Saturday, February 26, 2011

முகமூடிக்கவிதைகள் - 13


எந்த நியதிகளுக்குள்ளும் அடங்க மறுக்கும்
ஒரு சிலரின் நியாயங்கள்
விழி நிரப்பும் சிறு துரும்பென
உறுத்திக்கொண்டேயிருக்கிறது
முகவரிகளுக்கும் முகமூடிக்களுக்கும்
பின்னால் ஒளிந்துக்கொள்ளும் சவுகரியங்களினாலேயே
நிறமாற்றங்களை எளிதில் கண்டுகொள்வதென்பது கடினமாகிறது.
ஆட்டுமந்தைகளென தலையசைத்து போவதற்கு
செவிகளும் விழிகளும் இருந்தென்ன போயென்ன?
எத்தனையோ போதைகள்
பணம் புகழ் பெண்ணென்று,
கூட போர்வைகளெதெற்கு
பண்பு, பாடம், பக்திகளென்று
போர்வைகளுக்குள்ளென்றாலும்
அம்மணமாய் நிற்பது அவமானம் தானென்பது
சிலரது நியாங்களில் இல்லாமல் போகுமோ????

Tuesday, February 15, 2011

பெண்பால் கவிதைகள் - 5



இப்படித்தான் ஆகிவிடுகிறது
சில சமயம்

எண்ணுவதற்கு ஏதுமில்லாத சமயங்களில்
எப்போதேனும் வந்துபோகிறதுன் நினைவு

எப்போதும் சுமந்தலைந்தவைகளை
எப்படித்தான் எளிதில் தொலக்கமுடிகிறதென்ற
கேள்விகளுக்கிடையில்

இப்படித்தான் ஆகிவிடுகிறது
சிலசமயம்

*******************
படர்ந்த மாசுகளுக்கிடையில்
அடையாளமற்று கிடக்கும் நீர்நிலையென
உள்ளே உறைந்து போயிருக்கிறதுன் நினைவு

இருண்ட நிலவொளியில் கடந்து போகையில்
நெஞ்சக்கூட்டுக்குள் ஊடுருவும்
ஏரிக்கரைக்காற்று
நினைவுருத்திப்போவது
மாசினடியில் மறைந்திருக்கும்
நீர்நிலையை மட்டுமல்ல

Saturday, February 12, 2011

முகமூடிக்கவிதைகள் - 12


இப்போதும் முகம் வெளிறிப்போகிறது
என்றோ கண்டுகொள்ளாமல் வந்த

அந்த சிகப்பு சட்டை மனிதனின் சடலமும

கூடவே கிடந்த அவன் வாகனமும்

மனவோரத்தில் நினைவுறும்போது


மனித நேயம் குறித்த எந்த ஒரு

விவாதத்திற்குப்பின்னாலும்

மவுனம் காக்க வைக்கிறதென்

மனநிழலில் கடந்து போகுமிந்த நிகழ்வு


**********************

முனைந்து செய்ய இயலாது
போனவைகளை
பட்டியலிடத் தேடத்

தொலைந்து போனதென்

எழுது கோலும் வெள்ளைதாள்களும்

பிறகென்ன

அத்தனை பாசாங்குகளுக்குள்ளும்

ஒளிந்து கொள்ள முயற்சிக்கிறது மனது