
உறவுகளின் தொடர்ச்சியாய் எவரேனும் உரையாடலைத்தொடரும் வேளையில் அவர்களின் நாவினின்று வரும் மொழியில் வார்த்தைகளே எஞ்சி நிற்கின்றன. வாக்கியங்களின் பின்னிருக்கும் செய்திகளைக்காட்டிலும் அதினுள்ளிருக்கும் வார்த்தைகளே கையிலிருந்து உருண்டு செல்லும் கண்ணாடிக்குண்டுகளென உள்ளெங்கும் வழிந்து உருண்டு செல்கிறது. முதல் கேள்விக்கான பதில்களை அவர்களின் மூன்றாவது கேள்வியின் போது மட்டுமே கூட்டுச்சேர்க்க முடிகிறது. அப்போதும் அந்த வார்த்தைகளின் வசீகரங்களில் அமிழ்ந்து தொலைந்து மீண்டு வரும் வேளையில் உரையாடலின் சங்கிலி அறுந்து போயிருக்கும். எதிராளியின் பார்வையில் நானொரு ஊமையாகவோ இல்லை கவனமற்றவளாகவோ இல்லை செவியற்றவளாக உருக்கொண்டிருக்கும் வேளையில் நான் வெளித்தள்ள வேண்டிய வார்த்தைகளை பூக்களைத்தொடுப்பது போல தொடுத்து மெதுவாக உச்சரிக்கத்துவங்குவேன். சில சமயம் வார்த்தைகளின் கனம் தாங்க முடியாமல் மிக மெதுவாகவோ அல்லது வேகமாகவோ உதிர்க்கத்துவங்குகையில் பொங்கும் பிரிவாற்றாமையின் துக்கம் தாங்க முடியாததாயுள்ளது.
ஒரு வாக்கியத்தில் தனித்தனியே நின்று உறவாடும் வார்த்தைகளுக்குண்டான வாசனை எந்த ஒரு முழுமையான வாக்கியத்திற்கும் இல்லாமல் போகிறது.
ஒரே வாக்கியதின் சில வார்த்தைகள் அணுக்கமாகவும் சில வார்த்தைகள் விலகியும் செல்ல நேர்கையில் விலகும் வார்த்தைகளை துரத்திப்பிடிப்பதிலுண்டான ஆனந்தத்தில் எதிராளியின் மனதில் நான் என்னவாவேன் என்று கூட எண்ணத்தோன்றுவதில்லை.
எதையேனும் எழுதி முடித்து பின் மீண்டும் வாசித்துப்பார்க்கையில், அதிகாலையில் உதிர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருக்கும் பவழமல்லியின் வாசனையோடு வார்த்தைகள் கண்முன்னே பரந்து விரிந்திருக்கும். பின்னெப்படி நானந்த வனத்தை விட்டு மீள்வதாம் அந்த மணத்தை விட்டு விலகுவதாம்.
வார்த்தைகளுக்கும் எனக்குமுண்டான நேசம் எங்கு தொடங்கியதென்ற கெள்வியைக்காட்டிலும் தொடங்கிய காலமுதலான அதன் ஆக்ரமிப்பின் வசீகரம் மீண்டுவரமுடியாததாயுள்ளது.
பொங்கிப்பிரவகிக்கும் ஆற்றின் கரையில் நான் அமர்ந்திருக்கிறேன்... வர்ண பேதமற்று இறைந்திருக்கும் வார்த்தைகளை வாரி வாரி விழுங்குவதற்காக.