
புத்தகத்தின் தலைப்பு குள்ளச்சித்தன் சரித்திரம் என்பதை கேட்டதில்/கண்டதில் இருந்து எனக்குள் ஒரு சிறு உதைப்பு ஒருவேளை இந்திரா பார்த்தசாரதி வகையை சார்ந்து இருக்குமோ என்று ஆனாலும் பரிந்துரைத்திருத்த நன்பரின் வாசிப்பு அலைவரிசை பல நேரங்களில் என்னோடு ஒத்துப்போயிருப்பதால் சிறிதே இருந்த தயக்கத்தை ஒதுக்கி விட்டு வாசிக்கத்துவங்கினேன். என்னை முழுதுமாய் தன்னுள் மூழ்கடித்துக் கொண்டது அப்புத்தகம்.
புனைவிற்குள் புனைவு என்ற வகையில் எழுதப்பட்டிருக்கும் அந்த நாவலின் கதை மாந்தர்கள் துவக்கத்தில் ஒரே சமதளத்தில் பயணிக்கத் துவங்கி பின் இரு பிரிவாகப்பிரிந்து ஒரு பிரிவு பாத்திரங்கள் ஒரு புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருப்பதாகவும், மறு பிரிவு அந்த புத்தகத்தை வாசிக்கும் கதாபாத்திரமாகவும் அவரைச்சுற்றி வாழும் கதை மாந்தர்களாகவும் அமைந்திருக்கும் பாங்கு வியக்க வைக்கிறது. அந்தப்புத்தகமும் இரண்டாம் பிரிவு கதாபாத்திரங்களில் ஒன்றாகி விடுகிறது.
ஒரு கட்டத்தில் நாமும் பழனியப்பனோடு அந்தப்புத்தகத்தை வாசிக்கும் வாசகனாக மாறத்துவங்கிவிடுகிறோம். மிக நேர்த்தியான கட்டமைப்போடு கூடிய ஒரு கதைப்பின்னல்.
முத்துசாமியின் (முத்துஸ்வாமி இல்லை என்று அவராலேயே மறுக்கப்படுகிறது புத்தகத்தின் ஆரம்பத்தில்) பார்வைகளும், அனுபவங்களும் எந்த வித மிகைப்படுத்துதல்களும் இல்லாமல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவரோடு நட்புறவாடும் ஹாலாஸ்யம் மிக இயல்பாக அதை எதிர் கொள்ளும் பாங்கும் அதைத்தொடர்ந்த முயற்சிகளும் ஒரு நல்ல பார்வையாளனுக்கான விதிமுறகளைக் கற்றுத்தருகிறது.
நம்மை செட்டிநாட்டு செம்மண் தெருக்கெளிலும் விளாத்திகுளத்தின் உப்பேறிய காற்றுக்களிலும், மதுரையின் ரத வீதிகளிலும், திருவண்ணாமலை கிரிவலப்பாதைகளிலும், வைத்தீஸ்வரன் கோயில் குளக்கரையிலும் மட்டுமல்லாது சந்தடி மிகுந்த காசி நகர் தெருக்களிலும், யமுனை நதிக்கரைகளிலும் வெகு அநாயசமாக எடுத்துச்செல்லும் திறமை அந்த எழுத்துக்களுக்கு இருந்தது என்றே சொல்ல வேண்டும்..
கதைக்கருவின் சாத்தியக்கூறுகளை தனிமனித நம்பிக்கைகளுக்கு விடுத்துவிட்டாலும் நாவல் படைப்பின் கட்டமைப்பினால் அந்தப் புத்தகம் நம் கைகளில் சுவாசிக்கத்தொடங்குகிறது என்று சொன்னால் மிகையாகாது.
புத்தகத்தின் முடிவில் பாத்திரப்படைப்புக்களிலும், நிகழ்ச்சிகோர்ப்புக்களிலும் உள்ள சிறிதளவு ஒற்றுமை எஸ்.ராவின் யாமத்தை நினைவூட்டத்தவறுவதில்லை. ஆனால் இந்த புத்தகம் 2002ல் யாமத்திற்கு முன்னரே வெளிவந்துள்ள காரணத்தினால் யாமம் ஒரு எதேச்சையான ஒற்றுமையாகவோ அல்லது எப்பொழுதுமே நல்ல புத்தகங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை இந்த புத்தகமும் ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கருதத் தோன்றுகிறது.
ஆசிரியர் – யுவன் சந்தரசேகர் – தமிழினி பதிப்பகம் – 2002 வெளியீடு.