந்தது. என் நாட்டுப்பொண் மெல்ல எங்கிட்ட வந்து ஐ லவ் யூ ஆண்ட்டி என்று கிஸ்ஸிட்டுப்போனாள். பின் மெதுவா ஆன்ட்டி எண்ட அச்சன் அம்மயிடத்து பரயாம் நிங்களும் எங்கட அகத்திலோக்கி வரணும் என்ன பெண்ணு காணானு. இது ஒரு தனிச்ச எக்ஸ்பீரியன்ஸா அத ஞான் விடாம் பாடில்லா.. கிருஷ்ணா நீ ஆண்ட்டியிடத்துப் பரயடா என்றபடி என் மகனின் தோளில் தொங்கினாள். அதில் ஒரு புரிதல் இந்த வீட்டோடுடனான இணக்கம் இருந்தது. எனக்கு நாம் ஏதோ கற்றுக்கொடுத்திருக்கிறோம் என்ற மன நிறவு வந்தது.

ஆனால் என் வீட்டுக்காரரோ.. அடப்போங்கடா ஒரு விஷயத்தையும் ஒழுங்கா செய்யமாட்டேங்க நான் இப்ப வாச்சும் போய் லெட்டர் போடரோம்னு சொல்லலாம்னு பார்த்தா இப்படி சொதப்பிட்டீங்களே என்றபடி கண் சிமிட்டினார்….

Friday, March 28, 2008

கைகளில் சுவாசித்த புத்தகம் – குள்ளச்சித்தன் சரித்திரம்,

ஒரு நாள் பேச்சுவாக்கில் அதான் ஜீடாக் வாக்கில் பேசிக்கொண்டு இருக்கும் போது உரையாடல் மனித மனத்தில் ஆழ் மனதின் நம்பிக்கைகள் பற்றி திரும்பிய நேரத்தில் ஒரு நன்பரால் பரிந்துரைக்கப்பட்டது இந்தப் புத்தகம். எதனாலோ அன்றே அந்தப்புத்தகத்தை வாங்கக்கூடிய சந்தர்ப்பமும் அமைந்து விட்டது. (வழக்கத்தில் பல நாட்கள் நினைத்து கை கூடி வராமல் என் கைப்பையில் பதுங்கியிருக்கும் சிறு குறிப்பு நோட்டுக்குள் புத்தகங்களின் பெயர்கள் சில சமயம் மாதக்கணக்கில் குடியிருக்கும்). ஆனால் இந்தப் புத்தகத்தை வாங்கும் வேளையில் எதிர்பாராத விதமாக கோணங்கியின் புத்தகம் ஒன்றையும் வாங்க முடிந்ததால் முதல் ஈர்ப்பை கோணங்கியின் புத்தகமே இழுத்துக்கொண்டது. குள்ளச்சித்தன் சரித்திரம் எனும் இந்தப்புத்தகம் என் புத்தக அலமாரிக்குள் செல்லாது எப்போதும் என்னைப்பார்த்த படி என் கவனத்தை ஈர்த்தபடி என் மேசை முகட்டில் குடியிருந்தது. படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை இருப்பில் வைத்து விட்டு கோணங்கியை வாசிக்கத்துவங்கினேன். பின் இயல்பாக இந்தப்புதிய புத்தகம் என்னை ஆகர்ஷிக்கத்துவங்கியது.

புத்தகத்தின் தலைப்பு குள்ளச்சித்தன் சரித்திரம் என்பதை கேட்டதில்/கண்டதில் இருந்து எனக்குள் ஒரு சிறு உதைப்பு ஒருவேளை இந்திரா பார்த்தசாரதி வகையை சார்ந்து இருக்குமோ என்று ஆனாலும் பரிந்துரைத்திருத்த நன்பரின் வாசிப்பு அலைவரிசை பல நேரங்களில் என்னோடு ஒத்துப்போயிருப்பதால் சிறிதே இருந்த தயக்கத்தை ஒதுக்கி விட்டு வாசிக்கத்துவங்கினேன். என்னை முழுதுமாய் தன்னுள் மூழ்கடித்துக் கொண்டது அப்புத்தகம்.

புனைவிற்குள் புனைவு என்ற வகையில் எழுதப்பட்டிருக்கும் அந்த நாவலின் கதை மாந்தர்கள் துவக்கத்தில் ஒரே சமதளத்தில் பயணிக்கத் துவங்கி பின் இரு பிரிவாகப்பிரிந்து ஒரு பிரிவு பாத்திரங்கள் ஒரு புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருப்பதாகவும், மறு பிரிவு அந்த புத்தகத்தை வாசிக்கும் கதாபாத்திரமாகவும் அவரைச்சுற்றி வாழும் கதை மாந்தர்களாகவும் அமைந்திருக்கும் பாங்கு வியக்க வைக்கிறது. அந்தப்புத்தகமும் இரண்டாம் பிரிவு கதாபாத்திரங்களில் ஒன்றாகி விடுகிறது.

ஒரு கட்டத்தில் நாமும் பழனியப்பனோடு அந்தப்புத்தகத்தை வாசிக்கும் வாசகனாக மாறத்துவங்கிவிடுகிறோம். மிக நேர்த்தியான கட்டமைப்போடு கூடிய ஒரு கதைப்பின்னல்.

முத்துசாமியின் (முத்துஸ்வாமி இல்லை என்று அவராலேயே மறுக்கப்படுகிறது புத்தகத்தின் ஆரம்பத்தில்) பார்வைகளும், அனுபவங்களும் எந்த வித மிகைப்படுத்துதல்களும் இல்லாமல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவரோடு நட்புறவாடும் ஹாலாஸ்யம் மிக இயல்பாக அதை எதிர் கொள்ளும் பாங்கும் அதைத்தொடர்ந்த முயற்சிகளும் ஒரு நல்ல பார்வையாளனுக்கான விதிமுறகளைக் கற்றுத்தருகிறது.

நம்மை செட்டிநாட்டு செம்மண் தெருக்கெளிலும் விளாத்திகுளத்தின் உப்பேறிய காற்றுக்களிலும், மதுரையின் ரத வீதிகளிலும், திருவண்ணாமலை கிரிவலப்பாதைகளிலும், வைத்தீஸ்வரன் கோயில் குளக்கரையிலும் மட்டுமல்லாது சந்தடி மிகுந்த காசி நகர் தெருக்களிலும், யமுனை நதிக்கரைகளிலும் வெகு அநாயசமாக எடுத்துச்செல்லும் திறமை அந்த எழுத்துக்களுக்கு இருந்தது என்றே சொல்ல வேண்டும்..

கதைக்கருவின் சாத்தியக்கூறுகளை தனிமனித நம்பிக்கைகளுக்கு விடுத்துவிட்டாலும் நாவல் படைப்பின் கட்டமைப்பினால் அந்தப் புத்தகம் நம் கைகளில் சுவாசிக்கத்தொடங்குகிறது என்று சொன்னால் மிகையாகாது.

புத்தகத்தின் முடிவில் பாத்திரப்படைப்புக்களிலும், நிகழ்ச்சிகோர்ப்புக்களிலும் உள்ள சிறிதளவு ஒற்றுமை எஸ்.ராவின் யாமத்தை நினைவூட்டத்தவறுவதில்லை. ஆனால் இந்த புத்தகம் 2002ல் யாமத்திற்கு முன்னரே வெளிவந்துள்ள காரணத்தினால் யாமம் ஒரு எதேச்சையான ஒற்றுமையாகவோ அல்லது எப்பொழுதுமே நல்ல புத்தகங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை இந்த புத்தகமும் ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கருதத் தோன்றுகிறது.

ஆசிரியர் – யுவன் சந்தரசேகர் – தமிழினி பதிப்பகம் – 2002 வெளியீடு.